இடைவெளி வலிக்குதே 1 – 1

அத்தியாயம் 1

அது ஒரு தனியார் கல்விநிலைய வளாகம். அங்கிருந்த அனைத்துக் கொட்டகைகளிலும் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு கொட்டகையிலும் ஆசிரியரின் குரல் பிரதானமாகக் கேட்டுக்கொண்டிருந்த போதிலும் மெல்லிய சலசலப்பு, சிரிப்பு, பேச்சு என்று எல்லாம் இருந்தன.

ஆனால், செந்தாளனின் வகுப்பில் மட்டும் அவன் குரல் மட்டுமே கனகம்பீரமாக ஒலித்துக்கொண்டிருந்தது. மாணவர்களிடம் எந்த அசைவும் இல்லை. உன்னிப்பாகக் கரும்பலகையையும் அவனையும் கவனித்துக்கொண்டிருந்தனர்.

“பிள்ளைகள், வடிவாக் கவனிங்கோ. வினைச்சொல் ரெண்டு வகைப்படும். ஒண்டு முற்று, இன்னொண்டு எச்சம்.” கரும்பலகையின் நட்ட நடுவில் வினை என்று எழுதி, அதன் கீழே கோடிழுத்து, அதை இரண்டு பக்கமும் பிரித்து, ஒரு முனையில் முற்று என்றும் இன்னொன்றில் எச்சம் என்றும் எழுதினான்.

“இப்ப வினைமுற்று எண்டால் என்ன எண்டு பாக்கப் போறம். ஒரு செயல் அல்லது வினை முடிஞ்சு இருக்கிறதை இது குறிக்கும். அதாவது முற்றுப் பெற்றிருக்கும். உதாரணத்துக்குச் செய்தான், செய்தாள், செய்வார், செய்தது, செய்தன எண்டு வரும். அதாவது ஒரு எழுவாயின் செயல் நிலையைக் காட்டி, வாக்கியத்தை முடிக்கும் சொல்லாக அமைவது வினைமுற்று. சரியா?”

வினைமுற்றின் கீழே அதன் உதாரணங்களை எல்லாம் எழுதினான். “இதில ஏதாவது சந்தேகம் இருக்கா?” என்று வகுப்பை நோக்கி வினவினான்.

பிள்ளைகளின் தலைகள் இல்லை என்று ஆடின.

“சரி, அடுத்ததைக் கவனிங்கோ. எச்சம். எச்சம் எண்டால் தன்னளவில் முற்றுப் பெறாது இருக்கும். அந்த எச்சம் ரெண்டு வகைப்படும்.” என்றவன் எச்சத்துக்குக் கீழேயும் கோடிழுத்து, அதை இரண்டு பக்கமாகப் பிரித்து,
ஒரு முனையில் பெயரெச்சம் என்றும் மறுமுனையில் வினையெச்சம் என்றும் எழுதினான்.

“இப்ப, பெயரெச்சம் எண்டால் என்ன எண்டு பாக்கப் போறம். ஒரு வினை, பெயர்ச் சொல் வந்து முற்றுப் பெறுவது பெயரெச்சம். உதாரணத்துக்குப் படிக்கும் மாணவன், படிக்கின்ற மாணவி. இங்க படிக்கும், படிக்கின்ற எண்டுற ரெண்டு சொற்களும் முடிவுறாமத் தொங்கிக்கொண்டு நிக்குது. அது முடிவுற்று நிக்கிறதுக்கு ஒரு பெயர்ச்சொல் தேவையா இருக்கு. அப்ப, ஒரு செயல் அல்லது வினை ஒரு பெயர்ச் சொல்லோட சேர்ந்து முடிவுற்று நிண்டால் அதுக்குப் பெயர் பெயரெச்சம். விளங்குதா? சில உதாரணங்கள் பாப்பம்.” என்றுவிட்டுப் பெயரெச்சத்துக்குக் கீழே உதாரணங்களை எழுதினான்.

உறங்கிய குழந்தை.
ஓடுகிற குதிரை.
நிற்கும் மனிதன்.

“வடிவாப் பாத்து எழுதிக்கொள்ளுங்கோ. விளங்காட்டிக் கேளுங்கோ, முக்கியமான பகுதி இது. அடுத்ததா வினை எச்சத்தைப் பற்றிப் பாக்கப் போறம்.”

கரும்பலகையில் இருப்பதை மாணவர்கள் சிரத்தையாகக் குறித்துக்கொள்ள ஆரம்பிக்க, அவர்களைக் கவனித்தபடி வகுப்பின் நடுவே இருந்த பாதையில் பின் வரிசைவரைக்கும் நடந்துவிட்டு வந்தான்.

அப்படியே வினை எச்சம் பற்றியும் விளக்கி, மாணவர்களைக் குறிப்பெடுக்க வைத்துவிட்டு, ஒரு மாணவனை எழுப்பி நிறுத்தினான்.

“வினை எச்சத்துக்கு ஒரு உதாரணம் சொல்லும் பாப்பம்?”

அவனுக்கு நடுங்கியது. ஆனாலும், “உறங்கி எழுந்தான்.” என்று வாய்க்குள் முணுமுணுத்தான்.

செந்தாளனுக்குக் கேட்டாலும் மற்ற மாணவர்களுக்கு நிச்சயம் கேட்டிருக்காது என்பதில், “எனக்கு இருக்கிறது ரெண்டு காதுதான். சில நேரம் அதுவும் ஒழுங்கா வேலை செய்யாது. நல்ல சத்தமாச் சொல்லும் பாப்பம்!” என்று அவன் என்னவோ சாதாரணமாகத்தான் சொன்னான்.

மாணவனுக்கோ உதறல் எடுத்தது. அதில், “உறங்கி எழுந்தான். உறங்கி எண்டுற சொல் எழுந்தான் எண்டுற வினைச் சொல்லோட சேர்ந்து முற்றுப் பெறுது.” என்றான் சத்தமாகவும் வேகமாகவும்.

“கெட்டிக்காரன். இரும். இனி நாளைக்கு வினைமுற்று வகைகள், பெயரெச்ச வகைகள், இவற்றில வலி மிகுமா, மிகாதா எண்டெல்லாம் பாக்கப் போறம். அதால, நாளைக்கு வரேக்க இதையெல்லாம் வடிவாப் பாத்துக்கொண்டு வரவேணும்!” என்று, அவர்களுக்கான பயிற்சிகள் சிலவற்றையும் கொடுத்துவிட்டு அந்த வகுப்பை முடித்துக்கொண்டு வெளியேறினான்.

அடுத்த வகுப்புக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. டியூஷன் செண்டரின் அலுவலக அறை மேசையில் தன் புத்தகங்களை எல்லாம் வைத்துவிட்டு, செண்டருக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் கடையில் தேநீர் அருந்த நடந்தான்.

அப்போது, அவன் கைப்பேசி மெலிதாய் அணுங்கிற்று. அழைத்தது அன்னை புவனாம்பிகை.

“அப்பு, ஒரு சம்பந்தம் சரி வந்திருக்கு. தம்பிட்ட ஃபோட்டோ அனுப்பச் சொன்னனான். அதை எடுத்துப் பாருங்கோ. அவவுக்கும் செவ்வாய்க் குற்றம்தானாம். உங்கள் ரெண்டு பேருக்கும் சாதகமும் பாத்தனாங்க. நல்ல பொருத்தம். குடும்பமும் நல்ல குடும்பம். அவவுக்கு ஒரு தம்பி மட்டும்தான். உங்களுக்குப் பிடிச்சிருந்தா மேற்கொண்டு கதைக்கலாம்.” பெரும் பரபரப்பும் சந்தோசமுமாகச் சொன்னார் அவர்.

அவன் சற்றே கரிய நிறம்தான் என்றாலும் வாட்டசாட்டமானவன். விவசாயமும் அயராத உழைப்பும் அவன் உடலைத் திடமாக்கி இருந்தன. தமிழ் ஆசிரியனாக இருக்கிறான். நல்ல சம்பளம். கூடவே, மாலை நேரங்களில் தனியார் வகுப்பு. இணைய வழியாகத் தனி வகுப்புகளும் எடுப்பதுண்டு.

வீட்டுக்கு மூத்தவளாகத் தமக்கை இருந்தாலும் மூத்த மகனாக நின்று, அனைத்தையும் எடுத்துச் செய்கிறவனும் அவன்தான். இத்தனை இருந்தும் செவ்வாய்க் குற்றம் என்கிற ஒன்றினால் திருமணம் பொருந்திவராமல் இருபத்தியொன்பது வயதுவரை தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது.

இன்றைக்கு அவர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துகொண்டு, கண்ணுக்கு நிறைவான, நல்ல சம்பந்தம் அமைந்தால் பூரிக்காமல் என்ன செய்வார்?

உதட்டோரம் அரும்பிய முறுவலோடு, “சரியம்மா, பாத்திட்டுச் சொல்லுறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்குள்ளும் மெல்லிய பரபரப்புத்தான்.

புலனத்தைத் திறந்து பார்த்தான். ‘இவள் எப்பிடி எனக்கு ஓம் எண்டு சொன்னாள்?’ அவளைப் பார்த்ததும் அவனுக்குள் தோன்றிய கேள்வி அதுதான். அந்தளவில் ஒருவிதக் காந்த சக்தி அவளிடம் இருந்தது. வைத்த கண் எடுக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

திடீரென்று அவன் காதைக் கிழித்த ஹோர்ன் சத்தத்தில் துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்தான். எதிரில் வாகனமொன்று வந்துகொண்டிருந்தது. ஒரு கணம் நெஞ்சு குலுங்கிப் போயிற்று. மின்னல் விரைவில் சுதாரித்துத் தேநீர்க் கடைப்பக்கமாகப் பாய்ந்தான்.

அதன்பிறகுதான் வீதியைக் கடக்கையில் அவளில் இலயித்து, நடு வீதியிலேயே நின்றுவிட்டதை உணர்ந்தான்.

இதற்குள் கடைக்காரரும் பாய்ந்தடிக்துக்கொண்டு வெளியே ஓடி வந்திருந்தார். “என்ன சேர், சேர் சேர் எண்டு அவ்வளவு சத்தமாக் கூப்பிட்டும் கேக்காத அளவுக்கு அப்பிடி என்னத்த ஃபோனில பாத்தனீங்க?” என்ற அவர் பேச்சிலும் பதற்றம்.

அவனால் பதில் சொல்ல முடியவில்லை. முதலில், ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்துச் சுற்றம் மறந்து நின்றுவிட்டேன் என்று எப்படிச் சொல்வது?

உள்ளூர் என்பதால் வாகனம் வேகமாக வரவில்லை. இவன் நகர்ந்திராவிட்டால் வாகன ஓட்டி வாகனத்தை நிறுத்தியும் இருப்பாராயிருக்கும். ஆனாலும் கொஞ்சம் படபடத்துத்தான் போனான்.

கண்ணில் விழுந்த நொடியிலேயே அவனை நிலையிழக்க வைத்துவிட்டாளே!

ஒரு பெரிய மூச்சை இழுத்துவிட்டுத் தன்னைச் சமநிலைப் படுத்திக்கொண்டு, “அது முக்கியமான ஒரு நியுஸ். அதுதான்.” என்று சமாளித்தான். மேலே அவரைப் பேச விடாமல், “எப்பவும் போல ஒரு தேத்தண்ணி போடுங்க அண்ணா, வாறன்.” என்றுவிட்டு, அவருக்குக் கேட்காத தூரம் நகர்ந்து புவனாம்பிகைக்கு அழைத்தான்.

“என்னப்பு பாத்தனீங்களா? பிடிச்சிருக்கா?” அவன் வாய் திறக்க முதலே ஆர்வமாக வினவினார் அவர்.

அதற்குப் பதில் சொல்லாமல், “அவே என்னவாம்?” என்றான் அவன்.

“அவேக்கு விருப்பம் அப்பு. அதக் கேக்காம உங்களிட்டச் சொல்லுவனா? நீங்க சொல்லுங்கோ, உங்களுக்கும் விருப்பமா?”

“அவாக்குமோ?” அவன் குரலில் மறைக்க முயன்றும் முடியாமல் போன ஆச்சரியம் தொக்கி நின்றது.

“என்ன கேள்வி இது? அவாக்குப் பிடிக்காமப் போக என்ர பிள்ளைல என்ன குறையாம்? செவ்வாய்க் குற்றத்தாலதானே இவ்வளவு காலமும் இழுபட்டது. அதெல்லாம் கேட்டு, அவா ஓம் எண்டு சொல்லி, பொருத்தமும் பாத்த பிறகுதான் எங்களுக்குத் தகவல் அனுப்பி இருக்கினம்.”

“ஓ!” என்றவனால் இப்போதும் முழுமையாக நம்ப முடியவில்லை. “என்ன பெயராம் அம்மா?” என்று விசாரித்தான்.

error: Alert: Content selection is disabled!!