நீ வந்து தங்கிய நெஞ்சில் 27.2

இன்னொரு முறை பேசுவதால் இருவரு இன்னொரு முறை காயப்படுவார்கள். அதைத் தானடி எதுவும் மாறும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இல்லை. அதை எப்படி அவளிடம் சொல்ல என்று அவன் திணற, “இஞ்சயே, இண்டைக்கு பின்னேரம்… வேலை முடிஞ்ச பிறகு?” என்று அவள் குரல் இலேசாகக் கெஞ்சிற்று.

அவன் தலை அவன் அனுமதி இல்லாமலேயே சரி என்று ஆடிற்று.

கண்களில் திரண்டுவிட்ட கண்ணீருடன் புன்னகைத்து, “தேங்க்ஸ்.” என்றுவிட்டுப் போனாள் அவள்.

மலையானது. நிரோஜனுக்கு இந்த உறவுக்கு வைத்த முற்றுப்புள்ளியில் மாற்றமில்லை என்று அவளைக் காயப்படுத்தாமல் இன்னொரு முறை எப்படிச் சொல்வது என்று புலப்படவேயில்லை.

இன்னொரு முறை அவள் கண்ணீரை, கெஞ்சலை, மன்னிப்பை அவனாலும் பார்க்க முடியாது. கடைசியில், “டேய் நான் போறன். ரெண்டு நிமிசம் கழிச்சு நீங்களா வாற மாதிரி வாங்கடா ப்ளீஸ். எனக்கு இன்னொரு சண்டை வேண்டாம்.” என்றான் நண்பர்களிடம் கெஞ்சலாக.

“லூசா நீ? நாங்க எப்பிடி?”

“ப்ளீஸ் மச்சான். சரியோ பிழையோ போதும் போதும் எண்டுற அளவுக்கு ரெண்டு பேருமே காயப்பட்டாச்சு. இது அதோட முடியட்டும். திரும்ப ஆரம்பிச்சு எதுவும் மாறப்போறேல்ல. காப்பாத்துங்கடா.” என்றான் கெஞ்சலாக.

“அவா என்ன கதைக்க நினைக்கிறவரோ தெரியாதேடா.”

“முடிஞ்சுபோன உறவுக்க இன்னும் என்னடா கதைக்க இருக்கு?”

அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கடைசியில் வேறு வழியற்றுச் சரி என்றார்கள்.

அதேபோல் அவள் எதிரில் அவன் சென்று அமர்ந்து அவள் பேச்சை ஆரம்பிக்க முதலே நவீன், மகேஷ், மித்ரன் மூவரும், “ஹாய்டா, ஹாய்மா!” என்றுகொண்டு வந்து, அவன் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்கள்.

தவிப்புடன் அவனைப் பார்த்தாள் யாமினி. ஐயோ என்றிருந்தது அவனுக்கு.

“என்னம்மா, எப்பிடி இருக்கிறீங்க?” என்றான் நவீன்.

நன்றாக இருக்கிறேன் என்பதுபோல் சிறிதாக தலையசைத்து அவள் சிந்திய முறுவலின் பின்னே, அழுகையின் நடுக்கத்தை அடக்குவதற்கு அவள் முயல்வது அப்படியே தெரிந்தது. கண்டனத்துடன் நண்பனைப் பார்த்தான் நவீன்.

நிரோஜனுக்கும் இந்த நிமிடங்களைக் கடப்பது இலகுவாய் இல்லை. அவளைப் பார்க்க வராமல் இருந்திருக்கலாமோ, அவள் கேட்டபோதே மறுத்திருக்கலாமோ என்று அல்லாடினான்.

அவனையே பார்த்தாள் யாமினி. அவன் போராட்டத்தை அவளால் படிக்க முடிந்தது. விழிகளில் கண்ணீர் அரும்ப இதழ்களில் மெல்லிய முறுவல். கேண்டீன் நடத்துகிறவரை நோக்கி, “அண்ணா, எல்லாருக்கும் டீயும் ரோல்ஸும் தாறீங்களா?” என்று கேட்டாள்.

“நானே வந்து எடுக்கிறன்.” என்று எழுந்துபோய் அவளே எல்லோருக்கும் எடுத்து வந்து தந்தாள்.

அவள் தன்னைச் சமாளித்துக்கொள்ளவே இத்தனையையும் செய்கிறாள் என்று அங்கிருந்த எல்லருக்குமே புரிந்தது. தவறு செய்கிறோமோ என்கிற குற்றவுணர்ச்சி எல்லோர் மனத்திலும். மீண்டும் கண்டனத்துடன் நண்பனைப் பார்த்தார்கள். அவனுக்கும் புரியாமல் இல்லை. இப்படிச் செய்திருக்க வேண்டாமோ என்று இப்போது எண்ணிக் கவலையுற்றான். இனி ஒன்றும் செய்ய முடியாது.

எல்லோரும் சாப்பிட்டு, பால் தேநீரையும் அருந்தி முடித்தார்கள். அப்போதும் அவர்கள் புறப்படுவதாக இல்லை. அதுவே சொல்லாத பலவற்றை அவளிடம் தெளிவாய்ச் சொல்லின. அவள் இதழோரம் வலி நிறைந்த மென் புன்னகை.

“என்னம்மா விசேஷம் டீ, ரோல்ஸ் எண்டு இந்த இடமே அல்லோலகல்லோலப்படுது?” தாம் செய்துகொண்டிருக்கும் தவரைப் பூசி மெழுகாய் மீண்டும் பேச்சுக்கு கொடுத்தான் நவீன்.

“பெருசா ஒண்டும் இல்லை அண்ணா. ரெண்டு மாதத்துக்கு முதல் அவர் பிரேக்கப் சொன்னவர். இண்டைக்கு நானும் அதச் சொல்ல வந்தனான். அழகா ஆரம்பிச்ச ஒரு விசயத்த அதே அழகோட முடிச்சு வைக்கேக்கதானே அது இன்னும் வடிவா இருக்கும்.” என்றவள் கேள்வியில் நிரோஜன் விழுக்கென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான் என்றால் அவன் நண்பர்களுக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று.

“ஓ சொறிமா. நாங்க போறம், நீங்க கதைங்க.” என்று அவர்கள் எழுந்துகொள்ள முயல,

“இல்லை அண்ணா. அப்பிடி இனியும் நானும் அவரும் தனியா கதைக்க ஒண்டுமே இல்லை. அதவிட… எப்பவுமே அவரோட கதைக்க நான் வாறதைக் கண்டாலே நீங்க எல்லாரும் விலகிப் போயிடுவீங்க. இண்டைக்கு இவ்வளவு நேரமாகியும் நீங்க எல்லாரும் இந்த இடத்தை விட்டுப் போகாம இருக்கிறதிலேயே விளங்குது, இது அவரின்ர ஏற்பாடு எண்டு.” என்று சொல்லி அவள் முறுவலித்தபோது எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி.

“அந்தளவுக்கு உங்கள நான் மூச்சடைக்க வச்சிருக்கிறன் போல. இல்லாம இப்பிடி நீங்க நடந்திருக்க மாட்டீங்க. உண்மையா இதையெல்லாம் நான் உணரவே இல்ல. லூசு மாதிரி… நல்லதுக்குத்தான் எண்டு நினைச்சுக்கொண்டு… என்னென்னவோ எல்லாம் செய்திட்டன்.” என்று நிரோஜனைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் கண்ணீருடன் புன்னகைக்க முயன்றாள்.

முடியவேயில்லை.

உள்ளே அழும் இதயம் கண்ணீரை வெளியே தள்ளியிருந்தது.

“சொறி! அழக்கூடாது எண்டுதான் நினைக்கிறன். அது தானா வருது.” என்றபடி வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு திரும்பவும் முறுவலிக்க முயன்றாள்.

“மூச்சு முட்டுது, என்னைக் கொஞ்சம் ஃபிரீயா விடு, எனக்கான ஸ்பேஸ தா எண்டு நீங்க நிறையத்தரம் சொல்லித்தான் இருக்கிறீங்க. நான்தான்… எனக்குத்தான்… ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிச்சா மட்டும் காணாது. புரிதல் வேணும் எண்டு சொல்லுவினம். அப்பதான் அந்த உறவு கடைசி வரை நிலைக்குமாம். இஞ்ச ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிச்ச அளவுக்கு எங்களுக்க புரிதல் இல்லை போல.” என்று சொன்னவளை உள்ளம் வலிக்கப் பார்த்திருந்தான் நிரோஜன்.

“ஆனா எப்பவுமே உங்களை நோகடிக்கோணும் எண்டு நினைச்சு நோகடிச்சது இல்ல. உங்களுக்கு, எங்களுக்கு, எங்கட எதிர்காலத்துக்கு நல்லது எண்டு நினைச்சு நான் செய்த விசயங்கள்… செய்றது நல்லதாவே இருந்தாலும் அது ஒரு அளவைத் தாண்டேக்க நஞ்சா மாறிடும் எண்டு இப்பதான் விளங்குது. இத நான் எனக்கான அனுபவமப் பாடமா எடுக்கிறன்.” என்று புன்னகைத்தாள் அவள்.

அவன் நெஞ்சை அறுத்துக்கொண்டு போயிற்று அந்தப் புன்னகை.

“தேங்க்ஸ் எல்லாத்துக்கும். முதல் முதல் அழகான ஒரு காதலை எனக்கு அறிமுகப்படுத்தினது நீங்கதான். நிறைய இடங்கள் உங்களோடதான் சுத்திப் பாத்திருக்கிறன், நிறையச் சாப்பாடு வித்தியாசம் வித்தியாசமா ட்ரை பண்ணினதும் உங்களோடதான். மறக்கவே ஏலாத அழகான நாட்களை எனக்கு நீங்க தந்திருக்கிறீங்க. நிறைய ஃபன், நிறைய கொண்டாட்டம், நிறையப் பயணங்கள், நிறையச் சிரிப்பு, நிறையச் சந்தோசம், இன்னும் சொல்லப்போனா அவ்வளவு காலமும் ஒரு கூட்டுக்க மட்டுமே வாழ்ந்தவள் நான். அப்பிடியான எனக்கு வாழ்க்கையின்ர அழகான பக்கங்களை முதல் முதல் காட்டினவர் நீங்க. அது எல்லாத்துக்கும்… எல்லாத்துக்குமே தேங்க்ஸ். இந்த நிமிஷம் உங்களில எனக்கு எந்தக் குறையும் இல்ல. கோபமும் இல்ல. எனக்கு நீங்க எந்தப் பிழையான விஷயங்களைச் செய்யவும் இல்ல. என்னை நோகடிக்கவும் இல்ல. அதால நம்ப்பிக்கையை குடுத்தோமோ, இடையில விட்டுட்டோமே எண்டு என்னை பற்றி நீங்க யோசிக்கவே வேண்டாம்.” என்றபோது நிரோஜன் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு தன்னைச் சமாளிக்க முயன்றான்.

“லைப்ல நீங்க ஆசைப்படுற எல்லாம் நடக்கோணும். நீங்க சந்தோசமா மட்டுமே இருக்கோணும். என்னை மாதிரியா இல்லாம, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி, உங்களுக்கு ஏற்ற மாதிரியான லைஃப் பாட்னர் கட்டாயம் கிடைப்பா. பியூச்சர் இன்னுமின்னும் அழகா உங்களுக்கு அமையும். அதுக்கு என்ர மனம் நிறைஞ்ச வாழ்த்துகள்.” என்றபோது அவன் முற்றிலுமாக நிலைகுலைந்துபோனான்.

வேகமாகத் தன் கண்களைத் துடைத்துக்கொண்டவனுக்கு அவள் முகம் பார்க்கவே முடியாமல் போயிற்று.

அவன் நண்பர்கள் புறம் திரும்பி, “இவ்வளவு காலமும் என்ன செய்றன் எண்டு தெரியாமையே உங்கட ஃபிரண்டை பிடிச்சு வச்சிருந்திட்டன். இப்ப அவரை அவராவே திருப்பித் தந்திட்டன். ஏதாவது ஒரு வகைல உங்க ஆரையாவது நான் காயப்படுத்தியிருந்தா சொறி.”

“என்னம்மா நீங்க?” என்று மகேஸே தடுமாறினான். அவனுக்கே கண்கள் கலங்கிவிடும் போலாயிற்று.

அதற்கு ஒன்றும் சொல்லாமல் தன் கைப்பையிலிருந்து பொட்டலம் போன்று கைக்குட்டையால் சுற்றியிருந்ததை எடுத்துப் பிரித்து, மேசையின் மேல் வைத்தாள்.

அதில் அவன் அவளுக்கென்று வாங்கிக்கொடுத்த நகைகள் அத்தனையும் இருந்தன. “யாமினி பிளீஸ்.” என்றான் தாங்க முடியாமல்.

“இல்ல. எனக்குச் சொந்தமில்லாத எதையும் என்னால வச்சிருக்கேலாது. அது முறையும் இல்ல.” என்றபோது அவன் கைப்பேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்து விழுந்தது. எடுத்துப் பார்த்தான். அவன் கொடுத்த பணம் அவன் வங்கிக்கு வைப்புச் செய்யப்பட்டிருந்தது. வேகமாய் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

‘இந்தக் காசைத் திருப்பித் தந்து எனக்கும் உனக்குமான உறவை முறிக்க நினைக்கிறியா’ என்று அன்று அவன் கேட்ட கேள்விக்கு இன்று தெளிவாகப் பதில் சொல்லியிருந்தாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!