திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு 17 – 1

அத்தியாயம் 17

அடுத்தநாள் காலை, உதடுகளில் உறைந்துகிடந்த புன்னகையோடு வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தான் நிரஞ்சன். மனமெல்லாம் ஜீவனிதாவே நிறைந்திருந்தாள். முதல் நாளிரவு அவனை முற்றிலுமாக சுழற்றி அடித்து தன் கடைக்கண் பார்வையில் முடிந்துகொண்டாளே!

“எப்ப பாத்தாலும் வேல வேல எண்டு ஓடுங்க. புதுசா காதலிக்க ஆரம்பிச்சு இருக்கோமே. இனியாவது பொறுப்பா இருப்போம் என்ற எண்ணம் கொஞ்சமாவது இருக்கா?” கணீர் என்று காதை நிறைத்த குரலில் வேகமாகத் திரும்பினான் நிரஞ்சன்.

இடுப்பில் கைகளை வைத்தபடி அறைவாசலில் நின்றிருந்தாள் அவள். இமைக்கவும் மறந்து பார்த்தான். அந்த அறையில் கழிக்கும் ஒவ்வொரு நொடித்துளிகளையும் அவளின் நிழலோடுதான் வாழ்வான். இன்று நிஜமே கண்முன்னால் நிற்கவும் பனிச்சாரல் சில்லென்று தாக்கியதுபோல் உறைந்துபோனான்.

நேற்றும் வந்தாள் தான். ஆனால், அழுகை, சந்தோசம், கண்ணீர் என்று அனைத்தும் ஒன்றாக புரட்டிப் போட்டதில் இதை உணரத் தவறியிருந்தான்.

“ஹலோ பாஸ்.. என்ன பார்வை இது?” ஒரு கை இடுப்பிலேயே இருக்க மற்றக் கையால் கேள்விகேட்டாள்.

அவளின் பாவனையில் மனம் பிறழத் தொடங்க, “என்ன விடியக்காலமையே இந்தப்பக்கம்?” என்றான் வேண்டுமென்றே.

“நீங்கதானே பகல்ல எண்டா பரவாயில்ல எண்டு சொன்னனீங்க?”

‘அடிப்பாவி! ஒரு பேச்சுக்கு சொன்னா.. அத வச்சே மடக்குறாளே..’ சிரிப்பு வந்தது அவனுக்கு.

“ஆன்ட்டி அங்கிள் யாரும் வீட்டுல இல்லையா?”

பக்கத்தில் போகவே பயந்தான். கையும் மனமும் அவளுக்கும் அவளின் அருகாமைக்கும் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தது.

“சித்தி சமைக்கிறா. சித்தப்பா ஜாக்கிங். ரதன் இன்னும் எழும்பேல்ல..” என்று அவள் சொல்லும்போதே, “நீ ஒருத்தருக்கும் சொல்லாம இங்க ஓடி வந்துட்ட.” என்று முடித்துவைத்தான் அவன்.

“எஸ் பாஸ்!” நாடகபாணியில் தலையசைத்துச் சொன்னாள் அவள்.

அவளின் சின்னச்சின்ன அசைவுகள் ஒவ்வொன்றும் அவனை தலைகீழாக பிரட்டிப் போட்டுக்கொண்டிருந்தன. அதை அடக்க முயன்றுகொண்டே, “எல்லாம் சரி.. கும்பகர்ணி என்ன இண்டைக்கு நேரத்துக்கே எழும்பியாச்சு?” குறும்பாக கேட்டுக்கொண்டே கண்ணாடி முன்னால் சென்று நின்று தலை வாரினான் நிரஞ்சன்.

அவனுக்குப் பின்னால் சென்று நின்று கண்ணாடியில் முறைத்தாள் ஜீவனி.

கைகள் இரண்டும் செயலிழக்க, அவளின் விழிகளுக்குள் அவன் விழுந்துகொண்டிருக்க, “விடிஞ்சதுமே உங்கள பாக்கோணும், உங்களோட கதைக்கோணும் மாதிரி இருந்தது. நீங்களும் தனியா இருக்கிறீங்களே எண்டு வந்தா.. நக்கல்! நான் போறன்..” என்று முறுக்கிக்கொண்டு அவள் கிளம்பவும், வேகமாக அவளைப் பற்றி அருகிழுத்தான்.

அவளின் இரண்டு கரங்களையும் தன் கரங்களால் சிறை செய்து, தன் விரல்களை அவளின் விரல்களோடு பிணைத்தபடி, “எனக்கும் எழும்பினதும் உன்ன பாக்கோணும் மாதிரித்தான் இருந்தது. என்ன செய்யலாம் எண்டு யோசிச்சுக்கொண்டு வெளிக்கிட நீயே வந்திட்டாய்.” என்றான் அவனும்.

“பொய் சொல்லாதிங்க! வேலைக்கு வேக வேகமா வெளிக்கிட்டுக்கொண்டு நிக்கிறீங்க. இதுல என்ன பாக்க ஆசையாம். நான் நம்ப மாட்டன்!” என்று அணிந்திருந்த ஜிமிக்கிகள் ஆட மறுத்துத் தலையசைத்தாள்.

அவன் மனமும் கட்டுப்பாட்டை இழந்து ஆடத் தொடங்கிற்று!

“என்னை விரும்புறத கூட நானா கேக்கிறவரைக்கும் சொல்லாத ஆள் தானே நீங்க.” என்று முறைத்தாள் அவள்.

“நான் சொல்லமுதல் அவசர குடுக்கையா ஓடிவந்து கேட்ட ஆள்தானே நீ..” விளையாட்டாகச் சொல்லி, அப்போதும் ஆடிக்கொண்டிருந்த ஜிமிக்கையை தட்டிவிட்டான் நிரஞ்சன்.

“நாங்கெல்லாம் சின்னதா ஒரு பொறி தட்டினா போதும் உடனேயே நெருப்பாக்கிடுவோம். உங்கள மாதிரி வச்சு வடிவு(அழகு) பாக்கமாட்டம்” என்று அவள் சொல்லும்போதே அவனது செல் இசை பாடியது.

அதை எடுத்து, “இன்னும் கொஞ்சத்துல வந்துடுவன் பாலா.” என்று சொல்லி வைத்தான்.

“எங்க போகப்போறீங்க?”

“வேலைக்குத்தான். உன்ன வச்சு காப்பாத்த காசு வேண்டாமா?” என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

“ரெண்டும்பேரும் எங்கயாவது வெளிய போகலாம் எண்டு நான் நினைச்சேன்.” என்றாள் முகம் வாட.

அணிச்சம் மலராய் வாடிவிட்ட முகம் மனதைப் பிசைய, அவளை நெருங்கி, ஒற்றை விரலால் நாடியைப் பற்றி நிமிர்த்தினான்.

“உனக்கு மட்டுமில்ல எனக்கும் அந்த ஆசை நிறைய இருக்கு. உன்ன கூட்டிக்கொண்டு இந்த உலகத்தையே சுத்தி வரோணும் எண்டு. கட்டாயம் போவம். ஆனா, அதுக்கு கொஞ்ச நாள் நீங்க வெயிட் பண்ணோணும் செல்லம். இப்ப அது கூடாது. யோசிச்சுப்பார், உன்ர அம்மாவும் அப்பாவும் உன்ன நம்பித்தானே இங்க அனுப்பி வச்சவே. அந்த நம்பிக்கைய உடைக்கிற மாதிரி நாங்க என்றைக்கும் நடக்கக் கூடாது. கல்யாணத்துக்கு பிறகு நீ விரும்பினமாதிரி எல்லா இடத்துக்கும் போகலாம்..” என்றான் சமாதானமாக.

அவன் சொல்வது அவளுக்கு விளங்காமலில்லை. ஆனால், அவனோடு வம்பளப்பதையும் அவள் விடுவதாயில்லை. “கல்யாணத்துக்கு பிறகா? காதல்ல இருக்கிற கிக் கல்யாணத்துல வராது பாஸ்!” என்றாள் பாவனையாக.

“அதெல்லாம் வரும். வரவைக்க எனக்குத் தெரியும்!”

“ஐயோ வராது! சத்தியமா நம்புங்க!” என்றாள் அவள்.

“வராதா?” கேட்டுக்கொண்டே அவளை நெருங்கினான்.

“வராது!” என்றாள் கன்னங்கள் சூடேற.

“அதையும் பாப்பம்..” என்றவன் அவளை நெருங்கி நின்றான். அவள் மீது படவில்லை அவ்வளவுதான். இவளுக்கோ தடதடக்கும் இதயத்தின் ஓசை அவனுக்குக் கேட்டுவிடுமோ என்றிருந்தது.

ஒற்றை விரல் கொண்டு அவளின் முகவாயை பற்றி நிமிர்த்தினான். விழிகள் அகல அவனையே பார்த்தாள். அதே விரல் உயர்ந்து நெற்றி முடிகளை ஒதுக்கிவிட்டு, கரிய நீண்ட புருவங்களை வருடிக் கொடுத்தபோது மயக்கமே வந்துவிடும் போலிருந்தது அவளுக்கு. முகம் சூடேறிச் சிவந்தது. ஆசையோடு கன்னம் வருடினான். மெல்லச் சிரித்தான். நாணம் கொண்ட விழிகளால் அவள் பார்க்க, புருவங்கள் இரண்டையும் உயர்த்தி என்ன என்று கேட்டான்.

‘கள்ளன்!’ அவள் படும் பாட்டை அறிந்தே கேட்கிறான். தாங்க மாட்டாமல் அவள் கீழுதட்டை பற்களால் பற்ற, அவன் பார்வை தானாக அங்கே பாய்ந்தது!

‘ஐயோ..! அவனுக்கு நீயே சான்ஸ் குடுப்பியாடி!’ பட்டென்று இதழை விடுவித்தாள். அவனது மோகப் பார்வையில் மூச்சடைத்துபோய் அவள் நிற்க, செப்பிதழ்களை பார்த்தவனின் நிலையும் அதேதான்.

ஈரலிப்பான இதழ்கள் இரண்டும் இணைந்திருந்த பள்ளத்தாக்குக்குள் விழுந்து மூழ்கிவிடத் துடித்தது அவன் இளம் மனது!

ஆசையோடு அந்த இதழ்களை வருடிக் கொடுத்தான். அங்கிருந்து விரல்களை மீட்கப் பிடிக்காமல் அவற்றை அங்கேயே விட்டுவிட, உணர்வுகளின் பிடியில் சிக்கியவள் கண்களை இறுக்கி மூடினாள். கால்கள் பலத்தை இழக்க, பிரவாகமாகப் பொங்கிய உணர்வுகளில் தேகம் தள்ளாடத் தொடங்கவும் அதை தாங்கமாட்டாமல், “நி..ர..ஞ்ச..ன்.” என்றபடி அவன் மார்பிலேயே தஞ்சமானாள்.

நிரஞ்சனின் நிலையும் அதே! அவளை ஒரு கை வளைத்திருக்க மறுகையால் தன் கேசத்தைக் கோதிக்கொண்டான். நெடிய மூச்சை இழுத்துவிட்டான். அப்போதும் தன் மார்புக்குள் புதைந்து கிடந்தவளை மெல்ல அணைத்து, அவள் காதோரம் குனிந்து, “சாரிடா.” என்றான் மெல்ல.

“எதுக்கு?” அவன் மார்பிலிருந்து விலகாமல் கேட்டாள்.

சிரிப்புத்தான் வந்தது அவனுக்கு. இன்னுமே அவள் தேகத்தின் நடுக்கம் நிக்கவில்லை. தாறுமாறாக துடித்த இதயத்துடிப்பை இன்னும் அவன் உணர்ந்துகொண்டிருந்தான். இருந்தும் வாயாடுகிறாள்.

error: Alert: Content selection is disabled!!