அத்தியாயம் 10-3

வெளியே வந்தவர்  என்னருகில் வந்து நிற்பார் என்ற எதிர்பார்ப்பில் ஆரத்தித் தட்டை எடுத்தார், சூர்யாவின் இளைய தங்கை

  வெளிப்பட்ட சூர்யாவில் கணத்துக்கும் குறைவாய் நிலைத்த என்பார்வையும் மெல்ல அப்பால் நகரத் தொடங்கி, பிறகு, சூர்யாவின் முதுகைத்தான் வெறித்தது

  அவரோ, நாங்கள் அவ்வளவு பேரும் அங்கு நிற்கிறோம் என்றுணராதவர் போன்ற பாவனையில் அப்படியே வலப்புறமாகத் திரும்பி சமையலறைக்குள் புகுந்து மறைந்துவிட்டார்.

  “என்னம்மா இது? அண்ணா என்ன சொன்னவர்? இது கொஞ்சமும் சரியில்லச் சொல்லிப் போட்டன். இதுக்குத்தான் வேணாம் வேணாமெண்டு தலை தலையாய் அடிச்சுக் கொண்டன். ” 

  அடிக்குரலில் முணுமுணுத்த இளைய மகள் குட்டியை கண்ணீரோடு பார்த்தார் சூர்யாவின் தாய்.

  “நானும் ஒரு சாதாரண மனிசி தானே? எல்லாத் தாயையும் போல கலியாணத்தைக்  கட்டி வச்சாச் சரியாவான் எண்டு நினைச்சன். அது பார்த்தால் கொம்பேறி மூக்கன் தான் பிடிச்ச பிடியிலயே நிக்கிறானே! இப்ப யோசிச்சா ஏதோ வேண்டாத வேலை செய்து போட்டது போலவே இருக்கு!” 

  புலம்பலாக ஆரம்பிக்க, “அம்மா! தயவு செய்து கொஞ்சம் நிப்பாட்டன! என்ன சொன்னவன்  எண்டு மட்டும் சொல்லுங்க!” அதட்டினார் சித்தி

என்ன சொல்லுவான்? கடி நாயாக் கடிச்சிட்டுப்  போறான்.” என்றவர் பார்வை என் முகத்தில்.

  “குஞ்சு! கோவியாதை பிள்ளை. கொஞ்ச நாளில எல்லாம் சரியாகும்.” தழுதழுத்தபடி கன்னம் வருட, உள்ளக் கொந்தளிப்பை மறைத்துக்கொண்டு சமாதானமாக முறுவலிக்க முயன்றேன்.

 ‘அவரும் தானே தன்னுள்ளத்தை மறைத்து எனக்குச் சமாதானம் சொல்கிறார்? ‘வேண்டாத வேலை செய்திட்டன் என்றிருக்குஎன்றவர், மறுநொடியே, கொஞ்சநாளில் சரியாகுமாமே! பார்ப்பமே! எல்லாத்துக்கும் தயாராகத்தான் இந்தக் கோலத்தைப் போட்டுக் கொண்டன்.’ 

  இறுகிக் கிடந்த என்னுள்ளம் சிறிதாக எழ முயன்ற உணர்வுகளையும் சுட்டுப் பொசுக்கிவிட்டு அமைதியாக நிற்க முயன்றது.

  “என்ன அம்மம்மா கொஞ்ச நாளில சரியாகும்? உங்களுக்கு உங்கட மகன் வாழ்க்கை முக்கியம்; அது மாதிரித்தான் எங்களுக்கும் எங்கட  அக்கா வாழ்க்கை முக்கியம். இதுக்குத்தான் நாங்க அப்பவே இந்தக் கண்ராவிக் கலியாணம்…” 

  கோபத்தில் மூக்கு விடைக்கச் சொல்லிக்கொண்டு உள்ளேயிருந்து வந்த கவியின் முதுகு சித்தி போட்ட அடியில் வெடித்திருக்கும்.

  “கவி!” கூவிய என்னை எரிக்கும் பார்வை பார்த்தவர், “நீ எத்தின தடவைகள் இந்த வீட்டுக்கு வந்திருக்கிற? ஆரத்தி எல்லாம் தேவையில்ல எண்டாலும் வாசல விட்டு அசையாமல் நிக்கிற.” என்றுவிட்டு, “அப்படியில்ல, எடுக்கத்  தான் வேணுமெண்டா அவளுக்குத் தனியா எடு!” தன் இளைய சகோதரியிடம் சொல்லிவிட்டு விசுக்கென்று உள்ளே சென்றுவிட்டார்.

   போகும் போது திமிரத் திமிரத்  தங்கச்சிகளை இழுத்துச் செல்ல, “ஐயோ விடுங்கம்மா! அக்காண்ட பெட்டிகளை எடுத்துக்கொண்டு வாறம்.” கரங்களை விடுவித்துக்கொண்டு ஓடி வந்து என்னருகில் நின்று, “குட்டிச் சித்தி, நீங்க ஆரத்தி எடுங்கோ!” என்றார்கள் இருவரும்.

 “ஆரத்தி எல்லாம் தேவையில்லநான் உள்ளே நகர, “உதயா பேசாம நில்லம்மா!” இழுத்து நிறுத்தினார், இரண்டாவது அக்கா.

  மறுக்க முடியாது நான் நிற்க, சுற்றி நின்றவர்களின் அதிருப்தி முணுமுணுப்புகளோடுதான் ஆராத்தி  எடுக்கப்பட்டது.

 “வலது காலை எடுத்து வச்சு உள்ள போம்மா!” 

  பின்னால் நின்ற இரண்டாவது அக்கா பரிவாகத் தோளில் தட்டிச் சொல்ல, நான் எதுவேமே நடக்கவில்லை என்ற பாவனையில் உள்ளே நுழைந்தேன்

   “இவ்வளவுக்கும் பிறகு ஒண்டுமே நடக்காத மாதிரி உள்ள போறாள்  பாருங்கம்மா. கதைச்சுப் பிரயோசனம் இல்ல, நாம போவம்.” 

  சத்தமாகவே தன்  மனத்திலுள்ள கோபத்தை வெளிப்படுத்தினாள் நர்மதா

  சட்டென்று நின்று கெஞ்சுதலாகப் பார்த்தேன். “உள்ள வாங்கடி. கொஞ்ச நேரம் சரி இருந்திட்டுப் போங்களன், எனக்காக!” அத்தனை கட்டுப்பாட்டையும் மீறித் தொண்டை கமறிற்று.

  “அய்யோ ஆன்ட்டி! பெரியக்கா கதைச்சதுக்கு நாங்க மன்னிப்புக் கேட்கிறம். வீடுவரைக்கும் வந்திட்டு உள்ள வராமல் போறதா? உள்ள வாங்கோ!” 

  சூர்யாவின் இளைய தங்கை குட்டியும்  சேர்ந்து கொண்டார்.

  “இவ்வளவுக்கு வந்திட்டம் இனி என்ன நர்மதா? எல்லாம் தெரிஞ்சுதானே வந்தம்வா, நமக்கு உதயாதான் முக்கியம்.” 

  மகளைச் சமாதானம் செய்தபடி உள்ளே வந்தார் நர்மதாவின் அன்னை.

  “பிள்ள படத்து விளக்கு…” மகளிடம் சொன்னார் சூர்யாவின் அம்மா.

  “ம்ம்வாரும் உதயா, சாமி விளக்குக் கொளுத்தீட்டு வரலாம்.” என்று, என் கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றார் குட்டி

  அதற்கிடையில், “அக்காண்ட பெட்டிகளை உள்ள கொண்டு போய் வைக்கிறம்.” என்ற தங்கைகளின் குரல் கேட்டது

  “பிள்ளைகள் அதையேன் திறக்கிறீங்க? புதையல் காக்கிறவன் போல பூட்டிப் போட்டுப் போறவன் உங்கட மாமா! நீங்க பக்கத்தறையில பெட்டிகளை வையுங்க!” என்றசூர்யாவின் அன்னையின் குரலோடு, “இல்ல அம்மம்மா, இந்த அறையும் திறந்துதான் கிடக்கு.” என்ற கவியின் குரலும் ஒலித்தது.

  “இல்லஅங்க வேணாம் கவி, பக்கத்து அறைக்க வையுங்க!”

   என்னருகில் நின்ற சூர்யாவின் இளைய தங்கை குட்டியும் அவதியும் அவசரமுமாகக்  குரல் கொடுத்தார்.

  “அதுதான் நானும் சொல்லுறன், அவன்ட அறைக்க எல்லாம் போக வேணாம்.” பதற்றத்தோடு பெரியவர் குரலும் தொடர்ந்தது

  “அம்மோய்இங்க ஓடி  வந்து பாருங்க!” என்ற தங்கைகளின் கூவல்  தொடர்ந்து கேட்டது.

  “என்ன?” நானும் சேர்ந்து ஓடினேன். என்னோடு  நர்மதாவின் குடும்பமும் சேர்ந்து வந்தார்கள்.

 அறைக்குள் நுழைந்ததும் முதலில் தாக்கியது  குப்பென்ற சாராய வாடை!

 “ச்சேக்!” பின்னால் நகர்ந்த நர்மதா, “ம்மா, நீங்க இங்கால வாங்க!” தாயை அழைத்துக்கொண்டு வெளியே போய் விட்டாள்

  மிகுந்த அவமானமாக இருந்தது. எனக்கும் அங்கு செல்லப் பிடிக்கவில்லை தான். ஆனாலும், கோபம் கொப்பளிக்க கவியும் தீபியும்  நின்றதைப் பார்த்துவிட்டு என் பார்வையும் அந்த அறைச் சுவரைத் தொட்டது.

  அங்கேயோ… 

  காதலி தன் மனத்தில் அழியா ஓவியமாக இருக்கிறாள் என்றதை மறைக்காது சொல்லியிருந்த போதும், கலியாணத்துக்குச்  சம்மதித்த என்னால், அவரின் அறையில் கல்யாணியின் புகைப்படங்களைப்  பார்க்கையில்சத்தியமாகப் பார்க்க முடியவில்லை.

  சாராய நெடி அடிக்கும் அறை, சுவரெங்கும் காதலியின் உருவப்படங்கள், ‘உனக்கு இப்பிடியொரு வாழ்வு தேவையா?’ நர்மதா திரும்பத் திரும்பக் கேட்டதையே என்னுள்ளம் இப்போது அலறலாகக் கேட்டுத் தொலைத்தது.

  என்னையும் அறியாது விழிகள் கசிந்து விட்டனஎன் கண்களின் கசிவு தங்கைகளின்  ஆத்திரத்தை கிளறிவிட்டுவிட்டது.

 இருவரும் வெறிகொண்டு அனைத்துப் படங்களையும் விறுவிறுவென்று கழற்றி நிலத்தில் போட்டுடைத்தார்கள், அழுதுகொண்டே

  சித்தி உட்பட அங்கு வந்து நின்ற யாருக்குமே அதைத் தடுக்கத் தோன்றவில்லை. எல்லோருக்கும் அந்தப் புகைப்படம் அங்கிருந்ததில் வெறுப்புத்தான் என்பதைக் காட்டியது அது.

  அப்போதுதான் அது நடந்தது.

 

error: Alert: Content selection is disabled!!