கடன் அன்பை முறிக்கும் 26 – 2

அவனுக்கு நம்பிக்கையே இல்லை. ஆனாலும், “உன்ன நம்பி விடுறன். விட்ட பிறகு ஓடினியோ உண்மையா எனக்குக் கோவம் வரும்.” என்று எச்சரித்தான்.

 

“ம் ம்! ம்ஹூம்!” சரி சரி, ஓடமாட்டேன் என்று வேக வேகமாகத் தலையை ஆட்டிச் சம்மதம் சொன்னாள்.

 

“உண்மையாத்தானே? உன்ன நம்பலாம்தானே. எனக்கு உன்னோட இன்னும் கொஞ்சம் கதைக்கோணும். அவ்வளவுதான் வேணும்.”

 

“ம்! ம்!” என்றவளுக்கு ‘ஐயோ! முதல் என்னை விடு!’ என்று அலறியது உள்ளம்.

 

அவனும் மெல்ல விட்டான். அவ்வளவுதான். புலியிடமிருந்து தப்பிக்கொண்ட மானாக அவள் ஓட முயல, “என்ன சொல்லிப்போட்டு என்ன செய்றாய்?” என்று வேகமாய் அவளை இழுத்துத் தன்னிடம் கொண்டு வந்தவன் இந்த முறை யோசிக்கவில்லை.

 

அவள் கன்னங்களைத் தாங்கி அவள் உதட்டில் தன் உதடுகளை மிக அழுத்தமாக ஒற்றி எடுத்தான். அவளின் அத்தனை அசைவுகளும் நின்று போயின. நம்ப முடியாத திகைப்பில் மூச்சுக்கூட விட மறந்தவளாக அவனையே வெறித்துப் பார்த்தாள்.

 

அந்தப் பார்வையில் அவன் நெஞ்சும் கசங்கித்தான் போனது. “நீ நம்ப மாட்டாய் எண்டு எனக்குத் தெரியும். ஆனா, கடவுள் சத்தியமா இப்பிடி எல்லாம் நடக்கோணும் எண்டு நான் நினைக்கவே இல்ல. இதுல எனக்கும் விருப்பம் இல்ல. ஆனா, நீ ஓம் எண்டு சொல்லப்போறேல்ல எண்டு தெரிஞ்சு போச்சு. நீ இல்லாம என்னால வாழேலாது எண்டும் எனக்குத் தெரியும். அதால உன்னை உன்னட்டையே புக் பண்ணப்போறன்.” என்றவன் இந்தமுறை அவள் இதழ்களைச் சிறை செய்தான்.

 

இதழ்களில் படிந்த ஈரம் அவளைத் தெளிய வைத்தது போலும். வெறி வந்தவள் போல் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டவள், “நீ எல்லாம் மனுசனா? என்ன வேலை எல்லாம் பாக்கிறாய். உடம்பு பலத்தாலயும் உன்ன என்னால வெல்லேலாது எண்டுதானே இப்பிடி எல்லாம் நடக்கிறாய்?” என்று கேட்டு கேட்டு அவனை அடித்தாள்.

 

அவன் தடுக்கவில்லை. வாங்கிக்கொண்டு நின்றான். மன்னிப்பும் கேட்கவில்லை. அவன் என்ன தவறு என்று தெரியாமலா செய்தான்? ஆனால், ஒன்றை மட்டும் அப்போதும் சொன்னான்.

 

“எனக்கு நீ வேணும் இசை!” என்றதும் அடிப்பதை நிறுத்திவிட்டு அவனையே பார்த்தாள் யாழிசை.

 

அவளால் முடியவேயில்லை. ஏன் இப்படித் தான்தான் வேண்டும் என்று நின்று, அவள் நிம்மதியைக் குழி தோண்டிப் புதைக்கிறான் என்று தெரியவேயில்லை. தொய்ந்துபோய் சோபாவில் விழுந்தவள் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள்.

 

வேகமாக அவளுக்கு எதிர்ப்புறம் பார்வையைத் திருப்பித் தன்னைச் சமாளிக்க முயன்றான் தூயவன். தன் கண் முன்னாலேயே அவள் அழுவதும், அதற்குக் காரணமாகத் தானே இருக்கிறோம் என்பதும் அவனையும் கொன்றன.

 

முன்னரும் அழ வைத்தான்தான். அப்போதெல்லாம் அவள் அவனுக்கு யாரோ. ஆனால் இன்று?

 

திரும்பி அவளையே பார்த்தவன் மெல்ல வந்து அவளருகில் அமர்ந்தான்.

 

அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும், “அழாத ப்ளீஸ். நான் செய்தது பிழைதான்.” என்றான்.

 

அவள் அவன் சொன்னதைக் காதில் வாங்கும் நிலையில் இல்லை. அவள் உடலும் உள்ளமும் அதீத அதிர்ச்சியில் நடுங்கிக்கொண்டிருந்தன.

 

“ப்ச் இசை. நான் செஞ்ச பிழைக்கு நீ ஏன் அழுறாய். அப்போத மாதிரி எனக்கு அடி.” என்று அவள் முகத்திலிருந்து கைகளை எடுத்துவிட முயல, “ஐயோ என்னைத் தொடாதீங்க. தள்ளிப்போங்க. தள்ளிப் போங்க!” என்று அவன் கைகளை வேகமாக உதறித் தள்ளினாள்.

 

“ஓகே ஓகே! நான் தள்ளி இருக்கின். நீ அழாத!” என்று வேகமாகத் தள்ளி அமர்ந்தான் அவன்.

 

குருவுக்கு முதலும் அவர்களின் குரல்கள் அவ்வப்போது உயர்ந்து பதிந்து என்று காதில் விழுந்துகொண்டுதான் இருந்தன. காரசாரமாகப் பேசிக்கொள்கிறார்கள் என்றெண்ணி இன்னுமே கொஞ்சம் தள்ளிப்போய் நின்றிருந்தான்.

 

இப்போது யாழிசை அழுவதுபோல் கேட்கவும் திக்கென்றிருந்தது அவனுக்கு. கொஞ்சம் நெருங்கி வந்து நின்று பார்த்தான். அவள் அழுகிறாள்தான் என்று தெரிந்ததும் வேகமாக வந்தவன், வீட்டுக்குள் வர முதல், “டேய் தூயவா உள்ளுக்கு வரவா?” என்று குரல் கொடுத்தான்.

 

“வா!” என்று தூயவன் சொன்னதும் வேகமாக உள்ளே வந்தவன் முதலில் பார்த்தது, ஒரு சோபாவில் அமர்ந்திருந்த இருவரையும்தான். சட்டென்று முகம் மலர யாழிசையைப் பார்த்தான். அழுது சிவந்திருந்த அவள் முகமும், அவனை நிமிர்ந்தும் பாராமல் அமர்ந்திருந்தவளின் தோற்றமும் விடயம் வேறு என்று சொல்ல, இப்போது தூயவனைப் பார்த்தான்.

 

அவன் மிகுந்த இறுக்கமாக இருந்தான்.

 

“துளசிய ரெண்டு தரம் கடைக்குத் திருப்பி அனுப்பிட்டன். இப்ப வந்திடுவாள்.” என்றான் இருவருக்கும் பொதுவாக.

 

“அதுக்கிடைல அவளுக்கு ஒரு தேத்தண்ணி ஊத்தி குடடா.” என்றான் தூயவன்.

 

“இல்ல எனக்குப் போகோணும்.” அங்கு நின்றிருந்த இருவரையும் நிமிர்ந்தும் பாராமல் சொன்னவள் குரல் அழுகையில் நடுங்கிற்று.

 

“நீ நிதானமா இல்ல. ஸ்கூட்டி ஓட மாட்டாய். தேத்தண்ணி குடிச்சிட்டு போ.”

 

“இல்ல! நான் போகோணும்!” எனும்போதே அவளுக்குத் திரும்பவும் அழுகை வந்தது.

 

“என்னடா?” என்றான் குரு அவளை அப்படிப் பார்க்க முடியாமல். அண்ணா என்று நம்பி வந்தவள் இப்படி அழுவதற்கு அவனும்தானே காரணம்.

 

“நீ கதைக்கப்போறன் எண்டு சொன்னதாலதான் இதுக்கு ஓம் பட்டனான் தூயவா. நீ அவாவை அழ வச்சிருக்கிறாய் என்ன?” என்று அதட்டினான்.

 

தூயவன் பதில் ஒன்றும் சொல்லாமல் இரண்டு கைகளாலும் தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

 

இதற்குள் சின்னவர்களின் சத்தம் கேட்டது. கடைக்குப் போனவர்கள் திரும்பி வந்துவிட்டது புரிய, “சுரபி பாக்க முதல் முகம் கழுவிக்கொண்டு வா இசை.” என்றான் தூயவன்.

 

பெரிய அக்கறை! அவள் உள்ளம் குமுறிற்று. ஆனால், அவள் இருக்கிற மனநிலைக்கு அவள் வீட்டையும் சமாளிக்கும் தெம்பு அவளிடம் இல்லவே இல்லை. அதில் எழுந்து கிணற்றடிக்கு நடந்தாள்.

 

விழிகளை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த தூயவனும் எழுந்து பின்னால் போனான்.

 

அந்தக் காலத்து வீடு என்பதால் இன்னும் தண்ணீர் லைன் எடுக்கவில்லை. அதில் கிணற்றில்தான் அள்ள வேண்டும். அவள் வாளியைக் கிணற்றுக்குள் போட, வந்து கயிற்றைப் பற்றியவன், “நீ தள்ளு!” என்றுவிட்டுத் தண்ணீரை விறுவிறுவென்று அள்ளிக் கொடுத்தான்.

 

அவனைப் பிடித்துக் கிணற்றுக்குள் தள்ளிவிடலாமா என்று நினைக்கும் அளவுக்குக் கோபம்தான் வந்தது அவளுக்கு. கோபப்பட்டுப் பட்டது போதாதா? அதை நினைத்ததும் நின்றிருந்த கண்ணீர் திரும்பவும் வந்தது. உதட்டைப் பற்றி அதை அடக்கிக்கொண்டு தண்ணீரில் முகத்தை நன்றாக அடித்துக் கழுவினாள்.

 

வேகமாகப் போய் அங்கே கொடியில் கிடந்த துவாயையும் எடுத்து வந்து அவளிடம் நீட்டினான் தூயவன். அவனை நிமிர்ந்தும் பாராதவள் கை விரல்களாலேயே முகத்தில் கிடந்த நீரை வழித்து எறிந்துவிட்டு வீட்டுக்குள் போனாள்.

 

பிள்ளைகளோடு வந்த துளசிக்கு நடப்பவை எதுவுமே விளங்கவில்லை. சுரபியும் அவர்களோடே இருந்ததில் எதையும் வாய்விட்டுக் கேட்கவும் முடியவில்லை. அதே நேரம் கணவனின் செய்கை கொஞ்சமும் பிடிக்காத கோபத்திலும் இருந்தாள்.

 

ஆனால், தமையனுக்கும் யாழிசைக்குமிடையில் ஏதோ நடக்கிறது என்று மட்டும் விளங்கிற்று. அதற்கே அவளுக்கு நெஞ்சு அடித்துக்கொண்டது. தகப்பனைப் பற்றித்தான் அவளுக்குத் தெரியுமே.

 

இப்போதும் என்னவோ ஏதோ என்கிற பெரும் பயமும் பதற்றமுமாக யாழிசையையே பார்த்தாள்.

 

அவள் அங்கிருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. ஓடி வந்து அவள் கால்களைக் கட்டிக்கொண்ட மிதிலனைக்கூட நாசுக்காக விலக்கி விட்டுவிட்டு, “போவம் சுரபி!” என்றவள் தன் பொருள்களை எடுத்துக்கொண்டு, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அந்த வீட்டைவிட்டு வெளியேறினாள்.

 

error: Alert: Content selection is disabled!!