நீ வந்து தங்கிய நெஞ்சில் 28.1

அத்தியாயம் 28

சொல்லாமல் கொள்ளாமல், அதுவும் நடுச்சாமத்தில் திடீரென்று கொழும்பிலிருந்து திருகோணமலை வரை பைக்கில் வந்து நின்ற மகனைக் கண்டு மல்லிகா அதிர்ந்துபோனார்.

அதன்பிறகும் அறைக்குள் புகுந்தவன் வெளியில் வரவேயில்லை. முகம் சரியில்லை. அவர் முகம் பார்க்கவில்லை. பயந்துபோய் விசாரிக்கப் போனபோது குளியலறைக்குள் புகுந்துகொண்டிருந்தான் அவன்.

அவருக்கு ஒன்றும் புரியமாட்டேன் என்றது. இதுவரையில் அவன் இப்படி வந்ததில்லை. கணவர், மகள் இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். அவர்களையும் எழுப்பிப் பயப்படுத்த வேண்டாம் என்று எண்ணிக்கொண்டு, இந்த நேரத்தில் சாப்பிட என்ன கொடுக்கலாம் என்று சமையற்கட்டில் ஆராய ஆரம்பித்தார்.

திடீரென்று பார்த்தால் அவரைப் பின்னிருந்து கட்டிக்கொண்டு முதுகில் முகம் புதைத்தான் அவன். பயந்துபோனார் மல்லிகா. சின்ன வயதில் இப்படித்தான். அவரின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அங்கிங்கு நகரவிடாது தொல்லை தருவான். இத்தனை பெரியவனான பிறகு இன்று என்ன?

“தம்பி, என்னய்யா, என்னப்பு?” என்று அவன் முகம் பார்க்க முயன்றார்.

இதற்குள் அவரின் முதுகுப் பகுதி சூடான கண்ணீரில் நனைய ஆரம்பித்தது.

மல்லிகா பதறிப்போனார். நடக்கக் கூடாத எதுவும் நடந்துவிட்டதோ என்று உள்ளம் அடித்துக்கொள்ள ஆரம்பிக்க, வேகமாக அவன் புறம் திரும்பி, “தம்பி என்ன, ஏன் அழுறாய்? என்ன நடந்தது?” என்று படபடத்தார்.

அவனும் இந்தளவில் கட்டுப்பாட்டை இழப்போம் என்று நினைக்கவில்லை. அன்னையின் அண்மையில் கண்ணீர் தானாய் வந்திருந்தது. வேகமாகத் துடைத்துக்கொண்டு, “ஒண்டும் இல்லை அம்மா!” என்று திரும்பிப் போக முயன்றான்.

“தம்பி விளையாடாத. அம்மாக்குக் கை கால் எல்லாம் நடுங்குது. ஏன் அழுதனி? என்ன நடந்தது? அப்பாவ எழுப்பவா?” என்று படபடவென்று விசாரித்தார் மல்லிகா.

“இல்ல இல்ல. வேண்டாம்.” முதல் வேலையாக சிங்க் பைப்பில் தண்ணீர் பிடித்துக் குடுத்தான். குளிர் நீர் தொண்டையை நனைத்துக்கொண்டு போனதில் கொஞ்சம் தெளிவாக உணர்ந்தவன், “சாப்பாடு வேண்டாம் அம்மா. ஏதாவது குடிக்கத் தாங்க.” என்று சொன்னான்.

அவருக்குக் கோபம்தான் வந்தது. அவர் என்னவென்று புரியாமல் பதறிக்கொண்டிருக்க இவன் என்ன கேட்கிறான்?

“அது தாறன். என்ன நடந்தது எண்டு சொல்லு நீ முதல்.” என்று நின்றார் அவர்.

கொஞ்ச நேரம் தன் விரல்களை ஆராய்ந்துவிட்டு, “ஒரு உயிரை நோகடிச்சிட்டன்.” என்றான் அவரைப் பாராமல்.

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. உயிரை நோகடித்துவிட்டேன் என்றால் என்ன பொருள்? இதை எப்படி எடுப்பது?

“என்ன தம்பி, என்ன சொல்லுறாய்?”

அடைத்த தொண்டையை விழுங்கியபடி நின்றிருந்தான் அவன்.

“தம்பி, அம்மாக்குப் பதறுது. என்ன எண்டு சொல்லு. திடீர் எண்டு வந்து நிக்கிறாய். அழுறாய். ஒரு உயிரை நோகடிச்சிட்டன் எண்டுறாய். நான் எதை எண்டு நினைக்க? என்ன நடந்தது எண்டு சொல்லு? ஃப்ரெண்ட்ஸுக்க ஏதும் சண்டையா? ஆரையும் அடிச்சிப்போட்டியா?”

“…”

“ஒபீஸ்ல ஏதும் பிரச்சினையா?”

“…”

“ஏதும் பெரிய பிழை செய்திட்டியா?”

“…”

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “ஆரையும் விரும்பிறியோ? அந்தப் பிள்ளையோட ஏதும் பிரச்சனையோ?” என்றார். ஒரு உயிரை நோகடித்துவிட்டேன் என்பதை வேறு எப்படிப் பொருள் கொள்வது என்று அவருக்குப் புரியவில்லை.

எதற்கும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாலும் கடைசிக்கு கேள்வியில் பற்றியிருந்த சில்வர் கப்பில் அவன் பிடியின் அழுத்தம் கூடிற்று. கண்ணில் நீரும் உதட்டில் புன்னகையுமாக அவனிடம் பேசியவள் கண் முன்னே வந்து நின்றாள்.

அத்தனை நாள்களும் கோபப்பட்டு, குமுறி, அவனோடு சண்டை பிடித்ததற்கு மாறாக, கண்கள் நீரில் மிதந்தாலும் மிகுந்த நிதானத்தோடும் அமைதியோடும் அவள் பேசிய பாங்கு அவன் நெஞ்சை வாள் கொண்டு அறுத்துக்கொண்டேயிருந்தது.

அதற்கு மாறாக அவள் கோபப்பட்டிருந்தாலோ குமுறியிருந்தாலோ இந்தளவில் அது அவனைப் பாதித்திராது போலும்.

சட்டென்று அவன் அங்கிருந்து போக முனையவும், “ஒரு உயிரை நோகடிச்சிட்டன் எண்டா என்ன அர்த்தம்? இதுக்குப் பதிலச் சொல்லிப்போட்டுப் போ!” என்று தடுத்தார் மல்லிகா.

“ஒண்டும் இல்லையம்மா. விடுங்க.”

“வாற ஆத்திரத்துக்கு வளந்த பிள்ளை எண்டு பாக்காம ஆப்பக்காம்பை எடுத்து வெளுத்து விட்டுடுவன். என்ன எண்டு சொல்லு தம்பி.” என்று சினந்தார் அவர்.

எப்படிச் சொல்வான்? “எனக்குப் படுக்கோணும் அம்மா!” என்றுவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டான்.

மல்லிகாவுக்கு மொத்த உறக்கமும் தூரப்போயிருந்தது. காலையில் எழுந்ததும் விதானையாகப் பணிபுரியும் அவன் தந்தை ஏகாம்பரத்திடம் நடந்ததைச் சொன்னார்.

அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. எழுந்து முகம் கழுவிக்கொண்டு வந்தவனிடம் விசாரித்தார்.

“ஒண்டும் இல்லை அப்பா. அம்மா சும்மா ஒண்டுமே இல்லாத விசயத்தத் தூக்கிப் பிடிக்கிறா.” என்றான் அவன்.

ஏகாம்பரம் மனைவியையும் மகனையும் மாறி மாறிப் பார்த்தார். இரவு அவன் வந்த கோலத்தைப் பாராததில் அவருக்கும் மனைவி அவசியமற்றுக் கவலைப்படுவதாகவே தோன்றிற்று.

“இப்பிடி இவ்வளவு தூரம் பைக்ல வாரேல்ல தம்பி. அப்பிடி என்ன அவசரம்?” என்று அதை மட்டும் கடிந்துகொண்டுவிட்டு வேலைக்குப் புறப்பட்டிருந்தார்.

காவியாவுக்கும் முதலில் தமையன் சாதாரணமாக இருப்பதாகப் பட்டாலும் கொஞ்ச நேரத்திலேயே என்னவோ சரியில்லை என்று கண்டுகொண்டாள். அந்தளவில் அவன் அமைதியிழந்து தவிப்பது அப்படியே தெரிந்தது.

“யமி அக்காக்கு எடுத்துக் கேப்பமா அம்மா?” அவள் என்னவோ சாதாரணமாகத்தான் கேட்டாள்.

ஆனால், “அவளுக்கு எடுக்கிறேல்ல.” என்ற அவனுடைய அவசரமான பதிலில் பெண்கள் இருவரும் சந்தேகமாக அவனை நோக்கினர்.

“அது அவள் ஆக்சிடென்ட் ஆகி ஏலாம இருக்கிறாள்.” என்று சமாளித்தான் அவன்.

பெண்கள் இருவரும் பதறிப்போயினர். அவனிடம் கேட்டு நடந்ததை அறிந்துகொண்ட மல்லிகாவுக்கு மகன் மீது கோபம்.

“எங்களுக்கு அவ்வளவு உதவி செய்த பிள்ளை காயப்பட்டு இருந்திருக்கிறா. நீ ஒரு வார்த்தை சொல்லேல்ல. என்ன நினைப்பா எங்களைப் பற்றி? சுயநலமான மனுசர் எண்டு எல்லா.” என்று அவனைக் கடித்துவிட்டு அவளுக்கு அழைத்தார்.

அங்கே அழைப்புப் போக இங்கே இவன் இதயத்தின் துடிப்பு அதிகமாயிற்று. “ஹலோ கவி!” அது காவியாவின் கைப்பேசி என்பதில் நலிந்து மெலிந்து ஒலித்த அவள் குரலில் அவன் முகம் திருப்பி எங்கோ பார்த்தான்.

“அம்மாச்சி, பஸ்ஸால விழுந்து காயப்பட்டு இருந்தனீங்களாமே. எங்களுக்கு தெரியாது பிள்ளை. தெரிஞ்சிருக்க அப்பவே எடுத்துக் கதைச்சிருப்பன். குறை நினைக்காதீங்கோ. தம்பி சொல்லாம விட்டுட்டான். இப்ப எப்பிடி இருக்கிறீங்க?” என்று விசாரித்தார் மல்லிகா.

“இதுல குறை நினைக்க ஒண்டும் இல்லை அன்ட்ரி. நான் விழுந்ததும் நேரா வீட்டை போயிட்டன். அதால இஞ்ச கொழும்பில அஜூவைத் தவிர்த்து வேற ஆக்களுக்குத் தெரியாது. நேற்றுத்தான் அவருக்கும் தெரியும். தெரியாம எப்பிடிச் சொல்லுவார்?”

அதற்குமேல் அங்கே இருக்க முடியாமல் எழுந்து தோட்டத்துக்கு நடந்தவனின் விழிகள் மறுபடியும் நிறைந்திருந்தன.

அங்கே கேண்டீனில் வைத்தும் அவனுக்காகத்தானே பேசினாள். அவனைக் குறித்து ஒரு சிறு குறை சொல்லவில்லை. ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்கவில்லை. இப்படி என்னை விட்டுப் போக உனக்கு எப்படி மனம் வந்தது என்று கேட்கவில்லை.

அவளை போல் அல்லாமல் அவன் ஆசைப்படுவது போன்ற பெண் அவனுக்குக் கிடைப்பாளாம்.

அவள் தருகிற அழுத்தங்களைத் தாங்க முடியாமல் அந்த உறவிலிருந்து வெளியேற நினைத்தானே தவிர்த்து எதிர்காலம், அந்த எதிர்காலத்தில் இன்னொரு பெண் என்றெல்லாம் அவன் யோசிக்கவேயில்லையே. முதலில் எப்படி அப்படி யோசிப்பான்?

அவனிடம் நகைகளைத் தந்துவிட்டு எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அவள் புறப்பட்டபோது அவனால் அசையக்கூட முடியாமல் போயிற்று.

“என்னம்மா, ஏன் ஒரு மாதிரி நடக்கிறீங்க? காலுக்கு என்ன?” என்ற நவீனின் குரலில்தான் வேகமாக நிமிர்ந்து அவளையும் அவள் காலையும் மாறி மாறிப் பார்த்தான்.

அவள் பார்வையும் அவனிடம் ஒரு முறை சென்று வர, “சின்னதா ஒரு ஆக்சிடென்ட் அண்ணா.” என்றாள் பெயரளவு முறுவலோடு.

அவன் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி.

“எப்ப நடந்தது? எனக்குத் தெரியாதே.” என்றான் அவசரமாக

“ஒரு மாதம் முதல்.”

“ஆனா இப்ப வரை கால் உனக்குச் சரியாகேல்லையே?”

“ஆறு மாதம் ஆகும் எண்டு சொன்னவே.”

அதுவா அவளுக்குச் சின்ன விபத்து? அவள் தொடர்ந்து நடக்க ஆரம்பித்திருக்க அவன் எழுந்து அவளிடம் ஓடிப்போனான்.

திடீரென்று தன் முன்னே வந்து நின்றவனைத் திகைத்துப்போய்ப் பார்த்தாள் யாமினி.

“எனக்கு உண்மையா இது தெரியாது யாமினி.”

“தெரியும்.” என்றாள் அவள்.

அவனுக்கு மேலே என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், அவள் தன்னை நம்பவில்லையோ என்று பரிதவித்தான்.

error: Alert: Content selection is disabled!!