நீ வந்து தங்கிய நெஞ்சில் 33.1

அத்தியாயம் 33

மணமக்களிடம் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் புறப்பட ஆயத்தமாகினர். அதற்குமுதல், “அம்மாச்சி! என்னோட ஒருக்கா வாங்கோம்மா! பலகாரப் பை தர மறந்துபோனன்.” என்று அஜந்தாவைத் தனியாக அழைத்துக்கொண்டு போனார் மல்லிகா.

திவாகர் அங்கேயே காத்திருக்க, யாமினி மண்டபத்திற்கு வெளியே நடந்தாள். கண நேரமும் பார்வையை அகற்றவே மாட்டேன் என்பதுபோல் அவளையே வட்டமடித்தவனின் விழிகள் அவளை ஒருவழியாக்கியிருந்தன. அங்கிருந்து ஓடிவிட மாட்டோமா என்கிற நிலைக்கு ஆளாகியிருந்தாள். ஆனால, அவள் அப்படித் தனியாகப் போனதே நிரோஜனுக்கு வசதியாகிப்போயிற்று.

அவன் அவளிடம் போக, திவாகரை வெளியே செல்ல விடாமல் தடுப்பதுபோல் பேச்சுக் கொடுத்தபடி அவனைச் சுற்றிக்கொண்டனர் நண்பர்கள்.

அவனுக்கும் தன் பின்னே நடப்பவை தெரியாததால் அஜந்தா வரும்வரையில் இவர்களோடு பேசிக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அவர்கள் புறப்பட்டுவிட்டார்களா என்று அறிய அவன் அன்னை அழைத்தார். அவன் அவரோடு சற்றுத் தள்ளிப்போய்ப் பேச ஆரம்பிக்க, “ஏன் மச்சான், நாங்க பாக்கிறது மாமா வேலைதானே?” என்று நவீனின் கைச் சட்டையைச் சுரண்டியபடி கேட்டான் மித்ரன்.

“இதுல உனக்கு சந்தேகம் வேற?” என்றான் அவன்.

“நாளைக்கு எனக்கும் மாமா வேலை பாப்பீங்களாடா?” நவீனின் தோளை முகத்தால் உரசி வெக்கப்பட்டபடி கேட்டான் மித்ரன்.

“அவன் எனக்குப் பூ வச்சுப் பிள்ளையத் தந்தது காணும். நீ தள்ளு!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் நவீன்.

இங்கே அவள் பின்னால் விரைந்த நிரோஜன், “யமி!” என்றான் அவசரமாய்.

அந்த அழைப்பில் பெட்டி ஒன்றுக்குள் போட்டு ஆணியறைந்து, மண்ணுக்குள் புதைத்துவிட்டதாக அவள் எண்ணியிருந்த உணர்வுகள் எல்லாம் பீறிட்டுக்கொண்டு கிளம்பவா என்றன. ஒரு கணம் அப்படியே நின்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் புறம் திரும்பினாள்.

“தேங்க்ஸ்!” என்றான் அவள் முன்னே வந்து நின்று.

அவள் ஏன் என்று கேட்கவில்லை. இலேசாகப் புருவங்களைச் சுருக்கி விழிகளில் கேள்வியைக் குவித்தாள்.

நொடி தடுமாறிப்போனான் அவன். எப்போதுமே அவனைக் கொய்யும் பெரிய விழிகள் அவளுக்கு.

“அது… நீ சொல்லித்தான் அந்தக் காசு நான் சேர்த்ததே. லோனும்… எந்த லோனும் இல்லாம இருந்ததாலதான் லோனும் எடுக்கக் கூடிய மாதிரி இருந்தது. ஆனா பெயரும் புகழும் எனக்கு.” அவனுக்குத் தான் சொல்ல நினைப்பதைக் கோர்வையாகச் சொல்ல வரவில்லை. ஆனாலும் ஒரு வேகத்துடன் சொன்னான்.

கண்ணை எட்டாத சிறு முறுவலோடு, “அதெல்லாம் நிச்சயமா உங்களுக்குத்தான் சேரோனும். குதிரையைக் கொண்டுபோய்த் தண்ணி வாளிக்குப் பக்கத்தில விடத்தான் எல்லாராலயும் முடியும். குடிக்கிறது குதிரைன்ர பாடு. நான் சொன்னது மட்டும்தான். செய்தது நீங்க. சோ பெயரும் புகழும் உங்களுக்குச் சேர வேண்டியதுதான்.”

இல்லை. அது அப்படி நடக்கவில்லை. அவன் அவளோடு பெரும் சண்டை போட்டான். அவனை நெருக்குகிறாள் என்று சொன்னான். இன்னும் ஒரு படி மேலே போய், காசு காசு என்று அவள் காசிலேயே குறியாக இருக்கிறாள் என்று குற்றம் சாட்டினான்.

அதற்கெல்லாம் அசராமல், கூட வந்து அவன் பெயரில் சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து வைத்தது அவள்தான். அதை வைத்தே மாதக் கடைசிகளில் காசு இல்லாது நின்ற நாள்களில் உன்னால்தான் என்று அவளிடம் முகம் திருப்பியிருக்கிறான். அதையெல்லாம் இன்று வாய் திறந்து சொல்ல முடியாமல், “வா, அந்தப் பக்கம் போவம்.” என்றான் ஆட்கள் பெரிதாக இல்லாத ஒரு பகுதியைக் காட்டி.

“இல்ல, நான் போகோணும்.” என்றுவிட்டு அஜந்தா வருகிறாளா என்று மண்டபப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

அவளைக் காணோம். நிரோஜனுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விருப்பமில்லை.

“உன்னோட கதைக்கோணும் யமி.” என்றான் கெஞ்சலாக.

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனோடு நடந்தாள் யாமினி.

அவனுக்கு நான் மாறிவிட்டேன், நீ சொன்னவற்றை உணர்ந்துவிட்டேன், என் பக்கத் தவறு என்னவென்று எனக்குப் புரிகிறது என்று நிறையச் சொல்லவேண்டும் போலிருந்தது.

அதை எப்படி ஆரம்பிப்பது, எப்படிச் சொல்வது என்று வார்த்தைகள் வராமல், கையில் இருந்த வட்டிலப்பத்தைக் கரண்டியால் அளைந்தான்.

“கதைக்கோணும் எண்டு சொன்னீங்க?”

அவன் தடுமாறுகிறான் என்று தெரிந்தும் கேட்கிறாள். ஒரு கரண்டி வட்டிலப்பத்தை அள்ளி அவளுக்கு நீட்டினான்.

அவள் இதை மருந்துக்கும் எதிர்பார்க்கவில்லை. தலையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவனும் இதைச் செய்ய நினைத்துச் செய்யவில்லை. இது அவர்களுக்குள் எப்போதும் நடப்பது என்பதும், இருந்த பதற்றமும் செய்ய வைத்திருந்தன. “அது நீ சாப்பிட்டதுதான். அதான்.” என்றுவிட்டு அவன் சாப்பிட ஆரம்பித்தான்.

ஒருகணம் தடுமாறிப்போன யாமினி சட்டென்று முகம் திருப்பி நின்றாள். அவளைப் பார்த்த படியே நிமிட நேரத்தில் அந்தக் குட்டி பவுலை வழித்து துடைத்துவிட்டு, அங்கிருந்த குப்பை வாளிக்குள் தூக்கி எறிந்தான்.

அதன் பிறகும் பேச்சை ஆரம்பிக்கச் சில கணங்கள் பிடித்தன அவனுக்கு. அஜந்தா எந்த நேரமும் வந்துவிடலாம் என்பதில், “அண்டைக்கு உனக்கு முன்னால குடிச்சதுதான் கடைசி. இனி வாழ்க்கைல குடிக்க மாட்டன். பெருசா பார்ட்டி ஒன்றுக்கும் போறேல்ல. போனாலும் காசு… காசிலயும் இப்ப கவனமாத்தான் இருக்கிறன். அப்ப நீ சொல்லேக்க விளங்கேல்ல. ஆனா, ஒரு தேவை எண்டு வந்து, அம்மா அப்பா கலங்கி நிக்கேக்க, என்னட்ட இருக்கு எண்டு அவ்வளவு தைரியமா சொல்லேக்கதான் விளங்கினது. அதுவும் அப்பா கண்கலங்கி என்னைப் பாத்தார் பார் ஒரு பார்வை. அவரை நான் அப்பிடிப் பாத்ததே இல்ல. இண்டைக்கு கவியும்…”

அவனுக்கு எப்படியாவது நான் மாறிவிட்டேன் என்று சொல்லிவிட வேண்டும் என்கிற துடிப்பு. அதைச் சரியாகத்தான் அவளிடம் சொல்கிறோமா என்று தெரியாமல் அவளைப் பார்த்தான்.

அவளோ, “ஏன் இதையெல்லாம் என்னட்டச் சொல்லுறீங்க?” என்று கேட்டாள்.

“யமி!” என்று திணறியவனைக் கண்டு கண்ணை எட்டாத முறுவல் ஒன்றைச் சிந்தியபடி, “நான் யாமினி.” என்றாள் அவள்.

அவனுக்குப் பேச்சே வரவில்லை.

“வேறேதும் கதைக்கோணுமா?” அவன் கதைப்பதே இல்லை, அவள் குறுந்தகவல்களுக்குப் பதில் போடுவதே இல்லை என்று சண்டை பிடித்தவள் இன்று இப்படிக் கேட்கிறாள்.

உள்ளே எழும் வலியை அடக்கியபடி இல்லை என்று குறுக்காகத் தலையை அசைத்தான் அவன்.

“ஓகே பாய்!” என்று உதட்டளவில் மாத்திரம் முறுவலித்துவிட்டு விலகி நடந்தாள் அவள்.

போகிற அவளையே பார்த்து நின்றான். அவளுக்கு எப்போதுமே தோள் வரை முடி வைத்திருக்கத்தான் விருப்பம். அவனுக்கு நீள முடி பிடிக்கும். அதனாலேயே வளர்த்து, இடைக்குக் கீழே வைத்திருந்தாள்.

ஆனால் இன்று திரும்பவும் அவள் முடி தோள் வரைக்கும் வந்திருந்தது. நமக்காக வாழ்ந்தேன். அங்கே உன் விருப்பங்களுக்கு முதலுரிமை கொடுத்தேன். இன்று நான் எனக்காக வாழ்கிறேன் என்று சொல்கிறாளா?

இங்கே தனியாக வந்ததும் அஜந்தாவின் கையைப் பற்றிக்கொண்டு, “அம்மாச்சி நான் உங்களிட்ட ஒண்டு கேப்பன். மறைக்காம சொல்லோணும் குஞ்சு.” என்று கெஞ்சலாகக் கேட்டார் மல்லிகா.

அஜந்தாவுக்குப் படபடப்பாயிற்று. அப்படி அன்போடு கேட்கும் பெண்மணியிடம் தன்னால் எந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியும் என்கிற படபடப்போடு, “சொல்லுங்க அன்ட்ரி.” என்றாள்.

error: Alert: Content selection is disabled!!