கடன் அன்பை முறிக்கும் 30 – 2

“அடிங்!” என்று கையில் இருந்த மண்வெட்டியை ஓங்கிவிட்டு, “போய் உடுப்பை மாத்திக்கொண்டு வா எருமை! வந்ததே லேட். இதில மச்சான் கச்சான் எண்டுகொண்டு.” என்று அவனைப் பிடித்துத் துரத்திவிட்டான்.

 

“சரி சரி கோவப்படாத!” என்றுவிட்டுப் போய், அவனைப் போலவே தானும் உடையை மாற்றிக்கொண்டு, மண்வெட்டி ஒன்றையும் தூக்கிக்கொண்டு வந்து வேலையைத் தொடங்கினான்.

 

இப்படியான நேரங்களில் பேச்சும் சிரிப்பும் சீண்டலும் சண்டையுமாக வேலையை முடிப்பதுதான் அவர்கள் வழக்கம். ஆனால் இன்று, இருவரும் அந்த மனநிலையில் இல்லை.

 

இருவராலும் மற்றவரோடு இயல்பாகக் கதைக்க முடியவில்லை. இருவர் எண்ணங்களும் தாம் மனத்தைப் பறிகொடுத்த பெண்களிடமே இருந்தன.

 

கொஞ்ச நேரம், வேலை மட்டுமே மிக வேகமாக நடந்தது. முதன் முதலாகக் குடித்ததா என்ன என்று தெரியவில்லை. குருவுக்கு வெய்யிலில் நிற்கத் திரும்பவும் தலையை வலிக்க ஆரம்பித்தது.

 

மண்வெட்டியை வைத்துவிட்டுப் போய் மோட்டாரிலிருந்து பாயும் தண்ணீரை இரண்டு கைகளாலும் ஏந்தி அருந்தினான். அதன் பிறகும் வேலை செய்ய உடல் ஓத்துழைக்க மாட்டேன் என்றது. ‘கண்டறியாத கள்ளக் குடிச்சு வீட்டிலயும் பிரச்சினை உடம்பிலயும் பிரச்சினை!’ தன்னையே திட்டியபடி சென்று, அங்கிருந்த மரத்தின் நிழலின் கீழே அமர்ந்துகொண்டான்.

 

கொஞ்ச நேரம் அவன் பார்வை வேலை செய்துகொண்டிருந்த தூயவனிலேயே நிலைத்திருந்தது. அப்போதுதான் தூயவனின் அமைதி கருத்தில் பட்டது.

 

இவன் பிரச்னையை விட அவன் பிரச்சனை பெரிதாயிற்றே.

 

“டேய் மச்சான்!”

 

அவன் நிமிரவேயில்லை.

 

“தூயவா!”

 

பாத்தி வெட்டிக்கொண்டிருந்தவன் மண்ணை ஓங்கிக் கொத்தினான்.

 

“டேய் வைட்!”

 

அப்போதும் அவன் அசையவில்லை.

 

“டேய் செவிட்டு மாமா! நிமிந்து பார்றா!” என்று இவன் சொல்லி முடிக்கவில்லை. மண்வெட்டியால் அள்ளிய மண்ணை அப்படியே திருப்பி இவன் பக்கம் எறிந்திருந்தான் தூயவன்.

 

அவன் செய்யப் போவதைக் கணித்து, வேகமாகப் பின்னால் நகர்ந்ததில் மடியில் வந்து விழுந்தது மண்.

 

“குளிச்சுக் கிழிச்சு சுத்தமா வந்தவனுக்கு மேல மண்ணையா அள்ளி எறியிறாய்? பொறடா வாறன்!” என்றவன் ஈரவாய்க்களில் கிடந்த மண்ணை அள்ளி அவன் மீது எறிந்தான்.

 

கொஞ்ச நேரம் என்னவோ பெரும் விரோதிகள் போல் இருவரும் மண்ணாலும் தண்ணீராலும் அடிபட்டனர். கடைசியில் களைத்துப்போய் வந்து மரத்தின் கீழே அமர்ந்தனர். இருவருக்குமே மூச்சு வாங்கியது.

 

இருவரின் உடம்பு முழுக்க ஈர மண் அப்பிக்கிடந்தது. முகத்தை மட்டும் வாய்க்கால் நீரில் கழுவியிருந்தார்கள்.

 

“துளசி உன்னோட சண்டை பிடிச்சவளா?” நேற்றைய நாளைக் குறித்துக் கேட்டான் தூயவன்.

 

நேற்றைய இரவு இவன் காட்டிய விளையாட்டு அவனுக்கு இன்னும் தெரியாது.

 

தற்காலிகமாக மறந்திருந்த விடயம் மீண்டும் நினைவில் வந்ததில் குருவின் முகம் மாறிப்போனது.

 

“என்னடா, பேசினவளா? நான் கேட்டுத்தான் நீ செய்தனி எண்டு சொல்லியும் கேக்கேல்லையா அவள்?”

 

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த குரு, அவள் பேசியதையும், தான் குடித்துவிட்டு வந்ததையும் சொல்லி முடிக்க முதலே திரும்பவும் அவனை மண்ணில் போட்டுப் பிரட்டி எடுத்திருந்தான் தூயவன்.

 

“தங்கச்சியக் கட்டித் தந்து சந்தோசமா வாழடா எண்டு விட்டா குடிச்சிட்டுப் போயிருக்கிறாய் என்ன நீ. அப்ப நான் என்னத்தையடா குடிக்கிறது? இதுல அத வேற வந்து என்னட்டயே சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கோணும்?” கேட்டு கேட்டு மொத்தினான்.

 

திருப்பி அடிக்காமல், தப்பிக்க முயலாமல், ஏன் தடுக்கக் கூட இல்லாமல் குரு பேசாமல் வாங்கிக்கொள்ளவும் அடிப்பதை நிறுத்திவிட்டு, “என்னடா?” என்றான் தூயவன்.

 

அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி, “பிடிக்காம தன்னோட வாழ வேணாமாம். அவனை மாதிரியே…” என்று மேலே சொல்ல முடியாமல் நிறுத்தியவனின் விழிகள் கலங்கியிருந்தன.

 

தூயவனுக்குமே இது கொஞ்சம் அதிர்ச்சிதான்.

 

துளசிக்கு முதல் திருமணம் நடக்கிற வரையில் மிக இயல்பாகவே துளசியோடு கதைப்பான் குரு. கொஞ்சம் விளையாட்டுக்குணம் கொண்டவன். சில நேரங்களில் அவளோடும் விளையாடியிருக்கிறார்.

 

அதுவே அவளுக்குத் திருமணம் ஆனதும் முற்றிலுமாக அவளிடமிருந்து விலகியிருந்தான். பார்க்கிற பொழுதுகளில் சின்னதாக ஒரு சிரிப்பு மட்டும்தான். கதைக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே கதைப்பான்.

 

அவளுக்குத் திருமணமாகி, கணவன் என்று ஒருவன் வந்துவிட்டபடியால் அப்படி இருக்கிறான் போல என்றுதான் தூயவன் நினைத்திருந்தான்.

 

அதுவே துளசியின் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்த பிறகும் அவள் முகம் பார்ப்பதையும் அவளோடு கதைப்பதையும் அவன் தவிர்த்தபோதுதான் சந்தேகம் வர ஆரம்பித்தது. அவனறியாமல் அவனைக் கவனித்தான்.

 

அப்போதுதான் யாரும் கவனிக்காத பொழுதுகளில் அவன் விழிகள் துளசியை ஏக்கத்துடன் வட்டமிடுவதையும், மிதிலன் மீதான அவனின் அக்கறையும் பாசமும் சற்றே அதிகமாக இருப்பதையும் தெரிந்துகொண்டான். அதுதான் அப்படியும் இருக்குமோ என்று இவனை யோசிக்க வைத்திருந்தது.

 

அதை நேராகவே கேட்டுக் கட்டியும் வைத்தான். அப்படி இருக்க, அவள் இப்படிச் சொன்னால் அது இவனை எந்தளவில் காயப்படுத்தும் என்று உணர முடிந்தது. அதே நேரம், அவள் அப்படிச் சொல்லும் அளவுக்கு இவன் என்ன செய்தான் என்று தெரியாதே.

 

“இரவு என்ன நடந்தது எண்டு கொஞ்சமும் நினைவில இல்லையாடா?” மண்ணிலேயே தலைக்குக் கைகளைக் கொடுத்து, நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தவனைத் திரும்பிப் பார்த்து வினவினான் தூயவன்.

 

“முதல் அவள் என்னைக் கதைக்க விடேல்ல எண்டுற கோவத்துல அவளோட மல்லுக்கு நிண்ட நினைவிருக்கு. ஆனா என்ன கதச்சன் எண்டு தெரியேல்ல.” புருவங்களைச் சுளித்து யோசித்தபடி சொன்னான்.

 

“சரி விடு. அவள் நிறைய நாளைக்குக் கோவத்தைப் பிடிச்சு வச்சிருக்கிற ஆள் இல்ல.”

 

“ம்க்கும்! உன்ர தங்கச்சிய நீதான் மெச்சோணும்.”

 

அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தான் தூயவன்.

 

“என்ன முறைப்பு? இவ்வளவு காலமும் அவள் சொஃப்ட், அமைதியான பிள்ளை எண்டு நினைச்சிருந்தனான். ஆனா நேற்று நீ பாக்கேல்லையே. என்னை வாயத் திறக்கவே விடாம பாஞ்சவள்.” என்றவனுக்கு அப்போதுதான் ஏதோ நினைவுக்கு வந்தது.

 

வேகமாக எழுந்து அமர்ந்துகொண்டு, “டேய் மச்சான், எனக்கு என்னவோ ‘அதென்ன கட்டுற வரைக்கும் பூனை மாதிரி இருக்கிற நீங்க எல்லாம் கட்டினதும் புலி மாதிரி மாறிடுவீங்களா’ எண்டு கேட்டமாதிரி இருக்காடா” என்று சொல்லவும் முறைக்க முயன்றும் முடியாமல் வாய்விட்டுச் சிரித்தான் தூயவன்.

 

“உன்ர இந்த வாய்க்கு உனக்கு இன்னும் வேணுமடி!” என்றான் சிரிப்பினூடு.

 

குருவின் முகத்திலும் மெலிய முறுவல். மனமும் இலேசாகியிருந்தது. “பாவமடா. அவளை அப்பிடி நான் நினைக்க வச்சிருக்கக் கூடாது. அதுதான் மனதப் போட்டுப் பிசையுது. ‘உண்மையாவே அண்ணா ஏமாத்திக் கட்டி வச்சிட்டார் எண்டு நினைக்கிறீங்களா’ எண்டு கேட்டு அழுதவள்.” என்று, அவனை நண்பனாக மட்டுமே பாவித்துச் சொன்னவன், “சொறி மச்சான்!” என்றான் அவனைப் பாராமல்.

 

ஒன்றும் சொல்லாமல் நண்பனின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான் தூயவன்.

 

அவனுக்குத் தானாக அவன் இசையரசியின் நினைவு வந்தது. துளசியாவது கட்டின பிறகுதான் சீறினாள். அவனுடைய இசை கட்ட முதலே நேற்று எப்படியெல்லாம் கேள்வி கேட்டாள்? அவனால் ஒரு கேள்விக்குக் கூடப் பதில் சொல்ல முடியவில்லையே.

 

எப்படி இருக்கிறாள் என்று அறிய மனம் அந்தரித்தது. கடைசியாக அவளின் அழுத முகத்தையும் பயத்தில் நடுங்கிய குரலையும்தானே கேட்டான். இரவு முழுக்க அவன் உறங்கவேயில்லை. அவள் அனுப்பிய குறுந்தகவல்களைப் பார்த்து பார்த்து நொந்துகொண்டே இருந்தான்.

 

திரும்பவும் ஏதாவது சந்தர்ப்பத்தை உருவாக்கி, அவளைப் பார்த்து, மீண்டும் அவளைச் சங்கடப்படுத்தும் தைரியம் இனி அவனுக்கு இல்லை. எல்லாமே போதும் என்று நினைத்தான்.

 

ஆனால், அவளை நோகடிக்காமல், காயப்படுத்தாமல், அவள் குடும்பத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் அவளைச் சேருவதற்கான அடுத்த அடியை எப்படி எடுத்து வைப்பது என்று புரியவேயில்லை.

 

“இனி நீ என்ன மச்சான் செய்யப்போறாய்? நேசன் அண்ணாவோட கதைக்க ஏதும் பிளான் வச்சிருக்கிறியா?” தன்னை மீட்டுக்கொண்ட குரு வினவினான்.

 

“அவரோட எந்தச் சண்டைக்கும் போக மாட்டன் எண்டு அவளிட்டச் சொல்லி இருக்கிறன்.”

 

“இது எப்ப?” தனக்குத் தெரியாமல் எப்போது கதைத்தான் என்கிற ஆச்சரியத்தோடு வினவினான்.

 

நடந்ததைச் சொன்னான் தூயவன்.

 

“பாவம் என்னடா. தகப்பன் இல்ல. பெரிய வசதியும் இல்ல. சும்மாவே தமையனுக்குச் சுமையா இருக்கிறோமோ எண்டுற நினைப்பிருக்கும். இப்ப நீயும் நேசன் அண்ணாவோட கதைக்கிறன் எண்டு சொல்ல, நல்லா பயந்திருப்பா. அதான்போல அவவா உன்னோட கதைச்சிருக்கிறா.”

 

அவன் சொன்னதைக் கேட்ட தூயவனுக்கு இன்னுமே நெஞ்சை அடைத்தது. இப்படி எல்லாவற்றுக்கும் பயந்துகொண்டிருக்கிற பெண்ணிடம்தான் நேற்று அவனும் அப்படி நடந்தான். இப்போது, அவன் முகம் திருப்பித் தன் உணர்வுகளை மறைக்க முயன்றான்.

 

“ஆனா ஒண்டு மச்சான். இந்த விசயம் மாமான்ர காதுக்கு எட்ட முதல் எதையாவது செய். அவருக்குத் தெரிஞ்சுதோ அவரின்ர முதல் குறி இசையாத்தான் இருப்பா.” என்று எச்சரித்தான் குரு.

 

தூயவனுக்குமே அந்தப் பயம் உண்டு. அதில், “முதல் அவளின்ர எக்ஸாம்ஸ் முடியட்டும் எண்டு பாக்கிறனடா. அது வரைக்கும் இஞ்ச அப்பாவையும் அவர் பேசுற அந்தக் கலியாணத்தையும் சமாளிச்சா சரி.” என்று, இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அங்கே கருணாகரன் தன் வேலையை ஆரம்பித்திருந்தார்.

error: Alert: Content selection is disabled!!