திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு – 3

அத்தியாயம்-3

 

ஜீவனிதாவின் பேச்சில் முதலில் நொந்துபோனாலும், பிறகு பிறகு எண்ணிப் பார்க்கையில் சிரிப்புத்தான் வந்தது நிரஞ்சனுக்கு.

 

“இன்னும் அந்த குறும்புத்தனம் மாறாம அப்படியே இருக்கிறா..” வாய்விட்டே சொல்லிக்கொண்டான்.

 

அதைவிட, ஏதோ ஒரு வடிவத்தில் அவள் நினைவில் தான் இருக்கிறோம் என்றெண்ணி தனக்குள் சிரித்துக்கொண்டான்.

 

அன்று, தன் வீட்டு மாடி வராண்டாவில் உலாவிக்கொண்டே, ப்ளூடூத்தை காதில் மாட்டி, மும்முரமாக தன் தொழில்துறை தொடர்பாடலில் ஆழ்ந்திருந்தான் நிரஞ்சன். அப்போது அங்கே வந்தான் ரதன்.

 

அவனைக் கண்டுவிட்டு, ‘ஐந்து நிமிடங்கள் பொறு..’ என்பதாக ஐந்து விரல்களையும் குவித்து சைகையில் சொல்லிவிட்டு பேச்சை தொடர்ந்தான் நிரஞ்சன்.

 

சற்று நேரத்தில் பேச்சை முடித்துக்கொண்டு அவன் படியிறங்கியபோது, முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான் ரதன்.

 

சின்னச் சிரிப்போடு அவன் முதுகில் தட்டி, “இண்டைக்கு(இன்றைக்கு) என்னடா?” என்று கேட்டுக்கொண்டே அவனருகில் அமர்ந்தான்.

 

“போங்கண்ணா! வாழ்க்கையே வெறுத்துப்போகுது.” என்றான் ரதன் தலையை பிடித்துக்கொண்டு.

 

“இப்பயேவா? அந்தளவுக்கு என்ன நடந்தது?” சின்ன முறுவலோடு விசாரித்தான்.

 

“அத பிறகு சொல்றன். முதல்ல இதுக்கு ஆர்(யார்) காரணம் என்று கேளுங்கோ! எனக்கு அக்கா எண்டு(என்று) ஒருத்தி இருக்கிறாள் எல்லா, அவள்தான்!” என்றான் பல்கலைக் கடித்துக்கொண்டு.

 

“ஆட்டக்கடிச்சு மாட்டைக்கடிச்சு கடைசில என்னையே கடிச்சிட்டாள்.”

 

“சும்மா இருக்கவே மாட்டா போல. அங்க இருந்துகொண்டு அப்படி என்னதான் செய்தவள்?” என்றான் சுவாரசியமாக.

 

“என்னையும் அம்மாட்ட போட்டுக் குடுத்திட்டாள் அண்ணா. பள்ளிக்கூடத்துல ஒருத்தி வடிவா(அழகா) இருக்கிறாள் எண்டு வாய் தவறி எப்பயோ சொன்னத நினைவு வச்சு, இந்த லீவுக்கு அவளை காலிக்கு அனுப்பச்சொல்லி நான் பெரியம்மாட்ட கேக்கேல்லையாம் எண்டு அத அம்மாட்ட போட்டுக் குடுத்திட்டாள். இந்தம்மா தையா தக்கா எண்டு குதிக்கிறா.” என்றவனைப் பார்த்து வாய்விட்டே நகைத்தான் நிரஞ்சன்.

“டேய் பதினஞ்சு வயசிலேயே சைட்டா? நானே இன்னும் செய்யேல்லடா.” வேண்டுமென்றே அவனைச் சீண்டினான்.

 

“போங்கண்ணா! உங்கட ரேஞ்சுக்கு இந்த ஊர்ல எவள் இருக்கிறாள்? வெள்ளைக்காரி யாரையும் பாருங்கோ நீங்க.” என்றவனின் பேச்சில் நிரஞ்சனின் புன்னகை விரிந்தது.

அந்த இலகுத்தன்மையாலோ என்னவோ, “இவ்வளவு அட்டகாசம் செய்ற உன்ர அக்கா என்ன படிக்கிறாள்?” என்று தானாகவே அவளை பற்றி விசாரித்தான்.

“ஏஎல்(ப்ளஸ் டு) அண்ணா. மேத்ஸ் எடுக்கிறாள்.”

 

“படிப்பாளா?”

 

“அதெல்லாம் நல்லா படிப்பாள். பெரியம்மா தான் சும்மா சும்மா சோலியை விலைக்கு வாங்கிக்கொண்டு வாறாள் எண்டு கத்திக்கொண்டு இருப்பா.” என்றவன்,

 

“இவளுக்கு ஏதாவது செய்யோணும்! எப்பயாவது என்னட்ட மாட்டுவாள் தானே.. அப்ப இருக்கு சிங்காரிக்கு.” என்று கறுவிக்கொண்டான்.

 

“விடுடா.! அவள் சின்னப்பிள்ளை தானே.”

 

“அப்ப நான்..?” முகத்தை சுருக்கிக்கொண்டு சண்டைக்கு வந்தான் அவன்.

 

கண்களில் சிரிப்போடு, “டேய் நீ வளந்த ஆம்பிளப்பிள்ளைடா. நீதான் விட்டுக்கொடுத்து நடக்கோணும்..” என்றான் நிரஞ்சன்.

 

“வரவர நீங்களும் அவளுக்கே சப்போர்ட் செய்றீங்க, அம்மா மாதிரி. ஆனால் ஆர்(யார்) என்ன சொன்னாலும் நான் விடமாட்டன் அவளை!”

 

“அதுதான் விடு என்று சொல்றேனே. சும்மா அதையே பிடிச்சு தொங்காத. அவள் உன்ர அக்கா. சும்மா விளையாட்டுக்கு செய்திருப்பாள். அதப்போய் பெருசா எடுக்கிறதா?”

 

அவனும் ஜீவனிக்காகவே கதைக்கவும் ஆத்திரம் பொங்கிவிட்டது ரதனுக்கு.

 

“உங்கட மண்டைய உடைக்கிறதுக்குத்தான் அவள் காலிக்கே வரோணும் எண்டு நிக்கிறாள். அது தெரியாம அவளுக்கு சப்போர்ட் செய்றீங்க நீங்க.” என்றுவிட்டான்.

 

கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு சோபாவில் இலகுவாக சாய்ந்திருந்த நிரஞ்சன், “ஏன் தெரியாம? நல்லா தெரியும்.” என்றான் இதழ்களில் மலர்ந்த குறுஞ்சிரிப்போடு.

 

“தெரியுமா? எப்படி?” குழம்பினான் ரதன்.

 

உடனேயே எப்படி என்று பிடிபட்டதும், “அப்ப அவள் கதைச்சது எல்லாம் உங்களுக்கு கேட்டிருக்கு.” என்றான் முகத்தில் அசடு வழிய!

“உன்ர கொக்காக்கு எப்பயாவது மெல்ல கதைக்கத் தெரியுமா? இந்த ஊருக்கே கேட்டிருக்கும் பக்கத்தில இருந்த எனக்காடா கேக்காது?” என்று கேட்டுச் சிரித்தான் நிரஞ்சன்.

“ஐயோ அண்ணா! அதெல்லாம் சும்மா பகடிக்கு அக்கா கதைச்சவள். சீரியஸா எடுக்காதீங்கோ.” என்றான் அவன்.

 

சிரிப்போடு இவன் பார்க்க சிறு தயக்கத்தோடு, “எடுக்கமாட்டீங்க தானே..” என்று கேட்டான்.

 

எட்டி அவன் தலையில் தட்டினான் நிரஞ்சன். “அவள் ஒரு ஆள் எண்டு அவள் கதைச்சதை எல்லாம் நான் பெருசா எடுக்க! போடா!” என்றான் அப்போதும் குறுஞ்சிரிப்போடு.

“அந்தக் கதைய விட்டுட்டு வா நாங்க விளையாடுவோம்..” என்று அவனோடு வாலிபால் விளையாடச் சென்றான்.

 

அடுத்தடுத்து வந்த நாட்களில், அவளின் குறும்புத்தனமான பேச்சை திரும்பத் திரும்ப அசைபோட்டு ரசித்தான். மனதுக்குள் சிரித்துக்கொண்டான். எப்போதும் அவளின் நினைவுகள் நெஞ்சை சுகமாய் வருடிச் சென்றன!

 

இப்போதெல்லாம் ரதன் வரும் நாட்களில், அவள் அழைக்கமாட்டாளா என்கிற ஆர்வம் மெல்ல மெல்ல தலைதூக்கத் தொடங்கிற்று நிரஞ்சனுக்கு.

என்னடா இப்படி எதிர்பார்க்கிறோம் என்று சிரிப்பு வந்தாலும், அந்த ஆவலை அடக்க முடியவில்லை.

 

அன்று ரதனும் நிரஞ்சனும் வாலிபால் விளையாடி கொண்டிருந்தனர். ஜீவனி அழைக்கவும், விளையாட்டு சுவாரசியத்தில், “அக்கா வை! நான் பிறகு எடுக்கிறன்.” என்றுவிட்டு ரதன் கட் செய்தான்.

 

நிரஞ்சனோ வேகமாய் வந்து பெஞ்சில் அமர்ந்துகொண்டான்.

வியர்த்து விறுவிறுத்து நின்ற ரதன் கேள்வியாக பார்க்க, தன் ஆவலை மறைத்துக்கொண்டு, “ஏதும் முக்கியமா இருக்கப்போகுது. எடுத்துக் கதைச்சிட்டு வா, பிறகு விளையாடலாம்.” என்றான், அருகிலிருந்த டவலால் வியர்த்து வழிந்த முகத்தை துடைத்தபடி.

 

“நீங்க வேற! இண்டைக்கு யாரோட என்ன வம்ப இழுத்தாளோ..” என்றுவிட்டு, வேறு வழியின்றி தானும் நிரஞ்சனின் அருகில் அமர்ந்து அவளுக்கு அழைத்தான் ரதன்.

 

“சொல்லுடா…”

 

“என்ன சொல்லுடா? மனுசன கொஞ்ச நேரமாவது நிம்மதியா விளையாட விடுறியா? எப்ப பாரு நொய்யி நொய்யி எண்டு போனை போட்டுக்கொண்டு!” என்று கடுகடுத்தான் இவன்.

 

“என்னோட கதைக்கிறத விட உனக்கு விளையாட்டு முக்கியமாப் போச்சு போல. பொறு சித்திக்கு போன போடுறன் இப்ப..” என்று அவள் மிரட்ட, சத்தியமாக மிரண்டே போனான் ரதன்.

 

ஏற்கனவே அவள் போட்டுக்கொடுத்ததில் இருந்து அவன் இன்னும் மீளவில்லை. எங்கு வெளியே போய் வந்தாலும் தாய் சந்தேகக்கண்ணோடு அவனை பார்க்கத் தொடங்கியிருந்தார்.

 

இதில் அவ்வப்போது, ‘முளைச்சு மூண்டு இலை விடேல்ல இதுக்குள்ள துரைக்கு பெட்டை(பெண்) கேக்குதாம் பெட்டை!’ என்கிற குத்தல் வேறு!

 

இந்த போர்க்கால சூழ்நிலையில், இன்னொரு ‘போட்டுக்கொடுத்தலுக்கு’ அவன் தயாராயில்லை!

 

எனவே, “என் ரத்தத்தின் ரத்தமே! கூடப் பிறக்காத உடன் பிறப்பே! நீ கத ராசாத்தி கதை! கதைக்கப் பிறந்தவள் நீ! அத கேக்க பிறந்தவன் நான்! சொல்..லு..டி அக்..கா!” என்றான், கடைசி வார்த்தைகளை அவள் அறியாமல் கடித்துத் துப்பி.

 

பெஞ்சில் இலகுவாக அமர்ந்து, கால்களை முன்னால் நீட்டி ஒரு காலுக்கு மேலே மற்ற காலை போட்டுக்கொண்டு கையில் கைபேசியை பிடித்தபடி, பெயருக்கு அதை நோண்டிக்கொண்டிருந்த நிரஞ்சனின் உடல் மௌனச்சிரிப்பில் குலுங்கியது.

 

“அது! அப்படி வா வழிக்கு!” என்றவள், “அதுசரி.. இவ்வளவு ஆர்வமா அதுவும் என்ர ஃபோனை கட் பண்ற அளவுக்கு யாரோட என்ன விளையாடிக்கொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டாள்.

 

“நிரஞ்சன் அண்ணாவோட, வாலிபால்..”

 

தன் பெயரைக் கேட்டதும் காதை தீட்டிக்கொண்டான் நிரஞ்சன்.

 

‘இண்டைக்கு என்னத்த சொல்லப் போறாளோ…’ மனம் பரபரத்தது.

 

அவளும் அவனை ஏமாற்றவில்லை. “அந்த மங்கி சொங்கியோட உனக்கு என்ன விளையாட்டு? அவன் எல்லாம் உன்ன சேர்க்க மாட்டானே. சரியான திமிர் பிடிச்ச கழுதை!”

 

ரதன் அதிர்ந்துபோய் பட்டென்று நிரஞ்சனைத்தான் திரும்பிப் பார்த்தான். இவனுக்கு கேட்டிருக்குமே என்று.

 

அதைக் கேட்டிருந்தவனோ சத்தியமாக அன்றும் நொந்து நூலாகித்தான் போனான்.

 

‘இவளுக்கு அப்படி என்ன பாவத்தை செய்தனான் எண்டு இந்த வாங்கு வாங்குகிறாள்?’

 

‘அண்டைக்கு பயில்வான் பக்கிரி.. இண்டைக்கு மங்கி சொங்கி, கழுதை.. கடவுளே..’

 

உள்ளூர நொந்துபோனாலும், வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் தன்னை பார்த்துக்கொண்டிருந்த ரதனிடம் ஒற்றை புருவத்தை உயர்த்தினான் மிதப்பாக.

 

அவனோ பேய் முழி முழித்தான்.

 

வெடித்துக்கொண்டு வந்த சிரிப்பை கொடுப்புக்குள் அடக்கிக்கொண்டு, ‘கதை..’ என்று கையால் சைகை காட்டினான்.

 

ரதனோ, ‘நீயெல்லாம் அடங்கவே மாட்டடி அக்கா..’ என்று மனதுக்குள் நொந்தபடி,

 

“ஹிஹி.. அது.. அண்ணா நிறைய விஷயம் விளையாட்டுல காட்டித் தருவார். அதுதான். உனக்குத் தெரியுமா, அவர் வாலிபால் பிளேயர்.” என்றான் சமாளிப்பாக.

 

“அவன் பிளேயரோ இல்ல பிளே போயோ.. நான் நல்ல மூட்ல இருக்கேக்க அந்த பெருச்சாளியப் பற்றி கதைச்சு எனக்கு எரிச்சலைக் கிளப்பாத! ஆனா, அவனிட்ட சொல்லிவை, நான் எதையும் மறக்கேல்ல எண்டு. எண்டைக்கு அங்க வாறனோ அண்டைக்கு அவன்ட மண்டை உடையும். உடைக்காம விடமாட்டன்!” என்றாள் அவள்.

 

‘எத்தன பெயர் எனக்கு! அவளுக்கு நல்லதுதானே செய்தனான். நடந்தது தெரியாம இவ இன்னும் கோபத்தை வளத்து வச்சிருக்கிறா..’

 

இப்படி அவனுக்கு திகிலையும் சுவாரஸ்யத்தையும் தன்னை அறியாமலேயே வழங்கி கொண்டிருந்தாள் ஜீவனிதா.

 

அந்த அனுபவம் அவனுக்குள் ஒருவித ஈர்ப்பை உருவாக்க, இன்னுமின்னும் அவளின் வாயாடித்தனத்துக்கு அவன் ரசிகனாகித்தான் போனான்.

 

ஒரு கட்டத்தில், “அவளிட்ட திட்டு வாங்காட்டி அந்த நாளே விடியாத மாதிரி இருக்கு.” என்று நினைக்கும் நிலைக்கு வந்திருந்தான் நிரஞ்சன்.

 

அதை எண்ணியவனுக்கு என்றும்போல் இன்றும் சிரிப்பு வர, “பார்! எப்படி இருந்த என்ன இப்படி மாத்தி வச்சிருக்கிற வாயாடி..!” என்று செல்லமாக சீராட்டிக்கொண்டான் திரையில் தெரிந்தவளிடம்.

 

ஆசையோடு அவளின் விழிகளை ஏறிட்டவனுக்கு ஏனோ, அன்று அவளை விட்டு அகல மனமேயில்லை!

 

பழைய நினைவுகள் அத்தனையும் மனதில் வலம் வந்ததில், ஆசையும் ஏக்கமுமாய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

எப்படா என்னட்ட வந்து சேருவ? இங்க உனக்காக ஒருத்தன் காத்துக்கொண்டு இருக்கிறான் என்றாவது உனக்கு தெரியுமா?

 

விழிகளால் அவளோடு கதைத்தவன் மனதிலோ ஒரு மெல்லிய பரபரப்பு! ஏதோ ஒரு அலைப்புறுதல். நெஞ்சுக்குள் ஒருவித வலி கிடந்து நமநமத்தது. வெளியே போகவே மனமில்லை.

 

இன்னதென்று இனங்காண முடியாத தவிப்பில் சிக்கித் தவித்தான். “ என்னடா.. இண்டைக்கு ஏன் என்னை போட்டு இந்தப்பாடு படுத்துறீங்க. நேரம் வேற போகுது. நல்லபிள்ளையா என்ன வேலை பாக்க விடுங்க செல்லம். நிறைய வேலை இருக்கு. பாலா வேற கீழ வந்திருப்பான்.” என்றான் அவளை விட்டு நீங்க மனமற்றவனாக.

 

அவன் பேச்சை கேட்கவேயில்லை அவள்! அவளின் விழிகள் இன்னும் அவனை கட்டிப்போட்டது!

 

தன்னை மறந்து, தனக்காக காத்திருக்கும் அத்தனை காரியங்களையும் மறந்து அவளின் விழியோடு தன் விழிகளை கலந்து, அவளுக்குள் தொலைந்து அப்படியே நின்றான்.

 

எவ்வளவு நேரம் கடந்ததோ, மனம் மெல்ல மெல்ல அமைதியடையலாயிற்று!

 

திரையை அப்படியே விட்டுவிட்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.

 

திரும்பவும் மாலை களைத்து வரும்போது அவனை வரவேற்க அவள் சிரித்தமுகமாய் நிற்கவேண்டும்! இதுவே வளமை!

 

 

 

குளித்துவிட்டு, இடையில் கட்டிய துண்டோடு, நீர் சொட்டிக்கொண்டிருந்த கருத்தடர்ந்த சிகைக்குள் கையை விட்டு சிலுப்பியவாறே வந்தான். அவள் அப்போதும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

இதழ்களில் வழிந்த விஷமச் சிரிப்போடு கண்ணடித்தான்.

 

“நான் உடுப்பு மாத்தப்போறன். நல்ல பிள்ளையா கண்ண மூடிக்கோ. ஓகே! இதுவரைக்கும் களவு போகாம காப்பாத்தி வச்சிருக்கிற கற்புமா. உன்னட்ட தான் போகோணும். அதுக்காக இப்பயில்ல. சரியா..” என்றான் அவளிடம்.

 

அவளுக்கு புறமுதுகு காட்டி நின்று தயாராகிக் கொண்டான்.

 

‘இதுவே நிஜத்தில் அவள் அருகிலிருந்தால்…’ கற்பனை தந்த இன்பக்களிப்பில் கள்ளச்சிரிப்பு வழிந்தோடியது அவன் இதழ்களில்!

 

அவளிடம் வந்து, “போற போக்குல என்னையும் உன்ன மாதிரி ஆக்கிடுவாய் போல.. கள்ளி!” என்று செல்லம் கொஞ்சினான்.

 

கையில் கட்டியிருந்த ராடோ நேரமாகிவிட்டதை உணர்த்த, “உன்னோட கதைச்சுக் கொண்டிருந்தா நேரம் போறதே தெரியேல்ல. போயிட்டு வரட்டா? பின்னேரம் கெதியா வரப்பாக்கிறன்.” என்று விடைபெற்றான்.

 

அவளிடம் தலையசைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறியவனின் மனம் நிறைந்திருந்தது. அம்மம்மாவின் படத்தின் முன்னால் சென்று நின்று ஒருகணம் கண்மூடி வணங்கிவிட்டு அந்த நாளை ஆரம்பித்தான்!

 

அவளோடு வாழாமல் வாழ்ந்து கொண்டிருந்தான் நிரஞ்சன்! அவனை வாழவைத்துக் கொண்டிருந்தாள் ஜீவனிதா!

 

error: Alert: Content selection is disabled!!