மயங்கினேன் மழைச்சிலையே – 11

அத்தியாயம் – 11

சக்தியிடம் பேச்சுவார்த்தை மட்டும் தான் இல்லை. ஆனால் அவளது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.

இருவரும் ஒருவரிடம் ஒருவர் பேச்சை நிறுத்திய பிறகு அன்பு அலுவலகம் முடிந்து வரும்போது அவளது அறையை வழக்கமாக அரைக்கண்ணால் கவனிப்பான்.

ஆங்காங்கே ஆடைகள் விரவி கிடக்க கசங்கிய படுக்கை, சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு திசையில் நோக்கி வைக்கப்பட்டிருக்கும் சேர், என ஒழுங்கற்று கிடக்கும் அறைக்குள் அவளை மட்டுமே அவன் விழிகள் தேடும்.

பொதுவாக துளி அசுத்தம் இருந்தாலும் பதற்றமுறுபவனுக்கு வீட்டில் அவளுடனான பேச்சிற்கு பஞ்சம் ஏற்பட்டபின்பு, அவளுக்கான அந்த அரைக்கண் தேடலில், அவளது ஒழுங்கற்ற அறை கூட அவனை பாதிக்காத விசயம் அவனுக்கே தெரியவில்லை.

என்றாவது ஒருநாள் அலுவலகம் சென்று மற்ற நாட்கள் அனைத்தும் வீட்டிலிருந்து வேலை பார்த்த சக்திக்கு வேலை முடித்து வரும் அன்புவிடம் வாயாடி வம்பிழுப்பதில் அலாதி இன்பம்.

அப்படிப்பட்டவளால் அவனது மௌன விரதத்தை ஏற்றுக்கொள்ள முடியாமலும் கலைக்க வழி தெரியாமலும் யோசித்தவள், வீட்டை அசுத்தமாக வைத்து அவன் கோபம் கொள்ளும் போது அப்படியே பேசி அவனை இயல்பாக்க முயன்றாள்.

அவளது செயலின் காரணம் புரியாத மாதிரி வேண்டுமென்றே அன்று சொற்களால் அன்பு அவளை காயப்படுத்திய பிறகு அவனுடன் பேச்சைத் தவிர்த்தவள், அவனைக் காணவே சரியாக அன்பு வரும் வேளையில் தனது அறைக்கதவைத் திறந்து வைப்பது சமீபத்திய வழக்கமாகி விட்டது அவளுக்கு.

அன்பு கவனியாதபோது அவனை அவள் கண்டிருக்க, அறைக்குள் அவளது இருப்பை உறுதிசெய்யும் அன்பு எதுவும் தெரியாதது போல அகன்று விடுவான். இன்று அவளது அறைக்கதவு மூடி இருப்பதில் புருவங்கள் சுருக்கியவன்,

ஒருவேளை அவள் கவனிக்கவில்லையோ என்ற எண்ணத்தில் கிட்சனில் சென்று சத்தமாக பாத்திரங்களை உருட்டி தனது வேலையை முடித்து வர, அப்போதும் பூட்டியிருந்த கதவால் குழப்பம் அடைந்தான்.

மனதில் ஏதோ ஒன்று உறுத்த சட்டென அவளது காலணிகள் இல்லாததை கவனித்தவன், அவள் அறைக்கதவை லேசாக தட்டிவிட்டு திறக்க முயல, உள்ளிருந்து எந்த பதிலுமில்லை அத்தோடு கதவும் திறந்துகொண்டது.

பளிச்சென்று இருந்த அறை அவனது மூளையில் அலாரம் அடிக்க, அவள் வீட்டை விட்டு சென்று விட்டாளோ என்ற பதற்றத்தில் அவசரமாக அவளது அலைபேசி எண்ணிற்கு அழைத்தான்.

மூன்றுமுறை முழு ரிங்கும் முடிந்து அழைப்பு ஏற்கப்படாமல் சோர்ந்தவன், கடைசியாக ஒருமுறை என தன்னையே சமாதானம் செய்து கொண்டு மீண்டும் அழைத்தான்.

அழைப்பு மணி போய் கொண்டிருக்க, இங்கே “ப்ளீஸ் யுவி! கால் அட்டென் பண்ணுடி.” என்ற பரிதவிப்போடு காத்திருந்தான் அன்பு.

இம்முறை அழைப்பு ஏற்கப்பட, அவன் பேச வருவதற்குள், ” எதாவது முக்கியமான விசயமா மிஸ்டர். அன்பு?” என்றவள் அவனுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் தராமல் “கொஞ்சம் பிஸியா இருக்கேன், அப்பறமா பேசறேன்.” வேகமாக அழைப்பை வைத்து விட்டாள்.

அழைப்பு ஏற்கப்பட்டதில் மகிழ்ந்தவன் அவளது அந்நியமான அவசரப் பேச்சில் கடுப்பாகி ‘இவளைக் காணோமேனு இங்க ஒருத்தன் தவிப்போட கால் பண்ணுனா, அவாய்ட் பண்றா.’ கோபத்தில் மீண்டும் முறுக்கிக் கொண்டான்.

ஆனால் ‘எங்க இருக்காள்னு தெரியலையே! ஒரு வேளை அவள் மறுபடியும் கால் செய்யலைனா? எங்க போனா இவள்?! வேற எதாவது வீடு பார்த்துட்டாளா? அப்படினாலும் எப்படி உடனே திடீர்னு வீடு கிடைக்கும்?!’ குழம்பிக் கொண்டிருந்தான்.

இப்படியாகக் குழம்பிக் கொண்டே தனது அன்றாட வேலைகளை செய்து இரவு உணவையும் முடித்து உறங்கச் செல்லும் நேரம் வரை அவள் அழைக்காததில் தவித்தவன் மனதிற்குள் உருவெடுத்த தொடர் கேள்விகளின் முடிவில்..

‘அப்ப அவளுக்கு நான் யாருமே இல்லையா? எங்கிட்ட சொல்லாம போயிடுவாளா? ஏதோ கோபத்துல ஒரு வார்த்தை சொல்லிட்டேன் அதுக்காக அவள் எப்படி என்னை விட்டுட்டுப் போகலாம்?’ உரிமைக் கோபமாக மாறியது.

“உங்கிட்ட சொல்லாம, உன்னை விட்டு போகாம இருக்க அவள் என்ன உன் காதலியா? இல்ல பொண்டாட்டியாடா மடையா?!” மனசாட்சி எதிர்க்கேள்வி எழுப்பியதில் விதிர்த்துப் போனவன் சட்டென தன் சிந்தனையை நிறுத்தி படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தான்.

‘இது எப்போதிருந்து அவள்மீது இந்தளவு உரிமை கொண்டேன்? அவளிடம் தன் மனம் இத்தனையா மயங்கிக் கிடக்கிறது?! அவளது புறக்கணிப்பு என் மனதை இப்படி வாட்டுகிறதே!’ என்றெல்லாம் யோசித்தவனுக்கு,

ரேயானுடன் அன்று பேசிய பிறகு அவளுடன் தான் பேசாமல் தவிர்த்தபோது மனதில் பாதிப்பு இருந்தாலும் பெரிதாக தெரியாத விசயம், அவள் அவனிடம் பேசாமல் புறக்கணித்ததில் அவன் மனம் முழுவதும் வெறுமையிலும் வேதனையிலும் மூழ்கியது நினைவில் வந்தது.

அத்தோடு அவள் வீட்டை விட்டு சென்று விட்டாள் என்ற தனது பரிதவிப்பு மற்றும் அவளை அழைத்தபோது உதிர்த்த பிரத்யேக உரிமையான சொற்களில், தன் மனம் அவளை முழுதாக ஏற்றுக் கொண்டதை அதிர்வுடன் உள்வாங்கினான்.

கொஞ்சங்கூட சுத்தத்தை பற்றி கவலையே இல்லாத அவளிடம் தன் மனம் எப்படி மயங்கியது எனப் புரியாமல் ‘எப்புட்ரா!! ‘ மொமண்ட்டில் திகைப்புடன் தன் மனதை உணர்ந்தவன் அதீத சிந்தனையில் அப்படியே உறங்கிப் போனான்.

அதிகாலையில் வழக்கம்போல அவனது அலைபேசி அலாரம் அடித்து விடிந்து விட்டதை சத்தமாக உரைக்க திடுக்கிட்டு எழுந்தவன், நேரத்தைப் பார்த்துவிட்டு அலைபேசியில் அவளது அழைப்பைத் தேடினான்.

கடைசியாக அவன் அவளுக்கு அழைத்து பேசியதோடு வேறு புதிய அழைப்புகளே இல்லாமல் போக, தான் மட்டும் அவளை எண்ணி தவித்திருக்க , அவளுக்கு தன்னைப் பற்றி எந்த கவலையும் இல்லையே என்றெண்ணி மனம் வலித்தது.

காலையில் கண் விழித்ததுமே மனம் சோர்வடைந்ததில் எதுவும் செய்யத் தோன்றாமல் தனது அன்றாட பழக்கவழக்கங்களைக் கூட செய்ய மறந்து, ஒருதலையாக காதலித்த தன்னையே வெறுத்தபடி அப்படியே படுத்துக் கிடந்தான்.

‘இப்படியே படுத்துக் கிடந்தா மட்டும் அவள் என்ன உன்னைத் தேடியா வரப் போறா?! போய் வேலையை பாருடா.’ ஒருமனம் அவனை விரட்ட, மறுபுறம் ‘அப்படி அவள் வந்துடுவாளா?!’ ஆர்வமாக யோசிக்க, ‘ம்ஹூம்! இது தேறாத கேஸ்.’ என்று சலித்தது அவன் மனம்.

வலுக்கட்டாயமாக தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்த அன்பு தனது காலைக்கடன்களை முடித்துவிட்டு, சோர்ந்த மனதுடன் கதவைத் திறந்து வெளியே வர, எதிரில் நின்றிருந்தாள் யுவசக்தி.

“ம்ப்ச்! எங்க பார்த்தாலும் அவளை மாதிரியே தெரியுதே! டேய் அன்பு! உனக்கு முத்திப் போச்சுடா.” வாய்விட்டு சலித்தவன் அங்கிருந்து அகல, அவனை வித்தியாசமாக பார்த்த சக்தியும் தோள்களை குலுக்கிவிட்டு நகர்ந்தாள்.

அவள் வேறுபுறம் நகர்ந்து செல்வதைக் கண்ட அன்பு அது தன் கற்பனை இல்லை என்பதை சட்டென உணர்ந்து விழிகள் விரிய மகிழ்ந்தவன்,

ஓடிச்சென்று அவளை இறுக அணைத்துக் கொண்டு “என்னைத் தேடி திரும்ப வந்துட்டியா யுவி!!? என்னை விட்டு போயிட்டியோனு ரொம்ப பயந்துட்டேன்டி!” பரவசப்பட, அவனது அணைப்பில் உறைந்து நின்றாள் சக்தி.

அவனது இறுகிய அணைப்பில் எதிர்வினை மறந்து நெஞ்சம் படபடக்க கண்கள் மூடி சிலையென அவள் நின்றிருக்க, உள்ளுக்குள் பொங்கிய உணர்வுகளின் பிரவாகத்தில் தனது அணைப்பில் அழுத்தம் கூட்டியவன்,

“லவ் யூ கண்ணம்மா! உன்னைப் பார்க்காம உயிரே போன மாதிரி இருந்துச்சு.” அவளிடம் தன் மனதை உரைத்தவன், நேற்றைய எண்ணங்களால் ஏற்பட்ட அதீத தவிப்பினால் அவளது இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.

அவனது திடீர் முத்தம் தந்த அதிர்வில் கண்கள் மூடி அதுவரை உறைநிலையில் மயங்கி நின்றவள் சட்டென விழிகளைத் திறந்து மறுநொடியே அவனை விலக்கிவிட, சாக்லேட் பிடுங்கப்பட்ட குழந்தை போல அவளைப் பார்த்தான் அன்புமதி.

அவனிடமிருந்து பிரிந்து மூச்சு வாங்கியவள்,”என்ன பண்றீங்க அன்பு?!” கோபமாக இரைய, அப்போதுதான் தான் செய்த காரியத்தையே உணர்ந்தான் அன்பு.

‘அலைஞ்சான் கேஸ் மாதிரி இப்படி அவசரப்பட்டு சொதப்பிட்டியேடா!’ மனசாட்சி திட்டித் தீர்க்க, ‘ஹே! அவளைக் காணாம நேத்திருந்து நான் பட்டபாடு இப்படி வெளிப்பட்டது. அதனாலென்ன அவள் எனக்கு சொந்தமானவ தானே!?’ அதற்கு உடனடி பதிலளித்தான்.

‘ராசா! அப்படினு நீ நினைச்சுட்டு இருக்க. அவள் அப்படி எப்பவாவது உங்கிட்ட அந்த மாதிரி சொன்னாளா?!’ மனசாட்சியின் எதிர்கேள்வியில் ‘இந்த பாயிண்டை யோசிக்கலையே!’ அவன் சிந்திக்க, ‘இனி சங்கு தான்டி உனக்கு! என்சாயி எஞ்சாமி!’ எள்ளி நகையாடியது மனசாட்சி.

“ஹலோ!” என அவன் முன்பு சொடக்கு போட்டு அவன் சிந்தனையை கலைத்தவள், “நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம உங்களுக்குள்ளேயே பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்?!” அழுத்தமாகக் கேட்டாள் சக்தி.

அன்பு தலையைக் கோதியபடி சங்கடமாக முகத்தைத் திருப்பிக் கொள்ள, “ஏதோ நேத்து விடாம கால் அடிச்சிட்டு இருந்தீங்களே, என்ன விசயம் தெரியலையேனு காலையிலேயே சீக்கிரம் எழுந்து உங்களத் தேடி வந்தா, இப்படித்தான்..” அவளே பேச்சைத் தொடர்ந்தவள் அடுத்து நடந்ததைச் சொல்லத் தடுமாறி நிறுத்தினாள்.

அதுவரை முகத்தைத் திருப்பி சங்கடமாக நின்றிருந்த அன்பு, அவளது தடுமாற்றத்தில் சட்டென சுவாரஸ்யமாக அவளைப் பார்த்த பார்வையில் அவள் மொத்தமாக பேச்சிழந்தவள், இதுவரை அவனிடம் கண்டிராத காதல் பார்வையில் தடுமாறி அந்த விஷயத்தை விடுத்து,

“நீங்க தான் ஏதோ மலை முழுங்கி மாதிரி பேச்சே வராம சுத்திட்டு இருந்தீங்க, நேத்து திடீர்னு அவ்ளோ முறை கால் பண்ணவும் ஏதோ எமர்ஜென்சியோனு நினைச்சு கேட்க வந்தா.. எதுக்கு ஸார் அத்தனை தடவை கால் பண்ணுனீங்க?! ” முறைப்புடன் கேட்டாள்.

அவளது படபடப்பில் இயல்புக்கு வந்த அன்பு, “அது, உன்னோட செருப்பு எல்லாம் காணோம். அத்தோட ரூம் வேற ரொம்ப நீட்டா இருந்துச்சா.. அதான் நீ..” முழுதாக சொல்லாமல் அவளது அறைக்கதவைத் திறந்த குற்ற உணர்வுடன் நிறுத்த, அவள் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

“ஓ! வீட்டை விட்டு போயிட்டேன்னு நினைச்சீங்களா?! அப்படி எல்லாம் விட்டுட்டு போயிடுவேனா?!” அவனது பேச்சை முழுமையாக முடித்தவள் கேள்வியுடன் நிறுத்த, அவனது கண்கள் ஒளிர்ந்தது.

அதைக்கண்ட சக்தி ‘இப்ப என்ன சொல்லிட்டேன்னு இவன் கண்ணுல பல்பு எரிய விடுறான்?!’ குழம்பி நிற்க, “அப்ப உனக்கு என்னை விட்டு போக முடியலையா?!” அவளிடம் ஆர்வமாக வினவினான்.

அவனை ஒரு மார்க்கமாக ஏற இறங்கப் பார்த்த சக்தி, “ஹ! அந்த ஸீன் எல்லாம் இல்ல சாரே! அக்ரிமெண்ட்படி மொத்தமா கொடுத்த பணத்தை முழுசா திரும்ப வாங்காம அதெப்படி விட்டுட்டு போவேன்னு சொன்னேன்.” மிதப்பாக புருவங்கள் உயர்த்தி அவள் சொல்ல, சப்பென்றானது அவனுக்கு.

எது எப்படியோ, அவள் இங்கிருந்து செல்ல மாட்டாள் என்பதே நிம்மதியாக இருந்தாலும் அக்ரிமெண்ட் காலம் முடிந்த பிறகு சென்று விடுவாளோ!? என்ற அச்சம் உள்ளுக்குள் வண்டாக குடைந்தது.

அன்பு அதற்கு மேல் பேச மனம் இல்லாமல் அங்கிருந்து விலகிச் செல்ல, தனது அறைவாசல் வரை சென்றுவிட்ட சக்தி, “இனிமே இந்த மாதிரி ஹக் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. மைன்ட் இட்!” மிரட்டலான குரலில் கூறியவள்,

“ஆமா, என்னை ஹக் பண்ணுனப்ப எதாவது சொன்னீங்களா?!” யோசனையுடன் சந்தேகமாகக் கேட்க, ஏற்கனவே அவளது பதிலில் கடுப்பாகி இருந்தவன், “சொல்ல முடியாது போடி!” என்றதோடு முகத்தைத் திருப்பிக் கொண்டு கிட்சனுக்குள் சென்று விட்டான்.

error: Alert: Content selection is disabled!!