நீ வந்து தங்கிய நெஞ்சில் 28.1

அத்தியாயம் 28

நடுச்சாமத்தில் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல், அதுவும் கொழும்பிலிருந்து திருகோணமலை வரை பைக்கில் வந்து நின்ற மகனைக் கண்டு மல்லிகா அதிர்ந்து போனார்.

அதன் பிறகும் கூட அறைக்குள் புகுந்தவன்தான். வெளியில் வரவேயில்லை. முகம் சரியில்லை. அவர் முகம் பார்க்கவில்லை. பயந்துபோய் விசாரிக்கப் போனால் குளியலறைக்குள் புகுந்துகொண்டிருந்தான் அவன்.

அவருக்கு ஒன்றுமே புரியமாட்டேன் என்றது. இதுவரையில் அவன் இப்படி வந்ததேயில்லை. கணவர், மகள் இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். அவர்களையும் எழுப்பிப் பயப்படுத்த வேண்டாம் என்று எண்ணிக்கொண்டு, இந்த நேரத்தில் சாப்பிட என்ன கொடுக்கலாம் என்று சமையற்கட்டில் ஆராய ஆரம்பித்தார்.

திடீரென்று பார்த்தால் அவரைப் பின்னிருந்து கட்டிக்கொண்டு முதுகில் முகம் புதைத்தான் அவன். பயந்துபோனார் மல்லிகா. சின்ன வயதில் இப்படித்தான். அவரின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அங்கிங்கு நகரவிடாது தொல்லை தருவான். இத்தனை பெரியவனான பிறகு இன்று என்ன?

“தம்பி, என்னய்யா, என்னப்பு?” என்று அவன் முகம் பார்க்க முயன்றார்.

இதற்குள் அவரின் முதுகுப் பகுதி சூடான கண்ணீரில் நனைய ஆரம்பித்தது.

மல்லிகா பதறிப்போனார். நடக்கக் கூடாத எதுவும் நடந்துவிட்டதோ என்று உள்ளம் அடித்துக்கொள்ள ஆரம்பிக்க, வேகமாக அவன் புறம் திரும்பி, “தம்பி என்ன, ஏன் அழுறாய்? என்ன நடந்தது?” என்று பதறினார்.

அவனும் இந்தளவில் கட்டுப்பாட்டை இழப்பான் என்று நினைக்கவில்லை. ஆனால், அன்னையைப் பார்த்ததும் கண்ணீர் தானாய் வந்தது. வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு, “ஒண்டும் இல்லை அம்மா!” என்று திரும்பிப் போக முயன்றான்.

அவர் விடவில்லை. அவன் கையைப் பற்றி நிறுத்தி, “தம்பி விளையாடாத. அம்மாக்கு கை கால் எல்லாம் நடுங்குது. ஏன் அழுதனீ? என்ன நடந்தது? அப்பாவை எழுப்பவா.” என்று படபடவென்று விசாரித்தார்.

“இல்ல இல்ல. வேண்டாம்.” முதல் வேலையாகப் பைப்பில் தண்ணீர் பிடித்துக் குடுத்தான். குளிர் நீர் தொண்டையை நினைத்துக்கொண்டு போனதில் கொஞ்சம் தெளிவாக உணர்ந்தவன், “சாப்பாடு வேண்டாம் அம்மா. ஏதாவது குடிக்கத் தாங்க.” என்று சொன்னான்.

அவருக்குக் கோபம்தான் வந்தது. அவர் என்னவென்று புரியாமல் பதறிக்கொண்டிருக்க இவன் என்ன கேட்கிறான்?

“அது அம்மா தாறன். என்ன நடந்தது எண்டு சொல்லு நீ முதல்.” என்று நின்றார் அவர்.

“இல்லம்மா, ஒரு உயிரை நோகடிச்சிட்டன்.” என்றான் அவரைப் பாராமல்.

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. உயிரை நோகடித்துவிட்டேன் என்றால் என்ன பொருள்? இதை எப்படி எடுப்பது?

“என்ன தம்பி என்ன சொல்லுறாய்?”

அடைத்த தொண்டையை விழுங்கியபடி நின்றிருந்தான் அவன்.

“தம்பி, அம்மாக்குப் பதறுது. என்ன நடந்தது எண்டு சொல்லு? ஃப்ரெண்ட்ஸுக்கு எதுவும் சண்டையா?”

“ஒபீஸ்ல ஏதும் பிரச்சினையா?”

“ஏதும் பெரிய பிழை செய்திட்டியா?”

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “ஆரையும் விரும்பிறியோ? அந்தப் பிள்ளையோட ஏதும் பிரச்சனையோ?” என்றார். ஒரு உயிரை நோகடித்துவிட்டேன் என்பதை வேறு எப்படிப் பொருள் கொள்வது என்று அவருக்குப் புரியவேயில்லை.

எதற்கும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவன் பற்றியிருந்த சில்வர் கப்பில் அவன் பிடியின் அழுத்தம் கூடிற்று. கண்ணில் நீரும் உதட்டில் புன்னகையுமாக அவனிடம் பேசியவள் கண் முன்னே வந்து நின்றாள்.

அத்தனை நாள்களும் கோபப்பட்டு, குமுறி, அவனோடு சண்டை பிடித்ததற்கு மாறாக, கண்கள் நீரில் மிதந்தாலும் மிகுந்த நிதானத்தோடும் அமைதியோடும் அவள் பேசிய பாங்கு அவன் நெஞ்சை வாள் கொண்டு அறுத்துக்கொண்டேயிருந்தது.

அதற்கு மாறாக அவள் கோபப்பட்டிருந்தாலோ குமுறியிருந்தாலோ இந்தளவில் அது அவனைப் பாதித்திராது. புன்னகை முகமாய் அவள் சொன்ன பிரிவு அவன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய் குடித்தது. குற்றவுணர்ச்சியில் ஆழ்த்திற்று. கொஞ்சம் நிதானித்திருக்கலாமோ, இன்னும் பொறுமையாகக் கையாண்டிருக்கலாமோ என்று அர்த்தமற்ற பல யோசனைகள்.

அழகாய் ஆரம்பித்ததை அழகாய் முடித்துவைக்கிறாளாம். உண்மைதான். மிக மிக அழகாய் முடித்துவைத்துவிட்டாள். என்ன, அவன்தான் தரையில் விழுந்த மீனாகத் துடிக்கிறான்.

தோள்பட்டையில் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்துகொள்ளப் போகவும், “ஒரு உயிரை நோகடிச்சிட்டன் எண்டா என்ன அர்த்தம்? இதுக்குப் பதிலச் சொல்லிப்போட்டுப் போ!” என்றார் அவர்.

“ஒண்டும் இல்லைம்மா. விடுங்க.”

அவருக்குக் ம்பம்தான் வந்தது. “வாற ஆத்திரத்துக்கு வளந்த பிள்ளை எண்டு பாக்காம ஆப்பைக்காம்பை எடுத்து வெளுத்துவிட்டுடுவன். என்ன எண்டு சொல்லு.” என்று சினந்தார் அவர்.

எப்படிச் சொல்வான்? “எனக்குப் படுக்கோணும் அம்மா!” என்றுவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டான்.

மல்லிகாவுக்கு மொத்த உறக்கமும் தூரப் போயிருந்தது. காலையில் எழுந்ததும் விதானையாகப் பணிபுரியும் அவன் தந்தை ஏகாம்பரத்திடம் நடந்ததைச் சொன்னார்.

அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. எழுந்து முகம் கழுவிக்கொண்டு வந்தவரிடம் அவரும் விசாரித்தார்.

“ஒண்டும் இல்லை அப்பா. அம்மா சும்மா ஒன்றுமே இல்லாத விசயத்தத் தூக்கிப் பிடிக்கிறா.” என்றான் அவன்.

ஏகாம்பரம் மனைவியையும் மகனையும் மாறி மாறிப் பார்த்தார். இரவு அவன் வந்த கோலத்தைப் பாராததில் அவருக்கும் மனைவி அவசியமற்றுக் கவலைப்படுவதாகவே தோன்றிற்று.

“இப்பிடி இவ்வளவு தூரம் பைக்ல வரக்கூடாது தம்பி. அப்பிடி என்ன அவசரம்?” என்று அதை மட்டும் கடிந்துகொண்டுவிட்டு வேலைக்குப் புறப்பட்டிருந்தார்.

காவியாவுக்கும் முதலில் தமையன் சாதாரணமாக இருப்பதாகப் பட்டாலும் கொஞ்ச நேரத்திலேயே என்னவோ சரியில்லை என்று கண்டுகொண்டாள். அந்தளவில் அவன் அமைதியிழந்து தவிப்பது அப்படியே தெரிந்தது.

“யமி அக்காக்கு எடுத்துக் கேப்பமா அம்மா?” என்று அவள் என்னவோ சாதாரணமாகத்தான் கேட்டாள்.

ஆனால், “அவளுக்கு எடுக்கிறேல்ல.” என்ற அவனுடைய அவசரமான பதிலில் பெண்கள் இருவரும் சந்தேகமாக அவனை நோக்கினர்.

“அது அவள் ஆக்சிடென்ட் ஆகி ஏலாம இருக்கிறாள்.” என்று சமாளித்தான் அவன்.

பெண்கள் இருவரும் பதறிப்போயினர். அவனிடம் கேட்டு நடந்ததை அறிந்துகொண்ட மல்லிகாவுக்கு மகன் மீது கோபம்.

“என்ன தம்பி நீ? எங்களுக்கு அவ்வளவு உதவி செய்த பிள்ளை காயப்பட்டு இருந்திருக்கிறா. நீ ஒரு வார்த்தை சொல்லேல்ல. என்ன நினைப்பா எங்களைப் பற்றி? சுயநலமான மனுசர் எண்டு எல்லா.” என்று அவனைக் கடித்துவிட்டு அவளுக்கு அழைத்தார்.

அங்கே அழைப்புப் போக இங்கே இவன் இதயத்தின் துடிப்பு அதிகமாயிற்று. “ஹலோ கவி!” அது காவியாவின் கைப்பேசி என்பதில் நலிந்து மெலிந்து ஒலித்த அவள் குரலில் அவன் முகம் திருப்பி எங்கோ பார்த்தான்.

“அம்மாச்சி, பஸ்ஸால விழுந்து காயப்பட்டு இருந்தனீங்களாம்மா. எங்களுக்கு தெரியாது பிள்ளை. தெரிஞ்சிருக்க அப்பவே எடுத்துக் கதைச்சிருப்பன். குறை நினைக்காதீங்கோ. தம்பி ஒரு வார்த்த சொல்லாம விட்டுட்டான். இப்ப எப்பிடி இருக்கிறீங்கம்மா?”

“ஒரு குறையும் இல்லை அன்ட்ரி. நான் விழுந்ததும் நேரா வீட்டை போயிட்டன். அதால இஞ்ச கொழும்பில அஜூவைத் தவிர்த்து வேற ஆக்களுக்குத் தெரியாது. நேற்றுத்தான் அவருக்கும் தெரியும். அதால அவர்களையும் பிழை இல்ல.”

error: Alert: Content selection is disabled!!