“ஆஸ்பத்திரிக்கு போனனீங்களாம்மா? என்னவாம்?” உள்ளே இருந்த பெரும் பரபரப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல் சாதாரணம்போல் காட்டி வினவினான்.
“ஓமப்பு. பிள்ளை சொன்ன நிமிசமே போயிற்று வந்திட்டம். ஏழு கிழமையாம். ஒரு குறையும் இல்லையாம். அம்மாவும் பிள்ளையும் ஆரோக்கியமா இருக்கினமாம்.” என்று படபடவென்று அனைத்தையும் சொன்னார் புவனாம்பிகை.
அவனுக்கு அப்போதுதான் நிம்மதியாயிற்று. அன்றைக்குப் பிறகு ஒழுங்கான உணவு, உறக்கம் இல்லாமல் இருக்கிறாளே என்று ஒரு பயம் இருந்தது. அது இப்போதுதான் அகன்றது. எப்படி இவர்களை எல்லாம் கடந்து அவளிடம் போவது என்று யோசித்தான்.
அவன் மனத்தை அறிந்தவராக, “முதல் போய்ப் பிள்ளையைப் பாருங்கோ தம்பி.” என்றார் புவனாம்பிகை.
கால்கள் துடித்தாலும் அவன் அசையவில்லை. அதுவும், திருமணமாகி இத்தனை ஆண்டுகளாகியும் குழந்தையற்று இருக்கும் சிந்துஜா, மனோகரன் முன்னால் அதிகப்படியான தன் ஆர்வத்தைக் காட்டிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தான்.
“போய்யா! போய்ப் பார்!” அவர் மீண்டும் சொல்ல, அவர் சொன்னதற்காகப் போகிறவன் போன்று எழுந்து போனான்.
வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த அடுத்த நிமிடம் அறையில் இருந்தான். இவனுக்கு முதுகு காட்டி அவள் கட்டிலில் படுத்திருந்தாள். அறை வரை வந்தவனால் அவளை நெருங்க முடியவில்லை. என்னவோ மனத்தடை. பார்வை மட்டும் அவளில்.
நிச்சயமாக உறங்கியிருக்க மாட்டாள் என்று உள்ளுணர்வு சொன்னது. மெல்லச் சென்று அவள் முதுகுப் பக்கம் அமர்ந்தான். நெஞ்சுக்குள் என்னென்னவோ உணர்வுகளின் பேரலை. எப்படி ஆரம்பிக்க, என்ன கேக்க, என்ன சொல்ல? ஒன்றும் தெரியா நிலை. எது கேட்டாலும் சொன்னாலும் அது அவளைக் காயப்படுத்தும். அதுவே அவன் வாயைக் கட்டிப்போட்டது.
எவ்வளவு நேரம்தான் அப்படியே இருப்பது? மெல்ல அவள் வயிற்றில் கையை வைத்தான்.
விழிகள் மூடிப் படுத்திருந்தாலும் விழித்தே இருந்தவள் அவன் வரவை உணராமல் இல்லை. அவன் வந்தது, நின்று அவளைப் பார்த்தது, கட்டிலில் வந்து அமர்ந்தது என்று அவன் அசைவுகள் ஒவ்வொன்றையும் அவளின் புலன்கள் கவனித்துக்கொண்டுதான் இருந்தன.
வயிற்றில் கையை வைத்ததும் அதுவரை அழுகையில் நடுங்கிக்கொண்டிருந்த இதழ்களைப் பற்களால் பற்றி, தன் உணர்வுகளை அடக்கினாள். சூடான கண்ணீர் ஒரு பக்கமாய் வழிந்தோடியது.
அவள் மணிவயிற்றை அவன் கை மெல்லத் தடவிக் கொடுத்தது. அவள் தேகம் சிலிர்த்தது. அதை அவனும் உணர்ந்தான். திரும்பி அவளைப் பார்த்தான். எத்தனை அசையாகக் கொண்டாட ஆசைப்பட்டாளோ! அவளைத் திருப்பி முகம் பார்க்க விரும்பினான். விழிகளோடு விழிகளைக் கலந்து உணர்வுகளைப் பரிமாற உள்ளம் உந்தியது. ஆனாலும் எண்ணியதைச் செயலாற்ற முடியாமல் ஒரு தடுமாற்றம். அவன் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே மெதுவாக என்றாலும் பிடிவாதமாக அவன் கரத்தை அவள் வயிற்றிலிருந்து எடுத்துவிட்டாள்.
உதட்டைப் பற்றியபடி சில கணங்களுக்கு அவளையே பார்த்தவன், “சொறி!” என்றான் தன் கனத்த குரலில்.
கானவியின் உணர்வுகள் எல்லாம் வெடித்துச் சிதறும் விளிம்பு நிலையில் இருந்தன. பச்சைப் புண்ணாக வலிக்கும் அவள் நெஞ்சு அவன் மன்னிப்பில் ஆறவே இல்லை! பிறகு எதற்கு அது?
எதையாவது செய்து அவளைச் சமாதானப்படுத்திவிட விரும்பினான். எப்படி என்றுதான் தெரியவில்லை. “கானவி!” என்றான் மெல்லிய குரலில். “ஏன் என்னட்டச் சொல்லேல்ல?” நியாயமேயில்லாத கேள்வி என்று தெரிந்தும் கேட்டான்.
அதற்குமேல் முடியாமல் சின்ன விசிப்புச் சத்தம் ஒன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது.
“கானவி!” அவள் கையைப் பற்றித் தன் புறமாகத் திருப்பினான். அவளின் பலகீனம் மிகுந்த மறுப்பு அவன் வலுவுக்கு முன்னால் நிற்கவில்லை. ஆனால், அவன் பார்வையைச் சந்திக்கக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள்.
“என்னைப் பார் கானவி! இந்த நேரம் இது என்ன அழுகை?” என்று அவன் சொல்லும்போதே, “அண்ணா!” என்று சிவரூபனின் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அறை வாசலுக்கே வராமல் தள்ளி நின்று குரல் கொடுத்திருந்தான் அவன். “நான் ஒருக்கா உள்ளுக்கு வரலாமா?” என்றான் மெல்லிய குரலில்.
திரும்பி மனைவியைப் பார்த்தான். எழுந்து அமர்ந்து, அழுத விழிகளையும் முகத்தையும் துடைத்துக்கொண்டாள் அவள். விலகியிருந்த ஆடையையும் இழுத்துச் சீர் செய்துகொண்டாள். பார்வையால் அவளை ஒருமுறை அளந்துவிட்டு, “வா!” என்று அழைத்தான் செந்தாளன்.
வந்தவன் பார்வை தமையனைத் தொட்டுச் சங்கடத்துடன் அண்ணியாரில் நிலைத்தது. “அண்ணி, அண்டைக்கு நடந்ததுக்கு உண்மையா சொறி. அது கோபத்தில…” உண்மையாகவே உணர்ந்து சொன்னான் சிவரூபன்.
அவனுக்கு யாரும் எப்போதும் ஒரு வார்த்தை சொல்வது பிடிக்காது என்பது உண்மைதான். என்றாலும், அவள் தாய்மை உற்றிருக்கும் இந்த நேரத்தில் இதெல்லாம் நடந்திருக்க வேண்டாம் என்றுதான் நினைத்தான்.
முணுக்கென்று மீண்டும் கண்ணீர் அரும்பிற்றுக் கானவிக்கு. அதை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு, “இல்ல பரவாயில்ல, விடுங்கோ.” என்று குரல் கமறச் சொன்னவள் சிரிக்க முயன்றாள்.
அது அவனை இன்னுமே தாக்கிற்று. “உண்மையாவே சொறி அண்ணி.” என்று மீண்டும் சொல்லிவிட்டு, “அண்ணின்ர அம்மாவும் அப்பாவும் வந்திருக்கினம் அண்ணா. அம்மா, உங்க ரெண்டு பேரையும் வெளில வரட்டாம் எண்டு சொன்னவா.” என்று தமையனிடமும் சொல்லிவிட்டுப் போனான்.
இங்கே, கணவனும் மனைவியும் சமாதானமாகியிருப்பார்களா என்று தெரியாததில் அவர்களை உள்ளே அழைத்து வராமல் சொல்லி அனுப்பியிருக்கிறார் என்று செந்தாளனுக்கு விளங்கிற்று.
ஆனால், இப்போதே ஏன் சொன்னார், ஒரு நாள் விட்டுச் சொல்லியிருக்கக் கூடாதா என்று அவனுக்கு அன்னை மீது கோபம் வந்தது. எப்படியாவது அவளோடு இரண்டு வார்த்தைகள் சுமூகமாகக் கதைக்க நினைத்தான். இனி எங்கே?
ஒரு நெடிய மூச்சுடன் அவளைப் பார்த்தான். அப்போதும் அவன் முகம் பாராமல் எழுந்து, முகம் கழுவப் போனாள் கானவி.
கைகளால் தலையைப் பற்றியபடி அப்படியே அமர்ந்திருந்தான் செந்தாளன். அவனுக்கு மனமே சரியில்லை. ஏன் என்று இல்லாமல் சஞ்சலப்பட்டது.
இவள் முகத்தைப் பார்த்தாலே என்னவோ பிரச்சனை என்று கண்டு கொள்வார்கள். இனி அவர்களையும் சமாளிக்க வேண்டும். ஒரு நெடிய மூச்சுடன் அவன் நிமிர, அவள் மீண்டும் அறைக்குள் வந்தாள். அவன் பார்வை அவளைத் தொடர்ந்தது.
கண்ணாடி முன்னே வந்து நின்று, ஒற்றைப் பின்னலைக் கலைத்துவிட்டுவிட்டுத் தலையை வாரினாள். மீண்டும் புதிதாகப் பின்னி, இறப்பர் பான்ட் ஒன்றைப் போட்டாள். முகத்துக்குப் பவுடர் பூசி, நெற்றியில் திலகமிட்டாள். அவர்கள் முன்னே அழக் கூடாது என்று ஆழ்ந்த மூச்சுக்களை இழுத்து விட்டுத் தன்னைச் சமன்படுத்தினாள். அழுத தடம் தெரிகிறதா என்று மீண்டுமொருமுறை கண்ணாடியில் பார்த்துவிட்டு, அங்கே ஒருவன் இருப்பதையே அறியாதவள் போன்று வெளியே நடந்தாள்.
இவற்றை எல்லாம் பார்த்திருந்த செந்தாளன் எப்படி உணர்வது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

