அத்தியாயம் 23 – 2

 அவள் இப்பிடி வாதாட, ஆரம்பத்தில சும்மா இரடி  எண்டு சொன்ன உதயாவும் பிறகு பிறகு கண்கலங்கியபடி சிலையாகத்தான் இருந்தவள். அப்பிடி எண்டா அவள்ட மனசிலும் இதெல்லாம் இருக்குது எண்டது தானே அண்ணா அர்த்தம்

  இருக்காமல் போகுமா என்ன? அவள்ட இடத்தில நான் மட்டும் இருந்திருந்தாக் கடைசிவரைக்கும் இங்க வந்திருக்க மாட்டன் அண்ணா. ஒரேயடியாப்  போடா போ எண்டிட்டு வந்திருப்பன்.” என்றவள், அந்த இருட்டில் என் முகத்தை உற்றுப் பார்த்து அதைப்  படிக்க முயன்றாள்.

   “தீபி காலம எழும்பி வந்ததில இருந்து பள்ளிக்குப் போகுமட்டும் இப்பிடி ஒரே சண்டை; பிறகு பள்ளிக்குப் போயிட்டு வந்து திரும்பத் தொடங்கீட்டாள்

  ‘எங்கட அக்கா இந்த வீட்டில  கால வச்ச பிறகு எங்க உங்கட அண்ணா காணாமல் போய்ட்டார்? எங்கட அக்கா இங்க இருக்கிறது விருப்பம் இல்லாத படியால் தானே அவர் இங்க வரேல்ல?’ எண்டெல்லாம் கேட்கிறாள் அண்ணா.” தொடர்ந்தாள் குட்டி

  இதற்கு நான் என்ன பதில் சொல்வது? அப்படியே தளர்வாகச்  சுவரில் சாய்ந்தது என்னுடல்

  “அவள் போதாது எண்டு அம்மா ஒருபக்கம் அண்ணா…” சொல்லி நிறுத்தியவள்  கொஞ்ச நேரம் அழுதாள்.

   ஆறுதல் சொல்லக் கூட முடியாது சிலையாக அமர்ந்திருந்தேன் நான். இத்தனை நாட்களை விடவும் இனி வரும் நாட்கள் தான் மிகவும் கனமாக இருக்குமோ என்றிருந்தது.

  ‘சின்னப்பபிள்ள தீபி, பதினைஞ்சு வயசுதான்; அவளே கேள்வி கேட்கிற நிலையில நாம் இருக்கிறமே!’ வெட்கிச் சிறுத்துப் போனதுள்ளம்

   “அம்மாவாஇப்பப்  புதுசா என்னவாம்?” 

   “அவாதான் உங்களைஉங்களைநீங்க இங்க எங்களோட இருக்கிறது போலவே நடக்கிறார்  இல்லையே அண்ணா. நானும் போன பிறகு …” கேவியவளின் கரத்தைப் பற்றி,”விடு!” என்றேன்.

   “எதையண்ணா விடுறது? ‘வாழ வேண்டிய சின்னப்பிள்ளேட வாழ்க்கைய அழிச்சிட்டனோ எண்டு ஒவ்வொரு செக்கனும் நான் உள்ளுக்குள்ள துடிச்சுத்  துடிச்சுச் சாகிறன்எண்டு அழுகிறார் அம்மா

   ‘எண்டைக்கு இந்தப்பிள்ள சந்தோசமா இந்த வீட்டில இருக்கிறதக்  காணுறனோ அண்டைக்குத்தான் அவனுக்கு என்ர கையாள சோறு போடுவன்; அது நான் உயிரோட இருக்கேக்க நடக்குதா பார்ப்பம்எண்டெலாம் சொல்லுறார் அண்ணா

  ‘அப்படியெல்லாம் நினைக்க வேணாம் அம்மம்மாஎண்டு உதயாவே சமாதானம் சொல்லியும் இண்டைக்குப் பின்னேரம் அம்மா அழுத அழுகையில அவவவுக்கு ஏதாவது நடந்திருமோ எண்டு நான் சரியாப் பயந்திட்டன் அண்ணா!”  

   முகத்தில் மோதிய குளிர் காற்றில் நினைவலைகள் அறுபட எங்கே வந்துவிட்டோம் என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி பரந்து நீண்டு கிடந்த பண்ணைப் பாலத்தில்  மோட்டாரை விட்டேன்

   சூரியன் சோம்பல் முறித்தபடி கடைக்கண்பார்வை சிந்தியதில் கீழ் வானம் செம்மை பூசியிருந்தது. போட்டிபோட்டுக் கொண்டுபாதையோர விளக்குகளும் அப்பகுதியை ஒளிமயமாக்கிக் கொண்டிருந்தன

  சற்றே பலமாக வீசிய கடல்காற்று போட்டிருந்த மேற்சட்டையையும்  மீறிச் சென்று உடலைத் தழுவிச் சில்லிட வைத்தது.  

  அந்த அமைதியான காலைப்பொழுதில், கடல் மாதாவின் இரைச்சல் மட்டுமே அங்கு மேலோங்கி நின்றது என்றெல்லாம் நினைத்துவிட முடியாதபடி, என் மனமும் பலமாகவேதான் இரைந்தது

  அப்படியே ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதில் சாய்ந்து நின்று கொண்டேன்

  கலைந்து தொல்லை செய்த சிகையை அடக்க முடியாதென்று தெரிந்தே அழுத்தி அடக்க முயன்றேன்.

   இரு கரங்களாலும் கன்னமிரண்டையும் தாங்கிக் கொள்கையில், உள்ளங்கைகளில் உணர்ந்த தாடியின் சொர சொரப்பு சர்ரென்று அவள் குரலை என் காதுகளில் ஒலிக்க விட்டது

  எப்படி எப்படியெல்லாம் உள்ள நிலையை முன்னிறுத்தி, நியாயம் பேசி, மனத்தைக் கட்டுப்படுத்தி முடிவுகளை எடுத்தாலும், அவை எல்லாவற்றுக்கும் மிகப் பெரும் சவாலாக, எங்கு திரும்பினாலும் அவள் நினைவுகளிலிருந்து தப்ப முடியாதுள்ளதே

  என்னைப்பற்றி என்னதான் சொல்லுங்கஇதுவரை மனதிலிருந்த சுமைக்குச்  சவாலாக, இதமாகத்  தழுவியது அவள்கல்யாணியின் நினைவுகள் என்பதை மறுக்க முடியவில்லை.

  இங்கே, மிகக் கவனமாகஎன்எனும் பதத்தைத் தவிர்த்துள்ளேனா

  தலையை ஒருதடவை பலமாக உதறிக்கொண்டே கடந்த நாட்களில் பயணிக்கத் தொடங்கினேன்.

 “ஹேய்! என்ன விசயம் தாடியெல்லாம் வச்சு ஆளே மாறிப் போயிருக்கிறீங்க?” என்றபடி, கையிலிருந்த தேநீர்த்தட்டை வேலியால் எட்டித் தந்திருந்தாள்.

   சிறு முறுவலோடு, “எப்ப வந்தீர்விசாரித்துக்கொண்டு தேநீரை வாங்கி ஒன்றை நான் எடுத்துக்கொண்டு கராஜ் பெடியனை அழைத்துத் தட்டைக் கொடுத்துவிட்டு, “இப்பக் கொஞ்ச முதல் தான் வந்தனான்.” என்றவளுக்கு ஒரும்…” கொட்டினேன்

  எங்கள் நேசத்தைப் பரிமாறியபின் முதன் முதலாகத் தாதியர் பயிற்சியிலிருந்து விடுமுறையில் வீடு வந்திருக்கிறாள். சுடச்  சுடத்  தொண்டையால் வழுக்கிக்கொண்டு சென்ற தேநீரோடு  போட்டி போட்டுக் கொண்டு அவள் உரு என் விழிவழியே உள்ளே சென்றது.

  என் பார்வையில் சற்றே நெளிந்தாள்

  “சொல்லுங்க சூர்யா, என்ன தாடியெல்லாம்?” 

  நானோ  பதில் சொல்லாது மழுப்பலாகச் சிரித்துவிட்டேன். சட்டென்று மின்னின அவள் விழிகள்

 “ஹா..ஹாஇதெல்லாம் ஓவர் சூர்யா. இப்ப நானென்ன உங்களை விட்டுட்டு ஒரேயடியாகப் போய்ட்டேனா என்ன?” என்று அவள் கேட்டது இப்போ கேட்பது போல் செவிகளில் நாரசாரமாய் ஒலித்து, உள்ள நிலையைச் சொல்லி நெஞ்சை அறுத்தது

  உண்மையில் தினமும் அவளைக்  காணவில்லையே என்கின்ற ஒரு மந்த நிலையில் அசிரத்தையாகச் சவரம் செய்வதையே விட்டிருந்தேன், அவ்வளவும் தான். நக்கல் அடித்தாலும் அது அவளுக்குப் பிடித்துப் போனதென்று விழிகளில் தெறித்த  இரசனையில் கண்டு கொண்டது முதல்….

   மீண்டும் என் வலது கரம் தாடியைத் தடவியது

error: Alert: Content selection is disabled!!