அழகிய சவால் நீ 6 – 2

“பக்லாவா செய்கையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, சுகர் சிரப் சேர்க்கும் போது, பேக் செய்த பக்லாவா, சுகர் சிரப் இரண்டில் ஒன்று நன்றாக ஆறி இருக்க வேண்டும்.”

 

தாய் சொல்வது, ஒலிவியாவின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.

 

சீனி கரைந்து கொதித்து வர, பதம் பார்த்து இறக்கி ஆறவிட்டாள்.

 

அதே கையோடு நான்காவது மாக்கலவையைக் குழைக்க ஆரம்பிக்கவும், பட்டர் தடவிய பெரிய பேக்கிங் தட்டில் பேஸ்ட்ரி ஷீட்களை விரிக்கத் தொடங்கியிருந்தான், டேவிட்.

 

“டைமண்ட் ஷேப்ல வெட்டினால் 80 துண்டுகளுக்கு மேலேயே வரும் என்ன?” உறுதி செய்து கொண்டாள், ஒலிவியா.

 

“தாராளமாக வரும். இல்லையோ சதுரமாகவும் வெட்டலாம்.” என்றான், டேவிட்.

 

“வேண்டாம், டைமண்ட் தான் நல்லது.” இறுதி முடிவெடுத்தார்கள்.

 

ஆறு பேஸ்ட்ரி தாள்கள் வரை பட்டர் பூசி விரித்து, பின், பிஸ்தா கலவையைச் சமமாகப் பரப்பி, அடுத்து ஆறு பேஸ்ட்ரி தாள்கள், பருப்புக்கலவை, மீண்டும் ஒரு தடவை ஆறு பேஸ்ட்ரி தாள்கள், பருப்புக்கலவை, இறுதியாக மேலே ஆறு பேஸ்ட்ரி தாள்கள் விரித்து நன்றாக அழுத்திவிட்டான், டேவிட். அதைக் குளிரூட்டியில் வைத்துவிட்டு, அடுத்த தட்டில் பேஸ்ட்ரி சீட் விரிக்க ஆரம்பிக்கையில், ஒலிவியாவும் ஒரு பகுதியைக் கையில் எடுத்திருந்தாள்.

 

“170 செல்சியல் ப்ரீ ஹீட் ஓவனில் 40 நிமிடங்கள் பேக் செய்து பொன்னிறம் வர இறக்கினால் சரி” நேரத்தைப் பார்த்தபடி டேவிட் சொல்ல, “இறக்கிய வேகத்தில், ஆறியிருக்கிற சுகர் சிரப் விட்டுப் பரிமாறுவதுதான்.” என்றாள், ஒலியா.

 

“மேல டெகரேட் செய்ய பிஸ்தா பருப்புக் கலவை வேறாக எடுத்து வைத்திருக்கிறாய் தானே?”

 

“ஆமாம்.” கதைத்துக்கொண்டே பரபரவென்று மிகுதி நான்கு தட்டுகளையும் தயாரித்தார்கள்.

 

குளிரூட்டியில் முதலில் வைத்த தட்டை எடுத்து டைமண்ட் வடிவில் வெட்டிவிட்டு ஓவனில் வைக்கும் வேலையை டேவிட் எடுத்துக்கொள்ள, மெயின் மெனு தயாரிப்பில் இருந்தவர்களுக்குக் கை கொடுக்கச் சென்றாள், ஒலிவியா.

 

300 துண்டு இறைச்சி. அதுவும் கிறிலில் போட்டு எடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஒரு கிறிலில் சென்று பொறுப்பாக நின்று கொண்டாள், ஒலிவியா. அவளுக்கு மிகவும் பிடித்த வேலையும் கூட.

 

நேரம் நெருங்க ஸ்டார்ட்டர் பரிமாறினார்கள். நீல அணி சிவப்பு அணி இரண்டினதும் மிகவும் ருசியும் நேர்த்தியுமாக இருந்ததையிட்டு நடுவர்கள் மகிழ்ந்தார்கள். அவர்களையே எட்டி எட்டிப் பார்த்து நின்ற ஸ்டார்ட்டர் தயாரித்த போட்டியாளர்கள் மிக்க மகிழ்வோடு தத்தம் அணி மெயின் மெனுத் தயாரிப்பில் உதவ ஓடினார்கள்.

 

இரு அணியினரும், பரிமாறுவது போலவே தட்டில் இட்டுச் சுவைத்துப் பார்த்தார்கள். அப்போது, “எப்பிடி இருக்கு?” என்றபடி வந்தார், ஆரோன் டேல்.

 

நீல அணியினதைச் சுவைத்து, பார்வையாலேயே பாராட்டிவிட்டு நகர்ந்தவர், சிவப்பு அணியினரின் பிளேட்டைப் பார்த்து நெற்றி சுருக்கினார். அவர் இடக்கரம் வாயைப் பொத்தியிருந்தது.

 

“இறைச்சி எந்தளவுக்கு வேக வைத்தீர்கள்?” என்றதும், “மீடியம் ரேர்” என்றது, ஒலிவியா.

 

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, இறைச்சியை வெட்டிக்கொண்டு நின்றவனையும் தட்டையும் பார்த்தவர் முகம் இறுகிற்று.

 

“இது என்ன விளையாட்டா?” உறுமல் குரலோடு அதிலிருந்து ஒரு துண்டை வாயில் போட்டு மென்றார். மறுநொடி, முகம் கோண, “ஓவர் குக்!” என்றபடி, பக்கத்தில் இருந்த குப்பைக் கூடையில் துப்பிய வேகத்தில், அந்தத் தட்டையும் அப்படியே தள்ளிவிட்டார். வாயிலிருந்து பச்சைத் தூசணம் ஒன்றும் வழுவி விழுந்திருந்தது.

 

அருகில் நின்ற ஒலிவியாவையும் பார்த்தே சொன்னாரோ! அவளோ, உடல் நடுங்க பொலபொலவென்று கண்ணீர் வழிய பின்னால் நகர்ந்தாள்.

 

செஃப் ஆரோன் டேல் கோபம் உலகறிந்தது. அப்படியிருக்க, வந்து இத்தனை நாட்களில் அவர் கண்டிப்பைப் பார்த்தவர்கள் கோபத்தைப் பார்க்கவில்லை. அதனாலேயே, நிகழ்ச்சியின் பரபரப்பு அதிகரிக்க, வேண்டும் என்றே தொலைக்காட்சியில் அப்படிக் காட்டுவார்களோ என்றளவுக்கு ஒலிவியாவுக்குச் சந்தேகம் கூட வந்திருந்தது.

 

இப்போ பார்த்தால்…

 

“பிரஷர் டெஸ்ட் போனால் உங்களில ஒருவர் வெளியேறுவது நிச்சயம். தெரியும் தானே?” உறுமியவர், “பார்ப்போம்!” நகர்ந்து விட்டார்.

 

“கிட்டத்தட்ட 100 போஸன்ஸ் ஓவர்குக் இறைச்சி” குழுவினர் முகம் கன்றத் தடுமாறினர்.

 

“இனி எதுவும் செய்ய நேரம் இல்லை. இதையே தான் செர்வ் செய்தாக வேண்டும். மிகுதியைக் கொஞ்சம் கவனமாக எடுக்க வேண்டும்.” குழு முடிவெடுத்தது.

 

அதை நினைத்துக் குழம்ப நேரம் இல்லையே! வேலைகள் நடந்தன.

 

“ஒலிவியா ஏன் இன்னும் அழுகிறாய்? டெசர்ட் ரெடியா? இன்னும் அரைமணித்தியாலத்தில் பரிமாற வேண்டும்” அவளையே கவனித்து நின்ற வேர்த், மனம் பொறுக்காது வந்து கேட்டான்.

 

அவள், அவனைப் பார்க்கவே இல்லை. ஓவனை விட்டு இறக்கி, முதல் வெட்டிய அடையாளத்தில் மீண்டும் ஒரு தடவை நன்றாக அழுத்தி வெட்டி, சுகர் சிரப் விட்டு வைத்திருந்த பக்லாவா தட்டு அவள் முன்னால். ஒவ்வொரு டைமண்ட் மீதும் பச்சைப் பசேல் என்றிருந்த பிஸ்தா கலவையை வைத்துக்கொண்டிருந்தவள் கண்கள் கசிவை நிறுத்தவில்லை.

 

“ஒலிவியா, அந்த போர்ஷன் இறைச்சி செய்தது நீ இல்லை. பிறகேன் அவர் சொன்னதை உனக்கு என்று எடுக்கிறாய்? நீ அதில் நின்றதால் உன்னையும் பார்த்து ஏச வேண்டியிருந்திருக்கும். மற்றும்படி…” அவளைச் சமாதானப்படுத்திவிட வேண்டும் என்கிற தவிப்போடு அவன் சொல்ல, “இட்ஸ் ஓகே… ஐம் ஓகே!” நகர்ந்து விட்டாள், அவள்.

 

அதேநேரம் குடுகுடுவென்று சென்று, டேல் கண்களை நேராகப் பார்த்து, ‘போட்டிக்கு எண்டு வந்திருந்தாலும் இதுவெல்லாம் எங்களுக்குப் புதிது. நான்கு சுவருக்குள் எங்கள் குடும்பத்தினருக்கு எண்டு சமைத்த நாங்கள், இப்படி, இத்தனை பேருக்குச் சமைக்கிறோம். பிழை செய்ய வேண்டும் என்று விருப்பமா என்ன? எவ்வளவு முயல்கிறோம் என்று நீங்கள் பார்க்கவில்லையா என்ன? அப்படி இருக்க, தூசனத்தால் ஏசி, குப்பைத் தொட்டியில் உணவைப் போடும் அளவுக்கு என்ன நடந்தது? உமக்கு ஒருவர் இதைச் செய்தால் எப்பிடி இருக்கும்?’ என்று, கேட்க வேண்டும் போலிருந்தது.

 

அப்படிக் கோபத்தோடு இருந்ததால் அவர் பார்வையையே தவிர்த்துவிட்டாள்.

 

அவள் முகம் சுருங்க நிற்பதைக் கவனிக்கவே செய்தார், ஆரோன் டேல். அவருக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் அவள். இருந்தாலும் இந்தப் போட்டி ஒருநாளும் விளையாட்டுக்குரியது இல்லை. அதுவே, அவரைக் கண்டிக்க வைத்திருந்தது.

 

கடைசியாக, இரு அணியினதும் டெசர்ட் நடுவர்களுக்குப் பாரிமாறப்பட்டது. விருந்தினருக்கும் பரிமாறிக்கொண்டிருந்தார்கள். நீல அணியினதைச் சுவைத்தவர்களுக்கு சிவப்பு அணியினரின் பக்லாவா பரிமாறப்பட்டது.

 

மூவரும் உடனே சுவைக்கவில்லை. கிறிஸ்டினா பக்லாவாவையே பார்த்தபடி இருக்க, தூக்கி அப்படி இப்படியெல்லாம் திருப்பிப் பார்த்தான், வேர்த். அப்படியே சுவைத்துப் பாராட்டிக் கொண்டிருந்த விருந்தினர் பக்கம் பார்வையை அலைய விட்டவன் ஒலிவியாவையும் பார்த்தான். அவர்களில் ஒரு கண்ணை வைத்திருந்தவள் இயல்பாகத் திரும்புவது போல் திரும்பிவிட்டாள். அதன்பின் திரும்பவேயில்லை.

 

“டேஸ்ட் செய்கிறார்கள் ஒலிவியா!” முணுமுணுத்தான், டேவிட்.

 

“எது என்றாலும் ஏற்கத்தான் வேண்டும், விடு!” என்றவள், “இன்னொரு பிளேட்?” என்று வந்த சிறுபிள்ளைகள் இருவருக்கு பக்லாவாவை கொடுத்துவிட்டு, அடுத்த பிளேட்டை எடுக்கத் திரும்பியவள் திகைத்துப் போனாள். காரணம் அவர்கள் அருகில் வந்து நின்றிருந்தார், ஆரோன்.

 

பக்லாவாவைத் துளித்துளியாக இரசித்துச் சுவைத்த ஆரோனால் அமர்ந்திருக்க முடியவில்லை. அவர் மன எதிர்பார்ப்புக்கு, ஆசைக்கு விருந்தே வைத்தால்! அதுவே, எழுந்து வர வைத்திருந்தது.

 

அது பார்த்தால், ஒலிவியா திரும்பி அவரைக் கண்டதும் பார்த்த பார்வை இருக்கே! அவர் நெஞ்சாழம் சென்று தாக்க, சில கணங்கள் உருண்டிருக்கும் அசைவற்று நின்றுவிட்டார், மனிதன்.

 

எப்படித் தன்னை மீட்டுக்கொண்டாரோ! தவறுதலாக அவரை இடித்த கமராமேனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமோ!

 

அவருக்கேயுரிய கம்பீர முறுவலோடு, ஒரு கையால் டேவிட்டையும் மறுகையால் இவளையும் அணைத்தவர், “அவுட் ஒஃப் த வேல்டு!” மெல்லச் சொன்னார். விருட்டென்று நகர்ந்தும் விட்டார்.

 

அவரைக் கண்டதும் ஒலிவியாவுக்கோ, அவர் வாய் உதிர்த்த தூசனம் தான் நினைவில் வந்திருந்தது. அதுவே மனத்தில் கனன்ற கோபத்தை விழிகளால் கசிய வைத்துமிருந்தது. அது பார்த்தால்? தளம்பிவிட்ட கண்ணீரை எப்படி மறைப்பது என்று அவள் தடுமாறி நின்றாள். டேவிட்டை கேட்கவே தேவையில்லை, “ஓ” என்றபடி, கரமிரண்டையும் தூக்கித் துள்ளியே விட்டான்.

 

“இதைவிட வேறென்ன வேண்டும்?” இருவர் தோள்களிலும் தட்டிவிட்டு, “இன்னொரு பிளேட்” கெஞ்சலாகக் கேட்ட வேர்த், தானாகவே மூன்று பிளேட்டுகளை எடுத்துக்கொண்டு ஓடினான்.

 

அது என்னவோ, அதுவரை கோபத்தில் நெஞ்செரிய நின்றிருந்த ஒலிவியா, உவகை வெள்ளத்தில் இதமாக அமிழ்ந்து போனாள்.

 

“இனி வரப்போவது வெற்றியோ தோல்வியோ எதையுமே எதிர்கொள்ளலாம் போ!” கரமிரண்டையும் தூக்கி ஆர்ப்பரிப்போடு சொன்னான், டேவிட்.

 

பக்லாவா தட்டுகள் நான்குமே மிச்சம் மீதியின்றி வழித்தெடுத்துவிட்டார்கள். பொதுவாகவே, விருந்தினர் 300 பேருமே இரு குழுக்களின் சமையலையும் வஞ்சனையின்றிப் பாராட்டிவிட்டுச் சென்றார்கள்.

 

என்னதான், கிடைத்த சொற்ப பயிற்சிகளையும் தாம் தேடி அறிந்த விசயங்கள், நுணுக்கங்களையும் வைத்து முயன்று சமைத்தாலும் இறுதியில், பரிமாறிவிட்டுப் படக்படக்கென்று அடிக்கும் இதயங்களோடு பார்த்திருந்த கணங்களின் கனம், மெல்ல மெல்ல வடிந்து போனாலும் முடிவுகள் வர இருக்கிறதே!

 

இரு அணியினரும் அருகருகே நின்றிருக்க, முன்னால் நடுவர்கள் மூவரும்!

 

“வெல்…”ஆரம்பித்தான், வேர்த்.

 

“சந்தேகத்துக்கு இடமின்றி, இரு அணியினரும் மிகச் சிறப்பாக உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இருந்தீர்கள்!” என்றவன், “ஸ்டார்ட்டர் இரு குழுவும் பெஸ்ட்! குறைகள் இல்லை. மெயின் மெனு, உங்களுக்கே தெரியும், சிவப்பு அணியின் இறைச்சி ஓவர் குக் அண்ட் போஸன்ஸ் அன் ஈகுவல்.” சொல்லி நிறுத்தினான்.

 

“டெஸெர்ட் சிவப்பு அணியினது அருமை! சொல்ல வார்த்தைகள் இல்லை. அதேபோலவே நீல அணியினதிலும் குறையென்று எதுவுமே இல்லை.” கிறிஸ்டினா தொடர, “இப்போ, யார் வெற்றியாளர் என்று உங்களுக்கே தெரிந்திருக்குமே!” என்றார், ஆரோன் டேல்.

 

சிவப்பு அணியினர் முகங்கள் சிறுக்க நின்றிருந்தார்கள். நீல அணியினர் மலர்வில்.

 

“ஆமாம், இன்றைய வெற்றியாளர்கள் நீல அணியினர்!” வேர்த் சொல்ல ஆரவாரக் கூச்சல், அவர்களுள்.

 

அன்று, தம் இருப்பிடம் திரும்பிய சிவப்பு அணியினருள் ஒருநாளும் இல்லாத வகையில் சலசலப்பு, மனஸ்தாபங்கள்.

 

சிலர் முகம் நீட்டிக்கொண்டு இருந்தார்கள். “பின்னே, நாங்கள் நன்றாகச் செய்திருந்தும் இறைச்சி சமைத்தவர்களின் தவறால் நாளை பிரஷர் டெஸ்ட், எலிமினேஷன் என்று முகம் கொடுக்க வேண்டியதாயிற்றே!” என்று, கதை வளர்த்தார்கள்.

 

“விடுங்கப்பா, இது போட்டி. இப்படியெல்லாம் இருக்கும் என்று நமக்குத் தெரியாதா என்ன?” மியா அதட்டிச் சமாதானம் செய்யப் பார்த்தாலும் முறுகலோடு தான் இருப்பிடம் வந்து சேர்ந்திருந்தார்கள்.

 

ஒலிவியா, உதடுகளில் ஒட்டிய முறுவல் மாறாது பயணப்பட்டாள். அதுவும், ஆரோன் டேலின் முகத்துக்கு நேரே நன்றாக நாலு கேள்விகள் கேட்க வேண்டும் என்று கறுவிக் கொண்டிருக்க, முதலில் எழுந்து வந்து பாராட்டியது போதாதென்று, “உன்னால் எப்படி இப்படி பக்லாவா செய்ய முடிந்தது?” என்றும் கேட்டிருந்தாரே! “என் கிராண்ட் பேரெண்ட்ஸ் துருக்கியைச் சேர்ந்தவர்கள்!” என்று, பெருமையாகச் சொன்னாளே!

 

ஹோம் குக்கிங் வெற்றியாளராகிய மனநிலையில் இருந்தாள், அவள்.

 

 

 

error: Alert: Content selection is disabled!!