கடன் அன்பை முறிக்கும் 39 – 2

முதல் நாள் கழிவறை செல்ல வேண்டும் என்று கேட்டுப் போனவள் தப்பியோடப் பார்த்ததில் கடைக்குச் செல்ல வேண்டும் என்று அவள் கேட்டும் விமல் விடவில்லை. அவள் வற்புறுத்தியும் அவன் சம்மதிக்கவில்லை. வெட்கம் விட்டுத் தனக்கு மாதவிடாய் என்று சொன்னதையும் அவன் நம்பவில்லை.

 

அன்று காலையில் ஒரேயொரு முறை ‘வெஸ்ட்டேர்ன் டொய்லெட்’க்கு அழைத்துப்போயிருந்தான். ஒன்றுமில்லாததற்கு அதாவது பரவாயில்லை என்று அங்கிருந்த பேப்பர்களை நான்கைந்து படையாக மடித்து வைத்திருந்தாள். அது எவ்வளவு தூரத்திற்குப் பாதுகாக்கும்?

 

பின்பக்க ஆடை நனைந்து, சீட்டும் ஈரமாகியிருந்தது.

 

தாங்கமுடியா வேதனையோடு சில கணங்களுக்கு அவளையே பார்த்தவன், “அதெல்லாம் ஒண்டும் இல்ல. சரியா? இஞ்சயே இரு, இப்ப வாறன்.” என்றுவிட்டு இறங்கி, குருவையும் அங்கே நிற்கச் சொல்லிவிட்டு ஓடினான்.

 

பத்து நிமிடத்தில் சில பைகளோடு திரும்பி வந்தான்.

 

“மச்சான், அடுத்த ரோட்டில ஒரு ஹோட்டல் இருக்காம். அங்க போய் ஒரு ரூம் எடு. நாங்க பின்னால வாறம்.” என்று அந்த ஹோட்டலின் விவரம் சொல்லி, குருவை அனுப்பிவைத்தான்.

 

அவன் போனதும் யாழிசை இருந்த வேனின் கதவைத் திறந்து, ஒரு டவலையும் பெண்கள் மேலே அணியும் ஓவர் கோர்ட் போல் இருந்த ஒன்றையும் அவளிடம் கொடுத்து, “அந்த டவலை சீட்டில போடு, இந்த கோர்ட்ட சிலபேர் இடுப்பில பின் பக்கமா கட்டுவினம், தெரியும்தானே உனக்கு. அப்பிடிக் கட்டிக்கொண்டு இறங்கி வா. சீட்டை பற்றி யோசிக்காத. அத நான் பாக்கிறன்.” என்றுவிட்டு மீண்டும் வாகனத்தின் கதவைச் சாற்றிவிட்டு அங்கேயே நின்றான்.

 

அங்கே அவன் தந்த கோர்ட்டினுள் பேட்(Pad) இருந்தது. அதைப் பார்த்தவள் விழிகள் மீண்டும் கலங்கின. சீட் அவள் பயந்த அளவுக்கு ஈரமாகாதபோதும் பட்டிருந்தது. அதன் மீது துவாயைப் போட்டுவிட்டு, ஜன்னல்கள் எல்லாம் மூடியிருக்கின்றனவா என்று பார்த்துவிட்டு, சீட்டுகளின் மறைவுக்குள் இருந்து பேடையும் வைத்துக்கொண்டாள்.

 

இங்கே வெளியே நின்றவனின் மனத்தின் தவிப்பு இன்னும் அடங்கியபாடில்லை. எல்லாம் அவனால். அவன் கண்ணில் அவள் பட்டதால். கண்டறியாத காதல் அவள் மீது அவனுக்கு வந்ததால். கேசம் கோதித் தன் உணர்வுகளை அடக்க முயன்றான்.

 

இதற்குள் அவள் கதவைத் திறக்க முயல்வது தெரிந்தது. அதற்குள் தானே திறந்து, அவள் சரியாக அந்தக் கோர்ட்டை இடுப்பில் கட்டி இருக்கிறாளா என்று பார்த்துத் திருப்தியானான்.

 

“ஒரு நாலு நிமிச நடை எண்டு நினைக்கிறன். நடப்பியா?” அவள் கரம் பற்றி, இறங்க உதவியபடி வினவினான்.

 

ஆம் என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு இறங்கினாள். தரையில் கால் பதித்தபோதுதான் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் உணர்வு வந்தது. கடந்து போனது இரண்டு நாள்கள் தானா என்று நம்பவே முடியாத அளவில் நரக வேதனையை அனுபவித்திருந்தாள்.

 

யாரும் அடிக்கவில்லை, கொடுமை செய்யவில்லை, எதற்கும் வற்புறுத்தவும் இல்லை. ஆனாலும், மனத்தால் அனுபவித்த துன்பங்கள் சொல்லி மாளாதவை. அதை நினைக்க நினைக்க இப்போதும் நெஞ்சு நடுங்கிக் கைகால்கள் ஆட்டம் கண்டன.

 

அவளைப் பற்றியிருந்த அவன் கரத்தைப் பற்றித் தன்னை நிலைநிறுத்த முமுயன்றாள். நொடியில் அவள் நிலையை உணர்ந்தான் தூயவன். அவளைத் தன்னோடு சேர்த்து அரவணைத்துப் பிடித்து, “வா!” என்று அழைத்துபோனான்.

 

வழமை போல் வேகமாக நடக்க அவளால் முடியவில்லை. ஒருவிதத் தலை சுற்றல், பலகீனம், இரத்த ஓட்டம் இல்லாததுபோல் உடல் மொத்தமும் இயங்க மறுத்தது.

 

“அவசரம் இல்ல. மெல்லவே நட. கிட்டத்தான்.” அவள் வேகத்துக்குத் தானும் நடந்தபடி சொன்னான்.

 

அதற்குள் அங்கே குரு, அறை எடுத்து வைத்துக்கொண்டு காத்திருந்தான். இவர்களைக் கண்டதும் அறையின் திறப்பைக் கொடுத்துவிட்டு அங்கேயே நின்றுகொண்டான்.

 

அறைக்குப் போய் அவன்தான் முதலில் எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்தான். பாதுகாப்புத்தான் என்று நம்பிக்கை வந்த பிறகு, கையோடு கொண்டுவந்திருந்த பையைக் கொடுத்து, “போய்க் குளிச்சு உடுப்பை மாத்து. நான் வெளில அறையைப் பூட்டிப்போட்டுப் போய்ச் சாப்பாடு வாங்கிக்கொண்டு வாறன். ஆர் தட்டினாலும் திறக்காத. எங்க உன்ர ஃபோன்?” என்று விசாரித்தான்.

 

“தெரியா. காணேல்ல.”

 

நிறைய விசாரித்து அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. இது அதற்கான நேரமில்லை என்பதில், “சரி பரவாயில்ல விடு. என்ர ஃபோன தந்திட்டுப் போறன். நீ வச்சிரு. நான் குருவின்ர ஃபோன்ல இருந்து எடுப்பன். அதை மட்டும் எடுத்துக் கதை.” என்றுவிட்டு நடந்தவன் அவள் அசையாமல் நிற்பதைக் கண்டு திரும்பிப் பார்த்தான்.

 

“என்ன, இருப்பியா?”

 

ஆம் என்பதுபோல் தலையை மெதுவாக அசைத்தவள், “பயமா இருக்கு.” என்று முணுமுணுத்தாள்.

 

ஒரு கணம் உதட்டைக் கடித்து நின்றவன் அதற்கும் சேர்த்து வேகமாய் வந்து அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான். “நல்லா பயந்தியா?” என்றான் கரகரத்த குரலில்.

 

ஆம் என்று தலையை அசைத்தாள் அவள். “ஆனா, எப்பிடியும் நீங்க என்னைத் தேடி வருவீங்க எண்டுற நம்பிக்கை இருந்தது.” என்றாள் கண்ணீரை அடக்கிய குரலில்.

 

தூயவன் அப்படியே நின்றுவிட்டான். அவள் முகத்தையே இமைக்காது பார்த்தான். அவனால் அவன் உணர்வுகளை வரையறுக்க முடியவில்லை. அவனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? அலைந்த அலைச்சல்கள், நிலைகொள்ளாமல் தவித்த தவிப்பு, அவன் உயிரின் அழுகை எல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகின.

 

“எப்பிடி வந்தது இந்த நம்பிக்கை? நான் உனக்கு இந்தக் கண்ணீரைத் தவிர வேற ஒண்டையும் தந்ததே இல்லையே.” தன் ஆழ்ந்த குரலில் வினவினான்.

 

“தெரியா. எவ்வளவு பயமா இருந்தாலும் நீங்க கட்டாயம் வருவீங்க எண்டுற ஒரு விசயம்தான் எனக்குத் தைரியம் தந்தது.”

 

அவள் சொல்லி முடிக்க முதலே அவளை இறுக்கி அணைத்து, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தான் அவன். “எனக்கு உன்னைக் காணாம உயிரே போயிற்றுது. என்ர இசைய மொத்தமா துலச்சிட்டனோ எண்டு உன்னைப் பாக்கிற வரைக்கும் நான் நானாவே இல்ல.” என்றவனின் குரலில் அப்படி ஒரு நடுக்கம்.

 

இந்தளவில் பயந்தானா? அவள் உள்ளமும் உடலும் சிலிர்த்தடங்கின. ஆனாலும், அவள் இருக்கும் கோலம் நினைவில் வர, “நான் குளிக்கோணும் ப்ளீஸ்.” என்று மெல்ல முணுமுணுத்தாள்.

 

அப்போதும் அவன் அவசரமாக விலகவில்லை. தன் உணர்வுகள் கட்டுக்குள் வருகிற வரை அவளைத் தன் கைகளுக்குள் வைத்திருந்துவிட்டே விட்டான்.

 

“நான் இஞ்சயே இருக்கிறன், நீ போய்க் குளிச்சிட்டு வா.”

 

ஆனால், இப்போது அவளுக்குத் தைரியம் வந்திருந்தது. கொஞ்சம் தெளிந்தும் இருந்தாள்.

 

“இல்ல, நீங்க போங்க. எனக்குப் பயமில்லை.”

 

அவனுக்கும் அந்த சீட்டுக்கு ஒரு வழி பார்க்க வேண்டியிருந்தது. குருவை அனுப்ப விருப்பமில்லை. அதில், “இருப்பியா? இஞ்ச இருக்கிறதால எனக்கு ஒண்டுமில்ல.” என்றான்.

 

“இருப்பன். நீங்க சொன்ன மாதிரிக் கதவைப் பூட்டிக்கொண்டு போங்க.” தைரியமாகவே அவள் சொன்னதில் அவனும் கேட்டுக்கொண்டான்.

 

“கெதியா வந்திடுவன். என்ன எண்டாலும் அதுல எருமை எண்டு சேவ் பண்ணி வச்சிருக்கிறன். அந்த நம்பருக்கு எடு.” என்றதும் அவள் உதட்டில் மெல்லியதாகச் சிறு புன்னகை.

 

“எருமையா?” என்றாள் கேள்வியாக.

 

“அந்த எருமை எருமைதான். அவன் என்னை மாடு எண்டு சேவ் பண்ணி வச்சிருக்கிறான்.” அவளின் புன்னகை அவன் உதட்டுக்கும் தொற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியேறினான்.

 

இருவர் உள்ளங்களும் ஓரளவுக்கு இலேசாகி இருந்தன.

 

error: Alert: Content selection is disabled!!