காதல் நெய்த வர்ணம் – 9

வர்ணம் 9

ராஷி அவன் சொல்வதை மிகவும் கவனமாகக் கவனித்துவிட்டு, தன் கைகளால் அந்த நூலைப் பிடித்து முயற்சி செய்தாள். ஆனால், ஒரு சிறிய நூலிழை மாறிவிடவே, டிசைனில் சின்னத் துகள் பிசகியது.

லேசாகச் சலிப்புடன் ராஷி, “ப்ச்… சரியாவே வரலையே அருள். நான் கரெக்டாத்தானே செஞ்சேன்?” என்று தன் விரல்களைப் பார்த்துக் குழம்பினாள்.

அருள் மெல்லப் புன்னகைத்தான். அவன் ராஷிக்கு மிக அருகில் அமர்ந்திருந்ததால் அவனது வலிமையான தோள் ராஷியின் தோளோடு லேசாக உரசியது. அந்த நெருக்கத்தில் ராஷியின் இதயத்துடிப்பு சட்டென்று சற்று வேகமாகியது.

அருள் தன் கையை நீட்டி, ராஷியின் கைகளின் மீது தன் கையை வைத்து அந்த நூலைச் சரியான முறையில் மென்மையாகப் பிடித்துக் கொடுத்தான்.

“கலையில பதட்டம் இருக்கக் கூடாதுங்க ராஷி. விரல்களுக்குக் கொடுக்கிற அழுத்தத்தை விட, மனசுக்குக் கொடுக்கிற அமைதிதான் முக்கியம். இப்படித்தான்…” என்று அவன் சொல்லிக்கொண்டே அவளது விரல்களை நகர்த்திச் சரியான புள்ளியில் நூலைப் பொருத்திக் காட்டினான்.

அருளின் கரங்கள் ராஷியின் கைகளைத் தொட்ட அந்த ஒரு நொடியில், அந்த அமைதியான தறிக் கூடத்தில் ஒருவித மின்சார அதிர்வு பாய்ந்தது போலிருந்தது. ராஷி அப்படியே உறைந்துபோய், நிமிர்ந்து அருளின் முகத்தைப் பார்த்தாள்.

அவனது கூர்மையான கண்களிலும் அதே தீர்க்கமும் மெல்லிய பரிவும் மின்னின. இருவரும் ஒருவரையொருவர் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்த நிசப்தமான பொழுதில், வார்த்தைகள் தேவையில்லாத பல ரகசியங்களை அந்தச் சிறிய தறிக் கூடம் மெல்லப் பேசிக் கொண்டது!

அருளின் கரங்கள் தன் கைகளின் மீது படிந்திருந்த அந்த நொடியில், ராஷியின் சுவாசம் சீரற்றுப்போனது. அவனது விரல்களின் கதகதப்பும், அருகே வீசிய உடலின் மணமும் அவளுக்குள் ஒரு புதுவிதமான சிலிர்ப்பை ஏற்படுத்தின.

அருளும் தன் கைகளின் கீழே ராஷியின் விரல்கள் லேசாக நடுங்குவதை உணர்ந்தான். அவளது விழிகளில் தெரிந்த அந்தத் தடுமாற்றமும், நிலைகுலைந்த பார்வையும் அவனுள்ளும் ஏதோ ஒரு ஆழமான அசைவை உருவாக்கின.

இருவரின் கண்களும் சில வினாடிகள் ஒன்றை ஒன்று ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருக்க, அந்தத் தறிக்கூடத்தின் அமைதியில் அவர்களின் இதயத் துடிப்பு மட்டுமே உரக்கக் கேட்டது.

சட்டென்று தன் தவறை உணர்ந்தவன் போல, அருள் மெதுவாகத் தன் கைகளை விலக்கிக் கொண்டான். லேசான தயக்கத்தோடு தன் பார்வையைத் தறியின் பக்கம் திருப்பியவன், தன் தொண்டையைச் செருமிக்கொண்டு, “அது… வந்து… இப்படிப் பிடிச்சா நூல் அறுந்து போகாம இருக்கும்ங்க,” என்று தன் குரலில் இருந்த தடுமாற்றத்தை மறைக்க முயன்றபடி சொன்னான்.

ராஷியும் சட்டென்று தன் கைகளை விலக்கி, தன் உடைகளைச் சரிசெய்து கொண்டாள். அவளது கன்னங்களில் மெல்லிய சிவப்புப் படர்ந்தது.

“ஹ்ம்ம்… புரியுது அருள்,” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, அவன் காட்டிய வழியிலேயே நூலை மீண்டும் கோர்க்கத் தொடங்கினாள்.

அவளது கை விரல்கள் இப்போது தறியின் மீதும் நூலின் மீதும் மிக நேர்த்தியாக இயங்கின. அவளது வேகத்தையும் நுணுக்கத்தையும் பார்த்த அருள், ஆச்சரியத்தோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ரொம்ப சீக்கிரமாவே கத்துக்கிட்டீங்க ராஷி. சிட்டி பொண்ணுங்களுக்கு இதெல்லாம் செட் ஆகாதுன்னு நிறைய பேர் நினைப்பாங்க… ஆனா உங்களோட இந்த முயற்சியும் ஆர்வமும் உண்மையிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு,” என்று அருள் தன் மனதிலிருப்பதை இயல்பாகச் சொன்னான்.

அருள் “எனக்குப் பிடிச்சிருக்கு” என்று சொன்ன அந்த வார்த்தை, ராஷியின் நெஞ்சில் ஒரு சிறிய தீப்பொறியாய் விழுந்தது.

அவள் தறியை இயக்குவதை நிறுத்திவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்து, “உங்களுக்கு உண்மையிலேயே என்னை பிடிச்சிருக்கா அருள்?” என்று லேசான குறும்பும், தீவிரமும் கலந்த குரலில் கேட்டாள்.

அந்த எதிர்பாராத கேள்வியில் அருள் சில நொடிகள் உறைந்து போனான். கம்பீரமான அந்த கிராமத்து இளைஞனின் முகத்தில் முதன்முறையாக ஒரு மெல்லிய வெட்கமும், என்ன சொல்வதென்று தெரியாத தடுமாற்றமும் வந்து போனதை ராஷி ரசித்துப் பார்த்தாள்.

அருள் அந்தத் திடீர் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. தன் கம்பீரமான பார்வையை லேசாகத் தாழ்த்தி, தன் கைவிரல்களால் தறியின் மரச் சட்டத்தை உரசியபடி சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

பிறகு, மெல்ல நிமிர்ந்து ராஷியின் கண்களை ஆழமாகப் பார்த்தான். அவனது குரலில் வழக்கமான கம்பீரத்தோடு சேர்த்து ஒரு புதிய அழுத்தமும் கலந்திருந்தது.

“புடிச்சிருக்குங்க… ஆனா அது சும்மா ஆசையோ, கண்ணைப் பார்த்துக் வர்ற மயக்கமோ இல்லை,” என்றான் நிதானமாக.

ராஷி தன் மூச்சை அடக்கிக்கொண்டு அவனது பேச்சைக் கவனித்தாள்.

“சென்னை மாதிரி பெரிய நகரத்துல இருந்து, சகல வசதிகளோட வாழ்ந்துட்டு வர்ற ஒரு பொண்ணு… எந்த ஆடம்பரமும் இல்லாத இந்த எளிய கிராமத்துல, சுட்டெரிக்குற வெயில்ல, தறி சத்தத்துக்கு நடுவுல இவ்வளவு ஆர்வமா உட்கார்ந்து கத்துக்கும்போது… அந்த மனசையும், உழைப்பையும் யாருக்குத்தான் பிடிக்காது? உங்ககிட்ட இருக்குற அந்த உண்மையையும், உறுதியையும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு ராஷி,” என்று தன் உள்ளத்தில் இருந்த தூய்மையான மரியாதையை வெளிப்படுத்தினான்.

அருளின் இந்த முதிர்ச்சியான பதில் ராஷியின் இதயத்தை இன்னும் ஆழமாகத் தொட்டது. வெறும் வார்த்தை ஜாலங்களால் மயக்காமல், தன் குணத்தைப் பார்த்து மதிக்கிறான் என்பதை உணர்ந்தபோது அவளுக்குள் அவன் மீதிருந்த ஈர்ப்பு காதலாக உருமாறத் தொடங்கியது.

“வெறும் உழைப்பை மட்டும்தானா அருள்? வேற எதுவுமே உங்களுக்குத் தோணலையா?” என்று ராஷி தன் விழிகளைச் சுருக்கி, லேசான புன்னகையோடு அவனை இன்னும் நெருங்கி நோக்கினாள்.

அருளின் உதட்டோரத்திலும் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

“தோணாம என்னங்க… நிலவொளியில நீங்க தடுக்கி விழுந்தப்ப, என் கையில தாங்குன அந்த நொடியில இருந்தும்… நேத்து உடம்புக்கு முடியாம நீங்க அவதிப்பட்டப்ப, உங்களைப் பார்த்த அந்தப் பதற்றத்துல இருந்தும்… என் மனசுக்குள்ள ஏதோ ஒன்னு புதுசா முளைச்சிருக்குனு எனக்குப் புரியுது. ஆனா, நான் ஒரு எளிய நெசவாளிங்க… நீங்க பெரிய இடத்துப் பொண்ணு…” என்று அருள் தன் எல்லையை நினைவுகூர்ந்து குரலைத் தாழ்த்தினான்.

ராஷி உடனே குறுக்கிட்டு, அவனது கையைத் தன் இரு கரங்களாலும் இறுகப் பற்றிக் கொண்டாள்.

“அருள்… கலைக்கு முன்னாடி பணமோ, அந்தஸ்தோ பெரிசு இல்லைன்னு நீங்களேதானே சொன்னீங்க? அப்புறம் ஏன் இந்த யோசனை? என் வாழ்க்கையில நான் சந்தித்த எந்த ஆணிடமும் பார்க்காத ஒரு தூய்மையான அன்பையும், பாதுகாப்பையும் உங்ககிட்டதான் நான் உணர்ந்தேன்,” என்று ஆழமான குரலில் சொன்னாள்.

இருவரின் கரங்களும் கோர்க்கப்பட்டிருந்த அந்த வேளையில், தறிக் கூடத்திற்கு வெளியே பெய்யத் தொடங்கிய சாரல் மழையின் சத்தம் கேட்கத் தொடங்கியது. செம்மண்ணின் வாசம் வீசத் தொடங்கும் அந்தப் பொழுதில், இருவருக்குள்ளும் மலர்ந்திருந்த காதல் அந்தத் தனிமையில் முழுமையாக வெளிப்பட்டது!

மனசுக்குள் அவள் மீது ஆழமான ஈர்ப்பும் ஆசையும் பூத்திருந்தாலும், அவளது பேச்சு, உடை, கம்பீரமான நடை என ஒவ்வொன்றையும் வைத்து அவள் மிகப்பெரிய இடத்துப் பெண் என்பதை அருள் நன்றாகவே புரிந்திருந்தான்.

‘ஆசைப்படுறது தப்பில்லை… ஆனா அது நமக்குச் செட் ஆகாத உயரத்துல இருக்கிற பொருள் மேல இருக்கக் கூடாது. வீணான ஆசைகளுக்கு இடம் கொடுத்து அப்புறம் மனசைப் ரணமாக்கிக்கக் கூடாது,’ என்று தன் மனதை இழுத்துப் பிடித்துக் கடிவாளமிட்டான்.

ராஷி தன் கரங்களால் அவனது கைகளைப் பற்றியிருந்த அந்தச் சிலிர்ப்பான நொடியில், அருள் மெல்லத் தன் கரங்களை மனமேயின்றி விடுவித்துக் கொண்டான். அவளது விழிகளை நேருக்கு நேர் பார்க்கத் தயங்கி, தன் பார்வையைத் தறியின் பக்கம் திருப்பினான்.

“வேறொன்றும் இல்லைங்க… ஒரு சின்னப் பிரமிப்புதான்! மத்தபடி நீங்க ஒன்னும் தவறாக நினைச்சுக்காதீங்க,” என்று ஒருவிதமான நிதானத்தோடும், செயற்கையான விலகலோடும் சொல்லி முடித்தான்.

அவனது அந்தப் பேச்சும், சட்டென்று ஏற்படுத்திக்கொண்ட இடைவெளியும் ராஷியின் நெஞ்சில் லேசான ஊசியாய் குத்தியது.

அருளின் முகத்தில் தெரிந்த அந்தத் தயக்கத்தையும், அவன் தனக்குத்தானே போட்டுக்கொண்ட அந்த அந்தஸ்து வேலிகளையும் ராஷி கவனித்துவிட்டாள். அவன் எதற்காகத் தன்னை விலக்குகிறான் என்பதும் அவளுக்குப் புரிந்தது.

“அருள்… நீங்க ஏதோ யோசிச்சு உங்களை நீங்களே தடுத்துக்கிறீங்கனு எனக்கு நல்லாவே புரியுது…” என்று ராஷி ஏதோ சொல்லத் தொடங்கிய அந்த நொடியில்—

வெளியே மழை பெய்யத் தொடங்கியிருந்த அந்த வேளையில், வாசலில் மிதிவண்டியின் மணியோசை கேட்டது. அருளின் தந்தை முத்தையா ஐயாவும் தாய் பார்வதி அம்மாளும் மழையில் நனையாமல் இருக்கக் தலையில் துண்டைப் போர்த்தியபடி உள்ளே வந்தார்கள்.

“அடடா… மழை நல்லாப் புடிச்சுக்கிச்சுப்பா! பாப்பா… தறிக்கூடத்துல காத்தோட்டமா இருக்கீங்களா?” என்று பார்வதி அம்மாள் குரல் கொடுத்தபடி உள்ளே வர, அருளும் ராஷியும் சட்டென்று பழைய நிலைக்குத் திரும்பினார்கள்.

அருள் எழுந்து நின்று, “ஆமாம்மா… ராஷி மேடம்க்குப் பூ வேலைப்பாடு எப்படி நெய்யுறதுனு சொல்லிக் கொடுத்துட்டு இருந்தேன்,” என்று இயல்பாகப் பேச முயன்றான்.

ஆனால், ராஷியின் கண்கள் மட்டும் அருளையே பார்த்துக் கொண்டிருந்தன. ‘உங்க மனசுல என்ன இருக்குனு எனக்குத் தெரியும் அருள்… இந்த அந்தஸ்துங்கிற வேலியை உடைச்சு உங்க வாயாலேயே அதை ஒப்புகொள்ள வைக்கிற வரைக்கும் நான் விடுறதா இல்லை,’ என்று மனதுக்குள் ஒரு தீர்க்கமான முடிவோடு புன்னகைத்துக் கொண்டாள்.

நாட்கள் அதன் போக்கில் வேகமாக ஓடிச் சென்றன. தறிக் கூடத்தின் தாள நயத்தோடும், நெசவுக் கலையின் நுணுக்கங்களோடும் நாட்கள் நகர… பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன.

இதனிடையே, பாட்டியின் காரியங்களை முடித்துவிட்டு சாருவும் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பியிருந்தாள்.

பண்டிகை காலம் நெருங்கிவிட்டதாலும், வீட்டின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததாலும், ராஷியும் சாருவும் தங்கள் சொந்த ஊரான சென்னைக்குக் கிளம்பத் தீர்மானித்தார்கள்.

அன்று காலையிலேயே, பக்கத்து மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய நெசவாளர் சங்கக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அருள் புறப்பட்டுச் சென்றுவிட்டான். அதனால், ராஷியும் சாருவும் சென்னைக்குக் கிளம்பும் விஷயம் அவனுக்குத் தெரியாமல் போனது.

ராஷியும் சாருவும் தங்களின் பைகளை எடுத்துக்கொண்டு, அருளின் வீட்டிற்கு வந்தார்கள்.

பார்வதி அம்மாளும் முத்தையா ஐயாவும் கூடத்தில் அமர்ந்து மாலை நேர நெசவு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அம்மா… பொங்கலுக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. வீட்ல எல்லாரும் கூப்பிடுறாங்க. நாங்க சென்னைக்குக் கிளம்புறோம்,” என்றாள் சாரு.

செய்தியைக் கேட்ட பார்வதி அம்மாளுக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த இரண்டு பெண்களும் அந்த வீட்டில் சொந்தப் பிள்ளைகளைப் போலக் கலந்துவிட்டிருந்தனர்.

“அடடா… பண்டிகைக்கு ஊருக்குப் போறீங்களாப்பா? அருள் இருந்தா கூடவே வந்து வழியனுப்பி வச்சிருப்பானே… காலையிலேயே கூட்டத்துக்குக் கிளம்பிப் போயிட்டானேப்பா,” என்றார் பார்வதி அம்மாள்.

வர்ணம் மிளிரும்…

error: Alert: Content selection is disabled!!