“இங்க பாருங்க புனிதமக்கா, இவ்வளவு நாட்களும் நீங்க இவள்ட விசயத்தில என்னதான் சொன்னாலும் நானும் பேசாமப் போயிருக்கிறன். அதுக்கெண்டு உங்கட சாடைமாடைக் கதையெல்லாம் விளங்காம இல்ல.
இவள்ட அம்மா உங்கட சிநேகிதி எண்டா, அன்றைக்கு அந்த மனிசி செத்துப் போன நேரம் இவள் அந்தரிச்சு நிக்க நீங்களா எடுத்து வளத்தீங்க? நான் தானே அதைச் செய்தன்.
ஏதோ இருபத்திநாலு மணித்தியாலமும் பக்கத்தில நிண்டு பாக்கிற கணக்கில இவள ஏதோ கொடுமைப்படுத்திற மாதிரி பாக்கிற நேரமெல்லாம் கதைப்பீங்க. அப்ப எல்லாம் மனம் எரிஞ்சாலும் அயலுக்க ஏன் பிரச்சின எண்டுதான் அமைதியாப் போறனான். ஆனா, இப்ப நீங்க அபாண்டமாப் பழி போட அதைப் பார்த்துக்கொண்டு இருக்க ஏலாது.” மூச்சிரைக்க, படபடவென்று கத்தினார் சித்தி.
நான் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நின்றேன்.
ஒருவார்த்தை கதைச்சாலும் பிழையாகி விடும். புனிதம் ஆன்ட்டி நினைவு தெரிந்த நாளிலிருந்து அன்பையும் அக்கறையும் காட்டுபவர். அடுத்து சித்தி…
யாருக்காகக் கதைக்க இயலும்?
“நான் இப்ப என்ன அபாண்டமாச் சொன்னனான் எண்டு சொல்லு பார்ப்பம்? நான் அவள வளர்க்க வேண்டிய தேவை இருக்கேல்ல ராஜம்; அவள் என்ன தனிச்சே நிண்டவள்? அவள்ட தகப்பன் இருந்தவர் தானே?
அதோட நீ! அவள வளர்க்க வேண்டியது உன்ர கடமை! அதுக்காக அவளுக்கு என்னவும் செய்யலாம் எண்டு மட்டும் நினைக்காத! இவ்வளவு நாளும் சாடை மாடையாச் சொன்னன், இப்ப நேரயே சொல்லுறன். கடைசிவரை அதுக்கு நான் விடமாட்டன்.”
“என்னவும் செய்ய எண்டா? கலியாணம் தான் செய்து வைக்க இருக்கிறம். ஏதோ கொலை செய்யப் போறது போல சொல்லுறீங்க!”
“இந்தக் கலியாணத்துக்கு நீ அவளக் கொலையே செய்யலாம்.
இங்க பார், உன்ர தம்பிக்குப் பொம்பள வேணுமெண்டா வேற இடம் பார்! அதுக்கு உதயா ஆளில்லை.
கூப்பிடுற தூரத்தில இருக்கிற என்னட்ட ஒரு வார்த்த சொல்லாம, அவள்ட மாமா ஆக்காளிட்ட ஒரு வார்த்த சொல்லாமக் கமுக்கமா எழுத்து எழுத உனக்கு என்ன துணிவு இருக்க வேணும்?” ஆத்திரமாகக் கேட்டார் ஆன்ட்டி.
“இங்க பாருங்க, இவ்வளவும் தான் உங்களுக்கு மரியாத!” சித்தி உரத்துக் கத்தினார்.
வழமையாக, என் சம்பந்தமாகப் புனிதம் ஆன்ட்டி கதைக்க முற்பட்டாலே அதை வளர்க்காது மெல்ல நகர்ந்துவிடும் சித்தி, இன்றைக்கு ஒரு கை பார்க்கிறேன் என்றளவில் நின்றார்.
நான் எதையாவது சொல்ல வேணும். எதையாவது என்ன, புனிதம் ஆன்ட்டியைச் சமாதானம் செய்யும் வகையில் கதைக்க வேணும். மனம் சொன்னாலும் இயலவில்லை.
“இவள் ஒண்ணும் வாய்க்க விரல் வச்சாக் கடிக்க ஏலாத சின்னக்குழந்த இல்ல. அவளட சம்மதம் இல்லாம இங்க ஒண்டும் நடக்கேல்ல.” என்று விட்டு, என்னைப் பார்த்த சித்தியின் பார்வையில் என் வாய் தானாகத் திறந்தது.
“ஓம் ஆன்ட்டி, என்னட்ட விருப்பம் கேட்டுப் போட்டுத்தான்…” முடிக்காது இறைஞ்சல் பார்வை பார்த்தேன்.
‘விட்டு விடுங்களேன்! என்ர வாழ்க்கை இதுதான் எண்டு இருந்தால் யாராலும் எதுவும் செய்ய ஏலாது.’ பளபளத்த விழிகளால் கெஞ்சினேன்.
அவரோ, ‘முட்டாள் பெண்ணே!’ பார்வையால் கண்டித்தார்.
“உன்ர சித்தி என்னதான் சொன்னாலும் முன்னப்பின்ன யோசிக்காமத் தலையாட்டிற உதயா.” வெளிப்படையாகவே என்னைக் கண்டித்தார்.
“நீ ஒரு டீச்சர்; நல்லது கெட்டது தெரிஞ்சவள்; இப்பச் சும்மா சும்மாத் தங்கச்சிகள், சித்தி எண்டு சொல்லி உன்ர வாழ்க்கையைப் பணயம் வச்சிப்போட்டு, பிறகு இருந்து துன்பப்படப் போறது யாரு எண்டு நினைக்கிற? இவையள் இல்ல உதயா, நீதான்.
உன்ர சித்தி என்ன சொல்லி உன்னட்டத் தலையாட்டல் வாங்கினா?
‘நானும் பிள்ளைகளும் செத்துப் போறம்’ எண்டு எதுவும் சொன்னவாவே?!” என்ற போது, சித்தியின் முகம் பயங்கரக் கோபத்தைக் காட்டியது.
வாய் திறக்க முயன்றவருக்கு இடம் கொடாது கதைத்தார் புனிதம் ஆன்ட்டி.
“அதைத்தானே உன்ர அப்பாவைக் கலியாணம் செய்து வந்ததில இருந்து சொல்லுறா. அதனால, அதைக் கேட்டுப் பயந்து போய் நீ சம்மதம் சொல்லத் தேவையில்ல.” என்றுவிட்டு, சித்தியிடம் திரும்பினார்.
“இங்க பார் ராஜம், அவள்ட சம்மதம் கிடைச்சிட்டு அது இது எண்டு கதைச்சிக்கொண்டு கலியாணம் செய்து வைக்கலாம் எண்டு மட்டும் கனவு காணாத! நான் இந்தக் கலியாணம் நடக்கக் கடைசிவரையும் விட மாட்டன்.” ஆணித்தரமாகச் சொன்னார்.
சொன்னதோடு நிற்காது என்னருகில் வந்து என் கரங்களைக் கெட்டியாகப் பற்றியபடி நின்ற தோரணை அப்படியே என்னை இழுத்துச் சென்று விடுவார் போலிருந்தது.
“ஓமம்மா! ஆன்ட்டி சொல்லுறதுதான் சரி; அக்காக்கு இந்தக் கலியாணம் வேணாம்; நீங்க சொல்லுறதப் போல மாமா ஒண்ணும் குடிக்கிறதை முழுதும் விடேல்ல; அண்டைக்கும் குடிச்சிப்போட்டு வந்து கலியாணி கலியாணி எண்டு…”
படபடத்த சின்னத்தங்கையின் முதுகு வெடித்துவிட்டதோ என்றவகையில் போட்டுக் குத்திவிட்டார் சித்தி.
“ஐயோ சித்தி அவள விடுங்கோ!”
இடையிட்ட என் முதுகிலும் இடியாக இரண்டு விழுந்தது. என்னை அடிக்க நினைத்து அடித்தாரோ…இல்லை, கண்மண் தெரியாத கோபத்தில் யாருக்கு அடிக்கிறோம் என்றில்லாது அடித்தாரோ!