நீ வந்து தங்கிய நெஞ்சில் 33.1

அத்தியாயம் 33

“அம்மாச்சி! என்னோட ஒருக்கா வாங்கோம்மா! பலகாரப் பை தர மறந்துபோனன்.” புறப்பட ஆயத்தமான அஜந்தாவின் கையைப் பற்றித் தனியாக அழைத்துக்கொண்டு போனார் மல்லிகா.

திவாகர் அங்கேயே மனைவிக்காகக் காத்திருக்க, யாமினி மண்டபத்திற்கு வெளியே நடந்தாள். கண நேரமும் பார்வையை அகற்றவே மாட்டேன் என்பதுபோல் அவளையே வட்டமடித்தவனின் விழிகள் அவளை ஒருவழியாக்கிக்கொண்டிருந்தன. அங்கிருந்து ஓடிவிட மாட்டோமா என்கிற நிலைக்கு வந்திருந்தாள். ஆனால், அவள் அப்படித் தனியாகப் போனதே நிரோஜனுக்கு வசதியாகிப்போயிற்று.

அவன் அவளைத் தேடி நழுவ, பேச்சுக் கொடுத்தபடி திவாகரை அங்கேயே பிடித்துவைத்துக்கொண்டனர் அவன் நண்பர்கள்.

தன் பின்னே நடப்பவற்றைக் கவனிக்காத திவாகரும் அஜந்தா வரும்வரையில் இவர்களோடு பேசிக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அவர்கள் புறப்பட்டுவிட்டார்களா என்று அறிய அவன் அன்னை அழைத்தார். அவன் அவரோடு பேசுவதற்குச் சற்றுத் தள்ளிப் போக, “ஏன் மச்சான், நாங்க பாக்கிறது மாமா வேலைதானே?” என்று நவீனின் கைச் சட்டையைச் சுரண்டியபடி கேட்டான் மித்ரன்.

“இதுல உனக்குச் சந்தேகம் வேற?” என்றான் அவன்.

“நாளைக்கு எனக்கும் மாமா வேலை பாப்பீங்களாடா?” நவீனின் தோளை முகத்தால் உரசி வெக்கப்பட்டபடி கேட்டான் மித்ரன்.

“அவன் எனக்குப் பூ வச்சுப் பிள்ளையத் தந்தது காணும். நீ தள்ளு!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் நவீன்.

இங்கே அவள் பின்னால் விரைந்த நிரோஜன், “யமி!” என்றான் அவசரமாய்.

அந்த அழைப்பில் பெட்டி ஒன்றுக்குள் போட்டு ஆணியறைந்து, மண்ணுக்குள் புதைத்துவிட்டதாக அவள் எண்ணியிருந்த உணர்வுகள் எல்லாம் பீறிட்டுக்கொண்டு கிளம்பவா என்றன. ஒரு கணம் அப்படியே நின்று, தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் புறம் திரும்பினாள்.

“தேங்க்ஸ்!” என்றான் அவள் முன்னே வந்து நின்று.

அவள் ஏன் என்று கேட்கவில்லை. இலேசாகப் புருவங்களைச் சுருக்கி, விழிகளில் கேள்வியைக் குவித்தாள்.

நொடி தடுமாறிப்போனான் அவன். எப்போதுமே அவனைக் கொய்யும் பெரிய விழிகள் அவளுக்கு.

“அது… நீ சொல்லித்தான் அந்தக் காசு நான் சேர்த்ததே. லோனும்… எந்த லோனும் இல்லாம இருந்ததாலதான் லோன் எடுக்கக் கூடிய மாதிரி இருந்தது. ஆனா பெயரும் புகழும் எனக்கு.” அவனுக்குத் தான் சொல்ல நினைப்பதைக் கோர்வையாகச் சொல்ல வரவில்லை. ஆனாலும் ஒரு வேகத்துடன் சொன்னான்.

கண்ணை எட்டாத சிறு முறுவலோடு, “குதிரையக் கொண்டுபோய்த் தண்ணி வாளிக்குப் பக்கத்தில விடத்தான் எல்லாராலயும் முடியும். குடிக்கிறது குதிரைன்ர பாடு. நான் சொன்னது மட்டும்தான். செய்தது நீங்க. சோ பெயரும் புகழும் உங்களுக்குச் சேர வேண்டியதுதான்.” என்று சொன்னாள் அவள்.

உள்ளே ஒரு வலி பரவினாலும், “வா, அந்தப் பக்கம் போவம்.” என்றான், ஆட்கள் பெரிதாக இல்லாத ஒரு பகுதியைக் காட்டி.

“இல்ல, நான் போகோணும்.” அஜந்தா வருகிறாளா என்று மண்டபப் பக்கம் திரும்பிப் பார்த்தபடி சொன்னாள்.

“உன்னோட கதைக்கோணும் யமி.” என்றான் கெஞ்சலாக.

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனோடு நடந்தாள் யாமினி.

அவனுக்கு நான் மாறிவிட்டேன், நீ சொன்னவற்றை உணர்ந்துவிட்டேன், என் பக்கத் தவறு என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது என்று சொல்லவேண்டும்.

அதை எப்படி ஆரம்பிப்பது, எப்படிச் சொல்வது என்று தெரியாமல், கையில் இருந்த வட்டிலப்பத்தைக் கரண்டியால் அளைந்தான்.

“கதைக்கோணும் எண்டு சொன்னீங்க?”

அவன் தடுமாறுகிறான் என்று தெரிந்தும் கேட்கிறாள். ஒரு கரண்டி வட்டிலப்பத்தை அள்ளி அவளுக்கு நீட்டினான்.

இதை மருந்துக்கும் எதிர்பாராதவள் ஒரு கணம் திகைத்து, தலையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

அவனும் இதைச் செய்ய நினைத்துச் செய்யவில்லை. இது அவர்களுக்குள் எப்போதும் நடப்பது என்பதும், இருந்த பதற்றமும் செய்ய வைத்திருந்தன. “அது நீ சாப்பிட்டதுதான். அதான்.” என்றுவிட்டு அவன் சாப்பிட ஆரம்பித்தான்.

ஒருகணம் தடுமாறிப்போன யாமினி சட்டென்று முகம் திருப்பி நின்றாள். அவளைப் பார்த்த படியே நிமிட நேரத்தில் அந்தக் குட்டி பவுலை வழித்துத் துடைத்துவிட்டு, அங்கிருந்த குப்பை வாளிக்குள் தூக்கி எறிந்தான்.

அஜந்தா எந்த நேரமும் வந்துவிடலாம் என்பதில், “ஒவ்வொரு நாளும் பொறுமையா கதைக்கோணும், நீ சொல்லுறதைக் கேக்கோணும், கோபப்படக்கூடாது எண்டுதான் நினைப்பன். ஆனா ஒரு நாள் கூட அது நடந்ததே இல்ல. இந்தப் பிரச்சினை எல்லாம் கதைச்சாத்தான் தீரும் எண்டு நீயும், கதைச்சா பிரச்சினை பெருத்திடுமோ எண்டு நானும் பிழைக்கு மேல பிழை செய்து, கோபத்துக்கு மேல கோபத்த வளத்து எண்டு நிறைய நடந்திட்டுது.” என்றுவிட்டு நிறுத்தினான் அவன்.

அவள் அவனையே பார்த்து நிற்க, “ஒரு கட்டத்துக்கு மேல என்னால ஏலாமயே போயிற்றுது யமி. இனியும் எங்கட உறவு தொடர்ந்தா கட்டாயமா உன்னை உதாசீனப்படுத்தி, எடுத்தெறிஞ்சு கதைச்சு, இதைவிட உன்னைக் காயப்படுத்திடுவன் எண்டு நல்லா தெரிஞ்சுபோச்சு. எனக்கும் மூச்சடைச்ச நிலை. அதுல இருந்து வெளில வந்து தெளிவா யோசிக்கவே ஏலாம இருந்தது. அதுதான் பிரிவைச் சொன்னனான்.” என்று அவ்வளவு நேரமாக எங்கோ பார்த்துச் சொல்லிக்கொண்டு வந்தவன் இப்போது அவள் முகம் பார்த்தான்.

“அதின்ர அர்த்தம் நாளடைவில நான் இன்னொரு வாழ்க்கையைத் தேடிப் போவன் எண்டுறது இல்ல. இன்னுமே நான் உன்னை விட்டுட்டு வந்த அதே இடத்திலதான் நிக்கிறன்.”

அவளோ, “ஏன் இதையெல்லாம் என்னட்டச் சொல்லுறீங்க?” என்று கேட்டாள்.

“யமி!” என்று திணறியவனைக் கண்டு, கண்ணை எட்டாத முறுவல் ஒன்றைச் சிந்தியபடி, “நான் யாமினி.” என்றாள் அவள்.

அவனுக்குப் பேச்சே வரவில்லை.

“வேறேதும் கதைக்கோணுமா?”

அவன் கதைப்பதே இல்லை, அவள் குறுந்தகவல்களுக்குப் பதில் போடுவதே இல்லை என்று சண்டை பிடித்தவள் இன்று இப்படிக் கேட்கிறாள். உள்ளே எழும் வலியை அடக்கியபடி இல்லை என்று குறுக்காகத் தலையை அசைத்தான் அவன்.

“ஓகே பாய்!” என்றுவிட்டு விலகி நடந்தாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!