மயங்கினேன் மழைச்சிலையே – 2

 

அத்தியாயம் – 2

 

அழைப்பு மணியோசை சத்தத்தில் தன் கைக்கடிகாரத்தைக் கவனித்த அன்பு யோசனையுடன் கதவைத் திறக்க, வெளியே நின்றிருந்த பெண்ணை புருவ முடிச்சுடன் பார்த்தான்.

 

தோளில் ஒரு பெரிய ட்ராவல் பேக், கையில் ஒரு கிட்டார் கேஸ், காலுக்குக் கீழே இரண்டு பெரிய சூட்கேஸ்கள். தலைமுடி கொஞ்சம் கலைந்திருந்தது. அலட்சியமாக சுற்றிலும் பார்த்தபடி நின்றிருந்தாள்.

 

அவளைப் பார்ப்பதற்கு சேல்ஸ் கேர்ள் போலவும் தெரியவில்லை, ஒருவேளை அட்ரஸ் எதுவும் மாறி வந்து விட்டாளோ என்ற சந்தேகத்தில், புருவங்கள் சுருங்க யோசித்தவன், “யார் நீங்க? என்ன வேணும்?” எனக் கேட்டான்.

 

அவனை ஏற இறங்க பார்த்தவள், “இங்க அன்புமதி இருக்காங்களா? நாந்தான் அவங்களோட புது ஹவுஸ் மேட் யுவசக்தி!” சற்று மிடுக்குடன் கூறியவள்,அன்புமதி என்பது பெண்ணென்றே நினைத்திருந்தாள்.

 

“வாட்!!! நீ ஒரு பொண்ணா!!!?” அதிர்ச்சியில் அறிவுகெட்டத்தனமாக கேட்டவன் தன் கேள்வியின் பொருளை உணரவில்லை, ஆனால் அதைக்கேட்ட யுவசக்தி கண்களை உருட்டி இடுப்பில் கையூன்றி அவனை முறைத்தாள்.

 

“ஹலோ மிஸ்டர்! என்ன நக்கலா!!? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? யாரு நீங்க? உங்கள்ட்ட எனக்கென்ன பேச்சு!? தள்ளிப் போங்க.” என்றவள்,

 

அதிர்ந்து நின்ற அன்புவை தனது கிட்டாரைக் கொண்டு இடித்தபடி தன் பொருட்களுடன் வீட்டிற்குள் சென்று பெட்டிகளையும் பையையும் அப்படியே வைத்துவிட்டு தொப்பென ஸோஃபாவில் அமர்ந்தாள்.

 

சட்டென தெளிந்த அன்பு வேகமாக உள்ளே வர, அவளது அழுக்கு கால்களைத் தூக்கி டீ-டேபிள் மீது நீட்டி வைத்து, “ரொம்ப நேரமா மெட்ரோ ட்ரைன்ல நின்னுட்டு வந்தது காலெல்லாம் வலிக்குது.” என்று விளக்கம் வேறு அவளிடமிருந்து.

 

“சரி, அன்புமதியை வரச்சொல்லுங்க. நீங்க யாரு அவங்களோட ப்ரோ வா?! அவங்க கூடவே ஜென்ட்ஸ் இருக்கறதா அவன் எதுவும் எங்கிட்ட சொல்லலையே!” யோசனையுடன் கூறியவள், “எனிவே, என் ரூம் எது?” எனக் கேட்க தீவிரமாக முறைத்து நின்றான் அவன்.

 

“ஹலோ என்ன மேன் நீங்க!? இதுக்கு முன்ன பொண்ணையே பார்த்தது இல்லையா? ஐ நோ, ஐ ம் ப்யூட்டிஃபுல்! அதுக்காக ஒரு மனுசன் இப்படியா கண்ணெடுக்காம பார்க்கறது? ” அவள் அடுக்கிக் கொண்டே போனாள்.

 

அவளை இன்னமும் அதிகமாக முறைத்தபடி கை காட்டி பேச்சை நிறுத்தியவன், “ஐ’ம் அன்புமதி!” நிதானமாகச் சொல்ல, அவனைப் போலவே ‘வாட்!’ என அதிர்வது அவளது முறையானது.

 

ஆனால் அவனைப் போல பெரிதாக அதிர்ச்சி அடையாமல்,”ஓ! ஐம் ஸாரி பாஸ்! நான் அன்புமதின்றது பொண்ணுனு நினைச்சுட்டேன்.” உண்மையாக மன்னிப்புக் கேட்டு பல்லைக் காட்டினாள்.

 

அன்புமதி ஆண் என்பதில் பெரிதாக பாதிக்கப்படாத யுவசக்தி,” இட்ஸ் ஓகே! இங்க இருக்கற ரெண்டு ரூம்ல எனக்கு எந்த ரூம் பாஸ்?!” வீட்டைச் சுற்றி கண்களை அலைய விட்டவள், அந்நிய ஆணுடன் தங்குவதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் வெகு சிரத்தையுடன் கேட்டாள்.

 

அவளை முறைத்து நின்ற அன்பு,”நீ இங்கே எல்லாம் தங்க முடியாது. முதல்ல இடத்தை காலி பண்ணு.” என்றவன் அவளை கவனியாமல் தனது அலைபேசியில் அந்த புரோக்கர் எண்ணிற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.

 

“என்ன வெளாடுறீங்களா? அக்ரிமெண்ட் போட்டு ஃபுல் அமௌண்ட் அட்வான்ஸ் பே பண்ணி இருக்கேன். ஏதோ பிச்சை கேட்டு வந்ததைப் போல விரட்டுறீங்க?” அவனது பேச்சில் மூண்ட எரிச்சலில் படபடத்தவள்,

 

“நீங்க என்ன சொல்றது, நானே சூஸ் பண்றேன். தோ.. அந்த ரூமை எடுத்துக்கறேன்.” என்று அன்புவின் அறையை நோக்கிச் செல்ல, “ஹே!! அது என்னோட ரூம். அதுக்குள்ள போகாதே.” பதறியபடி வேகமாக அவளருகே வந்தான் அன்பு.

 

அவனது பதற்றமான குரலில் நின்ற சக்தி, ஒருநொடி யோசித்துவிட்டு, “ஓ! ஸாரி.. அப்ப நான் அந்த ரூமை எடுத்துக்கறேன்.” வேகமாக அடுத்த அறைக்குள் சென்று கதவடைத்துக் கொள்ள, அன்பு விழிப் பிதுங்கி நின்றான்.

 

ரேயானின் பொருட்கள் எதுவும் அந்த அறையில் இல்லை. வீட்டிற்கு ஆள் வரப் போவதில் ஏற்கனவே அந்த அறையை சுத்தம் செய்திருந்தான் இருப்பினும் இப்படி ஒருத்தி வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை.

 

அறைக்கதவு திறக்கப்பட்டதில் விழித்து நின்ற அன்பு சுயம் திரும்ப, வேகமாக வெளியே வந்தவள் தன் பெட்டிகளை எடுத்துக் கொண்டு தனக்கான அறைக்குள் நுழைய முனைந்தாள்.

 

“ஒரு நிமிஷம்! ” அவனது அழுத்தமான குரல் அவளைத் தேக்கி நிறுத்த, என்னவென்று கண்களில் கேள்வியோடு திரும்பிப் பார்த்தாள் சக்தி.

 

“இந்த வீட்ல தங்கனும்னா சில கண்டிஷன்ஸ் இருக்கு.” என்று கடுமையான குரலில் சொன்ன அன்புவின் பார்வை, வாசலில் ஒவ்வொரு தினுசில் கிடந்த செருப்புகளையும், டீ-டேபிளில் அவள் கால் வைத்ததில் அழுக்கான இடத்தையும் ஒருமுறை வலம் வந்தது.

 

“என்ன பாஸ்! நீங்க ஒன்னும் இந்த வீட்டு ஓனர் கிடையாதே!? ஏதோ மணல்கயிறு படத்துல வர்ற மாதிரி எட்டு கட்டளை போடுவீங்க போல,” கேலியாகச் சிரித்தாள் சக்தி.

 

“ம்ப்ச்! நான் ஓனர் கிடையாது தான். ஆனா ஓனர் என்னை நம்பித் தான் இந்த வீட்டை வாடகைக்கு விட சம்மதிச்சு இருக்காரு. அதனால என்னோட கண்டிஷன்ஸ்க்கு ஓகேனா மட்டும் மேற்கொண்டு பேசு. இல்லனா இடத்தை காலிபண்ணு.” கண்டிப்புடன் கறாராகக் கூறினான்.

 

அவன் சொன்ன தோரணையில் உதட்டைப் பிதுக்கி புருவம் உயர்த்தி ஒருமாதிரி தலையசைத்த சக்தி, “ஓகே ஆஃபிஸர்! சூட் யுவர் கண்டிஷன்ஸ்!” விறைப்பாகக் கூறி சல்யூட் வைத்து நிற்க, தலைசாய்த்து அவளை முறைத்திருந்தான் அன்புமதி.

 

 

error: Alert: Content selection is disabled!!