வண்ணம் 6
பயத்தில் கண்கள் மூடித் தள்ளாடிய அந்த இமைக்கும் நொடியில், அவளது இடுப்பை வளைத்து, விழுந்துவிடாதபடி ஒரு வலிமையான கரங்கள் அவளை இறுகத் தாங்கிப் பிடித்தன!
அந்தக் கரங்களின் பலத்திலும், தன் மீது படர்ந்த அந்த அழுத்தமான பிடியிலும் ராஷி திடுக்கிட்டு அமைதியானாள்.
ஒரு கணம் தன் மூச்சை அடக்கிக்கொண்டு மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தவள் உறைந்து போனாள்!
நிலவொளியில், அவளைத் தாங்கிப் பிடித்தபடி மிக அருகில் நின்று கொண்டிருந்தான் அருள்!
அவனது அகன்ற மார்பும், கம்பீரமான முகமும் அவளுக்கு மிக அருகே இருந்தன. அருளின் கூர்மையான கண்கள் கவலையோடும் தீவிரத்தோடும் அவளது கண்களை ஊடுருவிக் கொண்டிருந்தன. இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று கலக்கும் அளவிற்கு அந்த நெருக்கம் அமைந்திருந்தது!
அந்த நிலவொளியில், அருளின் கரங்களுக்குள் தஞ்சம் புகுந்திருந்த அந்தச் சில நொடிகள், ராஷிக்குக் காலமே உறைந்துவிட்டது போலிருந்தது.
அவனது அகன்ற மார்பின் கதகதப்பும், கம்பீரமான பார்வையும் ராஷியின் இதயத்துடிப்பை வழக்கத்தை விட வேகமாக எகிறச் செய்தன. நிலவின் மெல்லிய வெளிச்சத்தில் அருளின் முகம் இன்னும் தீவிரமாகவும் அழுத்தமாகவும் தெரிந்தது.
அருள் தன் கம்பீரமான, ஆழமான குரலில், “பார்த்து நடக்கக் கூடாதா? இருட்டுல எங்க போயிட்டு இருக்கீங்க?” என்று மெல்லிய அதட்டலோடு கேட்டபடி, அவளை மெதுவாகச் சீராக்கி நிமிர்த்தி நிறுத்தினான்.
ராஷி தன் இடுப்பில் இருந்த அவனது கைகளின் பிடி விலகியதும், படபடப்புடன் தன் உடைகளைச் சரிசெய்து கொண்டாள். காலில் லேசான சுளுக்கு வலி இருந்தாலும், அதைவிட அருளின் அந்த திடீர் நெருக்கம் தந்த தடுமாற்றமே அவளிடத்தில் அதிகமாக இருந்தது.
“அது… வந்து… போன் பேசிட்டே வந்தேனா, கவனிச்சு பார்க்கல… ரொம்ப நன்றிங்க அருள்,” என்று தன் குரல் நடுக்கத்தை மறைக்க முயன்றபடி தட்டுத்தடுமாறிச் சொன்னாள் ராஷி.
அருள் தரையில் கிடந்த அவளது போனை எடுத்துத் துடைத்து அவளிடம் நீட்டினான்.
“கிராமத்து ரோடுங்க… நகரத்துத் தார்தெரு மாதிரி சமமா இருக்காது. கல்லும் மண்ணும் நிறைஞ்சிருக்கும். போன் பேசிட்டே இப்படித் தனியா வர்றது ஆபத்து. அதுவும் இந்த நேரத்துல!” என்று சற்று உரிமையோடு கண்டிக்க, அவனது அந்த அக்கறையான கோபம் ராஷிக்குள்ளே ஏதோ ஒரு புதுவிதமான சந்தோஷத்தைக் கொடுத்தது.
அப்போது தூரத்திலிருந்து “ராஷி… ராஷி…” என்று தேடியபடி ஓடி வந்தாள் சாரு.
அருகே வந்து இருவரையும் பார்த்தவள், “ஹப்பா… எங்கடி போயிட்ட? திடீர்னு ஆளைக் காணோம்னு பயந்துட்டேன்!” என்றபடி மூச்சு வாங்கினாள்.
“ஒன்னுமில்லைடி சாரு, அப்பா கிட்ட பேசிக்கிட்டே வந்தப்ப கால் தடுக்கிடுச்சு… அருள் தான் கரெக்ட் டைம்க்கு வந்து பிடிச்சாரு,” என்றாள் ராஷி அருளை லேசாக நிமிர்ந்து பார்த்தபடி.
அருள் சாருவைப் பார்த்து, “சீக்கிரம் உள்ள போங்க. ராத்திரி நேரத்துல தெருவுல தனியா சுத்தாதீங்க. கதவைப் பத்திரமா பூட்டிக்கோங்க,” என்று இருவரிடமும் சொல்லிவிட்டு, திரும்பித் தன் வீட்டை நோக்கி நடை போட்டான்.
அவன் நடந்து செல்லும் அந்த நிமிர்ந்த, கம்பீரமான உருவத்தையே ராஷி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாரு ராஷியின் தோளைத் தட்டி, “என்னடி மேடம்… அம்பு அப்படியே ஆழமாத் தாய்ச்சிடுச்சு போல! கண்ணைக்கூட மூடாம பார்க்குற?” என்று குறும்போடு கேட்க, ராஷி தன் முகத்தில் படர்ந்த வெட்கத்தை இருளுக்குள் மறைக்க முயன்றாள்.
“சீ போடி… வா உள்ள போகலாம்,” என்று சாருவின் கையைப் பிடித்துக்கொண்டு அறைக்கு நடந்தாள் ராஷி.
ஆனால், அன்றைய இரவு ராஷிக்குத் தூக்கம் சுலபத்தில் வரவில்லை. அருள் தன்னைத் தாங்கிப் பிடித்த அந்த நொடியும், அவனது கண்களில் தெரிந்த அந்தத் தீவிரமான அக்கறையும் அவளது மனதிற்குள் அழகிய கவிதையாய் சுழன்று கொண்டே இருந்தன!
இதுவரை அவள் அனுபவிக்காத ஒரு உணர்வு இப்பொழுது இந்த கிராமத்திற்கு வந்து அருளை பார்த்ததிலிருந்து அவள் மனதிற்கு உலா வந்து கொண்டிருப்பதை அவள் உணராமல் இல்லை.
மறுநாள் விடியற்காலை, கிராமத்து மரங்களின் மீது பரவிய இளவெயில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.
ராஷியும் சாருவும் வழக்கம்போலக் கிணற்றடி நீராடி, எளிய உடைகளில் தயாரானார்கள். இன்று டவுனுக்குச் சென்று சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், இன்டக்ஷன் ஸ்டவ்வுக்கு ஏற்ற பாத்திரங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கிவரத் திட்டமிட்டிருந்தனர்.
“சாரு, சீக்கிரம் கிளம்புடி. டவுனுக்குப் போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்தாதான் இனி நாமளே சமைச்சு சாப்பிட முடியும்,” அருளோடு அம்மாவுக்கு நாம் சிரமத்தை கொடுக்க வேண்டாம் என்றாள் ராஷி.
பின்னர் இருவரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு, அருளின் வீட்டைக் கடந்து பேருந்து நிறுத்தத்திற்குச் செல்ல நடந்தார்கள்.
அருளின் வீட்டின் முன் சென்றபோது, அங்கே ஒரு வித்தியாசமான சுறுசுறுப்பு நிலவுவதைக் கண்டார்கள். வாசலில் ஒரு பழைய ஹீரோ ஹோண்டா பைக்கும், பக்கத்து ஊர் ஆட்களின் நடமாட்டமும் இருந்தன.
பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்த ஒரு தம்பதியினர், திண்ணையில் மிகவும் மரியாதையுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் கைகளில் ஒரு தாம்பூலத் தட்டும், அதில் வெற்றிலை, பாக்கு, பூ, பழங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகையும் வைக்கப்பட்டிருந்தன.
ராஷியும் சாருவும் ஆர்வத்துடன் வாசலிலேயே நின்று கவனித்தார்கள்.
வந்திருந்த பெரியவர் கையெடுத்துக் கும்பிட்டு, “முத்தையா அண்ணே… என் பொண்ணுக்கு அடுத்த மாசம் முகூர்த்தம். சுத்துவட்டாரத்துல பட்டுப்புடவை நெய்யுறதுக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா? உங்க கை பட்டா என் பொண்ணோட வாழ்க்கை ரொம்ப ராசியா, சந்தோஷமா இருக்கும்னு என் மனைவி பிடிவாதமா கூட்டிட்டு வந்தாண்ணே. நீங்கதான் இந்த முகூர்த்தப் புடவையை நெய்து கொடுக்கணும்,” என்று மனமாரக் கேட்டுக்கொண்டார்.
திண்ணையில் பெரியவர் முத்தையா ஐயா கம்பீரமாகவும், அதே சமயம் சாந்தமான முகத்தோடும் அமர்ந்திருந்தார்.
அந்தப் பகுதியில் பாரம்பரிய முறைப்படி தூய பட்டு மற்றும் தங்கச் சரிகை கொண்டு திருமணப் பட்டுப்புடவைகளை நெய்து கொடுப்பது காலங்காலமாக அருளின் குடும்பம் மட்டும்தான். சுற்றியுள்ள இருபது கிராமங்களில், முத்தையா ஐயாவின் கைகளால் நெய்து தரப்படும் பட்டுப்புடவையை உடுத்தித் தாலி கட்டுவது என்பது மிகப்பெரிய அதிர்ஷ்டமாகவும், ராசியாகவும் கருதப்பட்டது.
அறுபது வயதைத் தாண்டிய முத்தையா ஐயா, தன் கண் பார்வை சற்று மங்கினாலும், தொட்டுப் பார்த்தே நூலின் தரத்தைச் சொல்லிவிடும் அனுபவம் வாய்ந்தவர். வந்திருந்த தம்பதியினரை மனதார வாழ்த்தி, “கவலைப்படாதீங்கப்பா… என் பையன் அருள் இருக்கான்ல! அவன் கை வண்ணம் என் கையை விடப் பிரமாதமானது. உங்க வீட்டுப் பொண்ணுக்கு மகாலட்சுமியே நேர்ல வர்ற மாதிரி அருமையான முகூர்த்தப் பட்டுப்புடவையை நாங்க நெய்து தர்றோம்,” என்றார் பெருமிதத்தோடு.
அருள் புன்னகையோடு அந்தத் தாம்பூலத் தட்டை ஏற்றுக்கொண்டு, “எத்தனை கஜம் வேணும்? பொண்ணுக்கு என்ன வண்ணம் பிடிக்கும்னு சொல்லுங்கய்யா… அதுக்கேத்தாப்ல டிசைன் போட்டு நெய்யத் தொடங்குறேன்,” என்றான் கம்பீரமான குரலில்.
பின்னர் அருள், ஒரு வரைபடத் தாளில் பட்டுப்புடவையின் பார்டர் டிசைனை (கரை டிசைன்) தீவிரமாக வரைந்துவிட்டு இதைப் பாருங்கள் என்றான்.
வாசல் ஓரத்தில் நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராஷியின் கண்களில் ஆச்சரியமும் வியப்பும் மேலிட்டன.
வெறும் ஆடம்பரம், வியாபாரம் என்று மட்டுமே ஆடை வடிவமைப்பைப் பார்த்த ராஷிக்கு, ஒரு பெண்ணின் வாழ்நாள் திருமண ஆடையை இவ்வளவு நம்பிக்கையோடும், ராசியோடும், தெய்வப் பணியாகச் செய்யும் இந்த எளிய மனிதர்களின் பாரம்பரியம் நெஞ்சைத் தொட்டது.
அருளின் கைவண்ணத்தில் உருவாகப்போகும் அந்தப் பட்டுப்புடவையின் நெசவு முறையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ராஷிக்குள்ளே இன்னும் அதிகமாகியது!
அருளின் வீட்டின் முன் நடந்த அந்த நெகிழ்ச்சியான நிகழ்வைக் கண்டு வியந்த தோழிகள் இருவரும், தங்கள் தேவைகளுக்காக டவுன் நோக்கி நகரத் தொடங்கினார்கள்.
கிராமத்துச் செம்மண் பாதையில் இலைகளின் மீது படிந்திருந்த பனித்துளிகளை ரசித்தபடி, அரை மணி நேரம் நடந்து சென்று பிரதான சாலையின் பேருந்து நிறுத்தத்தை அடைந்தார்கள். ஊர்க்குருவிகளின் சத்தமும், தூரத்துத் தறி ஓசையும் மட்டுமே கேட்ட அந்தச் சாலையில் இருவரும் கொஞ்ச நேரம் காத்திருக்க, தூசியைக் கிளப்பியபடி அந்தப் பழமையான நகரப் பேருந்து வந்து நின்றது.
பேருந்தில் ஏறி அமர்ந்ததும், கிராமத்து எல்லைகளைத் தாண்டி பச்சைப் பசேல் வயல்வெளிகளையும், தென்னை தோப்புகளையும் வேடிக்கை பார்த்தபடி ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு அந்தச் சுற்றுவட்டாரத்தின் முக்கிய டவுன் பகுதியை அடைந்தார்கள்.
நகரத்தின் பரபரப்பான கடைகளுக்குச் சென்று, தங்கள் சமையலுக்குத் தேவையான இன்டக்ஷன் ஸ்டவ்வுக்கு ஏற்ற பாத்திரங்கள், சின்னச் சின்ன சமையல் சாமான்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களைப் பார்த்துப் பார்த்துப் பார்த்து வாங்கிக் கொண்டனர்.
கைகளில் சுமக்க முடியாத அளவுக்குப் பைகளுடன், மீண்டும் பேருந்து பிடித்துத் தங்கள் கிராமத்து அறைக்கு வந்து சேர்ந்தார்கள்.
அதே நேரத்தில், அருளின் வீட்டில் ஒரு புனிதமான காரியம் தொடங்கவிருந்தது.
மணப்பெண் ஆசைப்பட்ட அடர் சிவப்பு நிறமும், அதனுடன் மிளிரும் தங்கச் சரிகையும் கொண்ட அந்தத் தூய்மையான பட்டு நூல்களை அருள் கவனமாக எடுத்து வந்தான். இன்று மிகச் சிறந்த முகூர்த்த நாள், நல்ல நேரம் என்பதால், அந்தத் திருமணப் பட்டுப்புடவைக்கான பாவு அமைக்கும் வேலையைத் தொடங்க அதுவே உகந்த நேரமாக இருந்தது.
அருளின் தாய் பார்வதி அம்மாள் வீட்டின் பூஜை அறையைச் சுத்தமாகக் கழுவி, கோலமிட்டு, விளக்கேற்றி வைத்திருந்தார். அருள் அந்தப் பட்டு நூல்களையும், சரிகைக் கண்டுகளையும் தட்டில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் கொண்டு போய் வைத்தான்.
பெரியவர் முத்தையா ஐயா கைகூப்பி நிற்க, பார்வதி அம்மாள் கற்பூரம் காட்டிச் சாமி கும்பிட்டார்.
“எல்லா வல்ல இறைவா… இந்த ஆடை உடுக்கப்போற பொண்ணோட வாழ்க்கை எந்தக் குறையுமில்லாம, தீர்க்க சுமங்கலியா, சந்தோஷமா இருக்கணும். இந்த நெசவு சிறப்பா முடிய அருள் புரியணும்,” என்று மனமுருகி வேண்டிக் கொண்டார் முத்தையா ஐயா.
பூஜை முடிந்ததும், சாமியிடம் ஆசி பெற்ற அந்தப் பட்டு நூல்களை அருள் மிகுந்த மரியாதையோடு தன் கைகளில் ஏந்திக் கொண்டு தறிக் கூடத்திற்கு வந்தான். அவனது முகத்தில் ஒரு பெரிய பொறுப்பும், கலையின் மீதான பக்தியும் ஒருங்கே மிளிர்ந்தன.
தறியில் நூல்களைக் கோர்க்கும் “பாவு பிணைக்கும்” முதல்கட்டப் பணியில் அருள் தீவிரமாக இறங்கினான். அவனது கைகள் மிக வேகமாகவும், அதே சமயம் அசாத்தியத் துல்லியத்தோடும் பட்டு நூல்களைத் தறியின் சட்டத்தில் அமைத்துக் கொண்டிருந்தன.
முத்தையாவோ கண்களை மூடி தறியின் இழுவை சத்தத்தை வைத்து மனதிற்குள் புடவையின் டிசைனை ஓட விட்டுக் கொண்டிருந்தார்.
பொருட்களை வாங்கிவிட்டு வந்து, வீட்டின் பூட்டைத் திறந்து பைகளை உள்ளே வைத்த ராஷியும் சாருவும் ஹப்பாடா என்றாளுங்கள்.
வர்ணம் மிளிரும்…

