அத்தியாயம் 10-1

இதெல்லாம் என்ன என்று கேட்கிறன்கலியாணம் முடிச்சு முதல் முதல் சோடியா மாப்பிள்ள வீட்டுக்கு வந்தவர்கள ஆரத்தி கூட எடுக்காமல்…” அதிருப்தியோடு முணுமுணுத்தார், நர்மதாவின் அம்மா

  என்னதான் நான் எல்லாவற்றையும் எதிர்கொள்ளத் தயாராகி கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டு, இதோ திருமதி சூர்யா என்ற அடையாளத்தோடு அவர்கள் வீட்டு வாயில் வரை வந்திருந்தாலும், இக்கணம், என் நெஞ்சம் முழுவதும் பலமாக அடிவாங்கிய அவமான உணர்வுதான்!

  அப்படியெல்லாம் இல்லை என்று பொய் சொல்லவா முடியும்?

  யாரையும் நிமிர்ந்து நோக்கவும் முடியவில்லை. மனம் போலவே முகமும் கன்றிட  செய்வதறியாது நின்றேன்

  “இதுஇதுக்குத்தான் சரி வராது என்றனான்; நீ தான் காதிலும் வாங்கேல்ல உதயா.” 

  என்  தோளில் இடித்தாள் நர்மதா. அந்த இடியில் அவள் கோபம் தெரிந்தது

 “இங்க பாரடி!” முகத்தைப் பற்றித் திருப்பினாள்.

 “இதெல்லாம் என்னடி? உன்னில கொஞ்சம் சரி மரியாதை இருந்திருந்தா இப்பிடிச் செய்யுமா அந்தாள்? இப்பிடியொரு கலியாணம் உனக்குத் தேவையா சொல்லு பார்ப்பம்?” சினந்தபடி ஆரம்பித்தாள்.

 “நாங்க இவ்வளவு பேர் நிற்கவே இப்பிடி எண்டால்பிறகு? கொஞ்சம்  யோசிச்சுப் பாரன். உன்ன இங்க விட்டுட்டு நாங்க எப்பிடி நிம்மதியா இருக்கிறது?” படபடத்தாள்

  அவள் விழிகளின் கலக்கத்தில் என் மீதான பாசம் தெறித்தது. என் விழிகளும் நிறைந்தன

 “விடுடிமுணுமுணுத்தபடி முகத்தைப் பற்றியிருந்த அவள் கரத்தை எடுத்துவிட்டுத்  தலையைத் திருப்பிக் கொண்டேன்.   இருந்தபோதும், என் மனதுள் உழன்று திரிந்த வெறுமைக்கு நர்மதாவின் இந்தக் கோபம் இதமான சாமரம்  வீசியது என்பேன்.

  ‘எனக்கென்று ஒருத்தி வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்து நிற்கிறாளே!’  என்ற எண்ணமே, மீண்டும் அவள் மீது பார்வையைச் செலுத்த வைத்தது

   ‘நாங்க  எதிர்த்து நின்றும் என்ன பயன்? நீதான் தியாகப்பட்டம் வாங்க ஆயத்தமாகிறியே!’ பார்வையால் எரித்தாளவள்.

  எங்களுள் நிலவிய இப்பார்வைப் பரிமாற்றத்தைப் படீரென்று அறுத்தெறிந்தது சித்தியின் குரல்.

  “இதென்ன பிள்ள உம்மட கதை?” 

  நர்மதாவின் முன்னால் வந்து நின்றார் சித்தி. அவளும் எரிச்சலோடு தான் அவரை ஏறிட்டு,“எந்தக் கதை?” வெடுக்கென்று கேட்டாள்.

 “இல்ல, நீங்க சொல்லுறதைப் பார்த்தால் இவ்வளவு நாட்களும் அவளப் பொறுப்பாப்  பார்த்தது நீங்க தான் எண்டதுபோல இருக்கு!” 

  நக்கல் சிரிப்போடு தொடங்கிய சித்தி, “இங்க பாருங்க, அவள் ஒண்டும் பிறத்தியார் வீட்டுக்கு வர இல்ல சரியா? இது என்ர அம்மா வீடு, அவளுக்கு நல்லாத் தெரிஞ்ச சொந்தம் தான்.” சிடுசிடுத்தார்

   “உங்கட அம்மா வீடு எண்டதுதான் எங்கட கவலையே!” தயங்காது பதில் சொல்லத் தொடங்கிய மகளை, “நீ  கொஞ்சம் பேசாமல் இரு நர்மதா, நான் கதைக்கிறன்.” அடக்கிவிட்டார் ஆன்ட்டி, நர்மதாவின் அம்மா.

 “இப்ப நீங்க மாறி மாறிக் கதைக்கிற அளவில இங்க என்ன நடந்திட்டு?” எரிச்சலோடு அவரிடம் திரும்பினார் சித்தி

 “கதைக்கிற அளவுக்கு ஒண்ணுமே நடக்கேல்லையா என்ன?” 

 ஆன்ட்டியின் முகத்தில் வெளிப்படையாகவே கோபம் தெரிந்தது.

  “முதல் முதல் வீட்டுக்கு வந்த மாப்பிள்ள பொம்பிள்ளய ஆரத்தி எடுக்கிற வழக்கம் இல்லையா என்ன? மாப்பிள்ளயே பெண்ணை இப்பிடி வாசலில அம்போ எண்டு விட்டுட்டுப் போனால் என்ன எண்டு நாங்க நினைக்கிறது

  அதுமட்டுமில்ல, கலியாணம் முழுதும் கவனிச்சுக் கொண்டுதான் இருந்தம், விருப்பம் இல்லாமல் கட்டுறது போல அந்தத் தம்பி சிடுசிடுத்துக் கொண்டுதான் இருந்தவர்.” என்றார், நர்மதாவின் அன்னை.

  அவர் இப்படி நேராகவே கேட்க, சித்தியின் முகம் கன்றியதுதான். அதை இலாவகமாக மறைத்துவிட்டு, “இதென்ன புதுக்கதை?” விழிகள் இடுங்க என்னை நோக்கித் திரும்பிய சித்தியின் பார்வையில் அக்கனி தெறித்தது.

 “இவையள் கண்டபடி அதையும் இதையும் கதைக்க நீயும் முழுசிக்கொண்டு அமைதியா நிக்கிற உதயா? உனக்கு நல்லது செய்ய வெளிக்கிட்டுக் கடைசியா கண்டவைக்கும் பதில் சொல்ல வேண்டிக் கிடக்கே!”

  அடங்கா எரிச்சலோடு சொன்ன வேகத்தில் நர்மதாவின் அம்மாவிடம் திரும்பினார்

   ‘அவையள் ஒண்ணும் கண்டவை இல்ல சித்தி.’ என்னுள் எழுந்த சிடுசிடுப்போடு சொல்லவிழைந்து, ‘வீண் சண்டையேன்?’ என்று அடக்கிக் கொண்டேன், எனக்குள் அதற்கான சக்தி இல்லை என்றுணர்ந்து.  

  ஆனால், சித்தி அவ்வளவு சுலபத்தில் அடங்கேன் என்று நின்றார்.

 “இங்க பாருங்க, இதுவரைக்கும் பிரச்சினை எதுவும் இல்லாமல் நடந்து முடிஞ்ச கலியாணத்தில, கடைசியில அதையிதைச் சொல்லி எதையாவது கிளறிவிடாதீங்க!” தொடர்ந்து அவர்களிடம் எரிஞ்சு விழுந்தார்.

  “நாங்க பிரச்சினை கிளறி விடுறதா? இது நல்ல பகிடியாக் கிடக்கே! அதெல்லாம் உங்களுக்குத்தான் கை வந்த கலை…” என்று கோபத்தோடு பதில் சொல்ல ஆரம்பித்தாள் நர்மதா. நான் தடுக்கவில்லை. ஆனால், அவளின் அம்மா சட்டென்று, “கொஞ்சம் பேசாமல் இரம்மா!” கடிந்து அடக்கி விட்டார்.

   அது சித்திக்கு வசதியாகப் போயிற்று! “கொஞ்சம் அளந்து கதையும் பிள்ள!” நர்மதாவை எச்சரித்தார்.

 “எல்லாத்துக்கும் முதல், இங்க நிக்கிற எல்லாரையும் பாருங்க, எங்கட நெருங்கின சொந்தம் மட்டும் தான். உங்கட மகளிட பிரெண்ட்  எண்டு கொழும்பில இருந்து குடும்பமா வந்ததில எங்களுக்கும் நல்ல சந்தோசம் தான். இனியென்ன? கலியாணம் முடிஞ்சதும் சந்தோசமாச் சொல்லிப்போட்டுப் போக வேணும். அதைவிட்டுப் போட்டு…” 

  சித்தி வெடுக்கென்று  இப்படிச்  சொல்ல, நர்மதாவின் அம்மாவின் முகம் கன்றிக்  கறுத்துப் போயிற்று

error: Alert: Content selection is disabled!!