கடன் அன்பை முறிக்கும் 44 – 2

“அந்தளவுக்கெல்லாம் ஒண்டும் இல்ல. நீயா எதையும் நினச்சுப் பயப்பிடுறேல்ல.” அவள் முகமெல்லாம் முத்தமிட்டபடி அவள் பயத்தைப் போக்க முயன்றான்.

 

“ஆனாலும் நாங்க அங்க உங்கட வீட்டுக்குப் போவமா? எனக்கு அப்பான்ர முகம் பாக்கவே விருப்பம் இல்லாம இருக்கு.”

 

“சரி போவம். ஆனா இப்ப இல்ல. நாங்களும் போனா தூயவன் இந்த வீட்டில தனிச்சே போவான். முதல் அவன் இசையக் கட்டட்டும்.”

 

யாழிசையை அவன் நினைவூட்டியதும், “அவாவைப் பற்றி அப்பா என்ன எல்லாம் சொன்னவர் தெரியுமா. எனக்கே கூசிப் போச்சு. கோகிலா அன்ட்ரி எப்பிடித் தாங்கினாவோ தெரியா. அவவால கதைக்கவே ஏலாம போச்சு.” என்றவளுக்கு அப்போதும் குரல் அடைத்துப் போயிற்று.

 

பெற்ற தந்தையின் பொல்லாத அந்த முகத்தைப் பார்த்து நன்றாகவே மிரண்டு போயிருக்கிறாள் என்று விளங்கிற்று. தூயவனாலேயே அதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்கையில் அவளால் எப்படி முடியும்?

 

“அது எல்லாத்தையும் தூயவன் பாப்பான். நீ இப்ப கொஞ்சம் படுத்து எழும்பு. பிறகு தம்பி எழும்பிடுவார்.” அவளோடு தானும் கட்டிலில் சரிந்து, அவளைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்திருந்து, முதுகை வருடிக் கொடுத்தான்.

 

கொஞ்ச நேரத்திலேயே நல்ல உறக்கத்துக்குப் போயிருந்தாள் துளசி. அம்மாவையும் மகனையும் சரியாகப் படுக்க வைத்து, இருவருக்கும் நெற்றியில் இதமாக முத்தமிட்டு, போர்வையையும் ஒழுங்காகப் போர்த்திவிட்டு எழுந்துபோய்க் குளித்துவிட்டு வந்து, தூயவனின் அறைக்குப் போனான்.

 

அங்கே அவன் பிடித்து வைத்த சிலைபோல், போட்டிருந்த அதே உடையில் கட்டிலில் அமர்ந்திருந்தான். ஒரு கையால் தலையைத் தாங்கியிருந்தான். இன்னொரு கையிலிருந்து சொட்டுச் சொட்டாக இரத்தம் கசிந்து, தரையை நனைத்துக்கொண்டிருந்ததைக் கண்ட குரு பயந்துபோனான்.

 

“டேய்! என்னடா கைக்கு நடந்தது?” ஓடி வந்து அவன் கரத்தைப் பற்றிப் பார்க்கப் போக, அதற்கு விடாமல் இழுத்துக்கொண்டான்.

 

“டேய் லூசா, கண்ணாடித் துண்டு கிழிச்சிட்டுது போல. இப்பிடிக் கொட்டுது ரெத்தம். துண்டு ஏதும் உள்ளுக்கு இருக்கா எண்டு பாக்கோணும், விடு!” என்று பிடிவாதமாகப் பிடித்துப் பார்க்கப் போக, அப்போதும் விடாமல் அவனை உதறினான் தூயவன்.

 

“விர்றா! எனக்கு இந்த வலி வேணும்!” என்றதும் அப்படியே நின்றுவிட்டான் குரு.

 

நிமிர்ந்து அவனைப் பார்த்தவனின் விழிகளின் சிவப்பு இன்னும் குறையவே இல்லை. “வலுக்குதடா!” என்றான் பெரும் தவிப்புடன். “நெஞ்செல்லாம் நோகுதடா. இந்த வலிய போக்க ஏதாவது செய் மச்சான்!” குமுறலா கதறலா என்று பிரித்தறிய முடியாக் குரலில் துடித்தான்.

 

சட்டென்று குருவுக்கு விழிகள் கலங்கிப்போயின. அவன் காயத்தைச் சொல்லவில்லை என்று நன்றாகப் புரிந்தது.

 

“ஒரு மகன் ஆர மச்சான் கண்ண மூடிக்கொண்டு நம்புவான்? அப்பாவத்தானே? அப்பிடி நம்பினது பிழையாடா? என்ர அப்பா எண்டு பாசம் வச்சது பிழையாடா?” என்றவனைத் தடுக்கப் போகவே இல்லை குரு.

 

மனத்தில் இருப்பதை எல்லாம் கொட்டட்டும் என்று விட்டான்.

அதே நேரம், அவன் கையைப் பிடிவாதமாகப் பற்றிப் பார்த்தான்.

 

உள்ளங்கையில் பெரிய காயம். ஆட்காட்டி விரலின் நீளத்துக்குக் கீறியிருந்தது. ஆழமான காயமாகவும் இருக்கும் போலிருந்தது. இதில் அகிலனுக்கு அடித்து, மீன் தொட்டியைத் தூக்கிப் போட்டு உடைத்து என்று, அவன் கை முழுவதும் கன்றிச் சிவந்திருந்தது.

 

கோபம்தான் வந்தது குருவுக்கு. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “நீ வா, போய்க் காட்டிக்கொண்டு வருவம். இத இப்பிடியே விடேலாது.” என்று அழைத்தான்.

 

அவன் அசையவேயில்லை. முதலில் நிதானத்தில் கூட இல்லை. அப்பா என்கிற பெருமரம், இத்தனை நாள்களும் அவன் நெஞ்சினில் வானாளவு உயரத்தில் இருந்தது. இப்போது தரையோடு தரையாகச் சரிந்துவிட்டதில் கிட்டத்தட்ட மனநிலை பிறழ்ந்துவிட்டவன் போல் இருந்தான்.

 

“தூயவா வாடா! இது சின்ன காயமா தெரியேல்ல.” என்று கெஞ்சினான்.

 

அவன் முகம் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தான். அப்போதும் ஏறி இறங்கிய தொண்டையும், என்னதான் சமாளிக்க முயன்றாலும் முடியாமல் கலங்கிக்கொண்டிருந்த விழிகளும் இன்னுமே அவன் தனக்குள் போராடுகிறான் என்று சொல்ல, “டேய் என்னடா நீ!” என்று அவனை அணைத்துக்கொண்டான்.

 

அவன் நெஞ்சமும் நண்பனுக்காகத் துடித்தது. தகப்பனைத் தட்டிக் கேட்கவும் முடியாமல், அவர் செய்த தப்பைத் தள்ளிவிட்டுப் போகவும் முடியாமல் போராடுகிறான் என்று தெரிய, “இப்போதைக்கு எதையும் யோசிக்காத தூயவா. ரெண்டு நாள் போகட்டும் விடு. பிறகு என்ன எண்டு பாக்கலாம்.” என்றான் ஆறுதலாக.

 

அவன் அப்படியே மல்லாந்து கட்டிலில் விழுந்து, களைப்புடன் விழிகளை மூடினான். “டேய்!” என்றவன் வலுக்கட்டாயமாக அவனை அரச வைத்தியசாலைக்கு இழுத்துக்கொண்டு போனான்.

 

அவன் பயந்ததுபோல் ஒரு கண்ணாடித் தூண்டும் உள்ளே இருந்தது. அதை எடுத்து, மருந்து கட்டி, காய்ச்சல் வருவதற்குச் சாத்தியம் இருப்பதால் அதற்கேற்ப அவர் கொடுத்த மாத்திரைகளையும் வாங்கிக்கொண்டு இருவரும் வீடு வந்தபோது, அடுத்த நாளின் பொழுது புலரவே ஆரம்பித்திருந்தது.

 

அதன் பிறகும் குரு அவனைத் தனியாக விட்டுவிட்டு போகவில்லை. அவனுடைய அறையில் அவன் அருகிலேயே தானும் படுத்துக்கொண்டான்.

 

அடுத்த நாள் காலை, துளசி வந்து எழுப்பியபோதுதான் விழித்தான். கண்கள் இரண்டும் எரிந்தன. சிரமப்பட்டு விழிகளைத் திறந்தவன் முதல் வேலையாகத் தூயவனைத்தான் தேடினான். அவன் பக்கத்தில் இல்லை. ஆனால், குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.

 

“அவன்ர கைல பெரிய காயம் துளசி. அதோட குளிக்கிறான். என்ன சொன்னாலும் கேக்கிறான் இல்ல.” என்று இரவு நடந்ததை மனைவியிடம் பகிர்ந்துகொண்டான்.

 

அவளுக்கும் கவலையாயிற்று. வெளியே வந்த தூயவன், கையை நினைக்கவில்லை என்று கண்டபிறகே கணவனும் மனைவியும் ஆசுவாசமாகினர்.

 

*****

 

தேவகியாலும் அன்றிரவு உறங்கவே முடியவில்லை. மாதவியின் சொத்தை மாற்றியபோது அவருக்கும் உள்ளத்தில் ஏதோ நிரடியதுதான். ஆனாலும், கணவர் எதையும் தவறாகச் செய்யமாட்டார் என்று உறுதியாக நம்பினார். அதேபோல், யாழிசை தொடர்பான எந்த விடயங்களும் தூயவனுக்கே தெரியவில்லை என்கையில் வீட்டில் இருக்கும் பெண் அவருக்கு எப்படித் தெரிந்திருக்கும்?

 

அப்படி இருக்க இந்தக் கொஞ்ச நாள்களாக நடப்பவை எல்லாம் அவரையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருந்தன. யாழிசை காணாமல் போனது, அதிலிருந்து கணவரின் வித்தியாசமான நடத்தை, நேசன் வீட்டோடு பேசிவிட்டு மாதவி பகிர்ந்துகொண்டவை, ஜீவன் சொல்கிறவை எல்லாம் ‘என் கணவரா இப்படி’ என்கிற திகைப்பில் ஆழ்த்திற்று.

 

அவர், கணவரின் தப்புகள் தெரிந்தும் ஆதரவளிக்கவில்லை. என் கணவர் எந்தத் தப்பும் செய்யமாட்டார் என்கிற கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருந்தார்.

 

அப்படி இருக்கையில்தான் மகன் வந்தான். தன் தந்தையை வார்த்தைகளால் கூறு போட்டான். அவரையும் வெறுப்புடன் நோக்கிவிட்டுப் போனான்.

 

அதன் பிறகு எப்படி நிம்மதியாக இருப்பார்? இன்னும் சோபாவில் அமர்ந்திருந்த கணவர் வேறு பயமுறுத்தினார். பழக்கதோசத்தில் அவர் தேவைகளைக் கவனித்தாலும் ஒரு வார்த்தை பேசவோ, அவர் முகம் பார்க்கவோ போகவில்லை.

 

மிதிலன் நேசரிக்கு போக வேண்டும். துளசி அவனை விட்டுவிட்டு வருவதற்குப் போவாள். ஆண்கள் இருவரதும் இன்றைய நாளின் திட்டம் என்ன என்று தெரியாவிட்டாலும் சாப்பிட வருவார்கள் என்று எல்லோருக்கும் தேவையான காலை உணவைத் தன் பாட்டுக்குக் கவனித்தாலும் அவர் கவனம் முழுக்க விறாந்தையில் அமர்ந்திருந்த கணவரிலும் மாடியிலும்தான் இருந்தது.

 

அப்போதுதான் அவர்கள் நால்வரும் புறப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கான உணவை எடுத்துவைக்க வந்தவர் தூயவனின் கையில் இருந்த கட்டைக் கண்டு பயந்து போனார்.

 

“என்னய்யா இது, கையில இவ்வளவு பெரிய கட்டு?” என்றுகொண்டு ஓடி வந்தவரை அவன் திரும்பியும் பார்க்கவில்லை. விறுவிறு என்று வீட்டை விட்டே வெளியேறியிருந்தான். அவன் பின்னால் மற்றவர்களும் போக, முகத்தில் அறை வாங்கியதுபோல் கண்கள் எல்லாம் கலங்கிவிட, அப்படியே நின்றுவிட்டார் தேவகி.

 

 

error: Alert: Content selection is disabled!!