மாதொரு பாகம் கொண்டான் 17 – 1

MPK 17

அன்று வெள்ளிக்கிழமை…

“ரெண்டு மான்குட்டியும் ஓடி வாங்கோ. விளையாட்டெல்லாம் காணும். ஓடிப் போய் உடம்பு கழுவிட்டு அப்பம்மாட்ட போங்கோ.”

சாதனாவின் ஆறுமணி அலாரக் குரல் ஒலிக்க, எப்போதும் போல் அவளின் ஒரே சத்தத்தில் அவளிடம் ஓடி வந்த இருவரும், “தாங்க்ஸ் அன்ட்ரி.” என்று அவளின் பணிக்கான நன்றியை செலுத்தினார்கள்.

அவளும் புன்னகையோடு இருவர் தலைகளையும் தடவி விட்டவள், இரண்டு கைகளாலும் அவர்கள் கன்னம் கிள்ளி உதட்டில் ஒற்றிக் கொண்டாள்.

சமயத்தில் அவர்களை நினைத்திட்டால் அவளுக்கு மனது மிகுந்த பாரமாகிப் போகும். இந்த உலகத்தில் எல்லோருக்கும் எல்லாம் நிறைவாகக் கிடைப்பதில்லை என்பதற்கு உதாரணம் இந்தக் குழந்தைகள்தான் என்று நினைத்துக் கொள்வாள்.

வசதி வாய்ப்பு, நல்ல குணப் பண்புகள், அழகு, அறிவு, பேத்திகள் மேல் உயிரையே வைத்திருக்கும் அப்பம்மா, உயிரை விடவும் மகள்களைப் பெரிதாக நினைக்கும் தகப்பன் என்று எல்லாமே கிடைத்தும் தாயன்பு… அதை அனுபவிக்கும் பாக்கியம் அற்றுப் போனவர்களாகி விட்டனரே!

இவர்கள் தாய்க்கும் தான், அப்படியென்ன அவசரம்? இந்த மாதிரித் தங்கப் பிள்ளைகளுடன் இருந்து அவர்கள் வளர்ச்சியின் ஒவ்வொரு படிநிலைகளையும் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பைத் தவறவிட்டு ஏன் இவ்வளவு விரைவில் சிவலோகப் பதவியை நாடினார்?

இந்தக் கடவுளுக்குக் கூட கொஞ்சமும் மனம் இரங்கவில்லையா? தன் பாதம் வந்த உயிரை இந்தப் பச்சிளம் குழந்தைகளுக்காகவாவது மீண்டும் அனுப்பி வைத்திருக்கக் கூடாதா?

அப்படி அனுப்பி வைத்திருந்தால், இப்படித் தங்களை சம்பளத்துக்குப் பார்த்துக் கொள்ளும் தனக்குத் தினமும் நன்றியுரைக்கும் இந்த நிலை இவர்களுக்கு இல்லைதானே?

சில நேரங்களில், எனக்கென்று ஒரு வருமானம் இருந்தால் இந்த இரண்டு முத்துகளையும் பார்த்துக் கொள்ளப் பணம் வாங்காமலே விடலாம் என்றும் தோன்றும்.

ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை. பணம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள அவர்களும் விடமாட்டார்கள். இவளுக்கும் இப்போது இதை விட்டால் வேறு வருமானம் இல்லையே!

ஆனாலும் கை நீட்டி வாங்கும் சம்பளப் பணத்தைத் தாண்டித் தனியான அக்கறையும் அன்பும் அவர்கள் மேல் அவளுக்கு உண்டு என்பது மட்டும் உண்மை. அதனாலே கடமைக்கு என்றில்லாமல் நித்திலனை எப்படிப் பார்த்துக் கொள்வாளோ அதேபோல் அவர்களையும் பார்த்துக் கொள்ளுவாள்.

மகி, “நிலன் அண்ணா! பாய். நாளைக்கு சனிக்கிழமையெல்லோ? வேளைக்கெண்டு வாங்கோ. நாங்க நிறைய கேம்ஸ் விளையாடுவோம்.”

மயூ, “ஓம், நிலன் அண்ணா. நாளைக்கு நிறைய நேரம் இருக்கும். நாங்கள் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுவோம் என்ன? நீங்க தான் முதல் கண்ணைப் பொத்தோணும். வேளைக்கு வாங்கோ என்ன?”

இருவரும் மாறி மாறி அன்புக் கட்டளை போட, அந்த மினி அடாவடிக்காரனும் அவர்கள் அன்புக்கு அடிபணிந்து,

“ஓம்.. ஓம்.. நான் கட்டாயம் வேளைக்கு வாறேன். நீங்களும் வேளைக்கு எழும்பி நில்லுங்கோ. நாளைக்குப் பார்ப்பம். இப்ப ரெண்டு பேருக்கும் பாய்.” என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

அவனை அங்கே அமர்த்தி விட்டு, சாதனா மயூ, மகி இருவரையும் கொண்டு போய் பரமேஸ்வரியிடம் விட்டவள், அவர்கள் குளிக்க சென்றதும் சொல்லிக் கொண்டு கிளம்ப முனைந்திட,

“பிள்ளை கொஞ்ச நேரம் நிண்டிட்டு போறியேன? தம்பி உங்களோட கதைக்கோணும் எண்டவர்.” என்று அவளைத் தடுத்து நிறுத்தினார் பரமேஸ்வரி.

“என்னோடயோ? ஏன் ஏதேன் பிரச்சனையோ அம்மா? நிலன் திரும்ப என்னவேன் செய்திட்டானோ? பிள்ளையள் ஏதேன் சொன்னவையோ?” என்று படபடத்தாள்.

“ஏன், உங்களோட கதைக்கோணும் எண்டா வேற ஒண்டும் கதைக்க இல்லையோ? அதேன் நீங்கள் எல்லா நேரமும் நிலன் ஏதேன் செய்திருப்பார் எண்ட எண்ணத்திலேயே சுத்துறீங்கள்?”

கேட்டுக் கொண்டே அன்று போல் பக்கக் கேட்டைத் திறந்து வந்து கொண்டிருந்தான் ஆதித்யன்.

“அதுதானே பிள்ளை! சின்னப் பிள்ளையள் எண்டா குழப்படி செய்யத்தான் செய்யுங்கள். அதுக்கு அதையே அவேன்ர அடையாளம் ஆக்கலாமோ? அதுவும் அவன்ர அம்மா நீ! நீயே அவனைப் பற்றி அப்பிடி நினைக்கலாமோ?” என்று பரமேஸ்வரியும் கடிய, சுருக்கென்று தைத்தது அவளுக்கு.

‘ஆம்! நான் அவனின் அம்மா. ஆனால் அதை மறந்து மற்றவர் குறை கூறும் முன் நானே அவன்தான் பிழை என்பது போல் வாக்குமூலம் கொடுக்கிறேனே!’

குற்றவுணர்வில் அவள் தலை தன்னால் குனிந்து கொண்டது.

“அம்மாச்சி பிழையா ஒண்டும் சொல்லேலயனை. மனசுல பட்டதை யோசிக்காம கதைச்சுப்போட்டன். மனசு கஷ்டப்பட்டிருந்தா மன்னிச்சுக் கொள்ளம்மா.” என்றார் அவர் வருந்திய குரலில்.

“ஐயோ! இதுக்கேனம்மா மன்னிப்பெல்லாம்? நீங்க இப்பிடி என்ர பிள்ளைக்காக என்னைப் பேசுறறதைக் கேட்க எனக்கு சந்தோஷமாதான் கிடக்கு. இதுநாள் வரைக்கும் என்னட்ட இப்பிடி ஒருத்தரும் அவனுக்காகக் கதைச்சுக் கொண்டு வந்ததே இல்லை.

‘அடக்கி வை… அடிச்சு வளர்… போர்டிங்ல போடு… மரியாதையில்லாம கதைக்கிற வாய்க்கு சூடு போடு’ எண்டு சொல்லி முடிச்சுட்டு எல்லாத்துக்கும் கடைசில கிரீடம் வச்ச மாதிரி, ‘இல்லாட்டி தேப்பனை மாதிரித்தான் தறுதலையா வரும்’ எண்டுடுவினம்.

அந்த ஒரு வசனம் காணும். என்னைப் பத்திரகாளியா மாத்த! பிள்ளையை அடிச்சுத் தள்ளிப்போடுவன். அப்பவும் உந்த அடிக்கெல்லாம் திருந்திற ஜென்மம் உதில்லை எண்டு என்னை ஏத்தி விட்டவைதான் கூட. ஏன் என்ர அம்மாவே அப்பிடித்தான்.

அப்பிடியிருக்கேக்க அவனிட்டயும் நல்லது இருக்கும் தேடு எண்டு நீங்க சொன்னதை நான் ஏன் பிழையா எடுக்கப் போறன்? என்ர கவலை எல்லாம் இதை நான் எப்பிடி இவ்வளவு காலமும் யோசிக்காம இருந்தனான் எண்டுறதுதான்.

ஒரு இடத்தில பிழை நடந்தா, அந்த இடத்தில நிலன் இருந்தா, கண்ணை மூடிக் கொண்டு அவன்தான் செய்திருப்பான் எண்டு நம்பியிருக்கிறன். நீங்க சொன்ன மாதிரி அம்மாவா நானே அதை செய்யேக்க மற்றவை எப்பிடி என்ர பிள்ளையைக் கணிப்பினம்?

அவன் நல்ல பிள்ளை இல்லைத்தான். அதே மாதிரி நானும் நல்ல அம்மா இல்லை. இந்த உண்மை இவ்வளவு நாளும் விளங்காம இருந்ததை நினைச்சுத்தான் கஷ்டமா கிடக்கு.” என்றாள் மெலிதாய் கரகரத்து விட்ட குரலில்.

“அதைப் பற்றிக் கதைக்கத் தான் உங்களை நிக்க சொன்னனான். நித்திலன் சம்மந்தமா உங்களுக்கு என்னமும் உதவி தேவை எண்டா நீங்க என்னட்டயோ, அம்மாட்டயோ தாராளமா கேக்கலாம்.

அவரின்ர படிப்பு சம்மந்தமா பண உதவியோ இல்லா பொருள் உதவியோ, இல்லா அவருக்கு எக்ஸ்ட்ராவா ஏதேன் மியூசிக், டான்ஸ் எண்டு பழக விருப்பம் இருந்தாலோ அதுக்கு நான் உதவி செய்யுறன். உங்கட சம்பளத்துக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்காது. இது… எனக்கு அவருக்கு ஏதேன் செய்யோணும் எண்டு கிடக்கு. அதுக்காகத்தான்.” என்று தான் பேச வந்ததை ஆதித்யன் கதைத்து முடிக்க முதலே அவனை மறுத்தாள் அவள்.

“சொறி டொக்டர். எனக்கு அப்பிடி எந்த உதவியும் தேவையில்லை.” குரலில் அப்பட்டமான பிடிவாதம்.

அவள் மனதில் இப்போது என்னவெல்லாம் ஓடும் என்பதை சரியாகப் புரிந்து கொண்ட பரமேஸ்வரி,

“பிள்ளை! நீ வித்தியாசமா நினைக்காதயம்மா. தம்பி இதுமாதிரி நிறையப் பேருக்கு செய்யிறவர். அதுதான் கேட்கிறார். வகுப்புகள் என்னத்திலயும் சேர்த்து விட்டா மகனும் கொஞ்சம் மாற வாய்ப்பிருக்குத்தானே பிள்ளை? நல்லா யோசிச்சு முடிவை நாளைக்கு சொல்லேன்.”

“இல்லை அம்மா… இது உறுதியா வேண்டாம். உங்களிட்ட உதவி வேண்டோணுமோ எண்டு யோசிச்சு மட்டும் இதைச் சொல்லேல நான். இவனை வேற எங்கேயேன் அனுப்பிட்டு, இவன் அங்க என்ன பிரச்சனை செய்வான் எண்ட பயத்திலயே என்னால இருக்கேலாது. இவனைப் பள்ளிக்கூடம் அனுப்பவே எனக்கு அவ்வளவு பயமாக் கிடக்கும். பதினாறு வயசு மட்டும் கட்டாயக் கல்வி எண்டு சட்டம் மட்டும் இல்லையெண்டா நிலனைப் பள்ளிக்கூடத்துக்கே அனுப்பமாட்டன் நான்.”

“நல்ல விசர்க் கதை உது. பள்ளிக் கூடம் அனுப்பாம வீட்டுக்க வச்சு நாலு நேரமும் அடியும் உதையும் எண்டு வளர்க்கப் போறீங்களோ பிள்ளையை?” கோபமாய் கேட்டான் ஆதித்யன்.

திரும்பத் திரும்பத் தன் கையறு நிலையைக் குட்டியே வரும் பேச்சில் சாதனவுக்கும் கோபம் வந்துவிட்டிருந்தது.

அந்தக் கோபம், அவளின் பிழைக்கான நியாயத்தை அவனுக்குப் போதித்து விடவேண்டும் என்ற வேகத்தைக் கொடுத்தது.

“உங்களுக்கு ஒண்டும் தெரியாது டொக்டர். அந்தப் பக்கம் இருந்து பார்க்க இதெல்லாம் ஒரு பிரச்சனையா எண்டுற மாதிரித்தான் கிடக்கும் உங்களுக்கு. அனுபவிக்கிற எனக்குத்தான் அந்தக் கஷ்டம் என்னெண்டு தெரியும். பட்ட அனுபவத்தில தான் சொல்லுறன், அவனுக்கு இதொண்டும் வேண்டாம்.

பிறகு… நீங்க என்ர பிள்ளைக்கு நல்லது நினைச்சிருக்கிறீங்கள். அதுக்கே நான் நிறைய நன்றிக் கடன் பட்டிருக்கிறன், தாங்க்ஸ் டொக்டர்.”

இதற்கு மேல் அவனால் என்ன செய்ய முடியும்? வற்புறுத்தி நீ ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்று திணிக்க இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? இவன் இயல்புக்கும் கடைப்பிடிக்கும் நாகரீகத்துக்கும் இவ்வளவு இறங்கி இவளிடம் கேட்டதே பெரிதுதான்.

எல்லாம் அந்த சின்னவனின் மேல் கொண்ட கரிசனத்துக்காக. எல்லோருக்கும் பாகற்காயாய் கசக்கும் பாலகன் இவனுக்கும் இவனைச் சார்ந்தோருக்கும் மட்டும் எப்படித் தித்திக்கிறான் என்பதுதான் விளங்காத விஞ்ஞானம்!

ஒருவேளை பாகற்காய் பிஞ்சு பிடிக்கும் முன் பூவாக இருந்த போது வண்டினங்களின் கண்ணிலும் படாமல் எஞ்சிய ஒரு துளி தேன், காயின் உள்ளே இறங்கி இவர்களுக்கு மட்டும் காட்சி கொடுக்கிறதோ?

பரமேஸ்வரி, “விடுங்கோ தம்பி. அவா என்ன மாதிரிக் கஷ்டப்பட்டவா எண்டு எங்களுக்குத் தெரியாதெல்லா? அதால இதுக்கு மேல கேட்டு அவாவ சங்கடப்படுத்த வேண்டாம்.” என்றவர் சாதனாவிடம்…

“அதுக்காகப் பிள்ளை, இண்டைக்கு இப்பிடி சொல்லிப் போட்டனெண்டு நாளைக்கு ஏதேன் உதவி தேவைப்படேக்கயும் கேட்காம நிக்காத என்ன?” என்ற, அவரின் நல்ல மனதுக்குப் பணிந்து சும்மாவேனும் தலையசைத்து வைத்தாள்.

“அப்ப நான் வெளிக்கிடட்டோ அம்மா?”

“என்ன தம்பி, போகச் சொல்லட்டோ? இல்லா வேற கதைக்கோணுமோ?”

“ஓம்… ஒரு சொறி… ஒரு தாங்க்ஸ்… சொல்லோணும்.” என்று அவன் முடிக்கும் முன்,

“இதுக்கேன் டொக்டர் சொறி எல்லாம். நீங்க நல்லது நினைச்சுத்தானே கேட்டனிங்கள்?”

“சொறி அதுக்கில்ல. அண்டைக்கு நீங்க அம்மாவோட கதைச்சதை எல்லாம் கேட்க வேண்டியதா போச்சு அதுக்குத்தான்.”

என்றைக்கு என்று அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள். அவள் எல்லா நாளும்தானே அவருடன் பேசுகிறாள்.

error: Alert: Content selection is disabled!!