முதல் நாளிரவு நீண்ட நேரமாக எனக்கும் தங்கச்சிக்கும் இடையில் வாக்குவாதம் நடந்திருந்தது.
“எல்லாவற்றையும் விடுங்க அண்ணா. உங்கட கண்ணுக்கு முன்னால நடமாடுற அம்மாவைப் பாருங்கவன். எந்தநேரமும் கோபமும் புலம்பலுமாக இருக்கிறாவா இல்லையா சொல்லுங்க?” என்று அவள் கேட்ட போது பதில் சொல்ல முடியாது குனியத்தான் முடிந்தது.
“சாப்பாடும் ஒழுங்கா இல்ல. நீங்க குடிச்சுக்கொண்டு திரியிற நேரங்கள் கூட இந்தளவுக்கு அவா புலம்பினது இல்ல. ‘ஐஞ்சு பொம்பளப் பிள்ளைகளைப் பெத்த நானே உதயாவின்ட வாழ்க்கையை நாசமாக்கிட்டனே!’ என்று சொல்லிச் சொல்லி அழுகிறா.” எனச் சொல்லிவிட்டு அழுதாள் குட்டி.
சமாதானம் செய்யும் வகைதெரியாது தவிக்கத்தான் முடிந்தது. ச்சே! என்றிருந்தது. என்னால் எத்தனை பேருக்கு எப்படி எப்படியெல்லாம் துன்பம்.
வீட்டைப் பொறுப்பாகப் பார்க்கும் மகனாக அம்மாவால் பாராட்டப்பட்ட நான், இன்றோ, எல்லாருக்குமே பிரச்சனை தருபவனாக இருக்கிறேனே! கசந்தது நெஞ்சம்.
“பார்க்கப் பயமா இருக்கண்ணா. நீங்க அம்மாக்கு ஒளிச்சு ஓடினா மட்டும் எல்லாம் சரியாகும் எண்டு நினையாதீங்க!” கடிந்து கொள்ளும் தொனியில் அவள் சொல்ல நிமிர்ந்து பார்த்தேன். ‘இதெல்லாம் எனக்கும் விளங்காமல் இல்ல குட்டி‘ சொல்ல நினைத்து விட்டுவிட்டேன்.
“நான் சொல்லுறது விளங்குதா அண்ணா?” கெஞ்சலோடு கேட்டாள் அவள்.
கலங்கிவிட்ட விழிகளை அவளுக்குக் காட்ட மனமின்றி வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டாலும், “ம்ம்ம்…” என்றேன், வேதனையில் அடைத்த தொண்டையைச் செருமிக்கொண்டு.
“நானும் வெளிநாடு போய்ட்டன் எண்டால் நிலைமை இன்னும் மோசமாத்தான் மாறும். இப்பவே உங்களோட இந்தளவுக்கு பாராமுகமும் கோபமும் காட்டுறவா, நானும் போன பிறகு ஒத்தவார்த்தை கதைக்காது தனிமையில் அல்லல் படப்போறா. நானும் அங்க போய் நிம்மதியா இருக்கேலாது அண்ணா! ” என்று சொல்லி அழுதாள்.
‘அப்பிடி மட்டும் அம்மாவுக்கு ஏதேனும் நடந்துவிட்டால்?’ அலறிவிட்டது என்னுள்ளம்.
அந்தக் குற்றவுணர்வில் நானும் போய்ச் சேரத்தான் வேணும்.
நான், என்மனம், என் அம்மா, என் தங்கை என்று மிகச் சுயநலமாவே சிந்திக்கிறேன் இல்லையா?
எனக்கும் அது தெரிந்தே இருந்தாலும் என் செய்கைகள் எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களால் வழிநடத்தப்படுகையில் செய்வதறியாது நிக்கிறேன்.
நானே என்னை வழிநடத்தும் அந்த உரிமையைக் கல்யாணியின் மறைவோடு இழந்துவிட்டேனே!
பெரும் கொடுமையான நிலையில் நான் நிற்பது நன்றாகவே புரிந்தது. மனம் கலங்கிய குட்டையாகக் கிடந்தது. மிகக் கேவலமாகவும் இருந்தது.
உதயா சிறுபெண். அவள் முன் நான் மிகவும் தாழ்ந்து போனது போலிருந்தது. அதுமட்டுமில்லை, சென்று அழைத்ததும் அவள் வருவாள் என்ற நம்பிக்கையும் பிசுபிசுப்போடுதான் இருந்தது.
‘அதுதான் நான் தனியாகப் போகேல்லையே! குட்டி வாறாள் தானே? எப்படியும் கூட்டிக்கொண்டு வந்திருவாள்.’ சமாதானமும் சொல்லிக்கொண்டேன்.
அப்படி வந்தும், எதிர்ப்பட்ட பெரியக்காவின் முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. அத்தனை கோபம் வந்தது.
அதனாலேயே முற்றத்திலே நின்றுவிட்டேன். அதுமட்டுமில்லை, எங்களைக் கண்டதும் உதயா பார்த்த பார்வையும் அவள் வெடுக்கென்று உள்ளே சென்ற விதமும் சேர்த்துக் கால்களைக் கட்டிப் போட்டுவிட்டன.
அதன் பிறகு நடந்ததோ…
‘என்ர வாழ்க்கையை எனக்குப் பார்க்கத் தெரியும், உன்ர வழியைப்பார்த்துக் கொண்டு பேசாமல் போ!’ என்று சொல்லிவிட்டாளே! அதிலும் சொன்னது என்னவோ கொஞ்சம்; அவளின் பார்வை உணர்த்தியதோ…
பலமான குற்றம் புரிந்துவிட்டவனாகக் குன்றிப்போனேன் நான்.
அதே அதிர்வோடு என்னருகில் வந்து நின்ற தங்கையின் விழிகளும் விறுவிறுவென்று சென்றுகொண்டிருப்பவளைத்தான் தொடர்ந்தன.
“கொழுப்புப் பிடிச்சுப் போய் நிக்கிறாள்; இவள் முந்தின உதயா இல்ல; எல்லாம் அந்தக் கொழும்புக்காரர் குடுக்கிற தைரியம் தான், வேறென்ன சொல்லு?” என்றபடி வந்தார் பெரியக்கா.
“ஊரெல்லாம் குடும்பத்தப் பார்க்கிறாள் எண்டு சொல்லுறதிலயே மண்டைக்கனம் பிடிச்சுத்தான் இருந்தவள்; இப்ப இவ்வளவுக்கும் பிறகும் எவ்வளவு திமிர் பார்த்தியாடா?
இந்த அழகுக்கு, நீ மட்டும் நல்லா வச்சிருந்தியோ எல்லார் தலையிலும் மிளாகாய் அரைப்பாள். இப்படியே கிடந்து காயட்டும் விடு! உனக்கென்ன ஆம்பளச் சிங்கன்.” என்றவரோடு, கதைத்து என்ன பயன் என்று நான் நகர, கோபமாகத் தொடங்கினாள் குட்டி.
“இவ்வளவு பிரச்சனைக்கும் நீங்கதான் காரணம் பெரியக்கா. உங்கட மகள்களே உங்களை எதிரி போலப் பார்க்கீனம். அப்பிடியிருந்தும் உங்களுக்குத் திருந்த விருப்பம் இல்ல. இப்பிடியே போனீங்களோ கடைசியாத் தன்னந்தனியா நிக்கப் போறீங்க சொல்லீட்டன்.” எரிச்சலோடு சொன்னாள். உண்மைதானே!
“என்ன நீ? எல்லாம் என்னால தான் எண்டு சொல்லுற? எல்லாரும் ஒன்றாச் சேர்ந்து என் ஒருத்தியை மொத்தமாக் குற்றவாளி ஆக்கிப் போட்டு நீங்க நல்லவைக்கு நில்லுங்க!”
வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குத் தயாராகி விட்டார் அவர்.
“சூர்யா உனக்கு அண்ணா எண்டால் எனக்குத் தம்பி. அப்படியே விட்டிருக்க அவன் குடிச்சு அழிஞ்சு போயிருப்பான். இண்டைக்கு இப்படித் திரும்பவும் பொறுப்பா மாறி, குடியை எல்லாம் விட்டுட்டு நேர் சீராக நிக்க யாரு காரணம் எண்டு நினைக்கிற? நான் தானே?” என்று அவர் சொன்னதும் நானும் நின்று திரும்பிப் பார்த்தேன்.
“இதென்ன கதை?” தங்கைதான் கேட்டாள்.
“அவனுக்குக் கலியாணம் செய்து வைப்பம் எண்ட கதையைத் தொடங்கினதே நான் தானே? பிறகு ஏதோ பெரிசாச் சொல்ல வந்திட்ட! அவே ரெண்டு பேருக்கும் கெட்டித்தனம் இருந்தா ஒன்றாச் சந்தோசமா வாழந்து காட்டட்டுமே! யாரும் இழுத்தா பிடிச்சீனம்?” என்று சொல்லிவிட்டு விசுக்கென்று உள்ளே சென்றுவிட்டார் அவர். அழுதுகொண்டே தான் சென்றார்.
அவர் என்னதான் உதயா வாழ்வை நாசமாக்க என்று சொல்லி என்னைத் திருமணம் செய்து வைத்தாரோ அது வேறு கதை. நான் இன்றைக்கு இப்படி நேராக நடக்கிறேன் என்றால் அது இந்தக் கல்யாணத்தால் தானே?