வர்ணம் 7
முதல் கட்டமாக, நூல்களின் தரத்தைப் பிரித்தறியும் கலையை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தான்.
“நூலை சும்மா கண்ணால பாக்குறதுனால மட்டும் அதோட தரம் தெரிஞ்சிடாதுங்க,” என்று கூறிய அருள், பட்டு நூலின் மெல்லிய இழைகளை ராஷியின் கைகளில் கொடுத்தான்.
“விரல்களோட நுனியில அந்த நூலை வச்சு லேசாகத் தேய்க்கும்போது, அது கொடுக்கிற மிருதுவான தன்மையும், அதோட இறுக்கமும்தான் அது உண்மையான தூய பட்டா இல்ல கலப்படமானு சொல்லும்,” என்று விளக்கினான்.
அருள் சொல்லச் சொல்ல, ராசியும் தன் முழு கவனத்தையும் சிதறவிடாமல், அவன் காட்டிய வழியிலேயே நூலின் தரத்தை விரல்களால் தொட்டு உணரக் கற்றுக்கொண்டாள்.
தறியின் சட்டத்தில் நூல்களை நீளவாக்கில் பிணைக்கும் ‘பாவு’ அமைக்கும் கலை மிகவும் கடினமானது. ஒரு சின்ன நூல் பிசகினாலும் மொத்தப் புடவையின் டிசைனும் பாழாகிவிடும்.
அருள் மிக அமைதியாக, தன் கவனத்தை வேறு எதிலும் சிதறவிடாமல், நூலின் ஒவ்வொரு இழையையும் ஊசியில் கோர்ப்பது போல நேர்த்தியாகக் கோர்த்துக் காட்டினான்.
“நெசவுங்கிறது வெறும் கையும் காலும் பண்ற வேலையில்லைங்க… அது ஒரு கணிதம்! எத்தனை இழை பாவு ஓடுது, அதுல எத்தனை இழை ஊடே நூல் பாயுதுங்கிற கணக்கு மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கணும். ஒரு நொடி கவனம் சிதறினாலும் அந்தத் தையல் விடுபட்டுடும்,” என்று கனிவும் கண்டிப்பும் கலந்த குரலில் கூறினான்.
சாருவும் ராசியும் அவனது இந்தத் தீர்க்கமான அர்ப்பணிப்பைக் கண்டு வியந்துபோனார்கள். ராஷி தன் நோட்டுப் புத்தகத்தில் அருள் சொன்ன ஒவ்வொரு கணக்கையும், தறியின் பாகங்களின் பெயர்களையும், நூல் அமைக்கும் முறைகளையும் படம் வரைந்து துல்லியமாகக் குறித்துக்கொண்டாள்.
அடுத்தடுத்த நாட்களில், அருள் தறியை இயக்கும் முறையை நேரடியாகச் செய்து காட்டினான்.
அவனது கால்கள் கீழே மிதியை சீராக அமுக்க, கைகள் ‘நாடா’வை இடதும் வலதுமாக வேகமாகவும் மென்மையாகவும் நகர்த்தின. “டக்… டக்… டக்…” என்ற அந்த தறியின் ஓசை ஒரு அழகிய இசையைப் போல அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.
“மிதியை அழுத்தும்போது கால்களுக்கு எவ்வளவு பலம் கொடுக்கிறோமோ, அதே அளவுக்கு கைகள்ல மென்மை இருக்கணும். அப்போதான் புடவையின் நெசவு ஒரே சீரா, மடிப்பு மாறாம வரும்,” என்று அருள் விவரித்தான்.
அவன் கற்றுக்கொடுக்கும் அந்த நேரங்களில், அவனது கண்களில் தன் கலை மீதான கர்வமும், அதைச் சரியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அக்கறையும் மட்டுமே மிளிர்ந்தன. அவனது அந்த உண்மையான கர்ம சிரத்தையைக் கண்டு, ராஷியும் தன் மனதில் மலரும் உணர்வுகளைத் தாண்டி, ஒரு மாணவியாக அவனது ஒவ்வொரு வார்த்தையையும் வேதவாக்காக எடுத்துக்கொண்டு தீவிரமாகக் கற்கத் தொடங்கினாள்.
மாலை நேரங்களில், தறி நெய்து முடித்த பட்டு ஆடைகளை மடித்து வைக்கும் முறையையும், அதைச் சேதமடையாமல் பராமரிக்கும் நுணுக்கங்களையும் அருள் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க இருவரும் அதை முயற்சி செய்து பார்த்தனர்.
நாட்கள் நகர நகர… வெறும் நகரத்து மாணவிகளாக வந்த ராஷியும் சாருவும், அருளின் இந்த வழிகாட்டுதலால் நெசவுக் கலையின் ஆழமான நுணுக்கங்களை உணர்ந்த திறமையான வடிவமைப்பாளர்களாக உருவெடுக்கத் தொடங்கினார்கள்!
அதோ இதோவென நாட்கள் சிறகடித்துப் பறந்தன. ஒரு மாதம் கண் இமைக்கும் நேரத்தில் கடந்துபோயிருந்தது.
ராஷியும் சாருவும் தினமும் தங்கள் பெற்றோரிடம் போனில் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். இருந்தாலும், தங்களின் முதன்மை லட்சியமும், கலையின் மீதான ஈர்ப்பும் அவர்களைத் தறிக் கூடத்திலேயே கட்டிப்போட்டிருந்தன. அருள் தன் கர்மச் சிரத்தையோடு சொல்லிக் கொடுத்த ஒவ்வொரு பாடத்தையும், அவர்கள் இருவரும் முழு கவனத்தையும் சிதறவிடாமல் கற்றுக்கொண்டார்கள்.
அன்று அருள் அந்தப் பக்கத்து ஊர்ப் புதுமணப் பெண்ணுக்காக நெய்த திருமணப் பட்டுப் புடவை முழுமையாகத் தயாராகியிருந்தது. அடர் சிவப்பு நிறத்தில், தங்கச் சரிகை மிளிர, அந்தப் புடவை ஒரு மாபெரும் கலைப்படைப்பாகத் திகழ்ந்தது.
அருள் வழக்கம்போல அந்தப் புடவையைத் தன் கைகளில் ஏந்தி, வீட்டின் பூஜை அறையில் கொண்டு போய் வைத்தான். முத்தையா ஐயாவும் பார்வதி அம்மாளும் சாமி கும்பிட, அருளும் தன் கைகளைக் கூப்பி, அந்த ஆடை உடுக்கப்போகும் பெண்ணின் வாழ்க்கை சிறக்க இறைவனை வணங்கினான்.
பூஜை முடிந்ததும், புடவையை நேர்த்தியாகப் பேக் செய்து எடுத்துக்கொண்டு, “அம்மா, நான் பக்கத்து ஊர்ல அந்தப் பொண்ணோட பெற்றோர் கிட்ட புடவையைக் கொடுத்துட்டு வந்துடுறேன்,” என்று கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றான்.
அருள் வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே, சாருவின் மொபைல் போன் உரக்கச் சத்தமிட்டது.
சாரு போனை எடுத்து, “ஹலோ…” என்ற அடுத்த நொடி, அவள் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து, அதிர்ச்சியும் பதற்றமும் தொற்றிக்கொண்டன.
எதிர்முனையில் பேசப்பட்ட செய்தியைக் கேட்ட சாருவின் கைகள் நடுங்கின. அவளது பாட்டி திடீரெனக் காலமான செய்திதான் அது. போனை வைத்ததும் சாருவின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
“என்னடி ஆச்சு சாரு?” என்று பதறியபடி ஓடிவந்து அவளைப் பற்றிக்கொண்டாள் ராஷி.
“ராஷி… பாட்டி… பாட்டி இறந்துட்டாங்களாம்டி…” என்று சொல்லிச் சாரு கதறி அழுதாள்.
செய்தியைக் கேட்ட ராஷிக்கும் நெஞ்சு அடைப்பது போல் இருந்தது. ஆனால், அந்தச் சூழலில் சாருவைத் தேற்ற வேண்டிய பொறுப்பு அவளுக்கு இருந்தது. உடனே இருவருமாகச் சென்னைக்குக் கிளம்ப ஆயத்தமானார்கள்.
ஆனால், சாரு ராஷியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “வேண்டாம்டி ராஷி… நீயும் என்கூட புறப்பட வேண்டாம். பாட்டி இறந்தது எனக்குப் பெரிய இழப்புதான், ஆனா இங்க நாம வந்த வேலை இன்னும் முடியல. அருள் கிட்ட தினமும் கத்துக்க வேண்டிய பாடங்கள் இருக்கு. நீயும் என்கூட வந்தா நம்ம ரிசர்ச் பாதியிலேயே நின்றுடும்,” என்றாள் உறுதியான குரலில்.
“ஆனா சாரு… உன்னை இந்த நிலைமையில தனியா எப்படி அனுப்புறது?” என்று ராஷி கவலையோடு கேட்டாள்.
“நான் சமாளிச்சுப்பேன்டி… நான் போயிட்டு ரெண்டே நாள்ல காரியங்கள் எல்லாம் முடிஞ்சதும் உடனே கிளம்பி வந்துடுறேன். நீ இங்கேயே இரு,” என்று சாரு பிடிவாதமாகச் சொன்னாள்.
வேறு வழியின்றி ராஷியும் சம்மதித்தாள். சாரு உடனே தன் துணிகளை எடுத்துப் பையில் வைத்துக்கொண்டு புறப்பட்டாள்.
பார்வதி அம்மாளிடம் சென்று விஷயம் சொன்னதும், அவர் பதறிப்போய் சாருவின் தலையைத் தடவி, “ஐயையோ… ரொம்ப வருத்தப்படாதம்மா. சரி, பத்திரமா போயிட்டு வா. ராஷியைப் பத்தி நீ கவலைப்படாதே… அவளை நான் என் சொந்தப் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன்,” என்று ஆறுதல் கூறினார்.
மனமே இல்லாமல், தோழியை விட்டுப் பிரிந்து சென்னைக்குச் செல்லும் கனத்த இதயத்தோடு சாரு அந்த ஊரை விட்டுப் புறப்பட்டுச் சென்றாள்.
அருள் ஊரில் இல்லாத நேரத்தில், சாருவும் திடீரெனக் கிளம்பிவிட… அந்த எளிய கிராமத்துப் பின்னணியில், ராஷி முதன்முறையாகத் தனியாக நின்றாள்.
சாரு புறப்பட்டுச் சென்ற பிறகு, அந்தச் சிறிய வீடு திடீரென மிகவும் அமைதியாகிவிட்டது போல ராஷிக்குத் தோன்றியது. எப்போதும் குறும்பாகப் பேசிக்கொண்டிருக்கும் தோழி அருகில் இல்லாதது அவளுக்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது.
மாலையில், பக்கத்து ஊருக்குச் சென்றிருந்த அருள் வீட்டிற்குத் திரும்பினான்.
வீட்டின் வாசலில் தன் தாயும் ராஷியும் மட்டும் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, “என்னம்மா… சாரு பாப்பாவைக் காணோம்? எங்கயாச்சும் கடைத் தெரு வரைக்கும் போயிருக்காங்களா?” என்று இயல்பாகக் கேட்டான்.
பார்வதி அம்மாள் பெருமூச்சுடன், “இல்லப்பா… சாருவோட பாட்டி திடீர்னு இறந்துட்டாங்களாம். போன் வந்ததும் பாவம் ரொம்ப பதறிட்டா. ரெண்டு நாள்ல வந்துடுறேன்னு சொல்லிட்டு சென்னைக்குக் கிளம்பிப் போயிட்டாப்பா,” என்றார்.
செய்தியைக் கேட்ட அருள் அதிர்ச்சியடைந்தான். உடனே தன் பார்வையை ராஷியின் பக்கம் திருப்பினான்.
தோழியை அனுப்பிவிட்டுத் தனியாக நிற்கிறாளே என்ற மெல்லிய தயக்கமும் கவலையும் ராஷியின் முகத்தில் தெரிவதை அருள் கவனித்தான்.
“ஐயையோ… ரொம்ப கஷ்டமான விஷயம். நீங்களும் கூடப் போயிருக்கலாமேங்க?” என்று அருள் கனிவான குரலில் ராஷியிடம் கேட்டான்.
ராஷி மெல்ல நிமிர்ந்து, “அவ தான் வேண்டாம்னு பிடிவாதம் பிடிச்சா அருள். ‘வந்த வேலை பாதியிலேயே நின்றுடும், நீ அங்கேயே இருந்து படிப்பு வேலையைப் பார், நான் ரெண்டு நாள்ல வந்துடுறேன்’னு சொல்லிட்டுப் போயிட்டா,” என்றாள் மெல்லிய குரலில்.
அருள் சில நொடிகள் யோசித்தான். நகர்ப்புறத்து ஆடம்பரச் சூழலில் வளர்ந்த ஒரு பெண், தனியாக ஒரு கிராமத்தில் தங்கிப் படிப்பைத் தொடர்வது என்பது சாதாரண விஷயமில்லை. ராஷியின் இந்த லட்சிய வெறியையும் மனஉறுதியையும் பார்த்து அவனுக்குள் ஒரு பெரிய மரியாதை உருவானது.
“சரிங்க… நீங்க எதுவும் யோசிச்சு மனசைக் குழப்பிக்காதீங்க. சென்னைக்கு அவங்ககிட்ட அப்பப்போ போன் பண்ணிப் பேசுங்க. சாப்பாடு, வேற எதுவும் உதவி வேணும்னா அம்மாகிட்ட தயங்காம கேளுங்க,” என்று சொல்லிவிட்டு, “அப்புறம்… இன்னைக்குத் தறிப் பாடம் எதுவும் வேண்டாம். நீங்க ரெஸ்ட் எடுங்க,” என்றான் அக்கறையோடு.
“இல்லை அருள்… பரவாயில்லை. சாரு இல்லாதனால நான் சும்மா இருந்தா பாட்டி நினைப்பாதான் இருக்கும். நாம வழக்கம்போல தறிப் பயிற்சியைத் தொடரலாம்,” என்று ராஷி உறுதியாகச் சொன்னாள்.
அவளது வார்த்தைகளில் இருந்த தெளிவைக் கண்டு அருள் புன்னகைத்தான்.
“சரிங்க… வாங்க,” என்று தறிக் கூடத்திற்கு அழைத்துச் சென்றான்.
அன்று இரவு… சாரு இல்லாததால் பார்வதி அம்மாள் ராஷியைத் தன் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுப் போகுமாறு அன்போடு வற்புறுத்தினார். ராஷியும் மறுக்காமல் அவர்கள் வீட்டின் கூடத்தில் அமர்ந்து சாப்பிட்டாள்.
சாப்பிட்டு முடித்ததும், ராஷி தன் அறைக்குச் செல்லத் தயாரானாள். இரவின் நிசப்தத்தில், நிலவொளி செம்மண் பாதையை வெள்ளியாக மாற்றியிருந்தது.
அருள் தன் கையில் ஒரு சிறிய டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு, “இருட்டா இருக்கு… நான் உங்களை அறை வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வர்றேன்,” என்று முன் நடந்தான்.
இருவரும் அமைதியாக நடந்து சென்றார்கள். தெருவில் வீசிய ஜில்லென்ற தென்றலும், தலைக்கு மேலே பிரகாசித்த நிலவும் அவர்களுக்கு இடையே ஒரு புதிய உணர்வைக் கடத்தின.
“சாரு இல்லாதது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்… ஆனா பயப்படாதீங்க,” என்று அருள் அமைதியைக் கலைத்துப் பேசினான்.
ராஷி அவனை நிமிர்ந்து பார்த்து, “நான் பயப்படல அருள்… உங்களையும் உங்க குடும்பத்தையும் பார்த்தா எனக்குப் பயமே வரல. ஏனோ ரொம்பப் பாதுகாப்பா உணர்றேன்,” என்றாள் உண்மையான மனதோடு.
அவளது அந்தப் பேச்சில் இருந்த உண்மையும், நிலவொளியில் மின்னிய அவளது விழிகளும் அருளின் நெஞ்சிற்குள் ஏதோ ஒரு புதுவிதமான அதிர்வை ஏற்படுத்தின!

