ஆழியே மெளனம் ஏனோ 14 – 2

தயக்கமும், களங்கிய முகமுமாக வந்தாள்

அதே நேரத்தில்…

“ஆழினி… இங்க வா…” என்ற குரலில்

நிமிர்ந்து பார்த்தவளுக்கு நிம்மதியானது.

அது நித்திய மயூரி. புதிய இடத்தில் அவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.

அவளருகே சென்றாள் ஆழினி.

அவள் கையைப் பிடித்து, தனக்கும் மதுராவுக்கும் நடுவில் அமர வைத்தாள் நித்ய மயூரி.

அதைப் பார்த்த மதுரா முகத்தைச் சுளித்தாள்.

“ஏன் டி முறைக்கிற?” என்று சிரித்தபடி கேட்டாள் நித்திய மயூரி.

“உனக்கும், எனக்கும் நடுவுல எதுக்குடி புதுசா இவளை சேர்க்குற?”

“ஹேய்! நான் அன்னைக்கு சொன்னேன்ல மேக்ஸ் சூப்பரா ஒரு பொண்ணு சொல்லி கொடுத்துச்சுன்னு. அது இவ தான். நம்ம ரெண்டு பேரும் டவுட்ஸ இவக் கிட்ட கேட்கலாம்.” என்று அவளை நடுவில் வைத்துக் கொண்டு இருவரும் ரகசிய பேச.

அவளோ பேந்த, பேந்த முழித்தாள்

“என்னது படிப்ஸா நமக்கெல்லாம் செட் ஆக மாட்டா. வேற எங்கயாவது உட்காரச் சொல்லு…” என்று உதட்டைச் சுழித்தாள் மதுரா.

உடனே நித்திய மயூரி சிரித்தபடி,

“நல்லா படிக்கிறவங்க கூட இருந்தாத்தான் நாமளும் நல்லா படிக்க முடியும். அதுவும் நம்ம ரூம்ல ஒரு பெட் காலியா இருக்கே… ஆழினியையும் நம்ம கூடவே தங்க வச்சுக்கலாம்…” என்றாள்.

அவள் சொன்ன அந்த ஒரு வார்த்தை…

தனிமையோடு புதிய உலகத்தில் காலடி வைத்திருந்த ஆழினிக்கு, “நீ தனியாக இல்லை…”என்று யாரோ சொன்னது போல இருந்தது.

அன்று முதல் அவர்கள் ஹாஸ்டலில் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஆனால்… உண்மையில் அவர்கள் பகிர்ந்து கொண்டது ஒரு அறை மட்டுமல்ல…

வாழ்நாள் முழுவதும் பிரியாத ஒரு அழகான உறவின் தொடக்கத்தையும் தந்தது.
*********
எப்போதும் வகுப்பில் படுசுட்டியாக இருக்கும் மதுராவும், நித்திய மயூரியும் ஆழினியை தங்களது நட்பு வட்டத்திற்குள் இழுத்துக் கொண்டனர்.

முதலில் அவர்களுடன் பழக ஆழினி தயங்கினாள். இருவரின் குறும்புகளையும் கலாட்டாக்களையும் பார்த்து, “ஐயோ! இவங்க பண்ற கலாட்டாவுக்கெல்லாம் டீச்சர் திட்ட மாட்டாங்களா?” என்ற பயம் மனதிற்குள் ஓடியது.

ஆனால், அவர்களின் அன்பும், குறும்பும் அவளையும் மெதுவாக அவர்களோடு ஒன்றச் செய்தது.

அதன்பிறகு மூவரும் பிரிக்க முடியாத தோழிகளாக மாறினர்.

வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் கூட மூவரையும் பார்த்துவிட்டு,

“ஏன் மது, நித்யா… அமைதியா இருக்குற புள்ளையையும் உங்களோட சேர்த்து வீணாக்கப் போறீங்களா?”என்று கண்டிப்பார்கள்.

அதற்கு நித்திய மயூரி எதையாவது குறும்பாகப் பதில் சொல்ல, மதுரா அதை இன்னும் பெரிதாக்கி விடுவாள்.

அவர்களின் பேச்சைக் கேட்ட ஆசிரியர்களுக்கே சிரிப்பு வந்துவிடும்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆழினிக்கோ வியப்பாக இருக்கும்.

“டீச்சர்கிட்ட இவ்வளவு தைரியமா பேசுறாங்களே… பயமே இல்லையா?” என்று வினவினாள்.

அவளைப் பார்த்து சிரித்த நித்ய மயூரி,

“அட… நாங்க என்ன தப்பாவா பேசுறோம்? ஜாலிக்குத் தானே பேசுறோம். படிப்புலையும் காண்ஸ்டன்டேஷன் பண்றதுனால டீச்சர்ஸ் எதுவும் சொல்ல மாட்டாங்க. மேத்ஸ்ல மட்டும் கொஞ்சம் சிக்கல். அதுவும் நீ வந்ததுக்கப்புறம் நாங்க நல்லா மார்க் எடுக்க ஆரம்பிச்சுட்டோம். இனி எதுவும் சொல்ல மாட்டாங்க.”
என்று கண் சிமிட்டினாள் நித்யமயூரி.

அவள் சொன்னதை நம்பவா, சிரிக்கவா என்று தெரியாமல் ஆழினி புன்னகைத்தாள்.

*************

வகுப்பறையில் எப்போதும் குறும்பு செய்து அனைவரையும் சிரிக்க வைக்கும் நித்திய மயூரி, பள்ளி ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தவுடன் முற்றிலும் வேறொரு ஆளாக மாறிவிடுவாள்.

அவளது குறும்புகளையும், சேட்டைகளையும் மூட்டைக் கட்டி வைத்து விட்டு நல்லப்பிள்ளையாக அமர்ந்துக் கொள்வாள்.

அதை பல நாட்களாகக் கவனித்துக் கொண்டிருந்த ஆழினி, ஒரு நாள் பள்ளியில் ஏதோ போட்டி நடக்க.

அங்கு அமைதியாக இருந்த நித்யமயூரிடம், “மய்யூ… இந்த ஆடிட்டோரியத்துக்குள்ள வந்தா மட்டும் ஏன் இவ்வளவு சைலன்ட்டா ஆகிடுற? இங்க ஏதாவது போதிமரம் இருக்க?” என்று மெதுவாக வினவ.

அதைக் கேட்டவுடன் மதுராவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தவளைப் பார்த்த நித்திய மயூரி,

“ஏய்… சிரிக்காதடி! உன்ன கொன்றுவேன்.” என்றவள், ஆழினியைப் பார்த்து முறைத்தாள்.

“கோச்சுக்காதே மய்யு. உண்மையாவே நீ இங்கே வந்தா அமைதியாகிடுற?”என்றாள்.

“அதுவா!” என்ற நித்திய மயூரி சுற்றிலும் யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மெதுவாகக் குனிந்து,

” இந்த ஸ்கூல்லதான் எங்க அண்ணனும் படிக்கிறான்.”
என்றாள்.

“அதுக்கென்ன?” என்று புரியாமல் வினவினாள் ஆழினி.

“இவ பண்ற சேட்டை எல்லாம் வீட்டுக்குத் தெரிஞ்சா… அவ்வளவுதான்!”
என்று இடையில் நுழைந்தாள் மதுரா.

“நீ பண்ற சேட்டை எல்லாம் வீட்டுக்கு தெரியாதா? டீச்சர்ஸ் சொல்ல மாட்டாங்களா?” என்று ஆச்சரியமாக வினவினாள்.

“அவங்களுக்கெல்லாம் நான் செல்லப் பிள்ளை. என் சேட்டையை பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஆனா வெளியே ஏதாவது பெரிய வம்பு பண்ணிட்டேன்னா. எங்க அண்ணனுக்கு தெரிஞ்சிடும். அவன் வீட்ல சொல்லிடுவான.”
என்றவள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

“ஓ! உங்க அண்ணனுக்கு அவ்வளவு பயமா?”
என்று ஆழினி சிரித்தபடி கேட்டாள்.

“ச்சே சே… எங்க அண்ணன் ரொம்ப நல்லவன். அவனைப் பார்த்து எனக்குப் பயமே இல்லை. ஆனா அவன் வீட்டுல சொல்லிட்டானா பிறகு…..”
என்று சொல்லிவிட்டு தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“ஏன்? என்னாகும்?”
என்ற கேள்விக்கு நித்திய மயூரி நாடக பாணியில் சுற்றிலும் பார்த்துவிட்டு,

“அது வீடு இல்லடி… ஒரு சின்ன ராஜ்ஜியம்! அங்க எங்க அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா அத்தை, மாமா எல்லாரும் இருப்பாங்க.”
என்று இடைநிறுத்தினாள்.

மதுராவோ,” அதுல முக்கியமா உங்க பாட்டி. அவங்களை விட்டுட்டியேடி.” என்று சிரித்தாள்.

“ஆமாம்… எங்க பாட்டி தான் அந்த வீட்டோட ராஜமாதா. நான் தப்பு செஞ்சேன்னு தெரிஞ்சா, சாயங்காலமே வீட்ல உள்ள எல்லாரையும் கூப்பிட்டு மீட்டிங் வச்ச்சிடுவாங்க. அப்புறம் விசாரணை… தீர்ப்பு… பனிஷ்மென்ட்! நீதிமன்றத்துல கூட இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பு வராது.

எங்க பாட்டி பனிஷ்மென்ட் கொடுத்தாலும் எங்க அண்ணன் என்ன சமாதானப்படுத்துவதற்காக ஏதாவது திங்குறதுக்கு வாங்கி தருவான். அவன் ரொம்ப நல்லவன். ஆனா நேர்மை, எருமை, கருமைனு வீட்டில் போட்டு கொடுத்துடுவான் அந்த எருமை.”
என்று நித்திய மயூரி பாவமாக முகம் வைத்துக் கூறினாள்.

அதைக் கேட்ட ஆழினியும் மதுராவும் சிரித்துச், சிரித்து கண்களில் நீர் வருமளவுக்கு ஆனார்கள்.

அவர்களோடு சேர்ந்து சிரித்தாலும், ஆழினியின் மனதில் வேறொரு எண்ணம் மட்டும் முளைத்தது.

‘எப்படி இருக்கும் அந்தக் குடும்பம்…? எல்லாரையும் இவ்வளவு மரியாதையோடு, அதே நேரத்தில் இவ்வளவு பயத்தோடும் பேச வைக்கிறவர்கள் யார்?’
என்ற ஆர்வம் அவள் மனதில் முதல் முறையாக விதையாக விழுந்தது.

அந்த விதை பின்னாளில் செழியனைச் சந்தித்தபோது மெல்ல காதலாக துளிர்விட்டது.

அவனைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமாகத் தொடங்கிய அந்த உணர்வு, நாட்கள் செல்லச் செல்ல அவளுக்கே தெரியாமல் காதலாக வேரூன்றி, ஒரு பெரிய மரமாக வளர்ந்தது.

error: Alert: Content selection is disabled!!