இடைவெளி வலிக்குதே 3 – 2

அவன் நட்பழைப்பு அனுப்பியிருந்தான். கைகள் நடுங்க ஏற்றுக்கொண்டாள்.

ஊர் சுற்றிவிட்டு வந்த கடம்பன், தமக்கை வெளுத்த முகத்துடன் அறைக்குள் அடைந்து கிடைப்பதைக் கண்டுவிட்டு, என்ன என்று விசாரித்தான். உள்ளே போன குரலில் அவள் நடந்ததைப் பகிர்ந்துகொண்டபோது அவனுக்குமே சற்று அதிர்ந்த நிலைதான். அதேநேரம் தமக்கையை அப்படிப் பார்க்கப் பிடிக்காமல், “அத்தான் சொல்லுறது சரிதானே அக்கா. எவ்வளவு பிரச்சினைகள் கேள்விப்படுறம் சொல்லு? இவ்வளவு காலமாவது நீ இந்த வீட்டுப் பிள்ளை மட்டும்தான். இனி அவருக்கு வைஃப்பாகப் போறாய். நாளைக்கு ஒரு பிரச்சினை வந்தா அது அவரையும் பாதிக்கும், உங்கட குடும்பத்துக்கையும் பிரச்சினை வரப்பாக்கும். அந்த அக்கறைல சொல்லி இருப்பார்.” என்று சமாளித்தான்.

எல்லாம் சரிதான். அவன் அதைச் சொன்ன விதம்? காட்டிய கடுமை? அவனுக்குரியவளாக நிச்சயிக்கப்பட்ட ஒருத்தியின் மீதான கரிசனை எங்குமே தென்படவில்லையே! அதைக் கடம்பனிடம் கூடச் சொல்ல முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். கடம்பன் விடவில்லை. வெளியே அழைத்துச் சென்று, அவளுக்குப் பிடித்தவற்றை வாங்கிக் கொடுத்து, அவளைப் பழையபடி மாற்றினான்.

*****

திருமணத்துக்கு இன்னும் நான்கு நாள்களே எனும் நிலையில் செந்தாளனின் கைப்பேசிக்கு வந்து விழுந்தன சில புகைப்படங்கள்.

கானவி அனுப்பி இருக்கிறாள் என்றதும் எடுத்துப் பார்த்தான்.

முதல் ஃபோட்டோ, அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு மேசையின் மீது, கறுப்பும் சிவப்புமாக இதயங்கள் சுற்றிவந்த வளையம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, அதற்குள் செந்தாளன் கானவி என்று எழுதப்பட்டிருந்தது. அதன் முன்னே ஒரு தட்டில் மருதாணிக் கோன்கள் வட்ட வடிவில் அடுக்கி வைப்பட்டிருந்தன.

அதைப் பார்த்ததுமே அவன் முகம் சினத்தில் சிவந்து போயிற்று. அடுத்தடுத்த புகைப்படங்களை ஒரு வேகத்துடன் தட்டினான்.

அலங்கரிக்கப்பட்ட சோபா ஒன்றில் அமர்ந்திருந்தவளின் கைகளிலும் கால்களிலும் மருதாணியிடும் புகைப்படங்கள். போதாக்குறைக்கு இன்னும் சில பெண்களும் மருதாணி இட்ட கைகளை வட்டமாக நின்று காட்டினர். கிட்டத்தட்ட ஒரு விழாவாகவே கொண்டாடியிருக்கிறாள் என்று விளங்கிற்று.

அவ்வளவு தெளிவாகச் செய்யாதே என்று சொல்லியும் செய்திருக்கிறாள் என்றால் எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்? உடனேயே அவளுக்கு அழைத்து, “நீயெல்லாம் சொல்லுறதைக் கேக்கவே மாட்டியா?” என்றான் அடக்கப்பட்ட சினத்துடன்.

“நான் ஒண்டும் பெருசாக் கொண்டாடேல்ல.” என்றாள் முணுமுணுப்பாக.

“எது, இது நீ பெருசாக் கொண்டாட இல்லயா? எரிச்சலக் கிளப்பாத கானவி. நான் சொன்னதையும் மீறி நீ ஒண்டச் செய்றது இதுதான் கடைசியும் முதலுமா இருக்கோணும், இனியும் இப்பிடி நடந்ததோ கட்டாயம் கவலைப்படுவாய்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

இதென்ன எப்போது பார்த்தாலும் முகத்தில் அடிப்பது போன்று சொல்லாமல் கொள்ளாமல் அழைப்பைத் துண்டிப்பது? கானவிக்கு முகம் கன்றிச் சிவந்துவிட அப்படியே அமர்ந்திருந்தாள். ஆசை இருந்த போதிலும் அன்று அவன் கொண்டாடாதே என்று சொன்ன பிறகு, கொண்டாடத்தான் வேண்டுமா என்கிற தயக்கம் அவளுக்குள் நிறையவே வந்திருந்தது.

ஆனால், எத்தனையோ மெகந்தி விழாக்களுக்கு அவளே ஆர்வமாகப் போயிருக்கிறாள். முன்னெடுத்துச் செய்திருக்கிறாள். அப்படியிருக்க அவளுக்குத் திருமணம் என்கையில் வேண்டாம் என்று எப்படி மறுப்பாள்? அவள் மறுப்பாள், மறுப்பு என்கிற ஒன்று இருக்கும் என்று யோசித்தே இராத தோழியரும் அயலட்டையினருமாகச் சேர்ந்து அந்த விழாவை ஒழுங்கு செய்து முடித்தபோது, அவளால் ஒன்றுமே செய்ய இயலாமல் போயிற்று. அன்னை தந்தை கூட அவளின் விருப்பங்கள் அறிந்தவர்கள். அவர்கள் எல்லோரினதும் மலர்ந்த முகங்களும், அவள் திருமணத்தை அவளுக்குப் பிடித்த மாதிரி நடத்திக் கொடுத்துவிட வேண்டும் என்கிற அவர்களின் ஆர்வமும் அவள் வாயை அடைத்திருந்தன.

நடந்து முடிந்த பிறகு சொல்லாமல் மறைக்க விரும்பவில்லை. ஒரு பயத்துடனேயேதான் புகைப்படங்களை அவனுக்கு அனுப்பி வைத்தாள். அவனும் அவள் பயந்தது சரி என்று நிரூபித்திருந்தான்.

முழங்கை வரைக்கும் போட்டுக்கொண்டிருந்த மருதாணியைப் பார்த்தாள். என்னதான் பயம் அடி நெஞ்சில் இருந்த போதிலும் ஆசையாசையாக அவள் செய்த ஒரு நிகழ்வு. இப்போது எந்த மகிழ்வையும் தர மறுத்தது. பிடிவாதமாய் நின்று செய்யாமல் இருந்திருக்கலாமோ என்று யோசித்தாள்.

திறந்திருந்த அறைக் கதவில் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் மடித்து டொக்டொக் என்று பெயருக்குத் தட்டிவிட்டு அறைக்குள் வந்தான் கடம்பன். அவள் நிமிரவில்லை.

“என்னடா அதிசயம் இது? ஒண்டும் செய்யாம அமைதியா இருக்கிறாள் என்ர அக்கா.” அவன் குரலில் அவளைச் சீண்டும் சிரிப்பிருந்தது.

“போடா, நீ வேற!”

அப்போதுதான் அவள் முகத்தின் கன்றல் அவன் கண்ணில் பட்டது. “என்னக்கா?” என்றான் விளையாட்டைக் கைவிட்டுவிட்டு.

தம்பியின் கரிசனை மனத்தின் காயத்தை இன்னும் தூண்டிவிட்டாற்போல் இருக்க அவளால் பேச முடியவில்லை.

அவன் புருவங்கள் சுருங்கின. “ஏன் இப்பிடி இருக்கிறாய்? இண்டைக்கு பார்லர்ல இருந்து வருவினம் எண்டு சொன்னனீ எல்லா?” என்று அவளைப் பேசத் தூண்டினான்.

“ப்ச்! இப்ப எனக்கு ஒண்டுக்கும் மூட் இல்ல.”

“ஏன்?” அடுத்தவர் வீட்டு விழா என்றாலே ஒரு இடத்தில் இருக்கமாட்டாள். இன்னும் நான்கு நாள்களில் அவள் திருமணத்தை வைத்துக்கொண்டு மனநிலை சரியில்லை என்றால் என்ன இது?

“என்னக்கா?” அவளருகில் அமர்ந்து மீண்டும் இதமாய் வினவினான்.

அதற்கே அவளுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. சமாளித்துக்கொண்டு, “உன்ர அத்தான் என்னைப் பேசிப்போட்டாரடா.” என்று குழந்தையாக அவனிடம் முறையிட்டாள்.

‘அதுதானா!’ உதட்டோரம் மெலிதாய் முறுவல் அரும்ப, “இண்டைக்கு என்ன செய்தனி?” என்றான்.

“அது இந்த பங்க்ஷன் கொண்டாட வேண்டாம் எண்டு சொன்னவர். அவர் சொன்னதைக் கேக்காமக் கொண்டாடினது அவருக்குப் பிடிக்கேல்லையாம்.”

அவன் இப்போது வெளிப்படையாகவே சிரித்தான். “என்னக்கா நீ? இதெல்லாம் ஒரு விசயம் எண்டு குந்திக்கொண்டு இருக்கிறாய்? என்னவோ காலத்துக்கும் அத்தான் சொல்லுறதை மட்டுமே கேட்டு நடக்கப்போற ஆள் மாதிரி இருக்கே நீ சொல்லுறதைப் பாக்க.”

“டேய்!” என்று அவனை அதட்டியவளுக்கும் முகவாட்டம் மறைந்து சிரிப்பு வந்திருந்தது. “இந்தளவுக்குக் கோவிப்பார் எண்டு நினைக்கேல்ல. தெரிஞ்சிருந்தா செய்ய யோசிச்சிருப்பன்.” கடம்பனின் பேச்சில் மனத்தின் கனம் குறைந்தவளாகச் சொன்னாள்.

“லூசா நீ. இது உன்ர கலியாணமும்தான். அத்தானுக்குப் பிடிச்ச மாதிரி மட்டுமே எல்லாம் செய்யேலாது. உனக்குப் பிடிச்ச மாதிரி இரு. இன்னொருக்கா இந்த சான்ஸ் வருமா சொல்லு?” என்று அதட்டினான் தம்பி.

அப்போதுதான் அவளுக்கும் அது புரிந்தது. எல்லாவற்றையும் அவனை மட்டுமே முன்னிறுத்தி யோசிக்கிறோம், இது என் கலியாணமும்தானே என்று தோன்றியதும் கலக்கம் தெளிந்தாள்.

ஆனால், அன்று முகப்புத்தகத்திலிருந்து அத்தனை புகைப்படங்களையும் எடுக்கச் சொல்லி அவன் கண்டித்தபோதுகூட, அதில் ஒரு நியாயம் இருப்பதாக உணர்ந்து, அவசியங்களுக்கு அவனோடு கதைத்தவள் இந்த முறை என்ன தேவை வந்தும் அவனுக்கு அழைக்கவில்லை.

அதை இரண்டாம் நாளே கண்டுகொண்டான் செந்தாளன். அவ்வளவு காலமும் சின்ன சின்ன விசயங்களை எல்லாம் சாட்டாக வைத்து அவனோடு பேசியவளைத் தொந்தரவாக எண்ணியிருந்தவன், இப்போது தன்னையறியாமலேயே அவள் அழைப்பை எதிர்பார்த்தான். அது நடக்காமல் போனதில் ஒரு சினம் உண்டாயிற்று.

என்னோடு கதைக்காமல் இருக்கிற அளவுக்குக் கோபமா? செய்யாதே என்று சொன்னதை அவள் செய்வாள். அதற்குக் கண்டித்தால் இப்படித்தான் முகம் திருப்புவாளா? இப்போது என்ன சொல்ல வருகிறாள்? அவளை அவன் ஒரு வார்த்தை சொல்லக் கூடாது என்றா?

நீ ஆட்டுவிக்கும் ஆள் நானில்லை என்று காட்டுகிறவனாக அவனும் அப்படியே விட்டுவிட்டான்.

error: Alert: Content selection is disabled!!