அத்தியாயம் 24
‘You are the butter to my bread, and the breath to my life.’
– Julia Child
இளவேனிற்கால முடிவில், பொன்மாலைப் பொழுதொன்று!
விக்டோரியா, ரெட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வேர்த் குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணைப்பகுதி கலகலப்பைப் போர்த்தியிருந்தது.
வண்ண மலர்க்கொத்துகள், இடையிடை பலவர்ண மின்விளக்குகள், பலூன் கொத்துகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்த நடைபாதை சென்று முடிவடைந்த இடத்தில், நவீன பாணியில் வெள்ளை வெளேரென்று நிமிர்ந்து நின்றது பிரமாண்டமான மாளிகை ஒன்று!
அதன் ஒரு பக்கம் நல்ல பெரிய சதுர வடிவில் இருந்த வெள்ளை மலர் அலங்காரத்தில் ‘வேர்த் ஒலிவியா’ என்ற பெயர்களிடையே அவர்களின் கரங்கள் ஒன்றை ஒன்று கோர்த்துக்கொண்டிருப்பது போல் ரோசாப்பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மாளிகை முன்வாயிலில் இருந்த சீமெந்திலான பரந்த முற்றப்பகுதியில், நான்கு நிரைகளாக, வெள்ளை வெளேரென்ற மரக்கதிரைகள் போடப்பட்டிருந்தன.
இடப்புறம் பரந்து கிடந்த பகுதியில் u வடிவு தலைகீழாகத் தெரிந்தது. வெள்ளை நிறத்திலான ஷாமியான தான்(Shamiana). அது, 500க்கு மேற்பட்டவர்கள் அமர்ந்துண்ணும் வகையில் வட்ட மேசைகள், கதிரைகள் இடப்பட்டு, வண்ண மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க, u வடிவின் நடுப்பகுதியில் வெள்ளையும் மென் தந்த நிறமும் மென் றோஸ் நிறமும் கலந்திழையோட உயரமான கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அதன் நடுப்பகுதியில், இருவர் அமரக்கூடிய ஒரு மரக்கதிரை குஷன்களோடு போடப்பட்டிருந்தது. அதோடு, அந்த இருக்கையைச் சுற்றி மெல்லிய மூங்கில்களிலான இதய வடிவம் மென் சிவப்பும் வெள்ளையுமான மலர் அலங்காரத்தில் வித்தியாசமாக கண்களைப் பறித்தது.
குஷனில் வேர்த் ஒலிவியா கன்னமும் கன்னமும் உரச கண்ணடித்தபடி இருந்தார்கள்.
மாளிகை வீட்டின் வலப்புறப்பகுதியில், கிட்டத்தட்ட ஹோம் குக்கிங் அவுட்டோர் ஷூட்டிங் ஸ்பொட் போலவே அடுத்தடுத்து நான்கு சமையல் பகுதிகள் அமைத்திருந்தார்கள். பின்னால் பெரிய டென்ட் சகல வசதிகளோடும் போட்டிருந்தார்கள்.
முதலாவது ட்ரிங்க்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் அடுத்து ஸ்டார்ட்டர், மெயின் மற்றும் டெஸெர்ட் என்ற பெயர்ப்பலகைகளோடு அவற்றின் தயாரிப்பும் ஆயத்தங்களும் நடந்து கொண்டிருந்தன.
அங்கு பொறுப்பாக நின்ற முகங்கள் மிகவுமே பரீட்சயமானவை. எல்லோருமே, செஃப் வேர்த் மற்றும் வக்கீலுக்குப் படித்து முடித்துவிட்டு முழுநேர செஃப் அவதாரமெடுத்துவிட்ட ஒலிவியாவின் நட்புகள் மட்டுமன்றி, பிரபல சமையல் கலை வல்லுநர்களும் கூட!
இங்கு தயாராகும் அனைத்து உணவுகளும் ஆரோன் டேலின் மேற்பார்வையில், ருசி பார்த்தலில் அவர் மெனுவில் தயாராகிக்கொண்டிருக்கிறது.
மெனு இதுவென்று சொன்னால் போதும் செஃப், மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று வேர்த் சொல்லியும், “நீங்கள் இருவருமே என் பிள்ளைகள். அப்படியிருக்க, நான் என் கையால் பார்த்து பார்த்துச் செய்யாமல் யார் செய்வது? ஒரு தகப்பனாக, அது எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா?” என்று கண்கள் கலங்கியவரை அவர் போக்கில் விட்டுவிட்டான், வேர்த்.
மாளிகை வீட்டின் மாடியறையில் மாப்பிள்ளை தயாராகிக் கொண்டிருந்தான்.
“மூன்றரை வருடங்களாக ஒன்றாகத் தானே தங்கி இருக்கிறீங்க? இன்று சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தானே இங்கு வந்தாய் வேர்த்? அதற்குள் ஏன் இத்தனை தடவைகள் ஒலிவியாவுக்கு கோல் எடுக்கிறாய்?” உள்ளே யாரோ நக்கலடிப்பதைக் கேட்டுக்கொண்டே வேர்த் குடும்பம் தயாராகி வந்துவிட்டார்கள். அவன் பெற்றோர் விருந்தினரை உபசரிக்கவென்று வாசலில் சென்று நின்று கொள்ள, விருந்தினர் வருகையும் தொடங்கியிருந்தது.
விறுவிறுவென்று அந்தக் கதிரைகள் நிறையத் தொடங்கிவிட்டன.
ஆரோன் மூத்த மகன் தவிர்த்து மிகுதி எல்லோரும் வந்திருந்தார்கள். கருநீல கோர்ட் ஷூட்டில் வலு கம்பீரமாக வந்த ஆரோனும் அவர்களோடு சென்று முதல் வரிசையில் அமர்ந்துகொண்டார்.
ஐந்தரைக்கு மணப்பெண்ணும் அவள் வீட்டினரும் வருவார்கள் என்றார்கள்.
ஐந்து நிமிடங்களுக்கு முன்னர், மாப்பிள்ளைத் தோழர்கள் ஐவரும் ஒன்றாக வர, அவரவர் சோடியென்று சொல்லப்பட்டிருந்த மணப்பெண் தோழிகள் வந்து அருகில் நின்று கொண்டார்கள்.
முதல் சோடியில் நின்ற பெண் துர்க்கா. அவளுக்கு அருகண்மையில் நின்றவன் ஏதன், ஆரோன் டேலின் இரண்டாவது மகன்.
ஐந்து சோடிகளும் விருந்தினர் ஆர்வமாகப் பார்க்க கையசைத்தபடியே சென்று பண்ணை வாயிலருகில் நின்று கொண்டார்கள்.
மியாவின் கடைசி மகளும் வேர்த்தின் அக்காவின் மகளும் குட்டித் தேவதைகளாகக் கையில் பூக்கூடையோடு சென்று நின்றுகொண்டார்கள்.
அன்று, ஆமடேலில் சந்தித்த பின்னர் ஒலிவியா ஆரோனைச் சந்திக்கவில்லை. தொலைபேசியில் கூட உரையாடியதில்லை. அவள் பிறந்தநாளுக்கு வாழ்த்து அனுப்புவார், அதுவும் வேர்த் ஃபோனுக்கு. ‘தாங்க்யூ செஃப்’ உடன் ஒரு ஸ்மைலியைச் சேர்த்து அனுப்பி வைப்பாள், ஒலிவியா. அவ்வளவுதான்.
அப்படியிருக்க, “நம் கலியாணம் அவரில்லாது நடத்த எனக்கு விருப்பம் இல்லை ஒலிவியா.” என்றிருந்தான், வேர்த்.
“அவர் எனக்கு மட்டும் இல்லை, என் குடும்பத்தின் பிரியத்துக்கும் மதிப்புக்கும் உரியவர். அழைக்கவில்லை என்றால் ஏன் என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிவரும்.” என்றுமிருந்தான்.
“இதில் எனக்கு ஒரு மறுப்பும் இல்லை வேர்த். செஃப் ஆரோன் எப்போதுமே எனக்கும் பிரியத்துக்குரியவர்தான். நான் மதிப்பவரும்” என்று சொன்ன ஒலிவியா, தன் பெற்றோரிடமும் சொல்லியிருந்தாள். லிசியும் டெனிஸும் என்ன சொல்வார்கள்?
“உன் பதில் தான் எங்களதும்” என்றிருந்தார், டெனிஸ். அதிலும் சொன்ன வார்த்தை மீறாத ஆரோன் மீது அவர்களுக்கு வெறுப்போ கோபமோ எதுவுமே இல்லை. அவரவர் வாழ்வு அவரவர் பாடு என்று இருந்துவிட்டார்கள்.
மணப்பெண் குடும்பத்தினர் வந்துவிட்டார்கள் என்றார்கள்.
வலப்புறமாக டெனிஸ் இடப்புறம் லிசி கரம் பற்றி வர, வெண்மயிலாக மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள், ஒலிவியா.
பின்னால், அவள் சகோதரனும் சகோதரியும். அதன் பின்னால், சிறுமிகள் அவர்களைத் தொடர்ந்து தோழன் தோழி ஐந்து சோடிகளும், அவர்கள் பின்னால் ஒலிவியா வீட்டு நெருங்கிய உறவுகள் சிலர்.
விருந்தினர் பார்வை அப்படியே திரும்பி அவர்களில் குவிந்தது.
ஆரோன் நெஞ்சு படபடவென்று இருந்தது. அவரால் அதில் அமர்ந்திருக்க முடியவில்லை. அவர் அருகண்மையில் இருந்த சோஃபியா அடுத்தடுத்து இருந்த குடும்பத்தினர் கூடத் திரும்பிப் பார்த்தார்கள்.
“ஸச் எ ப்ரிட்டி கேர்ள் அலோங் வித் எ ப்ரிட்டி பெர்சனாலிட்டி!”
ஒலிவியா பற்றி பின்னால் இருந்தவர்கள் கதைப்பது செவிகளில் வந்து மோத, ஆரோன் இதயத்துடிப்பு அவருக்கே கேட்டிட்டு. இடக்கை தன் பாட்டில் வாயடியை நாட வலக்கை கட்டிக்கொள்ள, மெல்லத் திரும்பியிருந்தார்.
‘என் மகள்’ மனம் பெருமையோடு எண்ணியது. அதேநேரம் இகழ்ச்சியாகப் பார்த்ததும் அதே மனம் தான்.
‘அந்த உரிமை உனக்கேது!’ முகத்தில் அறைந்தது உண்மை. ‘அவள் மட்டில் நீ செஃப் ஆரோன்!’ விழிகள் கலங்க இமைக்காது பார்த்திருந்தார்.
வந்த நான்கு நாட்களில் ஒலிவியாவைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், இந்த மூன்றரை வருடங்களில் எத்தனையோ தடவைகள் ஓடிச்சென்று அவளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை எழவே செய்தது. நிச்சயம் லிசி இரசிக்க மாட்டாள் என்பதும் தெரியுமே! பிறகேன் அதைச் செய்வான் என்று தன்னைத்தானே கட்டுப்படுத்தியபடி இருந்தார்.
இப்போது, இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவன் அவர் மனதறிந்த வேர்த்! அவரிதயத்தில் உச்சத்தில் அமர்ந்துவிட்டான், அவன்.
இருபுறமும் அமர்ந்திருந்தவர்களை, தலையசைப்பாலும் முறுவலாலும் வரவேற்றபடி வந்த ஒலிவியா, முன்வரிசையில் ஆரோன் குடும்பமே அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டாள்.
அவள் கால்கள் தயங்கின. அவர் வந்திருக்கிறார், வேர்த் பெற்றோரிடம் கதைத்து கல்யாணச் சமையல் வேலைகள் முழுமையையும் தனதாக்கினார் என்றெல்லாம் வேர்த் சொல்லக் கேட்டிருந்தவளுள், இப்போ வரை அவரைச் சென்று சந்திக்கவில்லை, வரவேற்கவில்லை என்பது பெரும் குற்றவுணர்வு.
ஆனாலும் அது அவளால் முடியாதும் இருந்தது. கல்யாண வேலைகளும் இருக்கவே நேரம் அப்படியே போய்விட்டிருந்தது. இப்போது, அவள் என்ன செய்ய வேண்டும்?
‘அந்த மனிதனுக்குரிய மரியாதையை நீ கொடுத்தேயாக வேண்டும்!’ மனம் தீர்மானமாகச் சொல்லியிருக்கையில் அவர் இருந்த வரிசையை அண்மித்திருந்தாள், ஒலிவியா.
எல்லோரையும் போலவே, அவர்களையும் இன்முகத்தோடு தலையசைத்து வரவேற்றுவிட்டு முன்னேறி அடியெடுத்து வைத்தார்கள், லிசி டெனிஸ் தம்பதி.
இவளோ, “வன் மினிட் மாம்” என்று, தன் கரங்களை விடுவித்துக்கொண்டு தன்னையும் அறியாதே கரங்களை விரித்தபடி ஆரோனைப் பார்த்திருந்தாள்.
ஒருகணம் உச்சபட்ச திகைப்பு, ஆரோனுக்கு.
விசுக்கென்று எழுந்தவர் அவளைக் கட்டிப்பிடித்து உச்சியில் முத்தமிட்டார். அவரின் கண்ணீர் ததும்பிய விழிகளைப் போட்டிருந்த கறுப்புக் கண்ணாடி மறைத்துதவியது.
ஒற்றை வார்த்தை உதிர்க்கவில்லை. தடுமாறி வசமிழந்து நின்றவரைச் சுயத்துக்கு இழுத்து வந்தது, ஒலிவியாவின் குரல்.
“தாங்க்ஸ் ஃபோர் கமிங் செஃப்! திஸ் இஸ் அ கிரேட் ஹொனர் டு அஸ்!” விழிகள் கலங்கிக் கிடக்க சொல்லியிருந்தாள், அவள்.
ஆரோன் உதடுகளில் வருத்த முறுவல். ‘நீ என் மட்டில் இன்னார்’ என்று நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறாள். அவர் எதிர்பார்ப்பு ஆயுளற்றது. அதைவிடவும் கொஞ்சமும் நியாயமற்றதோ! அவர் மனமே இகழ்ச்சியாகக் கேட்டது!
அவள் தலையைப் பாசமாக வருடியவர், செல்லும் படி தலையசைப்பால் காட்டிவிட்டு அமர, மலர்வோடு எழுந்த சோஃபியாவும் கட்டிப்பிடித்து ஆசி கூறி “அழகாக இருக்கிறாய் ஒலிவியா!” என்றார்.
ஒலிவியா விழிகளில் இருந்து நீர் முத்துகள் உருண்டு தெறித்தன. போட்டியாக இதழ்களில் முறுவல். அதுவரை மனத்திலிருந்த குற்றவுணர்வு காணாமல் போயிருக்க, மகிழ்வோடு தாய் தந்தை கரங்களைப் பற்றியபடி தன்னையே பார்த்து நின்றவனை நோக்கி நடந்தாள்.
மதச் சார்பில்லாது பெரியவர் முன்னிலையில் திருமணம் செய்வதென்பது இருவீட்டாரும் மனமொருமித்து எடுத்த முடிவு! யார் அந்தப் பெரியவர் என்பதை, தானே பார்த்துக்கொள்வதாக வேர்த் சொல்ல, ஒலிவியாவும் தலையாட்டிவிட்டாள்.
அதுபார்த்தால்…கையில் ஒரு ஃபையிலோடு அவர்களுக்கு முன்பாக வந்து நின்றவர், சாட்சாத் ஆரோன் டேல் தான்!
ஒலிவியா இதை எதிர்பார்க்கவில்லை. அருகண்மையில் நின்றவனை ஏறிட்டாள். ‘உனக்குப் பிரச்சினை இல்லையே’ விழிகளால் கேட்டவன் நாரியில் இடித்தாள், ஒலிவியா.
“நீ ஒரு கள்ளன்!” என்றதோடு அந்த விடயத்தை விட்டுவிட்டாள்.
லிசியால் அவ்வளவு இலகுவாக அதைக் கடக்க முடியவில்லை. கணவரைப் பார்த்தார்.
“இதென்ன வேர்த் செய்த வேலை? இவருக்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் அதுவும் என் மகள் கல்யாணத்தில் தேவையில்லாதது.” எரிச்சலோடு முணுமுணுத்தார், லிசி.
“விடு லிசி. இதில் நாம் கருத்துச் சொல்ல ஒன்றுமேயில்லை. ஒலிவியா சற்றுமுன் என்ன சொன்னாள் என்று நீ கவனிக்கவில்லையா? அவர்களுக்கு அந்த மனிதர் மிகவுமே மரியாதைக்குரியவர். நம் மகள் மகிழ்வாக இருப்பது தான் நமக்கு முக்கியம், விடு!” மனைவியின் அதிருப்திக்கு முற்றுப்புள்ளியிட்டுவிட்டார், டெனிஸ்.
மணமக்கள் சத்தியப்பிரமாணம் செய்து, ஆரோன் டேல் கையால் மோதிரம் வாங்கி மாற்றிக்கொண்டார்கள். நட்பும் சுற்றமும் ஆரவாரிக்க வெடிங் கிஸ் கொடுத்துக்கொண்டார்கள். அப்போது பால்கனியில் இருந்து மலர்கள் மழைத் தூறலாகச் சிதறி விழ, சுற்றிலும் நின்ற கமராக்கள் அதைத் தம்முள் அடக்கினவென்றால், அந்தக் கலகலப்பில் ஆரோன் விழிகளால் உருண்டு தெறித்த உவகைக் கண்ணீரும் விருந்தினர், உற்றவர் பார்வையில் படாது தப்பித்திட்டு.
இருவரையும் ஒன்றாக அணைத்து வாழ்த்தினார், ஆரோன். அவர்கள் நன்றி கூற, கண்ணீரோடு அவர் பார்த்த பார்வையில் டேல் அவரை இறுக அணைத்துக்கொண்டான். தன்னையுமறியாது எழுந்த ஒலிவியாவின் வலக்கரம் அவர் முதுகில் மெல்லத் தட்டிக் கொடுத்தது.
அடுத்து, ஏற்கனவே திருமணப்பதிவு செய்த பத்திரத்தை அழகிய கண்ணாடிச் சட்டத்தினுள் இட்டு, ஆரோன் கையிலிருந்து வாங்கிக்கொண்டார்கள்.
அப்படியே கைகோர்த்து நடந்து வந்து ஒலிவியா விட்டெறிந்த பூச்செண்டை எக்கித் துள்ளிப்பிடித்துத் தனதாக்கியிருந்தாள், துர்க்கா. அப்போது அருகில் நின்ற ஏதன் முகத்தில் முழங்கையால் இடித்தும் விட்டிருந்தாள். முறைப்போடு விலகி நின்றவன் அவள் பூ முகத்தை வாட வைத்துவிட்டு மறுபுறம் பார்த்தான்.
‘இவனுக்குப் பெரிய நினைப்பு! ஆரோன் டேல் மகனாயிற்றே என்று சோடியாக வந்தது பிழையாகிற்று.’ மனத்தில் முணுமுணுப்போடு தள்ளிச் சென்றுவிட்டாள், துர்க்கா.
அடுத்து விருந்தினர் மணமக்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள் .
குடும்பமாக எடுத்த ஆரோன், “நாம் மூவரும் தனியாக” என்று, அதுவும் ‘என் மகளோடு’ என, மனதுள் சொல்லிக்கொண்டு ஒலிவியாவை அணைத்தபடி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சிறு இடைவேளையில் ஒலிவியா உடைமாற்றிக்கொண்டு வர, வெடிங் கேக் வெட்டி ஊட்டி கலகலத்தவர்கள் அடுத்து சோடி சோடியாக நடனம் ஆடத் தொடங்கினார்கள்.
“முதல் பாட்டு நம் மணமக்கள் குரலில்!”
கிட்டாரோடு இருந்த சாம் மைக்கில் சொல்லிக்கொண்டே கிட்டாரை இசைக்க, வண்ண வண்ண விளக்குகளோடு சேர்ந்து சோடிகள் நடனமாடத் தயாராகினார்.
வேர்த் குரலில் “I found a love for me…” அந்த இடத்தை ஆட்கொண்டது.
உணவுண்டு கொண்டிருந்தவர்கள் கூட அதன் சுவை மறந்து எக்கி, எட்டி இங்கே பார்க்கத் தொடங்கிவிட்டிருந்தார்கள்.
Baby, I’m dancing in the dark, with you between my arms என்று, ஒலிவியாவும் வேர்த்தும் சேர்ந்து பாடத் தொடங்குகையில், ஆரோன் மனைவியோடு நடனத்தில் இணைத்திருந்தார்.
Barefoot on the grass, while listening to our favorite song
I have faith in what I see, now I know I have met
An angel in person, and she looks perfect
ஒலிவியா வேர்த் குரல் அந்தப் பண்ணையையே காதலுணர்வில் கட்டிப் போட்டிட்டு!
No, I don’t deserve it, you look perfect tonight
என்று சொன்னபடி,மனைவியின் காந்த விழிகளுள் தொலைந்து போனான், வேர்த்.
சுபம்!

