அத்தியாயம் 15
வீட்டுக்குள் போனதுமே தனது அறைக்குள் புகுந்துகொண்டாள் ஜீவனிதா. விறு விறென்று சேலையை கழட்டி எறிந்துவிட்டு பைஜாமாவுக்கு மாறிக்கொண்டு கட்டிலில் தொப்பென்று விழுந்தாள்.
ஆத்திரமும் அழுகையும் பொங்கிக்கொண்டு வந்தது! உணர்ந்துகொண்ட நேசத்தை அனுபவிக்க வழியின்றி நின்றாள். சொல்லாத காதலை வைத்தே அவளுக்குள் புகுந்தவன் தன் மனதைச் சொன்னானா.. அதுவும் இல்லை. இதில உன்ர நிரஞ்சனாம்!
“போடா!” தொண்டை அடைக்கச் சொன்னாள்.
அழுகை வரும் போலிருக்க, ‘எப்ப பாத்தாலும் இவன்தான் என்னை அழவைக்கிறான்.’ என்று பொத்தென்று கட்டிலில் விழுந்து தலையணையை தூக்கித் தலைக்கு மேலே போட்டுக்கொண்டாள்.
அவன் பார்த்தது.. சேலையில் நின்றவளிடம் மயங்கியது.. கேசத்தை கோதிக்கொண்டது.. அவளின் சேலை முந்தானையை மடியில் போட்டது.. என்று ஒவ்வொன்றும் நினைவலைகளில் மிதந்துவந்து உயிரைக் கரைத்து கண்ணீரை கசியவைத்தது.
‘மனம் விட்டுக் கதைத்திருக்க இப்ப எவ்வளவு சந்தோசத்துல இருந்திருப்பன்! எல்லாத்தையும் கெடுத்துட்டான் விசரன் விசரன்!!’
அவனை திட்டிக்கொண்டே கிடந்தவள் அப்படியே உறங்கிப்போனாள். விழித்தபோது இரவு ஒன்பதை தாண்டியிருந்தது நேரம்.
சுகமாகப் புரண்டவளின் கண் முன்னால் வேட்டியில் நின்று கடவுளை கும்பிட்டவன் தான் வந்து நின்றான். கண்களில் நேசம் பொங்க அவளைப் பார்த்தான். நீதான் என்னுயிர் என்று சொல்லாமல் சொன்னான்.
தேகம் சிலிர்த்தது! எத்தனை அழகாக தன் நேசத்தை கண்கள் வழி அவளுக்குள் கடத்திவிட்டான். உன் நிரஞ்சன் என்றானே.. இதழோரம் சின்ன வெட்கத்தில் மலர்ந்தது. உதட்டைக் கடித்துக்கொண்டாள். காரில் ஏறியபோது அவளின் சேலை தலைப்பை எடுத்து போட்டானே. சுற்றி இருந்தவர்களைப் பற்றி யோசிக்கவே இல்லையே.
அப்போ அந்தக் கண்கள்? அவளுடையவையா? ஓடிப்போய் கண்ணாடியில் பார்த்தாள். நேசம் பொங்கும் விழிகள் அவளுடையதேதான்! மளமளவென்று கண்ணீர் வழிந்தோடியது. இதழ்களில் மட்டும் சந்தோசத்தை அடக்கமுடியாத சிரிப்பு!
அன்றே நினைத்தாளே, இத்தனை காதலுக்கும் சொந்தக்காரி கொடுத்துவைத்தவளாய் இருக்கவேண்டும் என்று. ஒரு பெண் இப்படித்தான் காதலிக்கப்பட வேண்டும் என்று! அது அவள்! அவள்தான் அப்படிக் காதலிக்கப் படுகிறாள்.
வாயால் சொல்லவில்லை. அவ்வளவுதான்! ஆனால், நான் உன்னவன் என்று அத்தனை செய்கையாலும் உணர்த்திவிட்டான். அவளுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்குமே விளங்கியிருக்கும்! இதில் வாய்விட்டுச் சொல்லவில்லை என்று முகத்தை திருப்பிக்கொண்டு வந்திருக்கிறாள் அவள்.
“சரியான லூசு நான்!” தன்னையே திட்டிக்கொண்டாள்.
“ஆனாலும் விடுறேல்ல! அவன்ர வாயால சொல்லவச்சே தீருவன்! ஜீவனியா அவனா? பாப்பம்!” அவனிடம் சவால் விட்டாள்.
மின்னலாய் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள். ஹாலில் ஒருவரையும் காணோம். சித்தி சித்தப்பாவின் அறைக்குள் என்னவோ மெல்லிய குரலில் அவர்கள் யாரோடோ கதைப்பதுதான் கேட்டது. உடனேயே செருப்பை மாட்டிக்கொண்டு பக்கத்து வீட்டுக்கு ஒரே ஓட்டமாக ஓடினாள்.
அவன் வீட்டு வாசலை மிதித்தவள் சட்டென்று நின்று திரும்பி அவனது குடிலை நோக்கி ஓடினாள். அதற்குள் காலை வைத்ததுமே ஒரு சோளார் விளக்கு ஒளிர்ந்தது! அந்த ‘பேப்பர் பாட்’டை எடுத்துப்பார்த்தாள். அப்போதும் பார்வையை அகற்றத்தான் முடியவில்லை. அவளின் கண்களே அவளைச் சிறை செய்தன! அத்தனை காதல் அதில்! இத்தனை நேசத்துக்கும் சொந்தக்காரி அவள். விழியோரத்தில் கோடாய் கண்ணீர் சுரந்தது! தான் எழுதிய இடத்தைப் பார்த்தாள். பதில் இருந்தது!
“ஏற்கனவே தொலைந்துவிட்டவனை மீண்டும் எங்கு தொலைப்பாய்? ஆனாலும், எத்தனை முறைவேண்டுமானாலும் தொலையக் காத்திருக்கிறேன். உன்னிடம் என்றால்!”
ஆக, அவன் தொலைந்தது அவளிடம்தான்! ஆனால் அதைச் சொல்லமாட்டான்! சொன்னால் என்னவாம். அவளின் ஏக்கம் தீருமல்லவா. மீண்டும் கோபம் எழுந்தது. அவனை உண்டில்லை என்று ஆக்கிவிட புயலென அவன் வீட்டுக்குள் நுழைந்தாள்.
பால்கனியில் நின்றிருந்தான் நிரஞ்சன். அவனது அத்தனை நாள் தவம் ஈடேறியதை எண்ணி முற்றிலுமாக மகிழ முடியாமல் நின்றான். ஏக்கத்தோடு பக்கத்துவீட்டு மொட்டை மாடியிலேயே நிலைத்திருந்தது பார்வை. ‘இரவில் கட்டாயம் ஒருமுறையாவது மேலே வருவா. பாக்கலாம் என்றால்.. எங்க இண்டைக்கு காணவேயில்ல. கோபத்தோட வேற போனா..’
காரில் ஏறமுதல் திரும்பிப் பார்த்தவளின் பார்வையே நெஞ்சுக்குள் நின்று வதைத்தது!
மனதைத் திறந்து காட்ட அவனுக்கும் ஆசைதான். அவளோடு கொஞ்சிக் குலவிட ஏக்கம் தான்! அதைச் செய்ய ஒரு நிமிடம் பிடிக்குமா? ஆனால் முடியவில்லை.
அதுநாள் வரை அவன் சொல்லி, அவள் மறுத்துவிடுவாளோ என்றெண்ணித் தயங்கியிருந்தான். பாட்டியின் இழப்பைக் கூட இறுகிப்போய் கடந்தவனால், அவளின் மறுப்பை தாங்குவது என்ன.. நினைக்கக் கூட முடியாது. அதனால்தான் அவள் மனதில் நல்லவகையிலாவது முதலில் இடம்பிடிப்போம் என்று காத்திருந்தான். அவன் கண்கள் அவன் மனதை அவளிடம் சொன்னதும், அவள் மனதில் அவன் குடியேறியதும் அந்தக் காத்திருப்பையும் தாண்டி நடந்தவை.
அவள் மனதில் தானும் இருக்கிறோம் என்பதை அறிந்துகொண்ட இன்று, யாருமில்லாமல் தனித்து நிற்கும் அவனால் அவள் மட்டுமே போதும் என்றெண்ணி அவளிடம் காதலைச் சொல்ல முடியவில்லை.
இனிச் சொல்லி விளங்கவைக்க ஒன்றுமில்லைதான். அவன் சொல்லாமலேயே அவனின் தேவதைப்பெண் விளங்கிக்கொண்டாள் தான். என்றாலும்..
எதையும் பொறுப்போடு செய்து பழகியவன் அவன். நெஞ்சுமுட்ட நேசம் இருந்தாலும் விடலைபையன் போன்று நடக்க முடியவில்லை. பாட்டியின் வளர்ப்பும் அதற்கு விடவில்லை.
அவர்கள் இருவரது மனங்களின் சங்கமம் இத்தோடு முடிவதில்லையே. இதுதானே ஆரம்பமே! இளம் பருவத்தினர் போன்று மனதுக்கு பிடித்தவளின் சம்மதம் கிடைத்தால் மட்டும் போதும் என்று எண்ண அவன் பொறுப்பற்றவன் அல்லவே. அவர்களது நேசத்தின் மெய்யான வெற்றியே அவளின் குடும்பத்தினர் சந்தோசமாய் அவளை அவனிடம் ஒப்படைக்கையில்தானே உண்டாகிறது.
அதற்கான வேலையைத்தான் செய்துவிட்டுக் காத்திருக்கிறான்.
ஆனாலும், அவளின் மனதை காயப்படுத்தி விட்டேனோ? என்று மனம்
அல்லாடியது.
ஒரு வார்த்தையாவது அவளுக்கு பிடித்தவகையில் கதைத்திருக்கலாமோ? ஆனால், கதைப்பதோடு அவன் மனம் நிற்குமா? அங்கேதான் ஆபத்தே தொடங்குகிறதே! அவன் மீதே அவனுக்கு நம்பிக்கையில்லை! அவளோ.. எப்போதுமே கரையுடைந்த வெள்ளம் தானே!
எத்தனை நாள் ஆசை? எத்தனை நாள் ஏக்கம்? அவனிடத்தில் பெருமூச்சொன்று கிளம்பிற்று !
“ஹலோ! அங்க என்ன லுக்கு? நான் இங்க நிக்குறன்.” ஜீவியின் குரல் திடீரென்று பின்னால் கேட்கவும் வேகமாகத் திரும்பினான் நிரஞ்சன்.
“என்னை என்ன சைட் ஏதும் அடிக்கிறீங்களா?” அவன் திரும்புவதற்காகவே காத்திருந்தவள் நேராகக் கேட்டாள்.
வியப்பில் நிரஞ்சனின் புருவங்கள் உயர்ந்தன. உதட்டோரம் சிடிப்பில் துடிக்க, அவளையே பார்த்திருந்தான்.
அவள் கையில் அவன் வரைந்துவைத்த விழிகள். இன்றைக்கு அவனை பந்தாடப்போகிறாள் அவனின் தேவதை என்று அவனுக்கு விளங்கிவிட்டது!
“கேட்டது விளங்கேல்ல?! சொல்லுங்க, என்னை சைட் ஏதும் அடிக்கிறீங்களா?” அதட்டினாள்.
அதை ரசித்துக்கொண்டே, “இல்லை.” என்று உறுதியாக மறுத்துத் தலையசைத்தான் அவன்.
“அப்ப நீங்க பாக்கிற பார்வைக்கெல்லாம் என்ன அர்த்தம்? இது என்ன?” கையில் இருந்த பேப்பரைக் காட்டிக் கேட்டாள்.
பதில் சொல்லாமல் அப்போதும் அவளையே பார்த்தான்.
“ஐயோ..! இந்தக் கண்ணால என்ன பாக்காதடா! மீறி பாத்தா உன்ன கொன்டே போட்டுடுவன்!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
அவன் விழிகளில் ரசனை படர்ந்தது. ‘என்ர ராட்சசிக்கு இவ்வளவு கோபம் வருமா?’ இதழ்களில் பூத்த புன்னகையோடு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு,உனக்கு என்னை என்ன செய்ய விருப்பமோ செய்! என்கிற பாவத்தோடு.
பால்கனி சுவரில் இலகுவாக சாய்ந்துகொண்டான்.
அது அவளின் கோபத்தை இன்னுமே தூண்டிவிட்டது. அவன் நேசம் அவள் மீதுதான். அவளுக்குத் தெரியும்! என்றாலும் அதை ஒருவார்த்தையில் சொல்லிவிட்டால் அவள் மனம் சந்தோசப்படுமே! அமைதி அடைந்துவிடுமே! எதற்காக சொல்ல மறுக்கிறான்?
வேகமாக அவனருகில் வந்து, “என்ன பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு? எப்ப பாத்தாலும் என்னையே பாக்கிறது, கண்ணடிக்கிறது, வம்பிழுக்கிறது.. நான் என்ன நீங்க விளையாடுற பொம்மையா?” என்று அவன் சட்டைய பிடிக்காத குறையாக கேட்டாள்.
“நிச்சயமா இல்ல. முதல்ல இந்த நேரத்துல இங்க ஏன் வந்தாய்? வீட்டுக்கு போ! யாரும் பாத்தா என்ன நினைப்பீனம்.” என்றான் தன்மையான குரலில்.
“என்ன இப்படி வரவச்சது நீங்கதான். உங்கட பார்வைதான். சொல்லுங்க.. என்ன விரும்புறீங்களா நீங்க?” அவன் வாயால் வரவழைத்தே தீருவேன் என்கிற உறுதியோடு அவள் கேட்டபோது,
நெஞ்சம் முழுக்க அவளை நிரப்பி நின்றவனோ பதில் சொல்ல முடியாமல் நின்றான்.
பெரியவர்களிடம் பேசியாயிற்று. நீங்கள் எல்லோரும் முழுமனதோடு உங்கள் வீட்டுப் பெண்ணை என்னிடம் தரவேண்டும் என்று ஜம்பமாக சொல்லிவிட்டு, இங்கே இவளிடம் காதலை சொல்வது சரியா என்று தடுமாறினான்.
தான் வாய்விட்டுக் கேட்டும் அவன் பதில் சொல்லாதது, ஜீவனிதாவுக்கோ அழுதுவிடுவோமோ என்று பயமாய் போயிற்று! இந்தளவு தூரம் இறங்கி வந்தும் அசைகிறான் இல்லையே!
‘இல்ல அழமாட்டன்! நான் ஏன் அழோணும்?’ கோபத்தோடு நிமிர்ந்தாள்.
“நீங்க என்ன விரும்புறீங்க. அது எனக்கு நல்லா தெரியும்! கோயில்ல வச்சு அத சொல்லுவீங்க எண்டு எதிர்பாத்தனான். சொல்லேல்ல. இப்ப நானே உங்கள தேடி வந்து கேட்டும் நீங்க சொல்லேல்ல. ஆனா, அத உங்கட வாயால கேக்காம நானும் இந்த இடத்தைவிட்டு போகமாட்டன்!” என்றவள் எதிரே இருந்த அறைக்குள் வேகமாக சென்று கட்டிலில் சட்டமாக அமர்ந்துகொண்டாள்.
தன்னவளின் புயல் போன்ற ஆக்கிரமில் சிக்கித் தவித்தான் நிரஞ்சன். அந்த நொடியே உன்ன பிடிக்கும் டா. உயிருக்கும் மேலால உன்ன காதலிக்கிறன் என்று கத்தி சொல்லி, அவளை ஆயிரம் முத்தங்களால் அர்ச்சிக்க உடம்பின் ஒவ்வொரு அணுவும் துடித்தது.
அவளிடம் பாயத்துடித்த கால்களையும், அவளை அள்ளியணைக்கத் துடித்த கைகளையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறினான். இதற்குத்தானே அவன் பயந்ததே! மூச்சை இழுத்து வெளியேற்றினான். தலைமுடியை கையால் அழுத்திக் கோதினான். முடியவில்லை!
‘அவ அங்க இருந்து தவிக்கிறாளே..’ இவன் இங்கு நின்று துடித்தான்.
இந்த நிலையில் காதலை சொன்னால்.. சொல்வதோடு மட்டும் நிற்குமா என்றுதான் தெரியவில்லை. எத்தனையோ வருடங்களாக காத்திருந்த காதல் இல்லையா, தொடக்கூடாது எல்லைகளைத் தொட்டுவிடுமோ என்று அஞ்சினான். அவனின் செல்லக்கிளிக்கும் எல்லைகள் என்பது எதிலுமே இல்லையே! ஆபத்தில் முடியுமோ என்று அவன் பயப்பட.. அப்போதுதான் உறைத்தது அவள் சென்றது தன் அறைக்கு என்று.
‘ஐயோ.. அங்க அவ வீடியோ இருக்கே.. கண்ணால பாத்ததுக்கே இந்த துள்ளு துள்ளினா.. கடவுளே..’ நெற்றியில் அறைந்துகொண்டு அறைக்குள் விரைந்தான்.

