நீ வந்து தங்கிய நெஞ்சில் 25.2

நான் சொல்ல வருவதைக் கேள், என்னைப் பேச விடு என்று இதையிட்டு அவன் சொன்ன எதுவும் அவள் செவியில் சென்று சேரவே இலை. கடைசியில் தலையைப் பற்றிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான் நிரோஜன்.

எவ்வளவோ நேரத்திற்குப் பிறகுதான் அவனிடமிருந்து சத்தமே இல்லை என்பது அவளுக்குப் புரிந்தது. அழைப்பைத் துண்டித்துவிட்டானோ என்று பார்த்துவிட்டு, “நிரோ!” என்றாள் தவிப்புடன்.

“இனியாவது என்னைக் கதைக்க விடு யாமினி!” என்றான் அவன் கசந்த குரலில்.

“சொல்…லுங்க.” அவள் குரல் நடுங்கிற்று.

“எனக்குக் கொஞ்சம் டைம் தா யாமினி.”

“என்னத்துக்கு?”

அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், சுதந்திரமாகச் சுவாசிக்கவும், தெளிவாக யோசிக்கவும் நிச்சயமாக அவனுக்கு நேரம் தேவைப்பட்டது. அது மட்டும் மிக நன்றாகப் புரிய, “எனக்கு காரணம் சொல்லத் தெரியேல்ல யாமினி. ஆனா, கொஞ்ச நாளைக்கு என்னை என்ர பாட்டுக்கு விடு. இப்பிடி விடாம மெசேஜ் பண்ணுறது, கோல் பண்ணுறது எதுவும் வேண்டாம். நானும் நீ வேலை செய்ற அதே இடத்திலதான் இருக்கிறன். எங்கயும் ஓடிப் போகேல்ல. என்னைக் கொஞ்சம் ஃபிரியா விடு. எனக்கு யோசிக்கோணும்.” என்று பொறுமையாகவே எடுத்துச் சொன்னான்.

“என்ன யோசிக்கோணும் நிரோ? எதை பற்றி யோசிக்க கேக்கிறீங்க?” உள்ளத்தோடு சேர்ந்து குரலும் நடுங்க வினவினாள்.

அவன் பதில் சொல்லாமல் இருந்தான். அவள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடிற்று.

“சரி, எப்ப வரை டைம் வேணும்?”

“தெரியா.”

“இப்பிடிச் சொன்னா எப்பிடி நிரோ?”

திரும்ப ஆரம்பிக்கிறாள். இந்தப் பேச்சு வளர்த்தால் நிச்சயம் இன்னொரு சண்டையில் மட்டுமே சென்று நிற்கும்.

அனுபவம் பேச, “இன்னொரு சண்டைக்கு சத்தியமா நான் ரெடி இல்ல யாமினி. எனக்கும் டைம் வேணும். தயவு செய்து அதைத் தா.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போது என்ன பேசிக்கொண்டார்கள்? நேரம் தா என்றால் எதற்கு? அதைச் சொன்னால்தானே அவளுக்கும் ஏதாவது புரியும்?

ஆனாலும் இரண்டு நாள்கள் பொறுத்திருந்தாள். அடுத்த நாள், “இப்ப நீங்க ஓகேயா?” என்று கேட்டு அனுப்பினாள்

பார்த்தவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவ்வளவு தெளிவாக சொல்லிவிட்டு வைத்தும் இப்படிக் கேட்கிறவளை என்ன செய்ய? அவனிடமிருந்து பதில் இல்லாமல் போகவும் மறுபடியும் அவனுக்கு அழைக்கவும் குறுந்தகவல் அனுப்பவும் ஆரம்பித்தாள்.

ஏனோ ரோசம் மானம் பார்க்க முடியவில்லை. அப்படி ரோசப்பட்டு முகம் திருப்பி நிற்கும் உறவில்லை அவன் அவளுக்கு. ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அவளை முற்றிலுமாகத் தடை செய்தான் நிரோஜன். நவீனையும் அழைத்து அவள் அழைப்பை ஏற்க வேண்டாம் என்றான்.

“நான் எப்பிடியடா?” என்றவனை முறைத்துவிட்டு அவன் கைப்பேசியைப் பறித்து அவனே தடை செய்துவிட்டான்.

“டேய் மச்சான்?”

“நீயாவது என்னை விளங்கிக்கொள்ளு மச்சான். சத்தியமா என்னால முடியேல்ல. தலை வெடிக்கும் போல இருக்கு. என்ர கழுத்த பிடிச்சு நெரிக்கிற மாதிரியே இருக்கடா. அண்டைக்குக் கிளிப்பிள்ளைக்குச் சொல்லுற மாதிரி எனக்கு டைம் வேணும், என்னைக் கொஞ்சம் என்ர பாட்டுக்கு விடு எண்டு சொல்லிப்போட்டுத்தான் வச்சனான். விடுறாளே இல்ல. வாழ்க்கையே வெறுக்குதடா. எப்ப பாரு நொய் நொய் எண்டுகொண்டு. சேய்! எங்கயாவது கண் காணாத தேசத்துக்கு ஓடினா என்ன எண்டு இருக்கு.” என்று புழுங்கித் தள்ளியவனைக் கண்டு பயந்துபோனான் நவீன்.

“ஓகே ஓகே நீ ரிலாக்ஸ் ஆகு!” என்று அவன் சொல்லி முடிக்க முதலே அசோகன் வந்தான்.

“என்ன பிரச்சினை உனக்கும் யாமினிக்கும்? அவளுக்கு உன்னோட கதைக்கோணுமாம். என்ன எண்டு கேளு நிரோ.” என்றான் அவன்.

பார்த்தாயா என்பதுபோல் நவீனைப் பார்த்தவனின் முகம் ஆத்திரத்தில் சிவந்துபோயிற்று. அசோகன் போன கையோடு காவியா அழைத்து, “அண்ணா, உங்களை ஒருக்கா தன்னோட கதைக்கட்டாம் எண்டு யாமினி அக்கா சொன்னவா. நீங்களே எடுத்துக் கதைக்கிறதுதானே எண்டு கேட்டதுக்கு என்னவோ சொல்லுறா. ஒருக்கா என்ன எண்டு எடுத்துக் கேக்கிறீங்களா?” என்றதும் நிரோஜனின் பொறுமை முற்றிலுமாகப் பறந்தே போயிற்று.

நேராகப் புறப்பட்டு அவள் அறைக்கே வந்தான்.

மிகுந்த இறுக்கத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தவனையே தவிப்புடன் பார்த்து நின்றிருந்தாள் யாமினி.

“எனக்கு உன்னோட கதைக்கோணும் யாமினி.”

கண் முகமெல்லாம் கலங்கித் துடிக்க அவனையே பார்த்து நின்றாள் யாமினி. அவன் தன்னிடம் வந்துவிட மாட்டானா, ஒரு வார்த்தை பேசிவிட மாட்டானா என்று தவித்தவளே இன்று என்னால் தாங்க முடியாத எதையும் சொல்லிவிடாதே என்று மௌனமாய் அழுதாள். அவள் இதயம் என்ன சொல்லப்போகிறானோ என்கிற பயத்தில் இரண்டு மடங்காகத் துடித்தது.

அவன் தன் கையில் இருந்த கைப்பேசியைச் சுழற்றினான். அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

“நிரோ…” அந்த நொடிகள் தரும் கனத்தைத் தாங்க முடியாமல் நடுங்கும் குரலில் அவள் ஆரம்பிக்கும்போதே நிமிர்ந்து, “இது சரி வராது எண்டு நினைக்கிறன் யாமினி.” என்றான் அவன்.

எது சரி வராது என்று கேட்கும் தெம்பைக் கூட இழந்து நின்றாள் அவள்.

“இந்த உறவு… எனக்கும் உனக்குமான ரிலேஷன்ஷிப்… இது நாளாக நாளாக நரமாகிக்கொண்டே போகுது யாமினி. ஒருத்தரை ஒருத்தர் வெறுத்து, ஏனடா காதலிச்சோம் எண்டு சலிச்சுப் போறதுக்கிடையில ஒரு முடிவுக்கு வாறதுதான் நல்லது.” ஆரம்பிக்கிற வரையில்தான் அவனும் சிரமப்பட்டான்.

இதற்குத்தானே பயந்தாள். இது நடந்துவிடக் கூடாது என்றுதானே பதறினாள். கடைசியில் அதுவே நடந்துவிட்டது. யாமினியால் சுவாசிக்கக்கூட முடியவில்லை. அவனையே பார்த்து நின்றாள்.

அவளிடமிருந்து பார்வையை அகற்றிக்கொண்டு, “பிரேக்கப் பண்ணலாம் யாமினி.” என்றான் அவன்.

அவள் தலை மறுப்பாய் ஆடிற்று. விழிகள் விடாமல் கண்ணீரைச் சொரிந்தன. அவன் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவள் இதயம் அல்லாடியாது.

“இதச் சொல்லத்தான் வந்தனான்.” என்று அவன் எழுந்துகொள்ளப் போக, ஓடிப்போய் அவன் காலடியில் அமர்ந்தாள் யாமினி. “ப்ளீஸ் நிரோ. ஒரேயோருக்கா நான் சொல்லுறதைக் கேளுங்க ப்ளீஸ். நீங்க கோவமா இருக்கிறீங்க. எனக்கு விளங்குது. காரணம் நான்தான். அதுக்காக இப்பிடிக் கதைக்கலாமா நிரோ? நீங்க இல்லாத ஒரு வாழ்க்கை எனக்கு இல்லையே நிரோ? பிறகு எப்பிடி நிரோ?” என்றாள் கண்ணீருடன்.

அவன் முகம் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“நிரோ, என்னை பாருங்க ப்ளீஸ்.” அவன் தாடை பற்றித் தன்னைப் பார்க்க வைத்தாள்.

“என்னைப் பாத்துச் சொல்லுங்க, உங்கட யமி உங்களுக்கு வேண்டாமா? அவள் இல்லாம நீங்க இருப்பீங்களா? நடந்த எல்லாத்துக்கும் நான் மன்னிப்புக் கேக்கிறன் நிரோ. நான்தான் பிழை. நான் கதைச்சது, கோவப்பட்டது, உங்களோட சண்டை பிடிச்சது எல்லாமே பிழைதான். அதுக்காக இவ்வளவு பெரிய முடிவு வேண்டாம் நிரோ” என்று அழுதவளிடமிருந்து தன் கரங்களை மெல்ல விடுவித்துக்கொண்டான் அவன்.

“நீ எல்லாத்தையும் எமோஷனலா பகைக்கிறாய். நிதானமா யோசி, உனக்கே இதுதான் நல்ல முடிவு எண்டு விளங்கும்.” என்று சொன்னான்.

“இல்ல நிரோ. எண்டைக்குமே எனக்கு இது நல்ல முடிவு இல்ல. அப்பா திடீரெண்டு இல்லாம போன அதிர்ச்சில கொஞ்சம் தடுமாறிட்டன். கொஞ்சம் டைம் தாங்க. நான் என்னை மாத்திக்கொள்ளுறன்.”

அவன் மறுப்பாகத் தலையசைத்தான். “இல்ல யாமினி. உனக்கு விளங்கேல்ல. எல்லாம் ஸ்மூத்தா போய்க்கொண்டு இருக்கேக்க எங்களுக்க எல்லாம் நல்லமாதிரி இருந்தது. ஆனா, ஒரு பிரச்சினை எண்டு வரேக்க எனக்கும் உனக்கும் ஒத்துப்போகுதே இல்ல. நானும் என்னால முடிஞ்சா வரைக்கும் சமாளிச்சுப் பாத்திட்டன். இதுக்கும் மேல என்னால ஏலாது. ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. ஒரு கோபம் எப்பவும் இருந்துகொண்டே இருக்கு. எப்ப பாத்தாலும் நானும் நீயும் கதைச்சா சண்டைல மட்டும்தான் முடியுது. எனக்கு இந்த விடுதலை வேணும்.” என்றான் அவன் உறுதியான குரலில்.

“ப்ளீஸ் நிரோ. இனி உங்களை எந்தக் கேள்வியும் கேக்கேல்லை. உங்களோட சண்டை பிடிக்கேல்ல. உங்கட பிரைவஸிக்க நான் வரேல்ல. நீங்க சொல்லுற எல்லாத்தையும் கேக்கிறன். இது மட்டும் வேண்டாம் ப்ளீஸ்.” அவனோடான அந்த உறவை தக்க வைத்துக்கொள்ள எந்த அளவுக்கும் இறங்கத் தயாரானாள் அவள்.

“ஓ நான் என்ன செய்தாலும் கேக்க மாட்டாய். நான் குடிச்சா உனக்கு ஓகேயா? பிரெண்ட்ஸ், பார்ட்டி எண்டு இருந்தா ஓகேயா? காசு பற்றின கதை எங்களுக்க வரக் கூடாது. ஓகேயா உனக்கு?” அவன் கோபப்பட்டால்.

“அதெல்லாம் உங்கட நல்லதுக்காக…”

“இதான் பிரச்சினை. என்ர நல்லது என்ர நல்லது எண்டு சொல்லி சொல்லி என்னை நெருக்கிறாய் நீ. என்னவோ மூச்செடுக்கவே ஏலாத கூட்டுக்க போட்டு அடச்சு மாதிரி இருக்கு. இப்பவே இப்பிடி எண்டா நாளைக்கு கலியாணம் ஒண்டு நடந்த பிறகு இன்னும் மோசமாயிடும். கலியாணம், டிவோர்ஸ் எண்டு பெருசா எதுவும் நடக்க முதல் இந்த முடிவை எடுக்கிறதுதான் நல்லம்.”

“ப்ளீஸ் நீரோ…” என்றவளைத் தடுத்து, “எனக்கு ஏதாவது நல்லது செய்ய நினைச்சா என்னை விட்டுடு யாமினி. எனக்கு உன்னட்ட இருந்து விடுதலை வேணும். உன்னைக் கெஞ்சிக் கேக்கிறன். என்னைக் கொஞ்சம் நிம்மதியா வாழ விடு!” என்றுவிட்டு அவன் போய்விட்டான்.

இடிந்துபோய் அமர்ந்திருந்தாள் யாமினி.

error: Alert: Content selection is disabled!!