Skip to content
“இதென்ன தேவையில்லாத கதைகள் கதைக்கிற பிள்ள?” பெரியக்கா கோபமாகக் கவியைச் சாடினார்.
“முதல் ஃபோனைத் தா!” என்றவரோடு ஒரு வார்த்தையும் கதைக்க எனக்கு விருப்பமில்லை.
“கவி…” இடையிட்டேன்.
“என்ன?”
“உன்ர அக்கா நிக்கிறாவே? ஒருக்காக் கதைக்க ஏலுமா?”
“இத முதலே சொல்ல வேண்டியதுதானே? இடையில என்ன தேவையில்லாத கதைகள் வேண்டிக்கிடக்கு? ஏதோ பெரிய அன்பும் அக்கறையும் உள்ளவே போல!”
சிடுசிடுத்தபடி தான், “அக்கா!” உரத்த குரலில் அழைத்தாள். உதயா உள்ளே இருந்திருப்பாள் போல!
“என்ன கவி?”
“உங்களுக்குப் ஃபோன்.” தொலைபேசியைக் கைமாற்றினாள் கவி.
“எனக்கா? யாரடி?” என்றபடி வாங்கியவள், “அது சூர்யாதான். என்ன எண்டு கேள் பார்ப்பம்!” என்று அக்கா சொன்னதும் ஹலோ கூடச் சொல்லவில்லை.
அக்கா அங்கு அருகிலேயே நிற்பதை உணர்ந்து கொண்டேன். ‘நிற்கட்டுமே! அதுவும் நல்லதுக்குத்தான். இத்தோடு இந்தக் கலியாணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம்‘ என்று எண்ணிய போது, உதயா தன் விருப்பமின்மையைப் பளிச்சென்று சொல்வாள் என்று பெரிதும் நம்பியது எனதுள்ளம்.
அதுவே, “உதயா நான் சூர்யா…” திடமாகவே சொல்ல வைத்தது.
“சொல்லுங்க!” என்றாள் அவள், எவ்வித உணர்வும் இல்லாத குரலில்.
சுற்றி வளைப்பானேன்? விசயத்துக்கு வந்தேன்.
“உண்மையா உம்மட மனசில உள்ளதைச் சொல்ல வேணும் உதயா. பெரியக்காவுக்கோ யாருக்கும் நீர் பயப்படத் தேவையில்ல. இது…இந்தக் கலியாணம் நானும் நீரும் மட்டும் சம்பந்தப்பட்ட விசயம்.” என்று ஆரம்பித்து,
“உமக்கு இந்தக் கலியாணத்தில முழு விருப்பமா? உண்மையைச் சொல்லும். பெரியக்கா கட்டாயப்படுதினதால தான் ஓமென்று சொன்னீரா?”
தெளிவாகவே கேட்டேன். எனக்கே என் குரல், சிலவருடங்களுக்கு முன்னரான சூர்யாவின் குரலாய் ஒலித்தது. அவ்வளவு திடமாக.
அவள் பதிலே சொல்லவில்லை.
“உதயா லைனில இருக்கிறீர் தானே?”
“ம்ம்”
“என்னடா இவன் எழுத்தும் முடிஞ்சப் பிறகு இப்பிடிக் கேட்கிறான் எண்டு நினையாதேயும். அப்பவே செய்திருக்க வேண்டிய விசயம். சரி இனி அதைக் கதைச்சுப் பலனில்ல. இப்ப இன்னும் கலியாணம் முடியேல்ல தானே?
அதுக்கு முதல் உமக்கு ஒரு விசயத்தையும் தெளிவாச் சொல்ல விரும்புறன். என்னைப் பற்றி உமக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கும். ஊருக்கே தெரியும் பிறகென்ன?
கலியாணம் காட்சியில எல்லாம் எனக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்ல. சாகப் போறன் அந்தா இந்தா எண்டு சரியாக் கத்திக்குழறி இனி இல்ல எண்டு அரியண்டம் தந்துதான் அம்மா எழுத்துக்குச் சம்மதிக்க வச்சவா.”
படபடவென்று சொல்லிக் கொண்டுவந்த நான் இந்த இடத்தில் சற்றே தயங்கினேன். ஒருவேளை உண்மையில் விருப்பத்தோடு அவள் சம்மதம் சொல்லியிருந்தால்? கணத்தில் மின்னியது இந்த எண்ணம்.
அவள் மனம் நிச்சயமாக வருந்தும். ‘ம்ம்…என்னக் கட்டி வருந்திறதவிட அதொன்றும் பெரிசில்ல.’ என்ற முடிவோடு தொடர்ந்தேன்.
“இவள் தான் வாழ்க்க எண்டு நினைச்சிருந்தவள அப்பிடியே மறந்திட்டு, இன்னொரு வாழ்க்க வாழுறது அவ்வளவு சுகம்(சுலபம்) எண்டு நான் நினைக்கேல்ல. கல்யாணிய என்னால மறக்க முடியாது உதயா. அப்படியிருக்க, காதலியை நினைச்சுக்கொண்டிருக்கிற ஒரு குடிகாரனக் கட்டி உமக்கு என்ன சந்தோசம் கிடைச்சிரும் சொல்லும் பார்ப்பம்?
அதனால உண்மையச் சொல்லும், நீர் கட்டாயத்துக்குத்தானே சம்மதிச்சீர்? யாருக்கும் பயப்படாமால் சொல்லும்.”
தெளிவும் உறுதியுமாகக் கேட்ட நான் முடிக்கவில்லை, உதயாவுக்குப் பதிலாகப் பெரியக்காவின் குரல் வந்தது. ஸ்பீக்ரில் போட்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.
“இதென்ன லூசுக்கதை கதைக்கிற சூர்யா? அவள யாரு கட்டாயப்படுத்தினது எண்டு சொல்ல வாற நீ?
அவள் ஒண்ணும் குழந்த இல்ல. இந்த வீட்டயே ஆம்பளப்பிள்ள போல பாத்துக் கொள்ளுறவளுக்குத் தன்ர வாழ்க்க பற்றி முடிவெடுக்கத் தெரியாதா என்ன? அவள் மனப்பூர்வமாத் தான் சம்மதம் சொன்னவள்.”
படபடவென்று கொட்டியவர், “நீயே உன்ர வாயால சொல்லு உதயா!” என்றார், அவளிடம்.
அப்போதும் அவள் சட்டென்று ஒன்றும் சொல்லவில்லை.
“என்ன உதயா முழுமனமாச் சம்மதம் எண்டு சொல்லன்.” பெரியக்கா தான்; அப்பட்டமான அதிகாரக் குரல்; அதை என்னால் புரிந்து கொள்ளவா முடியாது?
“இங்க பாருங்க, நீங்க இதில தலையிட வேணாம்; இது எங்கட ரெண்டுபேர் சம்பந்தப்பட்ட விசயம்.” காட்டமாகச் சொன்னேன்.
“இங்க பார் தம்பி! நீ இப்பிடிச் சொல்லறது போல உதயா சொல்ல மாட்டாள். அவள்ட விசயத்தில நான் சம்பந்தப்பட்டிருக்கிறன். அதுவும் அவள்ட அப்பாவும் இல்லாத நிலையில நான் தான் எல்லாம் சரியா?”
சத்தமாகச் சொன்னவர், “கனக்கக் கதை ஏன்? நீ அவள்ட சம்மதம் தானே தெரிய வேணும் எண்டு சொல்லுற? நல்ல விசயம் தான். கேட்டுத் தெரிஞ்சிட்டு அதுக்கு ஏற்ற மாதிரி நேர் சீரா நடந்து கொள்!” என்றவர், “ம்ம்… சொல்லு உதயா!” என்றார் அவளிடம்.
“அவா சொல்லுறதுக்காக நீர் பொய் சொல்ல வேணாம்; உண்மையைச் சொல்லும். ஏற்கனவே ஒருத்தியக் காதலிச்சு அவள்ட நினைவாகவே இருப்பன் எண்ட ஒரு குடிகாரன் நான். இதை நல்லா நினைவில வச்சிக்கொண்டு சொல்லும்.”
“டேய் சூர்யா!” அக்கா கோபமும் அதட்டலுமாகக் குறுக்கிட, “எனக்கு முழுமனமாச் சம்மதம்; போதுமா?” என்றதோடு தொலைபேசி உயிர்ப்பிழந்திருந்தது.
“வச்சிட்டாளா?”
என் கரத்திலிருந்த தொலைபேசியைப் பார்த்த என் கண்களில் கனல்.
இதுவரையும் இல்லாதவகையில் உதயாவில் கோபம் பொங்கியது.
“ஒரு சந்தர்ப்பம் கொடுத்தன், நீ விலகேல்ல; அப்ப நல்லா அனுபவி; அனுபவிச்சாத் தான் உனக்கு விளங்கும்.”
வார்த்தைகள் தன் பாட்டில் கொட்ட, என் கரத்திலிருந்த தொலைபேசி வெளியே போய் விழுந்து சிதறியது.
error: Alert: Content selection is disabled!!