எப்போதும் அமைதியாக இருக்கும் மாளிகைதான், அது. ஆனால், அந்த அமைதியில் இதுவரை அழுத்தம் என்பது மருந்துக்கும் இருந்ததில்லை. இதம் நிறைந்திருக்குமே!
பிள்ளைகள் நால்வரும் வளர வளர குடும்பத்தினர் ஒன்றாகக் கூடும் பொழுதுகள் குறைந்துவிட்டதுதான். இருந்தாலும் அப்படியான பொழுதுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுபவை! ஒன்று ஒன்றிலும் கலகலப்புக்குப் பஞ்சமே இராதே! கலீர்ச் சிரிப்பும் பேச்சும் கமகம சமையல் மணமுமாக இருக்குமே!
நிறைந்து கசிந்த விழிகளைத் துடைக்கவும் வராது அமர்ந்திருந்தாள், அந்த வீட்டின் கடைக்குட்டி ஏவா(Ava). கண்ணீர் மறைத்த மங்கிய பார்வை என்னவோ சற்றே தள்ளி, அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த அன்புத் தந்தையில்.
ஆரோன் டேல் மிகவுமே கண்டிப்பான தகப்பன். அந்தக் கண்டிப்பின் பின்னால் தன் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான அக்கறை மிகுந்து கிடக்கும். என் உலகமே உங்கள் நால்வரையும் என் அன்பு மனைவியையும் சுற்றியதுதானே என்று சொல்பவர். அந்தச் சொல்லுக்கு ஏற்ப இப்போ வரை நடப்பவர்!
மளுக்கென்று ததும்பி அவள் கன்னத்தைக் கண்ணீர் நனைத்தது.
அன்று, அவுஸ்திரேலியாவில் இருந்து ஹோம் குக்கிங் அணியினர் அரையிறுதிப் போட்டி நிகழ்வை இலண்டனில், அதுவும் செஃப் ஆரோன் டேல் உணவகத்தில் நடத்தும் ஏற்பாட்டில் வந்திருந்தார்கள். அந்தப் போட்டி முடிய வீட்டில் விருந்தளித்துப் பாராட்டினார், ஆரோன். அந்த நாளுக்கு அவள் நினைவுகள் இழுபட்டன.
அதுவும், “இந்த சீசன் பெட்!” என்று, நிறைந்து ததும்பும் பெருமையோடு ஒலிவியாவைத் தோளோடு அணைத்து வரவேற்று அறிமுகம் செய்வித்தாரே இவள் தகப்பன்! இப்போது போல் பசுமையாக அந்த நிகழ்வு ஏவா நினைவில் வந்து போனது.
ஹோம் குக்கிங் ஷோ ஒளிபரப்பாக ஆரம்பித்ததிலிருந்து என்னவோ தெரியாது ‘ஒலிவியா’ இவள் மனத்தைக் கவர்ந்த போட்டியாளர். அவளுக்கான பல்லாயிரக்கணக்கான இரசிகர்களில் ஏவாவும் ஒருத்தி ஆகியிருந்தாள். அவளை நேரில் தம் வீட்டில் கண்டதும் பரபரப்பாக நகர்ந்த ஏவா, சட்டென்று ஒலிவியா கரத்தை இறுகப் பற்றியிருந்தாள்.
“எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் ஒலிவியா !” என்று நெஞ்சு நிறைந்த மகிழ்வோடு சொன்னாளே!
விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள். அப்போதே, என் அப்பாதான் அவளுக்கும் அப்பா என்று அவளுக்குத் தெரியுமோ? என்ன எண்ணியிருப்பாள்? என் கதை தெரியாது இந்த உலகம் பெரிதாக இந்த மனிதனைத் தலையில் வைத்துக் கொண்டாடுதே என்று பரிகாசமாக எண்ணியிருப்பாளாக்கும். ‘நீங்கள் எல்லாரும் ஏமாளிகள்’ என்றும் எங்களைப்பற்றி நினைத்திருப்பாளாக்கும். இப்படி எண்ணியபோது ஒலிவியாவில் இருந்த பிடித்தம் காணாமல் போய் இருந்தது.
தகப்பன் மீது கோபம் கொள்ள இயலுமா? பரீட்சித்துப் பார்க்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அந்தக் கோபத்துக்குப் பதில், நிகராக என்றே சொல்லலாம் பெரும் வருத்தம் உண்டானது.
மாடிப்படிச் சுவரிலுள்ள அந்தப் பெரிய குழுப்படத்தை ஒலிவியா பார்த்து நின்றது கூட ஏவா நினைவில் வந்து போனது. பெரும்பாடுபட்டு விம்மலை அடக்கிக்கொண்டு இருந்தவள் விக்கி அழுதாள்.
மனைவியோடு தீவிரமாகக் கதைத்துக்கொண்டிருந்த ஆரோன் டேல் கவனம் தன் கடைக்குட்டி மகளின் அழுகையைக் கவரவில்லை. நினைவு தெரிந்த நாளில் இருந்து அவளின் சிறு சுணக்கத்தையும் பொறுக்காத மனிதர் அவர். இன்று?
தன் துயர் தகப்பன் செவியை எட்டவில்லை என்பது ஏவாவின் வேதனையை அதிகரித்திட்டு.
ஆரோன் மனைவி சோஃபியாவுமே, ஹோம் குக்கிங் போட்டியாளர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்த நாளில்தான் நின்றார்.
“சமையலறையைப் பாக்கிறது மட்டும் இல்ல, உனக்கு விருப்பமான எதையாவது சமைச்சும் தரலாம்.”என்று, அன்று ஒலிவியாவிடம் கணவர் சொன்னதும்,“நீ என்ன சொல்லுற சோஃபியா?” என்று, ஆர்வம் பொங்க தன்னிடம் கேட்டதும் நினைவில் வந்து, ஏற்கனவே திரண்டிருந்த கோபத்தைக் கொதிக்க வைத்திட்டு. பார்த்துப் பாராது சிதறடித்தது.
“கலியாணம், மனைவி எண்டா ஒருத்தி, காதலிகள் ஊருக்கு ஒண்டு. நல்லா இருக்கு உன்ர நியாயம் ஆரோன்.” விழிகள் கோபக்கனலைக் கக்க உறுமினார், சோஃபியா.
ஆரோன் மிகவுமே களைத்துத் தெரிந்தார். எத்தனை தடவைகள் திரும்ப திரும்பச் சொல்வது, விளக்கம் கொடுப்பது?
காலைக் கோப்பிக்கு முதலே இணையத்தைச் சுட சுட வைத்திருக்கும் செய்தி அவர்கள் வீட்டினுள் புகுந்துவிட்டிருந்தது.
“அப்போ அந்த ஜோன் சொன்னது உண்மை. அந்த ஒலிவியா உங்கட மகள், அப்பிடித்தானா?” முதல் ஆளாக, அந்த மாளிகையே அதிரக் கத்தியிருந்தான், ஏதன்.
மறுக்க இயலுமா? முதல் எதற்கு? என்றாவது இந்தக் கதை கசிந்தால் என்றதைவிடவும் பகிரங்கமாக, ஒலிவியா என்பவள் என் இரத்தம் என்று சொல்லும் கணத்தை, ஆரோன் டேல் உள்ளம் ஏக்கத்தோடு எதிர்பார்த்திருந்ததையே இன்றைய விடியல்தானே உணர்த்தியிருக்கிறது. இத்தனைக்கும் தன் வாயால் மகள் என்று சொல்ல மாட்டேன் என்று, ஒலிவியாவின் அன்னை லிசிக்கு வாக்கே கொடுத்திருக்கிறார்.
அறிமுகமான நாளிலிருந்து தேவையே இல்லாது அவரைப் போட்டியாக எண்ணி வந்தார், ஜோன். எதையாவது இடக்கு மடக்காகச் செய்து வைத்து ஆரோன் டேலைக் குழப்பி விட்டுவிடுவார். ஆனால் இன்று, ஆரோன் டேல் வாழ்வில் மிகவுமே நல்லதொரு காரியம் செய்திருக்கிறார்.
“உங்கள் நாலு பேரையும் போல ஒலிவியாவும் என்ர மகள்தான்.” என்றிருந்தார். “ஆனா நீங்க நினைக்கிறது போல இல்ல…” என்று விளக்க ஆரம்பித்தவரை, “போதும்!” என்ற ஒற்றைச்சொல் வந்து இரும்புக் குண்டாகத் தாக்கியிருந்தது.
“உங்களுடைய எந்த விளக்கமும் சாட்டுகளும் எனக்கு வேணாம்.” என்று, முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டு, துச்சமாக ஒரு பார்வையோடு விறுவிறுவென்று ஏதன் வெளியேறிவிட்டான்.
ஆரோன் டேலின் சமையல் தொழில் வாரிசு என்று இல்லையென்றாலும் உணவகங்களை நிர்வகிப்பதில் பெரிதும் கைகொடுக்கும் அவர் செல்ல மகன் ஏதன். தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்றளவுக்கு நண்பனுக்கு ஒத்தவன். அவர் பக்கத்தை, அதில் நியாயம் ஏதாவது இருக்குமா என்றெல்லாம் அறியும் பொறுமை இன்றிச் சென்றுவிட்டான்.