வெளிச்சக்கீற்று 13 – 2

“உங்கட அம்மா அப்பிடிச் சொன்னது உங்களக் காயப்படுத்தி இருக்கும்தான். ஆனா, அது உண்மை இல்லை எண்டு உங்களுக்குத் தெரியும்தானே. பிறகும் ஏன் அதையெல்லாம் பெருசா எடுக்கிறீங்க?”

 

அவளாக எங்கே பெரிதாக எடுத்தாள்? அவள் மனதுதான் காயப்பட்டுப் போயிற்று. இன்றுவரையில் அதிலிருந்து மீள முடியவில்லையே!

 

“அல்லது… நான் உங்களுக்கும் உங்கட பிள்ளைகளுக்கும் நிம்மதியான ஒரு வாழ்க்கையைத் தரமாட்டன் எண்டு நினைக்கிறீங்களா?” மெல்லக் கேட்டுப்பார்த்தான்.

 

“இல்ல… நான் அந்தளவுக்கெல்லாம் யோசிச்சதே இல்ல.”

 

“நேற்று நான் கேட்டதுக்குப் பிறகுமா?” மெல்லிய ஏமாற்றத்துடன் வினவினான்.

 

கேட்டால் உடனே யோசித்துவிட வேண்டுமா? அவனை இனி எப்படித் தவிர்ப்பது என்றுதான் நேற்று முழுக்க யோசித்துக்கொண்டு இருந்தாள்.

 

“சரி, இப்ப யோசிச்சுச் சொல்லுங்க. அப்பிடி ஏதும் எண்ணம் வருதா என்னைப் பற்றி நினைக்க?” என்றான் மீண்டும்.

 

அவள் தன் கை விரல்களை ஆராய்ந்தாள்.

 

“சரி, என்னைப் பற்றி எனக்குத் தெரிஞ்சதச் சொல்லுறன். அதுக்குப் பிறகாவது ஏதாவது சொல்லேலுமா எண்டு பாருங்க. எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. டிவோர்ஸ் தராம அவள் இழுத்தடிச்ச நேரம், ரெண்டு மூண்டு தரம் குடிச்சிட்டு இந்தக் கடைக்கையே விழுந்து கிடந்திருக்கிறன். ஆனா, அடுத்த நாள் தலையை நிமித்தவே ஏலாம இருக்கும். அதுக்குப் பிறகு அந்தப் பக்கம் போனதே இல்ல.” என்றவனை விழிகள் விரியப் பார்த்தாள் யசோ.

 

அவன் முகத்தில் மெல்லிய சிரிப்பு. “இது எனக்கும் உங்களுக்கையும் மட்டும்தான் இருக்கோணும், சரியா? அக்கா, அம்மாக்குத் தெரியாது. இனியும் தெரியக் கூடாது.” என்றான் எச்சரிப்பது போல்.

 

சொல்லாமல் கொள்ளாமல் அவன் களவுக்குள் அவளையும் கூட்டுச் சேர்த்துவிட்டவனை மலைப்புடன் பார்த்தாள் அவள்.

 

“எனக்குக் கோவம் கொஞ்சம் டக்கு டக்கெண்டு வரும்தான். ஆனா, கேவலமாக் கதைக்கிறது, கைய நீட்டுறது, ஒருத்தரின்ர மனம் நோகக் கதைக்கிறது எல்லாம் வராது. என்னை இவ்வளவு மோசமா ஏமாத்தி, கேவலப்படுத்தி, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இழுத்தவளைக் கூட நான் கை நீட்டி அடிச்சது இல்ல. உங்களை எல்லாம் சான்ஸே இல்ல. நீங்க எனக்கு அடிக்காம இருந்தா சரி.” என்றதும் சிரிப்பு வரும்போலிருந்தது அவளுக்கு.

 

“கடை சொந்தக் கடைதான். ஆனா லோன் இன்னும் இருக்கு. முதலே கட்டியிருக்கலாம். லோயர், கோர்ட், கேஸ் எண்டு அலஞ்சதில நிறையச் செலவு. அத்தான் ஹெல்ப் பண்ண வந்தவர்தான். எனக்குத்தான் வாங்க விருப்பமில்ல. அதால வேண்டாம் எண்டு சொல்லீட்டன். ஆனா, அதை நினைச்செல்லாம் பயப்பிடாதீங்க. இன்னும் ஒண்டரை வருசத்தில மொத்தமா முடிச்சிடுவன்.”

 

“நான் இதைப் பற்றி ஒண்டும் கேக்கேல்லையே.” கடனைப் பற்றியெல்லாம் அவன் சொன்னது அவளுக்கு ஒருமாதிரி இருந்ததில் இடையிட்டுச் சொன்னாள்.

 

“இல்ல, நீங்க என்னைப் பற்றி யோசிக்கிறதுக்கு இது எல்லாத்தையும் நான் சொல்லோணும் எல்லா.” என்றுவிட்டு, “இந்தக் கலியாணம் நடந்தா எனக்கு ஒண்டுக்கு ரெண்டு பிள்ளைகளும் நீங்களும் கிடைப்பீங்க. உங்களுக்கு ஒரு துணையா நான் இருப்பன். பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவும் அப்பாவுமா நானும் நீங்களும் இருக்கலாம். நாங்க நாலுபேரும் சேர்ந்தா ஒரு முழுமையான குடும்பம் நாலுபேருக்கும் கிடைக்கும். உண்மையாவே உங்கட ரெண்டு பிள்ளைகளிலயும் எனக்கு நல்ல விருப்பமும் பாசமும் இருக்கு. அந்தளவுக்கு நீங்களும் அருமையாத்தான் வளத்து இருக்கிறீங்க. அது, ஒரு தகப்பன்ர பாசமா நிச்சயமா மாறும் எண்டு நம்புறன். உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தா, குறிப்பத் தாங்க. இதுகூட அம்மான்ர விருப்பத்துக்காகத்தான் கேக்கிறன். மற்றும்படி உங்களைக் கட்ட, அவே ரெண்டு பேருக்கும் ஒரு அப்பாவா இருக்க முழு மனதோட நான் தயார்!”

 

இவ்வளவு நேரமாக உறுதியாக இருந்த அவள் மனது, அவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு மெலிதாக ஆட்டம் காண ஆரம்பித்தது.

 

“கலியாண வாழ்க்கை இப்பிடியாகிப் போச்சே எண்டுற கவலை இருந்தாலும், கழுத்த நெரிச்ச கயித்தில இருந்து வெளில வந்திட்டன் எண்டு ஆசுவாசமாத்தான் இருந்திருக்கு. ஆனா, ஒரு பிள்ளை இல்லாமப் போச்சே எண்டு நிறைய நாள் ஏங்கி இருக்கிறன். இந்தக் கலியாணம் நடந்தா உங்களிட்ட இருந்து நான் எதிர்பாக்கிறது ஒரே ஒரு விசயம் மட்டும்தான். உங்களால முடிஞ்சா அந்த ஆசைய நிறைவேற்றுங்க. எனக்கும் ஒரு பிள்ளை வேணும் எண்டுற ஆசை இருக்கு. திரும்பவும் சொல்லுறன் உங்களாலயும் உங்கட உடம்பாலயும் முடிஞ்சு, உங்களுக்கு என்னில நம்பிக்கை இருந்தா மட்டும்தான். இல்லாட்டி அவே ரெண்டு பேருமே எனக்குப் போதும்.” என்றதும் சங்கடத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.

 

“ப்ளீஸ், என்னடா இப்பிடி எல்லாம் கதைக்கிறானே எண்டு நினைக்காதீங்க. உங்களுக்கு ஏற்கனவே ரெண்டு பிள்ளைகள். நாங்க ரெண்டு பேருமே முப்பதைத் தாண்டின ஆக்கள். உங்கட உடல் நிலை, மனநிலை, பிள்ளைகள் ரெண்டு பேரும் இதுக்கு என்ன சொல்லுவீனம் எண்டு நிறையச் சிக்கல் இருக்கு. அதையெல்லாம் யோசிக்காமல் கலியாணம் நடந்த பிறகு எனக்கு ஒரு பிள்ளையைப் பெத்துத் தாங்க எண்டு கேக்கிறதுதான் பிழை. அதான் இப்பவே எல்லாத்தையும் சொன்னனான். இவ்வளவுதான் நான், என்ர எதிர்பார்ப்பு, நிலைமை எல்லாம். இனி நீங்கதான் முடிவைச் சொல்லோணும்.” என்றான்.

 

உண்மையில் பதில் சொல்லத் திணறினாள் யசோ. இத்தனை நாள்களும் எப்படியான ஒருவனை எதிர்பார்த்தாளோ அப்படியான ஒருவன் அவள் முன்னால் அமர்ந்திருக்கையில் என்ன சொல்வாள்?

 

அவள் முகத்தில் எதைக் கண்டானோ, “என்ன, நாளைக்குக் குறிப்பக் கொண்டு வாறீங்களா?” என்றான்.

 

இன்னொரு பிள்ளை வரைக்கும் பேசிவிட்டுக் குறிப்பைக் கேட்பானா?

 

அது அவளைச் சீண்ட, “தப்பித்தவறிக் குறிப்புப் பொருந்தாட்டி என்ன செய்வீங்க?” என்றாள்.

 

அதுதானே? இப்படி ஒரு கோணத்தில் யோசித்திராதவன் பதில் தெரியாமல் விழித்துவிட்டு, “நல்ல கேள்வி!” என்று சமாளித்தான்.

 

அவள் உதட்டினில் சின்னதாக முறுவல் அரும்பிற்று.

 

பார்வை ஒரு கணம் அந்த முறுவலில் நிலைத்து மீள, “என்ன, நான் பதில் இல்லாம நிக்கிறதப் பாக்கச் சந்தோசமா இருக்குப் போல!” என்றான் அவன்.

 

அவள் முறுவல் விரிந்தது.

 

“அம்மா சொல்லி, சுசீலாக்கா கேட்டு நீங்க தர இல்லையாம் எண்டு அம்மா எனக்குப் பேச்சு. ரெண்டு பிள்ளைக்காரியே உன்ன வேண்டாம் எண்டு சொல்லுற நிலைக்கு நீ வந்திட்டாய் எண்டு.” என்றதும் என்ன முயன்றும் அவளால் சிரிப்பை மறைக்க முடியாமல் போய்விட, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

 

அவன் உதட்டிலும் விரிந்த சிரிப்பு. “அதில, குறிப்புப் பொருந்தினா என்ன செய்றது, பொருந்தாட்டி என்ன செய்றது எண்டெல்லாம் நான் யோசிக்கேல்ல. அந்தளவுக்கு அதுக்கு நான் முக்கியத்துவம் குடுக்கவும் இல்ல. இப்ப சொல்லுறன், நீங்க குறிப்புத் தர வேண்டாம். அதே மாதிரி நான் கட்டினா உங்களைத்தான் கட்டுவன்.” என்றான் உறுதியான குரலில்.

 

“சேச்சே! என்ன இது? இப்பிடியெல்லாம் சொல்லாதீங்கோ!” என்றவள் அப்போதுதான் நேரத்தைக் கவனித்துப் பதறி எழுந்தாள்.

 

“எனக்கு நேரமாயிற்றுது, நான் போகோணும்”

 

பதில் சொல்லாமல் புறப்படுகிறாளே என்று பார்த்தான் அகத்தியன். அவளை நிறுத்திவைக்கவும் முடியாது. தானும் எழுந்து அவளோடு கூடவே வாசல் வரை வந்தான்.

 

வெளியே இருட்ட ஆரம்பித்திருந்தது. “போயிடுவீங்களா? கொஞ்சம் இருட்டிட்டுதே.” என்றான் கவலையோடு.

 

“அதெல்லாம் பிரச்சினை இல்ல. இதைவிட லேட்டாவும் போயிருக்கிறன்.” என்றவளுக்குப் புறப்பட்டுவிடும் அவசரம்.

 

“அப்ப தூரியாவது இருப்பா. இப்ப தனியா எல்லா. நானும் வரவா?”

 

“ப்ளீஸ், கதைச்சு கதைச்சு இன்னும் லேட்டாக்காதீங்கோ. உண்மையாவே பயமில்லை. இல்லாட்டி நானே சொல்லுவன்.”

 

அவனுக்கும் அதற்குமேல் வருகிறேன் என்று சொல்ல முடியவில்லை. திடீரென்று அளவுக்கதிகமாக அக்கறை காட்டுவதாக நினைத்துவிடுவாளோ என்றிருந்தது.

 

“எனக்கு உங்கட லொக்கேஷனை ஷேர் பண்ணிப்போட்டுப் போங்க. நீங்க லேட்டா போறது என்னால. என்னையும் வர வேண்டாம் எண்டு சொல்லுறீங்க. நான் பயமில்லாம இருக்கிறதுக்காவது தந்திட்டுப் போங்க.”

 

அதற்குமேல் கதைத்து நேரத்தை விரயமாக்க விரும்பாமல் அனுப்பிவிட்டுப் புறப்பட்டாள். அதன்பிறகு, அவன் கைப்பேசி இயங்கு நிலையிலேயே இருந்தது. அவள் நகர்வதைப் பார்த்துக்கொண்டே இருந்தான். சரியாக முப்பது நிமிடங்கள் கடந்து, அவளிடம் அசைவைக் காணவில்லை எனவும், “போய்ட்டீங்களா?” என்று ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டான்.

 

“ஓம்.” என்று சுருக்கமாக வந்தது பதில்.

 

கொஞ்சம் தயங்கிவிட்டு, “தூரி எப்பிடி இருக்கிறா? காய்ச்சல் விட்டுட்டுதா?” என்று கேட்டு அனுப்பியிருந்தான்.

 

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பதில் வரவேயில்லை. அவனுக்கு ஒரு மாதிரி ஆகிப்போயிற்று. அதன் பிறகுதான், “ஓம் பரவாயில்லை.” என்று வந்தது.

 

‘பரவாயில்ல எண்டா என்ன அர்த்தம்?’ அதையும் கேட்போமா என்று யோசித்துவிட்டு விட்டுவிட்டான்.

 

மனத்தில் மட்டும் மெல்லிய அலைப்புறுதல். அவனைக் கண்டாலே அகத்தியன் மாமா என்று உற்சாகமாகக் கூவும் சின்ன பெண், கண்களுக்குள்ளேயே நின்றாள்.

error: Alert: Content selection is disabled!!