அத்தியாயம் 27- 1

  விரும்பியோ விரும்பாமலோ, ஒரு தேவையின் பொருட்டெயென்றாலும், முதல் முதல், என்னோடு, என் மோட்டார் சைக்கிளில் சிறிது தூரமேயென்றாலும்  பயணம் செய்திருக்கிறாள் உதயா

   அவ்வளவு சுலபத்தில், “வா, நான் கூட்டிக்கொண்டு போய் விடுறன்என்றதும், ஏறியமர்ந்திடவும் இல்லை  தான். அப்படி இப்படி முறுக்கினாள் தான். என்னதான் எண்டாலும் இறுதியில் வந்தாள் தானே? அதுவே போதுமாக இருந்தது எனக்கு

   இத்தனை நாட்களை விடவும் ஏதோ இன்னும் சிறிது இலகுவாக அவளோடு கதைக்கலாம் என்றளவில் என் மனத்தில் உணர வைத்த தருணமாக இருந்தது அது.

   வேறொன்றும் இல்லை, ஒரே வீட்டினுள் இருக்கிறோம், இனியும் வாழ்க்கை முழுமைக்கும் இருக்கவும் போகின்றோம். இலகுவாகக் கதைத்துப் பேசியென்று இருந்தால் அதுவே  பெரிய நிம்மதிதானே? எங்களுள் உள்ள இடைவெளியை நிரப்ப அது மிகையாக உதவுமே!

   பாசத்தைக் காட்டும் அம்மாவும் அவள் தங்கைகளும் கூடவே இருக்க, என்னதான் அவள் இந்த வீட்டில் அமைதியாக நடமாடினாலும், கடமையென நினைத்தோ என்னவோ தேநீர், உணவு என்று எனக்குப் பரிமாறினாலும் தன்னுள்ளத்தினுள் எந்தளவுக்கு என்ன பாடு படுகின்றாளோ என்பதைத் திட்டவட்டமாக நானறியேனே

  நடந்தவற்றைத் தள்ளி வைத்துவிட்டு முன்னேற நான் நினைப்பதுபோலன்றி, என்னதான் இங்கு வந்திருந்தாலும் நடந்த சம்பவங்களைக்  கடந்து வரமுடியாது திண்டாடுகின்றாளோ என்ற ஐயம் என்னுள்.

   அவள் விழிகள் காட்டும் எரிச்சல், வெடுக்கென்று வந்து விழும் வார்த்தைகள் அவளின் மனத்தைப் பிரதிபலிப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது

  அப்படியென்றால், நிச்சயமாக வெளியில் அமைதிப்  போர்வை போர்த்திருக்கிறாள் அவள். அப்படியில்லாது, அவள் மனத்தினுள்ளும் துன்பமின்றி இருக்கவேண்டும், இருக்க வைக்க வேண்டியது என் மிகப் பெரிய கடமை , பொறுப்பு என்று, எனக்கு நானே கட்டளையிட்டுத்தானே அவளோடு இயல்பாகக்  கதைத்துப் பேச முயல்கிறேன்.

   அவளோநான் ஒரு அங்குலம் அவளை நோக்கி முன்னேறினால் பத்து அங்குலமாவது என்னை விட்டு விலகி விடுகின்றாள். உண்மையில் என்ன செய்து இதைச் சரி செய்வதென்று புரியாதே தான் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன

  இப்படியே போனால் நான் அவளுக்கு இழைத்த அநீதி திருத்தப்படாது இருந்திடுமோ என்று கூட என்  மனத்தினுள் எண்ணியிருக்கிறேன்

  குரங்கு மனம் என்றது உறுதியாகின்றது தானே!   பச்! இந்த வழியில் மனதை விட்டு மீண்டும் மீண்டும் கடந்துபோனவற்றைக் கிண்டிக் கிளறி நியாய அநியாயம் பேச வேண்டாமே!

  தலையை உதறிக்கொண்டு சமைலறை நோக்கி நடந்தேன், இரவுணவுக்காக.

  அம்மா சமையலறைக்கு முன்னாலிருந்த சிறு ஓடையில் அமர்ந்திருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

  என்னை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அதற்கென்று அப்படியே கடந்து செல்லமுடியவில்லை

  இவரோடும் சமாதானமாகிவிட நான் எடுக்கும் அத்தனை முனைவும் கிணற்றுள் விழுந்த கல்லெனத் தான் ஆகிவிடுகின்றது. சமயத்தில் சுவரில் அடித்த பந்தாக எனக்கே திரும்பிவிடுவதும் உண்டு, ஆக்ரோசத்தோடு

   நைந்துகிடக்கும் உள்ளத்தை எத்தனைக்குத்தான் இன்னுமின்னும் காயப்படுத்திடவியலும்? முகம் இறுக விலகிச் செல்வேன், “இனிமேல்பட்டு  நானாக உங்களோட கதைக்க வர மாட்டன்!” என்ற உறுமலுடன்

  ஆனாலும், ‘இந்த அம்மா மனிசிக்கு இவ்வளவு பிடிவாதம் தேவையில்ல.’ மனம் கோணிக்கொண்டாலும், திரும்பவும் அவர் முன் சென்று நிற்பதும் நான் தான்

   இப்போதும் அப்படியே, “சாப்பிடுறீங்களாம்மா? குட்டி கதைச்சவளோ? எப்ப வாறாளாம்?” கேட்டுவிட்டுத் தயங்கி நின்றேன்பதிலே இல்லை

   “உதயா  கொஞ்சச் சம்பல்  தா ஆச்சி!” என்றார், சமையலறைப் பக்கம் பார்த்து.

  “அம்மா! இதெல்லாம் உங்களுக்கே நல்லாவா இருக்கு? இப்பிடியே இருங்கஒருநாள் போல ஒருநாள் இராது சொல்லீட்டன். என்ர பொறுமைக்கும் ஒரு அளவிருக்குச் சரியோ!” சொல்லிவிட்டு சமயலறைக்குள் நுழைய, சம்பல் கிண்ணத்தோடு கடந்து சென்றவளும்  என் முகம் பார்க்கவில்லை தான்

   அம்மா ஏற்படுத்திய எரிச்சல் அங்கும் பாயவோ என்றது; வெகுவாக அடக்கிக் கொண்டேன்.  

   அம்மாவுக்குச் சம்பல் கொடுத்துவிட்டு வந்தவள் என் தட்டை எடுத்து உணவைப் பரிமாறி வைத்தாள்

   “தோசையா இண்டைக்கு?” சாப்பாட்டுத் தட்டை எடுத்துக்கொண்டே கேட்ட என் பார்வை அவள் முகத்தில் சில கணங்கள் தரித்து நின்றன.

  அவள் பதிலை எதிர்பார்த்தில்லை. என்றாலும், சொன்னால் கேட்கலாமே … 

  ம்க்கும் …”பார்த்தால் தெரியேல்லையா?” என்று கேட்டாலும் கேட்பாள். இவள் கேட்காவிட்டாலும் இவளிண்ட பாசமலர் கேட்கும்.

   அவளோ நான் கேட்டதைச் செவிமடுக்காத பாவனையில், ” தீபி! உன்ன எத்தின தரம் கூப்பிடுறது? இந்தா வந்து சாப்பிடு!” பாசமலரை அழைத்தாள்.

   “நாளைக்குக் காலம பள்ளிக்கூடம் போக ஆட்டோக்குச்  சொல்லியிருக்கிறன் உதயா. தெரிஞ்ச பெடியன் தான், பிறகு பள்ளிக்கூடம் முடியவும் வந்து ஏத்துவான். பின்னேரம் ஸ்கூட்டி வந்திரும்.”

   தோசையைப் பிய்த்துத் தேங்காய்ச் சம்பலில் தொட்டு வாயில் வைத்தபடி சொல்ல, சரேலென்று திரும்பிப் பார்த்தாள், வெடுசுடுவென்று!

  “இல்லநானே கூட்டிக்கொண்டு போய் விட்டிருவன், தீபியும் வரவேணும் தானே? அதான் ஆட்டோவுக்கே சொல்லிட்டன்.” என்று ஏன் சொன்னேன் என்றிருந்தது, அவள் பார்வையின் மாற்றம். ‘என்ன நீ?’ என்பதாகத்தான் பார்த்தாள்

  “இங்க பாருங்க, எனக்காக யாரும் எதுவும் செய்யோணும் எண்ட  எதிர்பார்ப்பு  எப்பவும் எனக்கு  இல்ல. இண்டைக்கும் உங்கட வேலைகளை எல்லாம் விட்டுட்டு எனக்காக உங்களை மினக்கடச் சொல்லி நான் சொல்லேல்ல.” 

  யாரோ அறியாதவருக்குஇல்ல, அந்நியருக்குச் சொல்லும் பாவனையில் சொன்னவளை என்ன செய்வது?

  அப்போ அவள் ஸ்கூட்டியை உருட்டிக்கொண்டு போவதைப்  பார்த்துவிட்டு நான் அமைதியாகப் போயிருக்க வேணுமா? அதைக் கண்டால் அவளுக்கு ஒண்ணுமேயில்லை; அப்படியா சொல்ல வருகிறாள்?

  “நீ நினைக்காவிட்டாலும் எதிர்பார்க்காவிட்டாலும் அது என்ர கடமை உதயா! நீ ஸ்கூட்டிய தள்ளிக்கொண்டு போகேக்க ரோட்டில போற யாரோ போலக் கண்டும் காணாத மாதிரிப் போயிருக்க வேணும் எண்டு சொல்ல வாறியா என்ன? கவி, தீபி அந்த இடத்தில இருந்திருந்தா என்ன செய்வனோ அதைத்தான் உனக்கும் செய்தன் சரியா? நீயும் இந்த வீட்டு ஆள் தானே?

error: Alert: Content selection is disabled!!