அத்தியாயம் 33- 8

கொஞ்சநேரம் ஆடாமல் நில்லம்மா!”  அதட்டல் போட, “காணும் காணும் விடும், தலையெல்லாம் நனையத்தானே போகுது?” என்றபடி வந்து மகளை அள்ளித் தூக்கிய சூர்யா, இப்போது அரைக்கால் சட்டையில் இருந்தார்.

  என் பார்வையில் பட்டது அவரின் அகன்ற முதுக்குப் புறம். தத்தளித்த பார்வை என்னையுமறியாது விலகிவிட்டு பின் மீண்டும் அங்கே தான் ஓடிற்று!

  பாழும் மனமோ, எங்கெங்கோ எல்லாம் இழுபட்டுச் சென்று கொண்டிருந்தது.

  “உதயா நீயும் வாவன், சின்னக்குட்டிக்கும் சந்தோசமா இருக்கும்; தண்ணிக்குள்ள இறங்காட்டியும், அங்க பக்கத்தில  வந்து நில்லன்சூர்யா தான். இப்போது, நான் முகம் பார்க்கும் வகையில் திரும்பி நின்றுகொண்டிருந்தார். அவர் பார்வை தன் மனைவியில் ஆசையோடு படிந்திருந்ததை என் பார்வை துல்லியமாகக் கணக்கெடுத்துக் கொண்டது.

   விபரிக்க முடியாத உணர்வுக்கலவை தொண்டையில் வந்து அடைத்துத்  தொலைத்தது

   “பிள்ளை தான் விருப்பம் இல்ல எண்டு சொல்லுறாளே பிறகென்ன? நீ போ…” என்றது சூர்யாவின் தயார்.

   ‘எங்க உதயாவின் சித்தி? வரேல்ல போல.’ என்று எண்ண, “அம்மா நீங்களும் வாங்கோ!” கடற்கரையிலிருந்து ஓடி வந்து தாயை மறுக்க மறுக்க இழுத்துச் சென்றாள்  தீபி

   வேண்டா வெறுப்பாக  எதையோ சொன்னபடி சென்றார் அவள் தாய். ஒருவருடைய இயல்பான சுபாவங்கள் அத்தனை இலகுவில் மாறிவிடாது தான்.

   “நீங்க போங்க சூர்யா, இந்தா  நானும் வாறன், போட்டோ எடுக்க வேணும்.” என்றபடி, அப்பால் நகர முயன்றவளை எட்டிப் பிடித்துகொண்டே, “அதெல்லாம் பிறகு எடுக்கலாம். அங்க பார் எல்லாரும் கையில போன்  வச்சி எடுக்கினம் பிறகென்ன? பம்பலா இருக்கும் வா உதயா .” இழுத்தபடி நடக்கவே தொடங்கியிருந்தார்  சூர்யா .

   “ஐயோ விடுங்க! இதென்ன விளையாட்டு? ”  விழிகளில் செம்மை பூசிய நேசம் மின்ன, கரத்தை விடுவித்துக்கொண்டு முறைத்தாள் அவள்

   என் விழிகள் சற்றும் விவஸ்தையே இல்லாமல் இமைக்க மறந்து அவர்களைப்  பார்த்து நின்றன.

    அங்கோ, சொற்ப நேரத்தினுள் நான்கு விழிகளும் எத்தனை எத்தனையோ கதைகள் பேசிக்கொண்டன; சீண்டிக்கொண்டன

   “வெளிக்கிடேக்கயே சொன்னனான் தானே? ‘உனக்குக்  கடலுக்க இறங்கப்  பெரிசா விருப்பமில்ல எண்டதுதான் தெரியுமே, நாங்க நீந்துறம், வந்திருந்து பார்த்தாலே போதும்எண்டு  சொல்லிப்போட்டு இப்ப என்ன?” இதழில் ஒட்டிக்கொண்ட முறுவலோடு சொன்னவள்

  “நீங்க ரெண்டு பேரும் போய், அவையளோட சேர்ந்து  ஆசை தீரும் மட்டுக்கும் நல்லா நீந்திட்டு வாங்க; நான் வீடியோவும் போட்டோவும் எடுக்கப் போறன்.”  என்றதும்

   “இந்த அம்மாவை என்ன செய்யலாம் சொல்லுங்கோ குட்டிம்மா!” மகளிடம் கேட்டபடி மனைவியின் தலையைக் கலைத்தார் சூர்யா

   ‘இதென்ன வெட்கங்கெட்ட பழக்கம்? பார்வையைத் திருப்பிவிடு!’ மனம் இட்ட கட்டளையைச் செவிமடுக்காது அவர்களையே பார்த்திருந்தன, என்னுடைய விழிகள்.

  அங்கு, தந்தையின் தோளைக் கட்டிக்கொண்டு தாயைப் பார்த்த அவர்களின் கண்மணி, “அம்மா பாவம்!” தாய்க்காகப்  பரிந்து கொண்டு வந்தாள்.

   “நல்ல பாவம்தான் போ! உங்கட அம்மாக்கு வர வரச் செல்லம் கூடிற்று!” என்றபடி, மனைவியைப் பார்த்தவர் பார்வையில் நேசம் பளிச்சிட்டது

   “இல்லப்பா!” தகப்பன் தாயோடு வம்பிழுப்பதை உணராது சொன்னாள் சிறுமி.

   “அம்மாக்கு நீந்தத் தெரியாதப்பா! அவான்ட அப்பா ஒண்ணும் சொல்லிக் குடுக்கேல்ல!” 

  தன் சிப்பி இதழைப் பிதுக்கி, கைகளை விரித்து, தாய்க்காகப் பரிந்து பேசினாள் மகள்.

   “ம்ம்அது எங்கட செல்லத்துக்கு விளங்குது, இந்த அப்பாக்கு ஒண்டும் விளங்காதாம்.” 

  கணவனின் முதுகில் ஒரு நுள்ளோடு, “அங்க பக்கத்தில வந்து நில்லு எண்டுபோட்டு, கடலுக்க இழுக்கத் திட்டம் போடுறது எங்களுக்குத் தெரியும்.” என்ற உதயா

  “போங்கோ! இன்னும் நல்லா வெயில் ஏறமுதல் போயிட்டு வாங்கோ!” மெல்லப் பிடித்துக்  கடற்கரை நோக்கித் தள்ள, “கதைச்சு வேலையில்லை!” என்றபடி, மகளோடு நடந்தார்  அவர்.

   “இருடி செல்லம்! ஒருநாளைக்கு இல்ல ஒருநாள் கடலுக்க இழுத்து விழுத்தேல்லையோ நான் உன்ர புருசன் இல்ல! நீச்சலடிக்க சொல்லித்தாரேன், பார்!” 

 போகிற போக்கில் சொல்லிக்கொண்டே சென்றது தெள்ளத் தெளிவாக வந்து என் காதுகளையும் தீண்டிற்று!

    அதன் பிறகும் அதில் அமர்ந்திருக்க முடியவில்லை. அமர்ந்திருந்த நிலம் ஏனோ தகித்தது போலிருந்தது. விசுக்கென்று எழுந்துவிட்டேன். காலடி எடுத்து வைத்து நடக்க முடியாதளவுக்குச் சோர்வாக இருந்தது.

   ‘என்ன இதெல்லாம்?’ என்னை நானே அதட்டிக் கொண்டேன்

   ‘சூர்யா, உதயா, குழந்தைஅவர்கள் பரிமாறிக்கொள்ளும் நேசம் என எல்லாமே  பார்க்கப் பார்க்கத்  தெவிட்டாத அழகிய கோலமாக உனக்குத் தெரியவில்லையா? அதற்கு ஆரம்பப் புள்ளியிட்டவள் நீதானே? பிறகென்ன?’ 

   தீர்க்கமாகக் கேட்ட மனசாட்சியின் நிமிர்வு உடலில் தெம்பைப் பாய்ச்சியது. விறுவிறுவென்று நடந்து சென்று அங்கு ஒரு ஓரமாக நிறுத்தியிருந்த என் ஸ்கூட்டியை எடுத்தேன்.

 ‘போயிட்டு வரப்போகிறேன். கொஞ்சம் முதல் என்ர புத்தி சொன்னது போலஇன்னொருமுறை இப்படி வந்து எனக்கு நானே பரீட்சை வைத்துக்கொள்ள முனையவே மாட்டேன்.’  உறுதியோடு ஸ்கூட்டியை இயக்கினேன்

  என்னடா இவள் எங்கிருந்து எப்படி வந்தாள்? எங்கள் சூர்யாவையும் உதயாவையும் ஒளிந்திருந்து பார்த்துவிட்டுச் சத்தமே போடாது போகிறாளே! யாராக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?

   “நான்வேணாம் விடுங்க, இது எனக்கான இடமல்ல; அதுவும் சூரியன் இருக்கும் இடத்தில் எப்போவாவது நட்சத்திரம் மின்னிக் கண்டதுண்டா? அப்படித்தான் நானும். அவரிருக்கும் இடத்தில் எனக்கு வேலையே இல்லை

  என் பெயரைக் கூறி அறிமுகம் செய்து கொள்ளக் கூட இது தகுந்த இடமாக எனக்குப் படவில்லை

  நான் எனக்கான இடத்தில் உங்களைச் சந்திக்கின்றேன்! என் வாழ்வுப் புத்தகத்தில் எழுதப்பட்ட இரகசியப்  பக்கங்களை சூர்யா படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே எனக்கு வராது. என்னையும் மீறி அப்படி நடந்துவிட்டால்? நடக்கவே கூடாது என்பதே என் விருப்பம். ஆனால், என் விருப்பங்கள் எல்லாம் அவ்வளவு சுலபத்தில் நடந்துவிடுவதில்லை; பார்ப்போமே!

   நான் இப்போதைக்கு நட்சத்திரா! நிச்சயம் ஒருநாள் சந்திப்போமே! சரியா

 இன்னமும் நான் யாரென்ற சந்தேகம் உங்கள் மனதில் தீராதிருக்கும் என்றால், அப்படியே விட்டு விட்டுப் போகவும் மனம் இடம் தரவில்லை

  ஒன்று செய்வோமே, நான் யார் என்ற முடிவை  உங்கள் யூகத்துக்கே விடுகின்றேன், இருந்தாலும் சின்னதாக ஒரு உதவி செய்கிறேன், கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

    இதோ நான் போய்க் கொண்டிருக்கும் ஸ்கூகுட்டி, எனக்குப் பிடித்த ரோஸ் வண்ணத்தில் உள்ள இது,   எனக்காக, என் பிறந்தநாளுக்குப் பரிசளிக்கவென்று என் இதயம் கவர்ந்தவர் வாங்கியது. அதை அவரிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. இது அவருக்குச் சுமையாகி, ‘வேணாம் விற்றுவிடுவம்என்ற நிலையில், அதைக் கேள்விப்பட்டு, பணம் செலுத்தி நானே வாங்கிக் கொண்டேன்

  அவர் கனவில் கூட இது என்னைச் சேர்ந்திருக்கும் என்று எண்ண மாட்டார். இதுதான் இப்போதைக்கு எனக்கு எல்லாமே!

  நான் யாரென்று விளங்கி இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இப்போதைக்கு விடை பெறுகின்றேன்.

சூர்யோதயம் நிறைவுற்றது!

பின்னுரை:  

வாசகர்களுக்கு அன்பான வணக்கம்!

தொடர்ந்து என் கதைகள் புத்தகமாக உங்கள் கரங்களைச் சேர்கின்றதென்றால், அதற்கு முதற்கண் வாசகர்களாகிய உங்களுக்குத்தான் அன்புகலந்த நன்றி சொல்லவேண்டும். தொடர்ந்தும் உங்கள் ஆதரவையும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களையும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றேன்.

சூர்யோதயம்பிறந்தது   2014 இல் நான் எழுதிய   ‘புதுமைப்பெண்என்ற சிறுகதையிலிருந்துஎழுதவென்று தொடங்கியபின் மூன்றாவதாக எழுதியிருந்தேன். பெற்றோர் இல்லாத பெண், சித்தியின் தம்பியை மணக்க வேண்டிய சூழ்நிலைக்குட்படுத்தப்படுகின்றாள். அவனோ குடிகாரன் . தோழியின் மறுப்பை மீறி மணந்து கொள்பவள்கணவனை மாற்றித் திருத்தி நன்றாக வாழ்கின்றாள் என்று எழுதியிருந்தேன் . இதை வாசிக்கையில் எத்தனை பேருக்குச் சிரிப்பு வருகின்றது. சிலமாதங்களின் பின்னர் வாசித்த எனக்கும் பெரும் சிரிப்பு! அதெப்படி? என்று பல கேள்விகள் . என்னடா  இப்படி எழுதியிருக்கிறேனே  என்று மனதினோரம் ஒரே முணுமுணுப்பு.

  அதுவே, கடந்த வருட இறுதியில் அதை எடுத்து நாவலாக எழுத தூண்டுகோலாகவிருந்தது. என் மனத்தில் தோன்றியஅதெப்பிடிகளுக்கு விடையறிந்துகொள்ள முயன்று எழுதியுள்ளேன் .

   பெரும்பாலும், இலங்கை யாழ்ப்பாணத்தில் நகரும் இக்கதையில் எப்போதும் போல், நம்மோடு வாழ்பவர்கள் தான்  பயணிக்கிறார்கள் .

  மிக யதார்தமாகவே கடைசிவரை நகர்த்திச் சென்றுள்ளேன்.

  குடும்ப உறவுகள், சொந்தபந்தங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்று, தாய், தந்தை, பிள்ளை என்ற சிறுவட்டத்தினுள் குடும்பங்கள் அடங்கிக்கொண்டிருக்கும் காலமிது! அது சில பலவேளைகளில் தேவையாகவும் இருப்பது வேறு கதை .

   என்னதானென்றாலும் வாழ்வில் நாம் முகம் கொடுக்கும் துன்பங்கள், துயரங்களுக்குத்  துணிந்து முகம் கொடுத்து, அதிலிருந்து மீண்டுவரவேண்டுமெனில், நிச்சயம் தோள்  கொடுக்கும் உறவுகள், நட்புகள்  அவசியமென்று நம்புகின்றவள் நான்அதையே இங்கும் எடுத்தியம்பியுள்ளேன்

  இனி நீங்கள் தான் சொல்லவேண்டும். மாற்றுக் கருத்துக்களேயென்றாலும் நான் மகிழ்வோடு எதிர்கொள்வேன். krosei@yahoo.nl எனும் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள் .

 கதையின் கடைசியில் நிச்சயம் நீங்கள் எதிர்பாராத ஒரு புதிர் முளைவிட்ட வேகத்தில் அவிழ்ந்துமுள்ளது.

  ‘நட்சத்திராநீங்களே புரிந்திருப்பீர்கள் அவள்தான் கல்யாணி என்று! அவள் பற்றி நாம்நட்சத்திராவில் பார்ப்போமே.

  தொடர்ந்து எனது கதைகளை அழகுற அச்சிட்டு  உங்கள் கைகளில் தவழவிடும்  ஸ்ரீ பதிப்பகத்தினருக்கும், முதல் வாசகிகளாக கதையை வாசித்து குறைகள், திருத்தங்கள் சொல்லிக்  கதையின் நேர்த்திக்குத் துணை நின்ற அன்புச் சகோதரிகள் எழுத்தாளர் நிதனிபிரபு மற்றும்   தர்சி கோகு இருவருக்கும் என் அன்புகள்  பல பல.

அடுத்த கதையொன்றில் சந்திக்கும் வரை,

பிரியங்களோடு,

ரோசி கஜன்.

error: Alert: Content selection is disabled!!