அத்தியாயம் 22
‘Love is an endless act of forgiveness. Forgiveness is the key to action and freedom.’ – Maya Angelou
ஆரோன் தன் தாயின் நண்பன், இத்தனை வருடங்களாகத் தொடர்பு விட்டுப் போய் இருந்தது. இப்போது, அவர் பற்றி தெரிந்ததும் தேடிச் சென்றிருக்கிறார், அதுவும் நண்பியின் முழுக்குடும்பமும் இங்கிருக்க ஒற்றை வார்த்தை கதைக்காது. அந்நேரம் பார்த்து, தாய் சுகயீனமடைந்து விட்டார்.
இதை அப்படியே நம்ப, ஒலிவியா என்ன அவள் சகோதரன் சகோதரி போல் பதின்ம வயது ஆரம்பத்தில் நிற்கிறாளா? தாயின் சுகயீனம் மிகவுமே ஆட்டிப்பார்த்தாலும் ஆமடேல் வந்து சேரும் வரை மனத்தில் கேள்விகளும் குழப்பங்களும் மட்டுமே!
அன்று, தாயின் புகைப்படத்தை ஆரோன் வீட்டில் கண்டபோது எப்படி அதிர்ந்தாள்? அது போதாதென்று கிடைத்த பரிசு, தாயின் சமையல் புத்தகம் போலவே என்றால், உள்ளே திறந்ததும் தாயின் மணிமணியான கையெழுத்தில் முதல் சமையல் செய்முறை! அதுமட்டுமா? இந்தப் போட்டி ஆரம்பத் தெரிவுகளுக்கு எல்லாம் அவ்வளவு ஆர்வமாக அவளோடு கூடவே வந்த தாய், பின் வரவும் இல்லை.
தாயின் வாயிலிருந்து ஆரோன் பற்றி ஒரு சொல் வந்ததில்லை. ஏன் சொல்லவில்லை? எவராக இருந்தாலும் எப்போதோ சொல்லியிருப்பர். அதை, ஒன்றுமில்லாத விசயமாகக் கடக்க முடியாது திண்டாடினாளே!
யோசித்துப் பார்த்தால், இலண்டன் நாட்டில் நடக்கும் ஹோம் குக்கிங் போட்டி நடுவராக, ஆரோனின் நிகழ்ச்சியைப் பார்க்கையில் எல்லாம் தாய் முணுமுணுத்துள்ளார். வேறு வேலையே இல்லையா என்று கடுமையும் காட்டியுள்ளார்.
அவர்களிடையே பெரிதாக ஏதோ கதையுண்டு என்ற எண்ணம் மனதுள் கிடந்து அரித்து அவளை நிலைகொள்ள விடாது செய்தபடிதானே இருக்கு.
ஆமடேல் வருவதற்கிடையில், லிசியின் உடல்நிலை பற்றி ஆரோனோடு கதைத்துக் கேட்டபடி வந்தான், வேர்த். அப்போதெல்லாம் நீ கதைக்கிறாயா என்று கேட்க, கதைக்க முயன்றாள். ஒரு தடவை அல்ல மூன்று தடவைகள். ஆரோன் கைப்பேசி தொடர்ப்பிழந்துவிட்டிருந்தது. இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது?
மிகப்பெரும் கருஞ்சுவர் அந்தப் பக்கம் என்ன, எந்த வடிவில் உள்ளதோ என்று மருட்டி அச்சுறுத்தும் உணர்வில் தத்தளித்தபடி இருந்தாள், ஒலிவியா. போதாக்குறைக்கு, டெனிஸ் ஒரு வார்த்தை கதைக்கவில்லை. அவ்வளவு இறுக்கமாக இருந்தார். பதற்றமாகவும் தான். கூடவே கோபமாகவும் உள்ளாரோ என்றிருந்தது, ஒலிவியாவுக்கு.
வைத்தியசாலைக்கு வந்த பின்னர், ஆரோன் தன்னைப் பார்க்கவே இல்லையென்றது மிகவுமே வேறுபாடாக இருந்தது. காரணம், அவள் அவரையே பார்த்தபடி தான் வந்திருந்தாள்.
அதுமட்டுமா? தகப்பன் அவரை, அதுவும் தாம் எல்லோருமே அவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பவரைப் பார்த்த பார்வையை இவள் கவனிக்காமலா அறைக்குள் உள்ளிட்டிருந்தாள்?
செஃப் ஆரோனுக்கும் தன் பெற்றோருக்குமிடையில் எதுவோ கசப்பாக நடந்துள்ளது. தீர்மானமே செய்துகொண்டாள் , ஒலிவியா.
எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டுத் தாயை நெருங்கினாள். சுறுசுறுப்புக்கு இன்னொரு பெயர் அவள் அன்னை. இன்றோ, சோர்ந்து வாடிவதங்கி விழி மூடிக்கிடந்தார்.
எழுப்பி கட்டிப்பிடித்துக் கதைக்க வேண்டும் போலிருந்தது. நெருங்கியவளைத் தடுத்தார், பின்னால் வந்திருந்த டெனிஸ்.
“தானாக எழும்பட்டும் விடு! ரெஸ்ட் தான் முக்கியம் என்றார்கள்.” மெதுவாகச் சொன்னவர், வேர்த் உள்ளே வரவும் அவன் தோளில் தட்டிவிட்டுச் சற்றே தள்ளி நின்று கொண்டார்.
‘தாயை உலுப்பி எழுப்பி அவனை அறிமுகம் செய்து வைத்தால் எவ்வளவு சந்தோசம் கொள்வார்.’ என்ற நினைவோடு அவன் கரத்தைப் பிடித்தபடி அணைந்து நின்றவள், அப்போதுதான் தந்தை அங்கில்லை என்பதை அவதானித்தாள்.
ஏதோவொரு உணர்வு, இல்லவே இல்லை, தகப்பன் ஆரோனைப் பார்த்த பார்வையே வேர்த்தையும் அழைத்துக்கொண்டு வெளியில் வர வைத்திருந்தது. அங்கோ, ஒருவரும் இல்லை.
“செஃப் எங்க? அப்பாவையும் காணேல்ல! என்னவோ சரியில்லை வேர்த். எனக்கு ஒன்றுமே விளங்குது இல்லை.” என்றபடி நடக்க, அவனும் அவள் கருத்தை ஒத்தே கதைத்தான்.
தோட்டத்தில் அவர்களைக் கண்டுவிட்டு வந்தவர்கள் டெனிஸின் ஆக்கோரசம், ஆத்திரம் கண்டு திகைத்து நின்று விட்டார்கள். அடுத்தடுத்து, இருவரும் கதைத்துக்கொண்டதைக் கேட்டவர்களால் அசையவோ சிந்திக்கவோ முடியவில்லை. உச்சபட்ச அதிர்வில் உறைந்து நின்றார்கள்.
வேர்த் மட்டும் பிடித்திருக்கவில்லையோ தடாலென்று விழுந்திருந்திருப்பாள், ஒலிவியா. அந்தளவுக்கு, புலன்கள் விழித்திருந்தும் உடல் சக்தி வடிந்து தொய்ந்திட்டு. வேர்த்துமே நிலைகுலைந்து தான் போனான்.
‘ஒலிவியா என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆரோன் மகளா?’ நம்ப முடியாது நின்றான், அவன்.
நால்வரில் முதலில் சுதாகரித்தது, ஆரோன் தான். திரும்பி, டெனிஸை கூர்ந்து பார்த்துவிட்டு விறுவிறுவென்று நடந்தார்.
அப்படியே சென்றுவிடத்தான் நினைத்தார். அவரால் ஒலிவியாவைக் கடந்து செல்ல முடியவில்லை.
அவர் இரத்தம் அவள்! இத்தனை வருடங்களாக எங்கோ வளர்ந்து பெரியவளாகி அவரே இரசிக்கும் வகையில் வளர்ந்து… தொடர்ந்து சிந்திக்கவியலாது அவருடலும் மனமும் நடுங்கின. அவரையும் மீறியே நடை நின்றிருந்தது.
தன் வாயால் சொல்லவே மாட்டேன் என்ற விடயம் இப்போது அவர்கள் இருவருக்கும் தெரியவந்துள்ளது. இதை என்னவென்று சொல்வது? இது தெரியும் போது லிசி எப்படி வினையாற்றுவாள். முதல் அவர் மகள்?
மிகப்பெரும் கேள்வி எழுந்தது. பதிலை அறிந்து கொள்ளும் அளவுக்கு அவர் மனத்தில் திடமிருக்கவில்லை. விழுந்திருக்கும் பலத்த அடி, அல்லவே அல்ல இடி, அவர் மனத்தைச் சுக்கு நூறாக்கிவிட்டிருக்கே!
வேர்த்தை ஒரு கணம் ஊன்றிப் பார்த்தவர் விலகும் படி சைகை செய்தார். அவன் விலகிய கணமே, ஒலிவியாவை தன் நெஞ்சோடு இறுக அணைத்துக்கொண்டார்.
ஒலிவியாவோ, இன்னமும் எவ்விதத்திலும் வினையாற்றும் திராணியின்றி தளர்ந்து நின்றாள். பொம்மை போல் அவர் கை வளைக்குள் அடங்கிப் போனாள். ‘கேட்டது எல்லாம் உண்மைதானா?’ நெஞ்சம் மட்டும் நம்பவே முடியாது மீண்டும் மீண்டும் உரத்துக் கேட்ட வண்ணம் இருந்தது.
அவள் உச்சியில் அழுத்தமாக முகம் பதித்த ஆரோன், பீறிட்ட விம்மலை அடக்கினார்.
‘என் மகள் இவள்!’ அவர் இதயம் ஓலமிட்டது. நான்கு பிள்ளைகளையும் எப்படி எப்படியெல்லாம் தன் கைப்படவே பார்த்து பார்த்து வளர்த்தவர். ‘ஏன் எனக்கு இந்தத் தண்டனை? அந்தளவுக்குப் பொறுப்பற்றவனா நான்?’ அவர் பற்றி அவருக்கே இறுமாப்பு உண்டு. அனைத்தும் பொடிப் பொடியாக, அவர் விழிகள் உகுத்த கண்ணீர் அவள் உச்சியில் சூடாகப் பரவியது.
எத்தனை தடவைகள் ஆரோன் டேல் கவனத்தில் இடம் பெறுவதை, பாராட்டாக ஒரு வார்த்தையைப் பெறுவதில், அவரருகில் செல்வதையெல்லாம் பாக்கியமாக எண்ணிக் குதூகலித்திருப்பார்கள். அதில் ஒலிவியாவும் விதிவிலக்கல்ல.
அது பார்த்தால்…
இக்கணம், அந்த மனிதனின் அகன்ற மார்பில் ஒன்றியிருந்தவள், அவர் இதயத்துடிப்பு எகிற எகிற அவளுள்ளும் இதயத்துடிப்புத் தாறு மாறானது.
திடுமென்று தகப்பன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் நினைவில் வர, ‘இந்த மனிதனை விட்டு விலகு ஒலிவியா!’ கோபம் கொண்ட மனம் கத்தினாலும் அசைய முடியாது நின்றாள், அவள்.
ஆரோனுக்கு அவ்விட நிசப்தம் சகிக்க முடியாததாக இருந்தது. “நீ…நீ என் மகள்!” தழுதழுத்தார்.
“இப்படியெல்லாம் பெற்ற மகளிடம் தகப்பன் கதைப்பது, தன்னை விளக்குவதே அவனுக்குப் பெரும் தண்டனை! குடும்பம், மனைவி, பிள்ளைகள் உயிர் மூச்சு என்று வாழும் எனக்கு இதை விடவும் கொடிய தண்டனை இருக்கவே முடியாது. பாவி நான்!” என்றவர், அவளைத் தன்னிலிருந்து யாராவது பிரித்துவிட்டாலும் என்ற வகையில் இறுக்கிக்கொண்டார்.
“உன் தாயிடம் ஒன்றை மட்டும் சொல்லிவிடு மகளே! நான் அவள் மீது மிக மிக அன்பும் நட்பும் மரியாதையும் கொண்டவன். அதன் சாட்சி தான், என்னை உன் உருவில் அவள் பெற்றெடுத்திருக்கிறாள் என்று சொல்லிவிடு!” நெற்றியில் கொஞ்சினார். அவள் முகத்தை நிமிர்த்தி விழிகளை உற்றுப் பார்த்தார்.
“வெறுத்து விடமாட்டியே! நான் உயிரோடு இருக்கும் வரை …” என்னை அப்பா என்று கூப்பிடு ஒலிவியா என்று அவர் உள்ளம் அலறியது.
திரும்பி டெனிஸை, அவர் இருந்த நிலையைப் பார்த்தவர், “இந்த செஃப் ஆரோனை வெறுத்து ஒதுக்கி விடமாட்டியே?” இறைஞ்சலாகக் கேட்டார்.
அவர் விளங்கிக்கொள்ள முடியாத மொழியில் கதைப்பது போல் விழித்தாள், ஒலிவியா.
பதிலை எதிர்பார்த்தார், ஆரோன். அவள் அலங்க மலங்க விழிக்கவும் தலையைப் பரிவாக வருடியர், “நீ, உன் தாய் தகப்பன், சகோதரன் சகோதரி, உன் கணவன் வேர்த், நீ பெற்றெடுக்கும் செல்வங்களோடு எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும்!” சொல்லிக்கொண்டே, அவள் விழிகளைத் துடைத்து விட்டார்.
மெல்ல அவளை விலக்கி நிறுத்தி இரு தோள்களிலும் தட்டிக் கொடுத்துவிட்டு, மீண்டும் ஒரு தடவை நெற்றியில் கொஞ்சியவர், மறுநொடி, விறுவிறுவென்று நடந்தார்.
“செஃப் ப்ளீஸ் நில்லுங்க!” அப்போதுதான் சுயத்துக்கு வந்திருந்தான், வேர்த். தளர்ந்தபடி செல்பவரைப் பார்த்து அவதியாகக் குரல் கொடுத்தான். காது கேளாத பாவனையில் சென்று கொண்டிருந்தார், செஃப் ஆரோன் டேல் .
“ஒலிவியா இங்கே பார்!” அவளை உலுக்கினான், வேர்த்.
“டார்லிங் ஒன்றுமில்லை!” இறுகக் கட்டியணைத்தபடி டெனிஸருகில் அழைத்துச் சென்றவன், “உன் டாட்டை பார்! நீதான் இப்போது திடமாக இருக்க வேண்டும். உன்னால் முடியும் ஹனி! நான் நான்…செஃப் போகும் மனநிலையில் தனியாக விடப் பயமாக இருக்கு ஒலிவியா.” தவிப்போடு படபடத்தான்.
சோர்ந்து தொய்ந்த கரத்தை மெல்ல உயர்த்தி விழிகளை அழுத்தமாகத் துடைத்தாள், ஒலிவியா. மனித நடமாட்டமில்லா இடத்தில் நின்று வாய்விட்டுப் பெரிதாகக் கத்தவேண்டும் போல் ஓர் உணர்வு அவளுள். தலை கனத்தது. தலையைக் கைகளால் அழுத்திப்பிடித்தபடி தகப்பன் குந்தியிருந்த விதம் பார்த்தவள் தன்னைத்தான் மீட்க வேண்டிய அவசியம் உணர்ந்தாள்.
“ஒலிவியா!” வேர்த் குரலில் அந்தரமும் அவசரமும்.
“போ! நீ அவரைப் பார், நான் இங்கு சமாளித்துக் கொள்வேன்.” உணர்வின்றி வந்தது அவள் குரல்.
“சொறி பேபி, இப்போ நான் உன்னோடு நிற்க வேண்டும். அதேநேரம் செஃப் …” அவதியாகத் தொடர்ந்தவனைக் கதைக்கவிடவில்லை, அவள்.
“எனக்கு விளங்குது வேர்த், நீ முதல் அவரைப் பார்! ” என்றவள் குரலில் திடம் சற்றேனும் மீண்டிருந்தது.
“டாட்!” என்றபடி, டெனிஸ் தோளில் கை வைத்தபடி அவரருகில் அமர்ந்து கொண்டாள்.
அவளும் அந்தக் குடும்பமும் இருக்கிற மனநிலைக்கு அங்கிருந்து செல்ல வேர்த்துக்கு மனமே இல்லை. ஆனால், ஆரோன் அவன் குரு மட்டுமல்ல, தந்தைக்கு நிகரானவர். அவருக்கு ஏதாவது ஒன்று நடத்தால்…
“அங்கிள் ப்ளீஸ்! ஒலிவியாவையும் சேர்த்து நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ப்ளீஸ்!” இருவர் தலையிலும் வருடிவிட்டுத் தாமதியாது ஓடினான், வேர்த்.

