ஒன்று அவனிடத்தில் நல்ல பெயர் வாங்க ஆசைப்பட்டாள். இன்னொன்று அவன் இப்படி இருப்பது பிடிக்கவில்லை. பழையபடி அவனை மாற்றிவிட முடியாதா என்று நினைத்தாள்.
*****
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அஜந்தா எப்போதோ பேப்பர் போட்டுவிட்டு வவுனியாவுக்கு நிரந்தரமாகச் சென்றிருந்தாள்.
யாமினியின் நிலை அவளுக்குப் புரியாமல் இல்லை. அதே நேரத்தில் திருமணத்திற்கு முதலே திவாகரைக் கொண்டு வவுனியாவில் இருந்த நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள். அதுவேறு சரியாகக் கிடைத்துவிட அவளால் ஒன்றுமே செய்ய இயலாமல் போயிற்று.
யாமினிக்கு இருந்த ஒற்றைத் துணை, ஆறுதல் எல்லாமே அவள்தான். அவளும் போகிறாள் என்றதும் கலங்கித்தான் போனாள். ஆனால், மலையாக நம்பிய துணையே இல்லை என்றான பிறகும் வாழ்கிறாளாம். இதைத் தாங்க மாட்டாளா என்கிற மனநிலையோடுதான் தோழியை அனுப்பி வைத்தாள்.
ஆனால், ஒரு வாரம் கூட அவளால் தனியாகத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மழை நின்ற பின்னும் தீராமல் தூறும் தூறல் போன்று, எல்லாம் முடிந்துவிட்டது என்றான பின்னும் நீங்காமல் நின்று அவளை வதைக்கும் நிரோஜனின் நினைவுகளை அவளால் எதுவுமே செய்ய இயலவில்லை.
அந்த வளாகம் முழுக்க அவனோடு சுற்றியிருக்கிறாள். அப்படியிருக்க இன்று தனியாக நட என்று விட்டால் என்ன செய்வாள்?
முன்னர் போன்று எந்த நேரம் என்று பாராமல் இப்போது அஜந்தாவுக்கு அழைத்துப் பேசவும் தயங்கினாள். இங்கே இருந்தால் வேறு. அங்கே கணவன், குடும்பம், வேலை என்று இருப்பவள். புதிதாகத் திருமணம் வேறு ஆனவர்கள்.
கடைசியில் அவளும் அங்கே அஜந்தாவிடம் சொல்லி வேலைக்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு இங்கே பேப்பர் போட்டுவிட்டாள். இதோ இப்போது கடைசி ஒரு மாதத்திற்கு, ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ வாங்கிக்கொண்டு மொத்தமாகக் கொழும்பை விட்டே புறப்பட ஆயத்தமாகிறாள்.
ஒரு காலத்தில் இங்கிருந்து போகும் நிலை வந்துவிடுமோ, அவனைப் பிரிந்திருக்க வேண்டி வந்துவிடுமோ என்றுதான் அவர்களின் காதலைப் பற்றி வீட்டில் சொல்லாமல், திருமணத்தை என்னென்னவோ காரணங்கள் சொல்லித் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தாள்.
ஆனால் இன்று அவளாகவே புறப்படுகிறாள்.
காதலித்த நாள்களில் வீட்டினர் சம்மதிப்பார்களா, இது நடக்குமா, நாம் சேர்வோமா என்றெல்லாம் அவள் யோசித்துப் பயந்ததேயில்லை. அத்தனை நம்பிக்கை. காவியாவின் திருமணம் முடியும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணியிருந்தாள்.
கடைசியில்…
“யாமினி!”
ஆனந்தனின் குரலில் வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு, “ஓம் அத்தான்!” என்றபடி அறையை விட்டு வெளியே வந்தாள்.
மாதங்கி பெறுமாதத்தை நெருங்கும் நிலை என்பதில் அவளும் நாகேஸ்வரியும் வரவில்லை. ஆனந்தன் மட்டுமே இவளின் பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போக வந்திருந்தான்.
“இது என்னம்மா ஒரு பேக் மட்டும் தனியா கட்டி வச்சிருக்கிறீங்க?”
“அது தேவை இல்லாத உடுப்புகள் அத்தான். ஏதாவது இல்லத்துக்கு குடுத்திட்டுப் போகலாமே எண்டு எடுத்து வச்சனான்.” என்று அவள் பதில் சொல்லும்போதே வீட்டின் அழைப்புமணி ஒலித்தது.
பொருள்களை ஏற்றிப்போகும் லொறி ஓட்டுநர் வந்துவிட்டாரோ என்றெண்ணிக்கொண்டு சென்று கதவைத் திறந்தவள் சத்தியமாக நிரோஜனையும் நவீனையும் எதிர்பார்க்கவேயில்லை. இதயம் தன் துடிப்பை நிறுத்திவிட அவனையே பார்த்து நின்றாள்.
தெரிந்தே வந்தபோதிலும் அவளைக் கண்ட கணத்தில் நிரோஜனின் தொண்டைக்குழி அடைத்துப்போனது. பார்வையை அவளிடமிருந்து அகற்ற முடியவில்லை. அதைவிட அந்த வீடு? அவளோடான முதல் தனிமை, முதல் நெருக்கம், முதல் முத்தம், முதல் காதலின் முதல் பிரிவு கூட அங்கேதான் நிகழ்ந்தது. கண்கள் கரித்துவிடுமோ என்கிற பயத்தில், “அனந்தன் அண்ணா?” என்று கேள்வியாய் இழுத்தான் அவன்.
அவள் பதில் சொல்லும் அவசியமே இல்லாமல், “வாங்கோ நிரோஜன், வாங்கோ நவீன். சொறி உங்களுக்கு தொந்தரவு தந்திட்டேனா தெரியாது. ஆனா நீங்க வந்தது பெரிய ஹெல்ப்.” என்றபடி வந்தான் ஆனந்தன்.
அங்கே என்ன நடக்கிறது என்று கிரகிக்கக் கூட முடியாமல் சிலையாகி நின்றிருந்தாள் யாமினி.
முதல் நாள் மாலை ஆனந்தன் அழைக்கவும் நிரோஜனுக்குப் படபடத்துப்போயிற்று. ஒரு கணம் யோசித்துவிட்டுத் தயக்கத்துடன்தான் அழைப்பை ஏற்றிருந்தான்.
அவர்கள் எல்லோரினதும் நலனையும் விசாரித்துவிட்டு, யாமினி வேறு வேலைக்கு மாறிக்கொண்டு வவுனியா வரப்போகிறாள் என்றும், அவள் வீட்டை ஒதுக்கி, பொருள்களை ஏற்றுவதற்கு உதவி செய்ய முடியுமா என்றும் கேட்டிருந்தான் ஆனந்தன்.
அஜந்தா இங்கிருந்து போனது நிரோஜனுக்குத் தெரியும். அப்போதே இதை ஏதோ ஒரு வகையில் அவன் எதிர்பார்த்தான். என்றாலும் மெய்யாகவே அவள் புறப்படுகிறாள் என்று தெரிந்தபோது நிலைகுலைந்துபோனான்.
“சொறி நிரோஜன், உங்களுக்கு வேலை இருக்கு எண்டால் சொல்லுங்கோ. எனக்கு விளங்கும்.” என்று ஆனந்தன் சொன்னபோதுதான் அவனுக்கு பதிலே சொல்லாமல் இருந்திருக்கிறோம் என்று உரைத்தது
“சேச்சே அப்பிடி எல்லாம் இல்லை அண்ணா. நாங்க வாறம்.” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.
அப்போதிலிருந்து அவன் அவனாக இல்லை. பழைய நினைவுகள் அத்தனையும் சுனாமியாக வந்து அவனைச் சுழற்றியடித்தன. இத்தனை காலமும் பிரிந்திருந்தாலும் இங்கே, என் பக்கத்திலேயேதான் இருக்கிறாள் என்கிற நினைப்பு உள்ளத்தின் அடியாழத்தில் இருந்தது.
இன்று போகிறவள் இனி அப்படியே போய்விடுவாள். தொடர்புகள் முற்றிலுமாக அறுந்துவிடும். கைப்பேசி எண்கள் மாறும், காலம் ஓடும், வேறு ஊர், வேறு நண்பர்கள், வேறு அலுவலகம், அப்படியே வேறு வாழ்க்கை, அந்த வாழ்க்கையில் வேறு… மேலே யோசிக்க முடியாமல் அறையை விட்டு வெளியே வந்துவிட்டான்.
என்னவோ மூச்சடைத்து இதயம் வெடித்துவிடும் போன்று ஒரு அழுத்தம். அந்த அழுத்தம் இதோ இப்போது அவள் வீட்டினுள் நிற்கையில் இன்னுமின்னும் அதிகரித்துக்கொண்டே போயிற்று.
மகேஸும் மித்ரனும் வந்துவிட விறுவிறுவென்று கொண்டுபோகும் பொருள்களை எல்லாம் அதற்கென்று ஏற்பாடு செய்த வாகனத்தில் ஏற்றினார்கள்.
யாமினிக்கு கைகால்களில் எல்லாம் ஒரு நடுக்கம். ஒரு காரியத்தை ஒழுங்காக செய்ய முடியவில்லை. ஏற்கனவே யாரிடமும் பகிர முடியாத நெஞ்சு வெடிக்கும் துயருடன் நடமாடிக்கொண்டிருந்தவள் கண் முன்னே நிற்கிறவனைப் பார்த்துக்கொண்டு சிறு வேலையைக் கூட செய்ய முடியவில்லை.
ஏதோ எடுக்கப் போகிறவள் போன்று அறைக்குள் நுழைந்துகொள்ள, அவள் நிற்பது அறியாமல் அங்கு இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வந்த நிரோஜன், அவளைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டான்.
கடைசித் தனிமை. உள்ளம் கதறிச் சொன்னது. அவன் அவளையே பார்த்து நிற்க, அப்படி அறைக்குள் அவன் வருவாள் என்று எதிர்பாராதவள் அங்கிருந்து வெளியேற முனைய, “யாமினி, ஒரு நிமிசம்!” என்றான் அவசரமாக.
அவனைக் கடந்து நடந்தவள் அவனைத் திரும்பிப் பாராதபோதும் நின்றாள்.
“நிறைய சொல்லோணும் மாதிரி இருக்கு. அதே நேரம் என்ன கதைக்க எண்டும் தெரியேல்ல. ஆனா, அண்டைக்கு அறைஞ்சதுக்கு, அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு விட்ட வார்த்தைகளுக்கு, உன்னை அழ வச்சதுக்கு, நோகடிச்சதுக்கு எல்லாம் சொறி யாமினி. ஆனா ஒரு நாள் கூட உன்னை காயப்படுத்தோணும் எண்டு நினைச்சு எதையும் நான் செய்யேல்ல.” என்றான் உடைந்து கரகரத்த குரலில் வேகமாக.
அதற்கு ஒன்றும் சொல்லாமல் அறையிலிருந்து வெளியேறியவள் மொத்தமாகக் கொழும்பிலிருந்தும் புறப்பட்டிருந்தாள்.

