அத்தியாயம் 59
மகன் அந்த வீட்டை விட்டுப் போன கணத்திலிருந்து அமர்ந்திருந்த சோபாவை விட்டு அசையவேயில்லை தேவகி. கணவரோடு புறப்பட்டபோது கூடக் கணவன் மீதிருந்த ஆத்திரம் அவரை உடையவிடாமல் பிடித்திருந்தது. அவருக்கு இத்தனை வருடங்கள் மனைவியாக வாழ்ந்த பாவத்துக்கு நானும் சேர்ந்து இதை அனுபவிக்கிறேன் என்று நினைத்தார்.
ஆனால், மகன் போனபோது அவர் வாழ்வின் பற்றுதல், பாசம், சந்தோசம் எல்லாமே அவனோடே போனதுபோல் ஒரு வெறுமை. இனி எதற்கு வாழ வேண்டும் என்று கூடத் தோன்றிற்று.
விரக்தியின் உச்சத்தில் இருந்தவர் குருவோடு வந்த மாதவியைக் கண்டதும் உடைந்து அழுதார். அவர் அழுத அழுகையைப் பார்த்த குருவுக்குக் கூட நெஞ்சில் பாரமேறிற்று. அவரைப் பார்த்து அழுதுகொண்டிருந்த துளசியைக் கண்ணாலேயே தேற்றினான்.
மாதவியின் விழிகளிலும் கண்ணீர். “அழாதீங்க அக்கா. கொஞ்ச நாளில எல்லாம் சரியாயிடும்.” அவர் அருகில் அமர்ந்து தேற்றினார்.
“இதெல்லாம் சரியாகிற விசயம் இல்ல மாதவி. போயும் போயும் இந்தளவு கேவலமான மனுசனோட வாழ்ந்து, ரெண்டு பிள்ளையைப் பெத்திருக்கிறனே எண்டு நினைக்க அசிங்கமா இருக்கு.” மருமகன் நிற்கிறான் என்பதையும் மறந்து அவர் சொல்லி அழ, அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் மேலேறினான் குரு.
கருணாகரனுக்கும் வெளியில் நடப்பவை எல்லாம் கேட்காமல் இல்லை. அதுவும் மனைவி சொன்ன வார்த்தையில் விழிகளை இறுக்கி மூடினார். இப்படி மொத்த குடும்பத்தின் வெறுப்புக்கும் ஆளாவோம் என்று அவர் நினைத்தே பார்த்ததில்லை.
அவரை வந்து யாரும் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை.
இரவானது. யாருக்கும் சாப்பிடும் மனநிலை இல்லை. மாதவி எழுந்து சமைக்கவும் இல்லை. குரு போய் எல்லோருக்கும் உணவு வாங்கி வந்தான். கருணாகரனுக்குக் கொடுக்க யாருமே முன்வரவில்லை. அவன் கேட்க முதலே, “எனக்கு அவரின்ர முகம் பாக்கவே விருப்பம் இல்ல குரு.” என்று சொன்னாள் துளசி.
வேறு வழி இல்லாமல் தானே உணவை எடுத்துக்கொண்டு அவரின் அறைக்கு நடந்தான் குரு. அந்த மனிதரின் முகம் பார்க்கவோ பேசவோ அவனுக்கும் விருப்பம் இல்லை. அந்தளவில் அவர் மீது ஒரு வெறுப்பு. ஆனால், மனிதாபிமானமற்ற முறையில் நடக்க முடியாதே.
“வாங்க மாமா சாப்பிட.” கதவைத் தட்டிவிட்டு உள்ளே போய், அங்கிருந்த மேசையில் உணவையும் தண்ணீரையும் வைத்தபடி அழைத்தாலும் அவர் முகத்தை அவன் பார்க்கவில்லை. பார்க்கப் பிடிக்கவில்லை.
அவரிடமிருந்து எந்தச் சத்தமும் இல்லை என்றதும் வேறு வழி இல்லாமல் திரும்பிப் பார்த்தான்.
இரண்டு தலையணைகளை ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டுப் படுத்திருந்தவரின் ஒரு கை தலைமாட்டில் இருக்க விழிகளை மூடியிருந்தார் அவர்.
அவரை அப்படிப் பார்க்க ஒரு மாதிரி இருந்தாலும் பரிதாபம் வரவில்லை. சாதாரணமாக அவரைப் பார்த்துக் கை நீட்டிப் பேசக்கூட யாரையும் விடமாட்டான் தூயவன். இன்றைக்குத் தரமிறங்கி, தன் மரியாதையைத் தானே கெடுத்து, அவன் முன்னாலேயே சிறுத்துப்போய் நின்றுவிட்டார். ஒரு நெடிய மூச்சுடன், “மாமா!” என்றான் அழுத்தி.
தலையை இலேசாகத் திருப்பி அவனைப் பார்த்தார். அவர் விழிகள் இரண்டும் சிவந்து கிடந்தன. சற்றே துணுக்குற்றான் குரு. என்ன என்றாலும் வயதானவர் இல்லையா?
“என்ன மாமா, உடம்புக்கு ஏதுமா?”
அதற்கு ஒன்றும் சொல்லாமல், “வச்சிட்டுப் போங்க!” என்றவர் திரும்பவும் பழையபடி விழிகளை மூடிக்கொண்டார்.
அவனுக்கும் இதே ஊர் என்பதில் சிறு பரயாத்தில் இருந்தே இந்த வீட்டுப் பிள்ளைபோல் பழகியவன் அவன். அவனிடம் ஒருமையில்தான் பேசுவார். துளசியைக் கட்டியபிறகும் அது மாறியதில்லை. என்ன, திருமணத்தின் பிறகு நேரடியாக அவனோடு பேசுவதை முடிந்தவரையில் தவிர்த்துவிடுவார். மருமகன் என்று தள்ளி நிற்கிறார் என்று அவனும் விட்டிருந்தான்.
ஆனால் இப்போது இந்த மரியாதை?
“சில விசயங்களைச் செய்யவே கூடாது. அதுவும் நீங்க செய்திருக்கவே கூடாது. அதோடயாவது நிப்பாட்டி இருக்கோணும். அத விட்டுப்போட்டு என்ன வார்த்தை எல்லாம் விட்டிருக்கிறீங்க? அந்தப் பிள்ளை உங்கட மருமகள். துளசியப் பாத்து அப்பிடி ஒரு கதை கதைப்பீங்களா? தூயவனை யோசிக்கவே இல்லையா நீங்க? இதே வார்த்தைய வேற ஆரும் சொல்லியிருந்தா என்ன செய்திருப்பான் எண்டு யோசிங்க. அப்பா எண்டதால விட்டுட்டுப் போய்ட்டான். நீங்க செய்த பிழைக்கு அவன் தண்டனையை அனுபவிக்கிறான்.” அவர் தன் மாமா என்கிற எண்ணமே இல்லாமல் மிகுந்த இறுக்கமான குரலில் சொன்னான் குரு.
அவர் தொண்டை ஒருமுறை ஏறி இறங்கியது. ஆனாலும் அசையாமல் அப்படியே கண்களை மூடிப் படுத்திருந்தார்.
“எழும்புங்க மாமா. சாப்பிடாம இருந்து எதையும் சாதிக்கப் போறேல்ல. அங்க மாமியும் சாப்பிடேல்லை. அவாவையும் பாக்கோணும்.” வற்புறுத்தி அவரை எழுப்பி, உணவைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.
இங்கே மாதவி தேவகியைச் சாப்பிட வைத்திருந்தார். இன்று தேவகியும் மாதவியோடு சரிந்துகொண்டார். அவருக்குக் கணவரின் முகம் பார்க்கவே பிடிக்கவில்லை. அந்தளவில் வெறுத்திருந்தார்.
துளசியோடு அவனும் உணவை முடித்தபிறகு கணவனும் மனைவியும் மேலேறினர்.
மிதிலன் ஏற்கனவே உறங்கியிருந்ததில் அவர்களுக்கான தனியான நேரத்தில் செய்வதுபோல் கீழே ஒரு மெத்தையை விரித்தாள் துளசி. அவளைக் கேள்வியாகப் பார்த்தாலும் அவளை மிதிலனைத் தூக்க விடாமல், தான் தூக்கிக் கிடத்திப் போர்த்தியும் விட்டான் குரு.
அவன் படுத்ததும் அதற்காகவே காத்திருந்தவள் போல் அவன் கைகளுக்குள் வந்து சுருண்டுகொண்டாள் துளசி. அவள் மனத்தின் வேதனையும் என்ன என்று தெரியும் என்பதால் எந்தக் கேள்வியும் கேளாமல், அவர்கள் இருவருக்கும் சேர்த்துப் போர்வையைப் போர்த்திக்கொண்டவன் அவள் தலையை வருடிவிட ஆரம்பித்தான்.
கணவனின் மார்பு தந்த பாதுகாப்பா, இல்லை அவன் வருடல் அவளை உடைத்ததா தெரியாது, மௌனமாகக் கண்ணீர் உகுக்க ஆரம்பித்தாள் துளசி.
அவள் அழுகிறாள் என்று அவனுக்கும் தெரிந்தது. கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான். பிறகு, “போதும் துளசி. எல்லாமே நடந்து முடிஞ்சுது. மாமா இனி வாயே திறக்கமாட்டார் எண்டுதான் நினைக்கிறன். அதால இனி எல்லாம் மெல்ல மெல்லச் சரியாகும். அழாத.” என்று அவள் முகம் தாங்கித் துடைத்துவிட்டான்.
அழுது சிவந்த விழிகளும் நனைந்த இமைகளோடும் அவள் அவனையே பார்க்க, “என்ன பார்வை?” என்றான் சின்ன புன்னகையோடு.
அப்போதும் அவனையே பார்த்தவள் எம்பி அவன் கன்னத்தில் உதடு பதித்தாள். புன்னகை கொஞ்சம் பெரிதாக அவள் முகத்தையே ரசனையோடு பார்த்துவிட்டுக் கலைந்து கிடந்த அவள் கேசத்தைக் காதோரம் ஒதுக்கி விட்டான்.
மறு கன்னத்திலும் இப்போது முத்தமிட்டாள் துளசி.
பற்கள் தெரியச் சிரித்த குருவின் அணைப்புத் தன்னால் இறுகியது. “என்ன விசேசம்? என்ர துளசி கேக்காமயே எல்லாம் தாறாள்.” என்றான் ரகசியக் குரலில்.
சட்டென்று அவள் முகத்தில் சின்னதாய் வெட்கம். அதைவிட வேகமாக விழிகள் கலங்கின.
“என்னடா?” என்றான் ஆதூரமாக. “அண்ணா தனியா போயிட்டான் எண்டு கவலையா?”
“அதுவும்தான்.” என்றாள் குரல் அடைக்க.
“அதுவும்தான் எண்டா வேற என்ன?”
சட்டென்று கன்னத்தில் கண்ணீர் இறங்க அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. நெருக்கத்தைக் காட்டுகிறாள். அதே நேரம் அழுகிறாள். அவள் முகத்தைப் பிடிவாதமாக நிமிர்த்தி, “என்ன துளசி? என்ன எண்டு சொல்லு.” என்றான்.
“இந்த மாதம் பீரியட்ஸ் வரேல்ல.” அதைச் சொல்லும்போதே திரும்பவும் விழிகள் கலங்கின.
ஒரு கணம் ஒன்றும் விளங்காமல் குழம்பினாலும் அடுத்த கணமே அவன் புருவங்கள் இரண்டும் நம்ப முடியா வியப்பில் உச்சிமேட்டுக்கே உயர்ந்து போயின.
“உண்மையாவா?” என்றான் ஆர்வமும் ஆசையாக.
அவள் ஆமென்று தலையை அசைத்தாள்.
“அதுக்கு ஏன் அழுறாய்?”
“அது… இந்த நேரம் போய்…”
“எந்த நேரமா இருந்தா என்ன? எங்கட பிள்ளை வரப்போற நேரம் நல்ல நேரம்தான்.” என்றவன் அவளைக் கட்டிலில் சரித்து அவள் புறம் திரும்பி, “உண்மைதானே. இல்ல சும்மா ஒரு சந்தேகமா?” என்றான் ஏக்கமும் ஆசையாக.
“உங்களுக்கும் தெரியும்தானே. எனக்கு இப்பிடி நாள் பிந்துறதே இல்லை எல்லா.”
ஒரு கணம் அவள் முகத்தையே பார்த்தவன் அவளை இழுத்து அணைத்து முகம் முழுக்க முத்தமிட்டான். ஒரு கரம் இறங்கி வந்து அவள் வயிற்றைத் தடவிற்று. பெரிதாக அவன் எதையும் பேசவில்லை. அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக்கொண்டான்.
தான் சொன்ன விடயத்தைத் தனக்குள் உணர்ந்து உள்வாங்குகிறான் என்று புரிய, ஒன்றும் சொல்லாமல் அவன் பிடறிக் கேசத்தைக் கோதிக் கொடுத்தாள்.
“நீயே எனக்குக் கிடைப்பாய் எண்டு நான் நினைக்கவே இல்ல. இதுல மிதுக்குட்டியும் சேந்து கிடைச்சதே பொக்கிசம் மாதிரி இருந்தது. ஆனா இப்ப… தேங்க்ஸ் மா!” விழிகள் இலேசாகப் பனித்திருக்கச் சொன்னவன் அவள் உதட்டில் அழுத்தி முத்தம் பதித்தான்.
*****
எப்போதும் எறும்புபோல் மொத்த வீட்டையும் கவனிக்கும் தேவகி, அடுத்த நாள் காலை விடிந்தும் சோர்வுடனேயே வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். மகன் இல்லையே என்கிற அந்த வெறுமை, அவர் விழிகளைக் கசிய வைத்துக்கொண்டே இருந்தன.
அங்கே தோட்ட வீட்டில் சமைக்க பெரிய வசதியோ பண்ட பாத்திரமோ இல்லை என்று தெரியும். அதில் வேகமாகச் சமைத்துத் தூயவனுக்கும் யாழிசைக்கும் கட்டிக் கொடுத்தார்.
துளசி தன் விடயம் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. தமையனும் இல்லாத நேரத்தில் சொல்லப் பிடிக்கவேயில்லை. இதை அறிந்தால் அவர்கள் அளவுக்கு அவனும் மகிழ்வான். அவளுக்காகவே அத்தனை காலம் திருமணம் செய்யாமல் இருந்தவனாயிற்றே. அவரிடம்தான் அடுத்துச் சொல்ல நினைத்தாள்.
குடும்பமாக உணவைக் கொண்டு புறப்பட்டார்கள்.
அங்கே போய்த் தமையனைப் பார்த்ததும் துளசிக்குத் திரும்பவும் விழிகள் கலங்கிக்கொண்டு வந்தன.
“என்ன துளசி?” என்று தூயவன் கேட்டதுதான் தாமதம் அவன் கைக்குள் அடங்கி அழ ஆரம்பித்தாள்.
யாழிசைக்கும் ஒன்றும் விளங்கவில்லை. தூயவன் கொஞ்சம் பயந்துபோனான். “என்னத்துக்கடா அழுறாள்? என்ன செய்தனி அவளை?” என்று குருவைப் பார்த்து அதட்டினான்.
பெண்கள் இருவரும் இருந்துவிட்டார்கள். இல்லையானால் ‘அவளை அம்மா ஆக்கிட்டன்’ என்று சொல்லியிருப்பான் குரு. இப்போதும் அதை நினைத்ததும் அவன் உதட்டில் ஒரு சிரிப்பு.
“எருமை! அவள் அழுறாள். நீ பல்லைக் காட்டுறாய்!” என்று கோபத்தோடு அவனை நெருங்க, “நீ திரும்பவும் மாமா ஆயிட்டாய் மச்சான்.” என்றான் குரு முகம் முழுக்க மலர்ந்து விகசிக்க.
அப்படியே நின்றுவிட்டான் தூயவன். அவன் முகம் விளக்குப் போட்டதுபோல் பட்டென்று மலர்ந்தது. “துளசி உண்மையாவா?” என்று கேட்டவன் குருவை அப்படியே தூக்கி, ஒரு சுழற்றுச் சுழற்றி இறக்கிவிட்டான்.
துளசி கண்ணீருடன் சிரிக்க, யாழிசையின் முகத்திலும் மலர்ந்த முறுவல்.
“அண்ணா, நான் மட்டும் உங்களை மாமா ஆக்கினா காணாது. நீங்களும் என்னை அத்தையாக்கோணும்.” என்றதும் சட்டென்று கணவன் மனைவி இருவர் பார்வையும் சந்தித்தது. அதில் நேற்றைய இரவின் நினைவு வந்துவிட, இருவர் முகத்திலும் மற்ற இருவரும் அறியா ரகசியச் சிரிப்பு.

