அத்தியாயம் 31
காவியாவின் திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்திருந்தது. அதைக் கோயிலில் வைத்துக் கும்பிடுவதற்காகத் திருகோணமலைக்கு வந்திருந்தான் நிரோஜன்.
“எப்பிடி இருக்கு அண்ணா?” என்று கொண்டு ஓடிவந்து காட்டினாள் காவியா. அவள் முகத்தில் மின்னிய திருமணக் களை கண்டு அவன் முகத்திலும் புன்சிரிப்பு.
“உனக்குப் பிடிச்சிருக்கா? ரகு என்ன சொன்னவர்?” என்று கேட்டபடி பிரித்துப் பார்த்தான்.
மிக மிக அழகாய் இருந்தது. அதைவிட அவன், காவியா, யாமினி மூவரும் காணொளி அழைப்பில் இருந்து தெரிவு செய்த டிசைன் அது. அன்றெல்லாம் இப்படி திசைக்கு ஒன்றாகப் பிரிந்து நிற்பார்கள் என்று கனவிலும் எண்ணியதில்லை. காணொளி அழைப்பில் இருந்தவாறே, “எங்களுக்கு எப்ப கார்ட் அடிக்கப்போறம்?” என்று இவன் குறுந்தகவல் அனுப்பியதும் அவள் கண்ணால் முறைத்ததும் என்று எத்தனை எத்தனை அழகான நினைவுகள்.
அவளுக்குக் காட்டியிருப்பார்களா என்று அவன் நினைத்து முடிக்க முதலே, “யமி அக்காக்கு இப்பதான் காட்டினனான். நல்ல வடிவா வந்திருக்கு எண்டு அவாவும் சொன்னவா.” என்று சொன்னாள் காவியா.
வேகமாய் நிமிர்ந்து பார்த்தான் நிரோஜன்.
“இப்ப எண்டா?” தன் பரபரப்பையும் படபடப்பையும் காட்டிக்கொள்ளாமல் கேட்பதற்குள் திணறிப்போனான்.
“இப்பதான் அப்பு. இவ்வளவு நேரமும் அவாவோடதான் கதைச்சுக்கொண்டு இருந்தனாங்க. நீ வாறாய் எண்டு சொல்லவும்தான் களைச்சு விழுந்து வாறவரைக் கவனிங்கோ, பிறகு கதைப்பம் எண்டு சொல்லிப்போட்டு வச்சவா.” அவனுக்கான தேநீரைக் கொண்டுவந்து கொடுத்தபடி சொன்னார் மல்லிகா.
“ஓ!” என்றவனுக்கு மேலே பேச முடியவில்லை. அவளைப் பார்த்து, அவளோடு பேசி எத்தனையோ மாதங்களாயிற்று.
கடைசி நாள்களில் அவள் அழுது, கெஞ்சி அனுப்பிய குறுந்தகவல்களைக் கேட்காமல் தவிர்த்ததற்குத் தண்டனை போலும்.
இன்று ஒரேயொருமுறை அவளைப் பார்த்துவிட மாட்டோமா, பேசிவிட மாட்டோமா, அவள் குரலைக் கேட்டுவிட மாட்டோமா என்று தவிக்கிறான்.
எழுந்து அறைக்குள் வந்தவனால் தன்னைச் சமாளித்துக்கொள்ள முடியவில்லை. இப்போதெல்லாம் அளவுக்கதிகமாக அவளைத் தேடுகிறான்.
பேசுவதற்கு யாருமே இல்லாதது போல், தனித்தீவில் மாட்டிக்கொண்டது போல் மிக மிக அதிகமாகத் தனிமையை உணர்கிறான்.
அதுவும் அன்றைக்கு நவீன் சொன்ன சிங்கிள் என்கிற வார்த்தை அவனை மிக ஆழமாகத் தாக்கிற்று. யோசித்துப் பார்த்தால் அதில் தவறில்லைதான். அவனால்தான் ஏற்க முடியவிலை.
நவீனிடம் சொன்னதுபோலவே திலினியை டீம் மாற்றிவிட்டிருந்தான். நவீனோடு முகம் கொடுக்கவும் போகவில்லை. ஒரு கோபம்.
“டேய் இஞ்ச பார்! நீ முகத்தைத் திருப்பிக்கொண்டு போறதால நான் செய்தது பிழை ஆகாது. இஞ்ச இருந்து போயிருந்தாலும் அவள் வவுனியாவிலதான் இருக்கிறாள். நீ நினைச்சா இப்பவும் போய்ப் பாக்கலாம், கதைக்கலாம், சமாதானமாகலாம். ஆனா நீ அது எதையும் செய்யாம பேசாம இருக்கிறாய். அப்ப உன்ர முடிவில மாற்றம் இல்லை எண்டு அண்டைக்குச் சொன்னியே, அதுல தெளிவா இருக்கிறாய் எண்டு நினைச்சன். திலினி உன்னைப் பிடிச்சிருக்கு எண்டு சொன்னாள். அதை அவள் உன்னட்டச் சொல்லுறதில பிழை இல்லையே. உனக்குப் பிடிக்காட்டி நீ இல்லை எண்டு சொல்லப்போறாய். அவ்வளவுதான். அதுக்கு என்னவோ நான் செய்யக் கூடாததைச் செய்த மாதிரி முகம் திருப்புவியா?” என்று கோபப்பட்டான் நவீன்.
அவன் சொன்னதில் இருந்த நியாயம் புரிந்தாலும் கோபம் போவதாய் இல்லை. அவன் முகம் திருப்பி அமர்ந்திருக்க, “இல்ல தெரியாமக் கேக்கிறன், நீயும் அவளும் என்ன காலம் முழுக்க இப்பிடியே சிங்கிளா இருக்கப்போறீங்களா? ஏதோ ஒரு கட்டத்தில அவள் ஒருத்தனையும் நீ ஒருத்தியையும் கட்டத்தானே போறீங்க. இடுப்பில ஒண்டு கைல ஒண்டு எண்டு தூக்கிக்கொண்டுதான் திரியாப்போறீங்க. இதுக்கா அவருக்குக் கோபமாம். போடா டேய்!” என்றுவிட்டு அவன் அவன் அறைக்குள் போய்விட, நிரோஜன் அப்படியே அமர்ந்துவிட்டான்.
அவன் சொன்னதில் இருந்த உண்மையை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அன்றிலிருந்து அவனுள் பெரும் அலைப்புறுதல். அவள் தந்தை இறந்த கொஞ்சக் காலத்திலேயே ஆனந்தன் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்திருந்தான். இப்போது அவனுக்குக் குழந்தை பிறந்திருக்கும். இனி அவள் திருமணம்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு கடமை.
நினைக்கவே நெஞ்சைப் பெரும் பயம் பிடித்து ஆட்டிற்று. சத்தியமாக அவளை இன்னொருவன் அருகில் பார்க்கும் தைரியம் அவனுக்கில்லை. அது மட்டும் மிக நன்றாகப் புரிந்தது. அன்று பிரிவு என்பதன் பின்னால் தனக்கான நிம்மதி, சுதந்திரம் வெளி கிடைத்துவிடும் என்று மட்டுமே யோசித்தான்.
அதன் பிறகுதான் அதன் பாரதூரம் மெல்ல மெல்ல உரைக்க ஆரம்பித்தது. எந்த உறவைப் பிரிந்தாலும் அந்த உறவு அதே உறவுடன் எப்போதுமே இருக்கும். இந்த உறவு மட்டும்தான் விட்டுவிட்டோம் என்றால் கிடைக்காமலேயே போய்விடும் என்று நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் விளங்கிற்று.
இனி அவன் என்ன செய்ய வேண்டும். நவீன் சொன்னதுபோல் அவளிடம் பேச வேண்டுமா? பிரிவைச் சொன்னவன், அவள் அவ்வளவு கெஞ்சியபோதும் இரங்காதவன், நீ என்னை நெருக்குகிறாய், என் சிறகுகளை எல்லாம் ஒடித்துப்போடுகிறாய் என்று குற்றம் சாட்டியவன் எந்த முகத்தை வைத்துக்கொண்டு போய்ப் பேசுவான்? அவன் போ என்றதும் பிரிந்து போவதற்கும் வா என்றதும் வந்து சேர்வதற்கும் அவள் என்ன கிள்ளுக்கீரையா?
அன்றிலிருந்து எதையும் யோசிக்க முடியாமல் தனக்குள் உழல ஆரம்பித்தவன் தன் வீட்டு நிலையைக் கவனிக்கத் தவறினான்.
காவியாவின் திருமண வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தன. முதலில் ஒவ்வொரு வார இறுதியும் திருகோணமலைக்கு வந்துபோனவன் ஒரு மாதம் இருக்கும் நிலையில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ வாங்கிக்கொண்டு திருகோணமலைக்கே வந்து சேர்ந்தான்.
அதன் பிறகுதான் அப்பாவும் அம்மாவும் குசுகுசு என்று தனியாகக் கதைப்பதும், அன்னை முகத்தில் படிய ஆரம்பித்த கவலைக் கோடுகளும், அப்பா நிம்மதியற்று அலைவதும், காவியாவின் கலக்கமும் கண்ணில் பட்டன.
அன்றும் வீட்டுக்கு வந்த கையோடு ஏதேதோ பாத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போன தந்தையைக் கவனித்துவிட்டு, “என்னம்மா?” என்றான் அன்னையிடம்.
மல்லிகாவுக்குச் சொல்வதா இல்லையா என்று குழப்பம்.
“என்ன கவி. நீயாவது சொல்லு.” என்றான் தங்கையிடம்.
அன்னையை ஒருமுறை பார்த்துவிட்டு, “தாமோதரம் அங்கிளின்ர மகன் நாலஞ்சு மாதத்துக்கு முதல் பிரான்ஸ் போனவர் எல்லா அண்ணா. அதுக்கு அப்பா காசு குடுத்தவராம். ரெண்டு மாதத்துக்கு முதலே திருப்பித் தாறன் எண்டு சொல்லியிருக்கிறார். ஆனா இப்ப அந்த அண்ணாக்கு அங்க வேலை ஒண்டும் ஒழுங்கா கிடைக்கேல்லையாம். அதால காசு இன்னும் அங்கிள் திருப்பித் தரேல்ல. இந்தா தாறன் அந்தா தாறன் எண்டு இழுத்தடிக்கினமே தவிர தாற மாதிரி இல்ல. இனி நாங்க எல்லாத்துக்கும் அட்வான்ஸ் குடுக்கோணும் எல்லா. அதான் அப்பா காசுக்கு ஓடுப்பட்டுத் திரியிறார்.” என்றாள் கவலையோடு.
அவனுக்கு அதிர்ச்சி. அன்னையைக் கேள்வியாகப் பார்த்தான். தாமோதரம் என்பவர் அவர்களின் குடும்ப நண்பர். திடீரென்று மகனுக்கு ஏஜென்சியில் பயணம் சரிவரவும் இவர்களிடம் கைமாற்றாகக் கேட்டிருக்கிறார். சும்மா வங்கியில் இருக்கும் பணம்தானே என்று கொடுத்திருக்கிறார் ஏகாம்கபரம்.

