இடைவெளி வலிக்குதே 27 – 2

“என்னம்மா இனியாவது இங்கயே இருப்பீங்களா? இல்ல திரும்பவும் கோவிச்சுக்கொண்டு போயிடுவீங்களா?” இயல்பு போன்று நந்தினியின் அன்னை கேட்டுவிட அவள் முகம் மாறிற்று.

“இப்ப மகனும் இருக்கிறார். என்ன எண்டாலும் சமாளிச்சு வாழவேணுமம்மா.” என்று புத்தி சொன்னார்.

சிரமப்பட்டுச் சிரித்து வைத்தாள் கானவி.

அவர் நல்லதற்கே சொன்னபோதிலும் அவளுக்கு முகம் கறுத்துப் போனது. அதன் பிறகு யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. மகன் மீதே கவனம்போல் இருந்துகொண்டாள்.

செந்தாளனுக்கும் சங்கடமாயிற்று. தம்பியின் மனைவி வீட்டினரிடம் எதையும் கதைக்க முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“கலியாணமான புதிசில அப்பிடித்தான். நாலு சண்டை வாறதும் சமாதானமாகிறதும் வழமைதானே. ஒருத்தரை ஒருத்தர் விளங்கி, விட்டுக்குடுத்து நடக்கவும் ஒரு காலம் வேணுமெல்லோ.” என்று சற்குணத்தார்தான் சமாளித்தார்.

சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்தவள் எழுந்து சென்று அவர்களுக்குப் பொங்கலும் தேநீரும் கொண்டு வந்து கொடுத்தாள். அதோடு அவளைக் காணவில்லை. மகனோடு வீட்டினுள்ளேயே இருந்துகொண்டாள்.

மற்றவர்கள் பேச்சுச் சுவாரசியத்தில் கவனிக்காதபோதும் செந்தாளன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். எழுந்து சென்று என்ன செய்கிறாள் என்று பார்க்கக் கால்கள் துறுதுறுத்தன. எல்லோரும் இங்கே இருக்கையில் அவனும் உள்ளுக்குள் போவது நன்றாக இருக்காதே என்று அமர்ந்திருந்தான்.

“எங்க கானவி, ஆளைக் காணேல்ல. சின்னவரையும் காணேல்ல.” நந்தினியின் அன்னைதான் வினவினார்.

“தம்பி சிணுங்கினவர் எண்டு உள்ளுக்கு போனா.” என்றுவிட்டு எழுந்து உள்ளே வந்தான் செந்தாளன்.

அங்கே அறைக்குள் அவள் தரையில் கிடக்க, அவளின் மீது ஏறி அமர்ந்துகொண்டு அவள் முடியைப் போட்டு இழுத்துக்கொண்டிருந்தான் நிலவன்.

“ஐயோ தம்புடு அம்மாவை விடு, அம்மா அழப்போறன்.” என்று பொய்யாக அவள் அழுதுகொண்டிருந்தாள். அவர்களின் மகனுக்கோ அப்படி ஒரு சிரிப்பு. மேலேயும் கீழேயும் அடுக்கி வைத்த பச்சரிப் பற்கள் தெரிய, வயிறு குலுங்க சிரித்துக்கொண்டிருந்தான் அவன். இவன் முகத்திலும் தானாய் முறுவல் அரும்பிற்று.

இவனைக் கண்டதும் ஒருகணம் திகைத்த கானவி, அடுத்த கணமே வேகமாக எழுந்து அமர்ந்து, தன் ஆடைகளை இழுத்துவிட்டாள். தலையைக் கையாலேயே கோதிச் சரி செய்துகொண்டு, கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

“மாமி தம்பியக் கேட்டவா.”

“அப்பாட்டப் போங்கோ செல்லம்.” என்றபடி மகனை எழுப்பிவிட்டாள். அவன் குடுகுடு என்று தகப்பனை நோக்கித் தவழ, இரண்டெட்டில் நெருங்கி மகனைத் தூக்கிக்கொண்டு, “நீயும் வா!” என்றான்.

“எனக்கு அறைய ஒதுக்கோணும்.”

உண்மையில் அம்மாவும் மகனுமாக அவனின் விளையாட்டுப் பொருள்களை எல்லாம் கலைத்துப் போட்டுத்தான் வைத்திருந்தார்கள். ஆனாலும், “அதைப் பிறகு செய்யலாம். நீ வா!” என்றான் அழுத்தி.

ஒருகணம் விழிகளை முடித்த திறந்தவள், “போங்க வாறன்.” என்றாள் அப்போதும் அவன் முகம் பாராமல்.

கடுகடு என்று வந்தது அவனுக்கு. பேசாமல் வெளியே சென்று அமர்ந்துகொண்டான். அங்கிருந்த அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான் மகன். அவன் உதட்டிலும் மெல்லிய முறுவல் அரும்பிற்று. ஆனாலும், மண்டைக்குள் நின்று மனைவிதான் வண்டாகக் குடைந்துகொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் அவளும் வந்து அமர்ந்துகொண்டாள். முகம் கழுவி, தலைவாரி, பவுடர் பூசி, பொட்டு வைத்த முகம். அழகாகத்தான் இருந்தாள். ஆனால், பொங்கும் சிரிப்பும் மின்னும் விழிகளுமாக மகனிடம் காட்டிய முகமன்று அது. உடல் மொழியிலும் முழுக் கவனம் தெரிந்தது.

அந்த வீட்டுக்குள்ளேயே அவள் தனக்கும் மகனுக்குமான உலகத்தை வடிவமைத்துக்கொண்டிருப்பது புரிந்தது. இப்போது அவன் உலகம் எது? வெளியே இருப்பதா, இல்லை உள்ளே இருப்பதா? இரண்டையும் ஒன்றாக்கி ஒரு உலகமாக மாற்ற நினைக்கிறான். அவள் மௌனமாக இருந்தே தன் மறுப்பை அழுத்தமாகச் சொல்கிறாள்.

அவர்கள் புறப்படும் நேரம் அருந்தவராஜா விசாலாட்சியோடு வந்தார். கானவியின் முகம் பூவாக மலர்ந்தது.

“அம்மா வாங்கம்மா, வாங்கப்பா!” என்று ஓடிச் சென்று வரவேற்றாள். நந்தினி வீட்டினரும் அவர்களோடு கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டுப் புறப்பட்டனர்.

பொதுவிலேயே எல்லோரும் நல்ல மனிதர்கள் என்பதில் இடையில் அவர்களுக்குள் வந்திருந்த மெல்லிய கசப்பைத் தூக்கிப் போட்டுவிட்டு நல்லமாதிரியே கதைத்தார்கள். செந்தாளனும் கலகலக்கவில்லையே தவிர்த்து நான்கு வார்த்தைகள் கதைத்தான்.

“கலியாணத்துக்குக் கூப்பிடுறதுக்கு அண்ணாவையும் கூட்டிக்கொண்டு குமரன் வாறன் எண்டு சொன்னான். காணேல்ல…” என்றார் அருந்தவராஜா.

“அண்ணா எனக்கும் மெசேஜ் போட்டிருந்தவன் அப்பா. இனித்தான் வருவீனம் எண்டு நினைக்கிறன்.” என்ற கானவி, “அப்பா, என்னைச் சும்மா அடிங்க.” என்றாள் நிலவனை மடியில் வைத்துக்கொண்டு.

“ஏனம்மா?”

“அடிங்களன். உங்கட பேரன் என்ன செய்வார் எண்டு பாருங்க. சும்மா என்னைப் பேசி பேசி அடிங்கப்பா.”

அவரும், “என்ன பழக்கம் இது? ஏன் குழப்படி செய்றீங்க பிள்ளை? இப்பிடித்தான் சொல்லுறது கேக்காம நடக்கிறதா?” என்று பொய்யாக அவள் முதுகில் நான்கைந்து அடியைப் போட்டார்.

முதலில் முகம் சுருக்கி அவரைப் பார்த்த நிலவன், எட்டிப் பளார் என்று அவர் முகத்திலேயே ஒன்று போட்டான். அவன் முகத்தில் அப்படி ஒரு கோபம். சுற்றியிருந்த எல்லோரும் சத்தமாய்ச் சிரித்தனர். செந்தாளன் முகத்திலும் தன்னிச்சையாய் முறுவல் அரும்பினாலும் அவன் கவனம் முழுக்க மனைவியில்தான். இப்படி ஒரு விளையாட்டை அவனோடு அவள் விளையாடியதில்லை.

சற்று நேரத்தில் குமரன் தகப்பனோடு வந்தான். உபசரிப்பு எல்லாம் முடிந்ததும் எல்லோரையும் தனித்தனியாகத் தன் திருமணத்திற்கு அழைத்தான்.

கையோடு, “நீதான் மேக்கப் போடோணும் கானவி. ரெடியா இரு.” என்றும் சொன்னான்.

“அண்ணா!” என்றவள் வார்த்தைகளற்றுத் தடுமாறினாள். “நான் வடிவாப் போடுவனோ தெரியாது. இது உங்கட கலியாணம். நானே அனுபவம் இருக்கிற ஆரையும் பாத்துச் சொல்லவா?” ஆசையும் பயமும் சரிசமமாகப் போட்டி போட வினவினாள்.

“எனக்கு என்ர தங்கச்சில நம்பிக்கை இருக்கு. நீதான் போடுறாய். அது நல்ல வடிவா வரும்.” என்று முடித்தான் அவன்.

“அதுதானே. நீங்க நல்ல வடிவாத்தானேம்மா செய்வீங்க. எனக்கே பாக்க ஆசையா இருக்கிறது.” புவனாம்பிகையும் தன் பங்குக்குச் சொன்னார்.

“ஆனா ஒண்டு. நீ ஒரு கிழமைக்கு முதலே அங்க வரோணும். லதாங்கியும் உன்னட்டச் சொல்லிவிடச் சொன்னவள்.” என்று உரிமையோடு அழைத்தான் குமரன்.

லதாங்கிதான் அவனின் எதிர்கால மனைவி. தூரத்து உறவு. மச்சாள் முறை என்பதில் சின்ன வயதிலிருந்தே இவர்களுக்கும் பழக்கம். அதைவிட இரு பக்கமிருந்து எல்லோருமே அவர்களுக்கு உறவு என்பதில் கொண்டாட்டத்துக்கும் சந்தோசத்துக்கும் குறைவிருக்காது.

கூடவே, முதன் முறையாக மணப்பெண்ணை அலங்கரிக்கப் போகிறாள். முதலே சென்று முன்னாயத்தங்கள் செய்தால் இன்னும் சிறப்பாகச் செய்யலாம்தான். ஆனால் கணவன்… அவன் இங்கே அழைத்து வரும்போது சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து அவள் வாயைக் கட்டிப் போட்டன.

தனக்குள் நடக்கும் போராட்டத்தை வெளியே காட்டாமல் மறைத்தபடி, “அது… கஷ்டம் அண்ணா. அண்டைக்கு விடிய வெள்ளன வாறனே.” என்றாள் குரல் அடைக்க.

“நீ என்ன பிறத்தி ஆக்களின்ர கலியாணத்துக்கா வாறாய், அண்டைக்கு வர? என்ன சித்தி இவள் இப்பிடிச் சொல்லுறாள்?” என்று அவன் குறைபட, அவர்களுக்கும் என்ன சொல்வது என்று தெரியாத நிலை.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அவா வருவா. நானே ஒரு கிழமைக்கு முதல் கொண்டுவந்து விட்டுவிடுறன்.” என்றான் செந்தாளன்.

உண்மையில் அங்கிருந்த எல்லோருக்கும் அவன் அப்படிச் சொன்னது பெரும் நிம்மதியையும் சந்தோசத்தையும் தந்தது.

error: Alert: Content selection is disabled!!