அத்தியாயம் 13
வெளியே வந்து, அன்னை தந்தையைக் கண்டதுமே கானவியின் அத்தனை சமாளிப்புகளும் அர்த்தமற்றுப் போனது. “அம்மா!” என்று ஓடிவந்து தாயைக் கட்டிக்கொண்டு விசும்பினாள்.
இதை எதிர்பாராத பெற்றவர்கள் பயந்து போனார்கள். சந்தோசமாக இருப்பாள், தம்மைக் கண்டதும் துள்ளிக் குதிப்பாள், என்னென்ன செலவுகளுக்கெல்லாம் திட்டம் போட்டு வைத்திருக்கிறாளோ என்று உற்சாகமாகப் பேசிக்கொண்டு வந்தவர்களாயிற்றே!
அதுவும் விசாலாட்சிக்கு அடிவயிறே கலங்கிற்று. “அம்மாச்சி, என்னம்மா ஏன் அழுறீங்கள்? என்ன நடந்தது?” என்று பரிதவித்து, அவள் முகம் நிமிர்த்திப் பார்க்க முயல, அவள் விடவேயில்லை.
அன்னையின் அருகில் அத்தனை துன்பமும் பெருகித் தெரிய, அவரின் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு அழுகையில் குலுங்கினாள்.
அருந்தவராஜா, கடம்பன் இருவருக்கும் செய்வதறியா நிலை. மருமகன் வீட்டினரைக் கேள்வியோடு பார்த்தார் அருந்தவராஜா. அவர்களுக்கு எதை எப்படிச் சொல்வது என்று தெரியாத சங்கடம்.
கடைசியில், “என்ன பிள்ளை? என்ன எண்டாலும் சொல்லிப்போட்டு அழு!” என்று கோபமும் தவிப்புமாய் அதட்டினார் விசாலாட்சி.
“அக்கா! முதல் நிமிந்து எங்களைப் பார்!” என்று கடம்பனும் அதட்டவே சுயத்துக்கு வந்தாள் கானவி. அப்போதுதான் விட்டுவிட்ட தவறும் விளங்கிற்று.
வேகமாக விசாலாட்சியிடமிருந்து விலகி, “இல்ல ஒண்டும் இல்ல. அது உங்க மூண்டு பேரையும் பாத்ததும்…” என்று சமாளித்தபடி கண்களைத் துடைத்தாள்.
அவளை நம்ப அவர்கள் மூவரும் தயாராய் இல்லை. அழுவதெல்லாம் அவளுக்குப் பழக்கமே இல்லாத ஒன்றாயிற்றே!
அவளுக்கு வேறு துடைக்க துடைக்கக் கண்ணீர் அரும்பிற்று. அதை மறைக்கப் புன்னகைக்க முயன்றாள்.
அதற்குமேல் பொறுக்க முடியாமல், “ஏதும் பிரச்சினையா? எங்கட மகள் ஏதும் பிழை செய்திட்டாவா?” என்று புவனாம்பிகையிடமே விசாரித்தார் விசாலாட்சி.
“சேச்சே! அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்ல.” என்று அவசரமாகச் சொன்னார் புவனம்பிகை. அவருக்கு முகம் மாறாமல் காப்பதே பெரிதாய் இருந்தது. அந்தளவில் கானவியின் கண்ணீர் அவரையும் அசைத்திருந்தது.
ஒரு விதச் சங்கடத்துடன், “அது… இந்த விசயம் தெரிய முதல் மனுசன் மனுசிக்க சின்னதாச் சண்டை. இனிச் சமாதானம் ஆகிடுவினம். இதெல்லாம் குடும்பத்துக்க வந்து போறதுதானே. நீங்க பயப்பிடாதீங்கோ.” என்று சமாளித்துவிட்டு, அந்தப் பேச்சைச் சற்றே ஆறப்போட எண்ணி, “இருங்கோ, குடிக்கக் கொண்டு வாறன்.” என்று எழுந்து உள்ளே சென்றார்.
அவர்கள் எல்லோரினதும் பார்வை அப்போதுதான் வீட்டுக்குள் இருந்து வந்த செந்தாளனில் குவிந்தது. அதுவே அவனுக்குள் ஒருவித இறுக்கத்தைப் பரப்பிற்று. அழுது காட்டிக்கொடுத்த கானவி மீது பார்வையைச் சில நொடிகள் நிலைக்க விட்டவன் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவள் வீட்டினரோடு வந்திருந்து கதைத்தான்.
அவர்கள்தான் மருமகனிடம் எதையும் உடைத்துக் கேட்க முடியாமல் திணறிப் போயினர். வந்தபோது இருந்த சந்தோசமெல்லாம் வடிந்துபோயிற்று. என்ன நடந்தது, மகள் ஏன் இப்படி அழுதாள் என்று தெரியவந்தால் மட்டுமே மூச்சுக்கூட விட முடியும் போலொரு நிலை. சும்மா அழுகிறவள் இல்லையே அவள்!
கடம்பனால் அவர்களைப் போல் பொறுமையாக இருக்க முடியவில்லை. துள்ளிக்கொண்டு நிற்பாள் என்று எண்ணிக்கொண்டு வந்த அக்கா கண்ணீரும் கவலையுமாக நின்றால் எப்படி? “அக்கா வா, அந்தக் கடை வரைக்கும் போயிற்று வருவம்.” என்று அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போனான்.
போகும் தம் பிள்ளைகளையே தவிப்புடன் பார்த்த பெற்றவர்கள், “ஏதும் பெரிய சண்டையோ?” என்று தயங்கி விசாரித்தனர்.
“அச்சோ மாமா மாமி, தயவு செய்து என்னவோ ஏதோ எண்டு பயப்பிடாதீங்கோ…” என்று ஆரம்பித்து, ஆளாளுக்கு விட்ட கடின வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு, பணம் குறைந்ததையும், அவளின் சப்ரைஸுக்காக அவள் சொல்லாமல் விட்டதையும் சொல்லி, அவர்கள் வீட்டையே உருட்டிப் பிரட்டித் தேடியபிறகு அவள் சொன்ன கோபத்தில் செந்தாளன் கத்திவிட்டான் என்று, நடந்ததை அவர்கள் தவறாக நினைக்க முடியாத ஒரு வடிவத்துக்கு மாற்றிச் சொன்னாள் சிந்துஜா.
இதற்குத்தானா என்று சற்றே ஆசுவாசமானாலும் இதற்காகவா அந்தளவில் அழுதாள் என்கிற கேள்வியும் எழுந்தது. அதையெல்லாம் மனத்துக்குள்ளேயே வைத்துக்கொண்டு, “குறை நினைக்காதீங்கோ தம்பி. ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளை. நாங்க இரவு பகலாக் கஷ்டப்பட்டாலும் அவாக்கு ஒரு கஷ்டமும் தெரியாமத்தான் வளத்தனாங்க. என்ன கேட்டாலும் மறுக்கிறேல்ல. மாமாக்களும் உடனயே செய்து குடுத்திடுவினம். அந்த நினைப்பில இங்கயும் நடந்திட்டா போல. நான் கொஞ்சம் சொல்லி வைக்கிறன். இனி இப்பிடிச் செய்ய மாட்டா.” என்று நயமாகச் சொன்னார் அருந்தவராஜா.
எது எப்படியாயினும் குழந்தை வரப்போகிற இந்த நேரத்தில் மகள் வாழ்க்கை பிக்கல் பிடுங்கல் இல்லாமல் இருப்பது முக்கியம் என்று கருதினார் அவர்.
பார்த்தாயா என்று அவனை ஒரு பார்வை பார்த்தாள் சிந்துஜா.
அவரின் பேச்சிலும் தமக்கையின் பார்வையிலும் மாறப்பார்த்த முகத்தைச் சரி செய்ய முயன்றபடி, “அது நானும் கொஞ்சம் நிதானமா நடந்திருக்கலாம் மாமா. எனக்கும் கொஞ்சம் கோவம் வந்திட்டுது.” என்று அவன் சொன்னதே அவர்களுக்குப் போதுமாயிற்று.
புவனாம்பிகை கொண்டுவந்து தந்த தேநீரை உறிஞ்சியபடி மகளைப் பற்றி, வைத்தியசாலைக்குப் போய் வந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கையில் அக்காவும் தம்பியும் திரும்பி வந்தனர்.
இப்போது இன்னும் அழுத்திருக்கிறாள் என்று தெரிந்தது. அந்தளவில் கண், மூக்கு, முகம் எல்லாம் சிவந்திருந்தன. மனம் துணுக்குறக் கேள்வியாக மகனைப் பார்த்தனர். அவன் முகம் என்னவோ சரியில்லை என்று சொல்ல, அவர்களுக்குத் திரும்பவும் மனம் குழம்பிப் போயிற்று.
யாரையும் பாராமல், “அக்கா, நீ வெளிக்கிடு! வீட்டை போவம்.” என்றான் கடம்பன்.
செந்தாளன் வீட்டினர் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ந்துதான் போயினர். “இண்டைக்கே வேண்டாம் அப்பு. இன்னொரு நாளைக்குக் கூட்டிக்கொண்டு போங்கோவன்.” அவள் இன்னுமே சரியாகாமல் இருக்கும் இந்த நிலையில் அனுப்பிவைத்தால் பிரச்சனைகள் பெரிதாகும் என்று தெரிந்து அவசரமாகச் சொன்னார் புவனாம்பிகை.
“இல்ல மாமி. அக்கா இப்பவே வரட்டும். பிறகு கொஞ்ச நாள் கழிச்சுக் கொண்டுவந்து விடுறன்.” என்று மறுத்துரைத்த கடம்பன், “போக்கா! போய் வெளிக்கிட்டுக்கொண்டு வா!” என்றான் தமக்கையிடம் அதட்டலாக.
சிவரூபனுக்கு அப்படி அவன் அன்னையிடம் பேசிய தொனி பிடிக்கவேயில்லை. முகத்தைச் சுளித்தான். தமையன் அமைதியாக இருந்ததில் அவனால் ஒன்றும் பேச முடியாமல் போயிற்று.
செந்தாளனின் கவனம் தற்போதைய நிலையில் முழுக்க முழுக்கக் கானவியிலேயே இருந்தது. அவளையே விடாது பார்த்தான். அவனுக்கு அவள் பதில் என்ன என்று தெரியவேண்டி இருந்தது.
அவன் பார்வையை அவளும் உணர்ந்தாள்தான். விழிகள் கரித்துக்கொண்டு வந்தன. அதையும் தாண்டிக்கொண்டு போகவே விரும்பினாள். அதில், “எனக்கும் அங்க போயிற்று வந்தா நல்லாருக்கும் மாதிரி இருக்கு மாமி.” என்று சொல்லிவிட்டு, யாரையும் நிமிர்ந்து பாராமல் வீட்டுக்குள் நடந்தாள்.
அதற்குமேல் புவனாம்பிகையால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று. கருவுற்றிருப்பவளின் விருப்பத்தை எப்படி மறுப்பது? இனி மகன் மனது வைத்தால் மட்டுமே எதுவும் மாறும். அவர் அவனைப் பார்த்தார். அங்கிருந்த மற்றவர்களின் பார்வையும் அவனில் குவிய, அவனுக்குள் மிகப்பெரிய அழுத்தம் ஒன்று உருவெடுக்க ஆரம்பித்தது. யாரையும் பாராமல் அமர்ந்திருந்தவன் விருட்டென்று எழுந்து வீட்டுக்குள் நடந்தான்.
கானவியின் பெற்றோர் பயந்து போயினர். ஏற்கனவே என்ன நடந்தது என்று முழுமையாகத் தெரியவில்லை. இதில் இன்னுமொரு பிரச்சனையா? நெஞ்சில் கலக்கம் சூழ புவனாம்பிகையையும் சிந்துஜாவையும் பார்த்தனர்.

