நீ வந்து தங்கிய நெஞ்சில் 24.2

என்ன பேசினாலும் குற்றம் என்றால் எப்படி? துக்கத்தை விழுங்கிக்கொண்டு, “ஏன் போன் நம்பரை மாத்தினனீங்க?” என்று அமைதியாகவே கேட்டாள்.

“எனக்கு என்ர பிரைவசி வேணும். அதான் மாத்தினனான்.”

“திலினி உங்கட வீட்டில வந்து தங்கினத நீங்க எனக்குச் சொல்லேல்லத்தானே? அண்டைக்கு உங்களிட்டச் சொல்லாம நரேனை நான் சந்திக்கப் போனதுக்குக் கோவப்பட்டீங்க.”

“எரிச்சலைக் கிளப்பாத யாமினி. நான் ஒண்டும் அவளோட தனியா தங்கேல்ல. அம்மா, அப்பா, தங்கச்சி எண்டு இருக்கிற என்ர வீட்டுக்குத்தான் கூட்டிக்கொண்டு போனனான். இன்னும் சொல்லப்போனா அம்மாதான் கூட்டிக்கொண்டு வரச் சொன்னவா. இதெல்லாம் உனக்கு விளங்காது. எதைப் பிடிச்சுக்கொண்டு சண்டை பிடிக்கலாம் எண்டு நிக்கிற ஆள் நீ.” என்றவனுக்கு இதற்கு மேலும் இந்தப் பேச்சை வளர்த்தால் அது பெரிய சண்டையில்தான் போய் முடியும் என்று புரிந்துபோயிற்று.

“வேற ஏதும் கேக்கோணுமா உனக்கு?”

இப்படிக் கேட்கிறவனிடம் என்ன சொல்வாள். “இல்லை” என்றாள் அடைத்த குரலில்.

“ஓகே. நான் வைக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.

அப்படியே அமர்ந்துவிட்டாள் யாமினி. அவளால் தெளிவாக யோசிக்கவே முடியவில்லை. இந்தளவில் அவன் விலகி நிற்கிற அளவுக்கு, அப்படி என்ன நடந்தது என்று யோசித்தாள். கடைசியாக அவள் வார்த்தையை விட்டாள், சரி. அதற்குப் பதிலாக அவன் அறைந்துவிட்டானே. இன்னும் என்ன?

அங்கே நிரோஜனுமே கொதிப்புற்ற மனநிலையில்தான் அமர்ந்திருந்தான். இப்படி எரிச்சல்பட்டு, ஆத்திரப்பட்டு, சீறிச் சினப்பது அவன் குணமில்லை. என்னவோ தன் சுயத்தைத் தான் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருப்பதாகப் பட்டது. நிம்மதி இல்லை, சந்தோசம் இல்லை, பழைய மாதிரி யாரோடும் மனத்திலிருந்து பேசிச் சிரிக்க முடிவதில்லை. ஒருவித எரிச்சலும் சினமும் அவனோடு கூடவே சுற்றிக்கொண்டிருந்தன.

தலையைக் குலுக்கிவிட்டு எழுந்து புறப்பட்டான்.

இரண்டு நாள்கள் கடந்திருந்தன. அவன் பக்கமிருந்து எந்தச் சத்தமும் இல்லை. யாமினி தன் மொத்த நிம்மதியையும் இழந்திருந்தாள். கைப்பேசியைப் பார்த்து பார்த்தே ஓய்ந்தாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அவனுக்கு அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. குறுந்தகவல் அனுப்பினாள். பதில் இல்லை.

நாளாக நாளாக அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு பயமும் பதற்றமும் அவளைப் போட்டு ஆட்டின.

திவாகர் வீட்டில் ஏதோ விசேஷம் என்று அஜந்தா வேறு ‘வர்க் ப்ரம் ஹோம்’ வாங்கிக்கொண்டு போயிருந்தாள். ஆறுதலுக்குக் கூட யாருமில்லாமல் எப்படியாவது நிரோஜனோடு பேசிவிட மாட்டோமா என்று அல்லும் பகலும் துடித்தாள்.

இப்படி இருக்கையில்தான் அஜந்தா சில புகைப்படங்களை அனுப்பியிருந்தாள். எங்கோ அருவிக்கரை ஒன்றுக்கு நிரோஜன் குழு போயிருக்கிறார்கள். அதைத் திலினி முகப்புத்தகத்தில் குறிப்பிட்ட நட்பு வட்டம் மாத்திரம் பார்ப்பதுபோல் பகிர்ந்திருந்தாள்.

அதை அவர்களின் அலுவலகத்திலேயே பணிபுரியும், அஜந்தாவோடு நல்லமாதிரிப் பழகும் ஒருத்தி எடுத்து அஜந்தாவிற்கு அனுப்பியிருந்தாள்.

அத்தனையிலும் நிரோஜனின் மகிழ்ச்சிக்கு குறைவேயில்லை. இங்கே அவள் அவனை எண்ணிக் கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்க அங்கே அவன் எப்போதும்போல் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறான்.

அதைவிட வலித்தது, அத்தனையிலும் அவன் அருகில் திலினி இருந்தாள். அவர்கள் நண்பர்கள்தான் என்று அறிவுக்குப் புரிந்தாலும் இப்படி அவனை இன்னொரு பெண்ணோடு பார்க்க முடியவில்லை.

இதற்கு மேலும் பேசாமல் இருக்க முடியாமல் அவனைத் தேடிக்கொண்டு அலுவலகத்துக்கே போனாள்.

நிரோஜன் இதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்துபோனான். “உன்னை ஆர் இஞ்ச வரச் சொன்னது?” வேகமாய் எழுந்து வந்து சத்தமில்லாமல் சீறினான்.

இந்தளவு கடுமை காட்டத்தான் வேண்டுமா என்று பார்த்தாள். “நீங்க ஏன் நிரோ ஃபோன் பண்ணினா எடுக்கிறீங்க இல்ல, மெசேஜஸ்க்கு ஆன்சர் பண்ணுறீங்க இல்ல? என்னை வெறுத்திட்டீங்களா?” என்றாள் தழுதழுத்த குரலில்.

“யாமினி, தயவுசெய்து எல்லாருக்கும் முன்னாலயும் அழுது என்னைக் கேவலப்படுத்தாத.” என்று பல்லைக் கடித்தான் அவன்.

“எனக்கு உங்களோட கதைக்கோணும் நிரோ.”

“என்ன கதைக்கப்போறாய்?” என்று கேட்டுச் சீறப்போனவன் தம்மைச் சுற்றி பார்த்தான். பேசுவது கேட்காத தூரம்தான் என்றாலும் உடல்மொழியும் அவள் கண்ணீரும் காட்டிக்கொடுக்கும். “வா கீழ!” என்று அழைத்துக்கொண்டு போனான்.

“என்ன கதைக்கோணும்?” தரைத் தளத்தில் ஒரு பக்கமாய் வந்து நின்றுகொண்டு கேட்டான்.

முகம் கண்ணெல்லாம் கடினமுற்றிருக்க கேட்பவனிடம் என்ன சொல்வாள்? கண்ணீருடன் அவனையே பார்த்து நின்றாள்.

“என்ன கதைக்கோணும் எண்டு கேட்டனான் உன்னை?”

ஏன் என்னை அவொய்ட் பண்ணுறீங்க நிரோ? எண்ணெய் பிடிக்கேல்லையா? வெறுத்திட்டீங்களா?” அதைக் கேட்கும்போதே குரல் நடுங்கியது. கன்னத்தில் கண்ணீர் உருண்டு ஓடிற்று. கோபப்படப்போகிறான் என்கிற பயத்தில் வேகமாகத் துடைத்துக்கொண்டாள்.

“வேலை.” என்றான் அவன் அவளைப் பாராமல்.

“எப்பவும் இதே வேலைதான் இருந்திருக்கு நிரோ.”

“அப்ப என்ன நான் பொய் சொல்லுறன் எண்டு சொல்லுறியா?”

அவளிடம் கோபப்படுவதற்குக் காரணத்தை தேடிக்கொண்டிருப்பவனிடம் அப்படித்தான் என்று எப்படிச் சொல்வாள்?

“எனக்கு வேலை இருக்கு யாமினி.” என்றான் பல்லைக் கடித்தபடி.

மிகுந்த வேதனையுடன் அவனைப் பார்த்துவிட்டு, தன் கைப்பேசியில் இருந்த புகைப்படங்களைக் காட்டி, “என்ன இது?” என்று கேட்டாள்.

“போன சனி குளிக்க போனனாங்க. அதில உனக்கு என்ன பிரச்சினை?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

“ஏன் எனக்கு சொல்லேல்ல.”

“அங்கேயும் வந்திருந்து அவன் காசு தரேல்ல, இவன் காசு தரேல்ல, நீ சிலவளிக்காத எண்டு என்ர உயிரை வாங்கவா?” என்றான் அவன் சுள்ளென்று.

“உண்மையாவே அது காரணமா, இல்லை, திலினிய பிடிக்க ஆரம்பிச்சிட்டுதா உங்களுக்கு?” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, “சீ நிப்பாட்டு!” என்று சீறியிருந்தான் அவன்.

“இதுதான் நீ. இந்தளவுதான் நீ. இப்பிடிக் கேக்க நாக்குக் கூசேல்லையா உனக்கு? உன்னைப்போய்…” என்று நெற்றியில் அறைந்துகொண்டான் அவன்.

“என்ன என்னைப்போய்? என்ன நிரோ, சொல்லுங்க?” அந்த வார்த்தை அவளையும் அதிகமாய்ச் சுட்டுவிட்டதில் ஆத்திரப்பட்டால்.

அவன் பதில் சொல்லாமல் முகம் திருப்பி நின்றான்.

“என்ன சொல்ல வந்தனீங்க நிரோ. எனக்கு இப்ப தெரியோணும். சொல்லுங்க.” அவள் குரல் உயரவும், “தயவு செய்து இஞ்சையும் என்ர மானத்த வாங்காம போ யாமினி!” என்றான் அவன் பல்லைக் கடித்துக்கொண்டு.

“என்ன சொல்ல வந்தனீங்க. அதச் சொல்லுங்க முதல். நான் போற…” என்றவள் கண்ணில் திலினி பட்டாள்.

“ஏய் இஞ்ச வாடி!” என்று சத்தமாக அழைத்தாள். யாரை அழைக்கிறாள் என்று திரும்பிப் பார்த்த நிரோஜன் ஒருகணம் அதிர்ந்துவிட்டான். திலினி வேறு அவர்களிடம் போவதா என்ன செய்வது என்று நிரோஜனையும் யாமினியையும் மாறி மாறி பார்த்து நின்றாள். “நீ போ!” என்று அவளிடம் சொல்லிவிட்டு, “மரியாதையா இஞ்ச இருந்து போ!” என்று பல்லைக் கடித்தான் இவளிடம்.

அவள் அதைக் கேட்பதாக இல்லை. “இவர் என்னை விரும்பிரார் எண்டு உனக்குத் தெரியுமெல்லா? பிறகும் இவரோட போய் நிண்டு குளிச்சுக் கூத்தடிக்க வெக்கமா இல்லையா உனக்கு?” என்றவளை நம்பமாட்டாமல் வெறித்தான் நிரோஜன்.

யாமினி இந்தளவில் தரமிழந்து பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட பத்துப் பேருக்குக் கிட்ட குளிக்கப் போயிருந்தார்கள். அதில் அவனையும் அவளையும் வைத்து இணைத்துப் பேசுகிறாள் என்றால்?

விறுவிறு என்று அவள் கையை இழுத்துக்கொண்டு வந்து தள்ளிவிட்டவன், “என்னை மிருகமாக்காம போயிடு இஞ்ச இருந்து!” என்று வார்த்தைகளைப் பற்களுக்குள் இருந்து கடித்துத் துப்பினான்.

திகைத்து நின்றாள் யாமினி.

error: Alert: Content selection is disabled!!