நீ வந்து தங்கிய நெஞ்சில் 31

அத்தியாயம் 31

காவ்யாவின் திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்திருந்தது. அதைக் கோயிலில் வைத்துக் கும்பிடுவதற்காகத் திருகோணமலைக்கு வந்திருந்தான் நிரோஜன்.

“எப்பிடி இருக்கு அண்ணா?” ஆர்வமாகக் கேட்டவள் முகத்தில் மின்னிய திருமணக் களை கண்டு அவன் முகத்திலும் புன்சிரிப்பு.

“உனக்குப் பிடிச்சிருக்கா? ரகு என்ன சொன்னவர்?” வாங்கிப் பிரித்துப் பார்த்தபடி வினவினான்.

மிக மிக அழகாய் இருந்தது. அதைவிட அவன், காவ்யா, யாமினி மூவரும் காணொளி அழைப்பில் இருந்து தெரிவு செய்த டிசைன் அது. அன்றெல்லாம் இப்படித் திசைக்கு ஒன்றாகப் பிரிந்து நிற்பார்கள் என்று கனவிலும் எண்ணியதில்லை.

அன்று காணொளி அழைப்பில் இருந்தவாறே, “எங்களுக்கு எப்ப கார்ட் அடிக்கப்போறம்?” என்று இவன் குறுந்தகவல் அனுப்பியதும், அவள் காவ்யா அறியாமல் கண்ணால் முறைத்ததும் என்று எத்தனை எத்தனை அழகான நினைவுகள்.

அவளுக்குக் காட்டியிருப்பார்களா என்று அவன் நினைத்து முடிக்க முதலே, “யமி அக்காக்கு இப்பதான் காட்டினனான். நல்ல வடிவா வந்திருக்கு எண்டு சொன்னவா.” என்று சொன்னாள் காவ்யா.

வேகமாய் நிமிர்ந்து, “இப்ப எண்டா?” தன் பரபரப்பையும் படபடப்பையும் காட்டிக்கொள்ளாமல் கேட்டான்.

“இப்பதான் அப்பு. இவ்வளவு நேரமும் அவாவோடதான் கதைச்சுக்கொண்டு இருந்தனாங்க. நீ வாறாய் எண்டு சொல்லவும்தான் களைச்சு விழுந்து வாறவரைக் கவனிங்கோ, பிறகு கதைப்பம் எண்டு சொல்லிப்போட்டு வச்சவா.” அவனுக்கான தேநீரைக் கொண்டுவந்து கொடுத்தபடி சொன்னார் மல்லிகா.

“ஓ!” என்றுவிட்டு எழுந்து அறைக்குள் வந்தவன் தன்னைச் சமாளித்துக்கொள்ளப் போராடினான்.

இப்போதெல்லாம் அளவுக்கதிகமாக அவளைத் தேடுகிறான்.
சுற்றவரா எல்லோரும் இருந்தும் பேசுவதற்கு யாருமே இல்லாதது போல், தனித்தீவில் மாட்டிக்கொண்டது போல் மிக மிக அதிகமாகத் தனிமையை உணர்கிறான்.

அதுவும் அன்றைக்கு நவீன் சொன்னவற்றைக் கேட்டதிலிருந்து அவன் அவனாகவே இல்லை. தனக்குள் உழல ஆரம்பித்தவன் தன் வீட்டு நிலையைக் கவனிக்கத் தவறினான்.

காவ்யாவின் திருமண வேலைகள் சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தன. முதலில் ஒவ்வொரு வார இறுதியும் திருகோணமலைக்கு வந்துபோனவன் ஒரு மாதம் இருக்கும் நிலையில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ வாங்கிக்கொண்டு திருகோணமலைக்கே வந்து சேர்ந்தான்.

அதன் பிறகுதான் அப்பாவும் அம்மாவும் குசுகுசு என்று தனியாகக் கதைப்பதும், அன்னை முகத்தில் படிய ஆரம்பித்த கவலைக் கோடுகளும், அப்பா நிம்மதியற்று அலைவதும், காவ்யாவின் கலக்கமும் கண்ணில் பட்டன.

அன்றும் வீட்டுக்கு வந்த கையோடு ஏதேதோ பத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போன தந்தையைக் கவனித்துவிட்டு, “என்னம்மா?” என்றான் கேள்வியாக.

மல்லிகாவுக்குச் சொல்வதா இல்லையா என்று குழப்பம்.

“என்ன கவி. நீயாவது சொல்லு.” என்றான் தங்கையிடம்.

அன்னையை ஒருமுறை பார்த்துவிட்டு, “தாமோதரம் அங்கிளின்ர மகன் நாலஞ்சு மாதத்துக்கு முதல் பிரான்ஸ் போனவர் எல்லா அண்ணா. அதுக்கு அப்பா காசு குடுத்தவராம். ரெண்டு மாதத்துக்கு முதலே திருப்பித் தாறன் எண்டு சொல்லியிருக்கிறார். ஆனா இப்ப அந்த அண்ணாக்கு அங்க வேலை ஒண்டும் ஒழுங்கா கிடைக்கேல்லையாம். அதால காசு இன்னும் அங்கிள் திருப்பித் தரேல்ல. இந்தா தாறன் அந்தா தாறன் எண்டு இழுத்தடிச்சுக்கொண்டு இருக்கிறாரே தவிரத் தாற மாதிரி இல்ல. இனி நாங்க எல்லாத்துக்கும் அட்வான்ஸ் குடுக்கோணும் எல்லா. அதான் அப்பா காசுக்கு ஓடுப்பட்டுத் திரியிறார்.” என்றாள் கவலையோடு.

அவனுக்கு அதிர்ச்சி. தாமோதரம் என்பவர் அவர்களின் குடும்ப நண்பர். நம்பிக்கையானவரும் கூட. அதனால்தான் தந்தை பணம் கொடுக்கப்போகிறேன் என்று சொன்னபோது அவன் மறுக்கவும் இல்லை.

இப்போது இப்படி என்றால்? அன்னையைக் கேள்வியாகப் பார்த்தான்.

திருமண நாள் நெருங்கிவிட்ட நிலையில் இனியும் அவரை நம்பிக்கொண்டு இருக்க முடியாமல், வீட்டுப் பாத்திரத்தின் மீது கடன் வாங்க முடிவு செய்திருக்கிறார்கள் என்று அறிந்து இன்னுமே அதிர்ச்சி.

“இதையெல்லாம் முதலே சொல்ல மாட்டீங்களா?” என்று இருவரையும் அதட்டினான்.

“அது நீ மாதம் மாதம் தந்த காசப்பு. அப்பா எண்டு நம்பித் தந்த காசை, இப்பிடிக் குடுத்துப்போட்டு நிக்கிறனே எண்டு அப்பாக்குக் கவலை. அதான் சொல்லேல்ல.”

“உங்களுக்கு என்ன விசராம்மா? எனக்குச் சொல்லுறத விட வீட்டை அடமானம் வைக்கிறது ஈஸியா போயிற்றா உங்களுக்கு?” என்று அவரைக் கடிந்துகொண்டுவிட்டு தந்தைக்கு அழைத்து வீட்டுக்கு வரச் சொன்னான்.

வந்தவருக்கு அவன் முகம் பார்க்கப் பெரும் சங்கடம். அவரை அப்படிப் பார்க்க அவனால் முடியவில்லை.

“என்னப்பா நீங்க? என்னட்ட கௌரவம் பாப்பீங்களா? அப்ப நாளைக்கு எனக்கு ஒரு கஷ்டம் எண்டு வந்தாலும் உங்களிட்ட வந்து நிக்கக் கூடாது எண்டு சொல்லாமச் சொல்லுறீங்க என்ன?” என்று கேட்டுவிட்டு, அப்போதே இணையவழி நுழைந்து தன் சேமிப்பை ஆராய்ந்தான்.

கணிசமான தொகை சேர்ந்திருந்தது. வங்கியில் லோனும் எடுக்கலாம். அலுவலகத்திலும் கேட்கலாம். என்ன, முதலே சொல்லியிருக்க இந்தப் பதட்டங்களுக்கு அவசியம் இருந்திராது என்று நினைக்கும்போதே, இதற்கெல்லாம் நீ காரணமில்லை, வேறு ஒருத்தி என்று உரைத்த உண்மையில் ஒருகணம் அப்படியே அமர்ந்துவிட்டான்.

தன்னைச் சமாளித்துக்கொண்டு தனியாகப் போய் மகேஸுக்கு அழைத்து, கொடுத்த பணத்தைக் கேட்டான்.

“என்னடா நீ? திடீரெண்டு கேட்டா நான் என்ன செய்ய? வீடு கட்டிக்கொண்டு இருக்கிறம் எண்டு தெரியுமெல்லா உனக்கு.” என்றான் அவன், என்னவோ திடீரென்று கேட்டது தவறு என்கிற தொனியில்.

“வீடு கட்டுறத ஒரு மாதம் தள்ளிப்போட்டா ஒண்டும் நடக்காது மச்சான். ஆனா கவின்ர கலியாணத்தத் தள்ளி வைக்கேலாது. அதைவிட அந்தக் காசை நானா கேக்க முதல் நீயா தந்திருக்கோணும். நான் கேக்கிற அளவுக்கு நீ வச்சதே பிழை.”

அதைக் கேட்ட மகேஸுக்கு முகம் கறுத்துப்போயிற்று. “குத்திக் காட்டுறாய் என்ன? பரவாயில்ல. தாறன் வை!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

நவீன், மித்ரன் இருவரிடமும் கைமாற்றாகக் கேட்டான். நவீன் உடனேயே தருவதாக ஒப்புக்கொண்டுவிட, இரண்டு மாதங்களில் திருப்பித் தருவாயா என்று கேட்டு மித்ரன் சம்மதித்தபோது, தான் எந்தளவில் இளிச்சவாயனாக இருந்திருக்கிறோம் என்று அவனுக்கே புரிந்தது.

அடுத்து வந்த நாள்களில் சேமிப்பில் இருந்ததை, நண்பர்களிடம் பெற்றதை எல்லாம் சேர்த்துத் தந்தையிடம் கொடுத்தான். ஏகாம்பரம் மிகவுமே நெகிழ்ந்துபோனார். ஒரே மகளின் திருமணம். அவள் பெரியபிள்ளை ஆனதிலிருந்தே திட்டம் போட்டு ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்துச் செய்துவந்திருக்கிறார்.

அப்படியிருக்கக் கடைசி நேரத்தில் இப்படியாகவும் மிகவுமே கலங்கிப்போனார். அந்த நேரத்தில் மகன் வந்து தோள் கொடுத்து, நான் இருக்கிறேன் அப்பா என்று சொன்னபோது, தந்தையாய் நெஞ்சம் விம்மிப்போயிற்று.

கலங்கிய விழிகளும் சிரித்த முகமுமாய் அவர் அவனை அணைத்துக்கொண்டபோது, நிரோஜனுக்குமே தொண்டைக்குள் என்னவோ வந்து சிக்கிக்கொண்டது.

அடுத்து வந்த நாள்களில் லோனும் கிடைத்துவிட, திருமண வேலைகள் மளமளவென்று நடக்க ஆரம்பித்தன.

தன் வீட்டினர் யாமினியையும் அஜந்தாவையும் திருமணத்திற்கு அழைத்தது அவனுக்குத் தெரியும். தானும் அவளை அழைக்க வேண்டுமா என்கிற கேள்வியோடு இரண்டு நாள்கள் சுற்றினான். மூன்றாம் நாள் அவளுக்கு அழைக்க முடிவு செய்தான்.

அப்படி முடிவு செய்த நொடியிலிருந்து அவனுக்குள் பெரும் போராட்டம். என்னவோ மேலதிகாரியிடம் போக முதல் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்ப்பதுபோல் அவளோடு எப்படி, என்ன பேச வேண்டும் என்று பலமுறை ஒத்திகை பார்த்தான். பதற்றப்படாமல் நிதானமாகப் பேச வேண்டும் என்று மனத்தளவில் நிறைய முன்னேற்பாடுகள் செய்துகொண்டு அவளுக்கு அழைத்தான்.

ஆனால் அவளோ அழைப்பை ஏற்கவில்லை. அவன் மனம் சுருண்டு போனது. இன்னொரு முறை அழைக்கத் தைரியம் வரவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, “ஹாய் யாமினி, எப்பிடி இருக்கிறாய்? உனக்கு கோல் பண்ணினனான். நீ பிஸி போல. எடுக்கேல்ல. கவின்ர கலியாணத்துக்கு கட்டாயம் வா. இது நீயும் சேர்ந்து அரேஞ்ச் பண்ணின கலியாணம். அதில நீயும் நிக்கோணும். அப்பதான் அது முழுமை அடையும். வருவாய் எண்டு நம்புறன். வா ப்ளீஸ்!” என்று எழுதி அனுப்பிவிட்டான்.

அந்த நிமிடத்திலிருந்து அவன் அவனாகவே இல்லை. ஏதாவது பதில் வருமா என்று காத்திருந்தான். கடைசிவரையில் வரவேயில்லை.

error: Alert: Content selection is disabled!!