ஏதனின் இலஞ்சியவள் 22- 3

ஏதன் தகப்பனைப் பார்த்துக் கண்கலங்கியபடி ஒலிவியாவைப் பார்த்தான். அவளோ, விரித்த தகப்பன் கரங்களில் சென்று அடைக்கலம் புகும் எண்ணமெல்லாம் இல்லாமல்தான் நின்றுகொண்டிருந்தாள்.

“ப்ளீஸ் ஒலிவியா!” என்ற ஏதன் அவளை இழுத்துத்  தகப்பன் கரங்களுள் அடக்க முனைய, மறுபக்கம் வேர்த்தும்  உதவினான். நடுங்கும் கரங்களால் மகளை வளைத்துத் தன்  நெஞ்சில் அவள் முகம் தாங்கியவர், “மகளே…என்ர செல்ல மகளே!” என்று அரற்றினார்.  

நான்தான்  உன் தந்தை என்றபின் அவள் கை கொடுத்திருக்கிறாள். அதுகூட ஒரே ஒரு தடவைதான், அவள் திருமணத்தன்று வாழ்த்த மட்டுமே . 

அதை ஆரோன் மட்டுமல்ல, ஒலிவியாவுமே நினைத்துக்கொண்டாள்.

பெற்ற தந்தையாக ஒரு நிமிடம் கூடத் தன் கடமை செய்திராத மனிதன் என்ற எண்ணம் அவ்வளவு இலகுவில் அழிந்துவிடுமா என்ன? ஆனாலும் இந்தக் கணம் அவருக்காக அவளிதயம் ஓலமிட்டுக்  கலங்கி நின்றது. மெல்ல நகர்ந்த அவள் கைகள் தகப்பன் முதுகில் படிந்து ஆதரவாக வருடிக் கொடுத்தன.  “உங்களுக்கு ஒண்டும் இல்ல, சின்ன ஒரு ஒபரேசன். கெதியா எல்லாம் சுகமாகிரும். ஒண்டும் யோசிக்கிறேல்ல. பயப்படாதீங்க!” என்றவளால், ‘டாட்’ என்ற சொல்லைப் பாவித்து நடிக்க இயலவில்லை. ஆனால் ‘செஃப்’ என்ற வார்த்தையையும் பாவிக்கவில்லை. அதில் மிகவுமே கவனமாக இருந்தாள்.

“ம்ம்ம் சுகமாகிருவன் மகளே! என்ர மகள் என்னைப் பாக்க வந்திருக்கிறாள். அதைவிட வேற என்ன எனக்கு வேணும்  சொல்லு?”  என்றவர், மகள் முகம் நிமிர்த்தி அவள் விழிகளைப்  பார்த்தார். “என்னை மன்னிச்சுக்கொள் மகளே! உன்ர   டாட்டை மன்னிச்சிட்டதானே?” தழுதழுப்போடு இறைஞ்சியிருந்தார்.

இதனை, ஆரோன் மனைவி, மூத்த மகன் ஐவன், மகள் ஐலா என்ன நடிப்பு என்ற ரீதியில் கைகட்டிப் பார்த்து நின்றார்கள். மற்றவர்கள் விழிகளில் கண்ணீர்.

“இப்ப இதெல்லாம் என்ன கதை? எனக்கு உண்மையாவே  உங்களில வருத்தமோ கோபமோ இல்ல.” சுதாரித்த ஒலிவியா அவர் விழிகளைத் துடைத்துவிட்டு முறுவலிக்க முயன்றாள்.

நடுங்கும் தன் கரங்களால் மகள் கண்ணீர் துடைத்தவர் , “உண்மையாவே என்னை மன்னிச்சு உணர்ந்து சொல்லுறியோ, என்ர இந்த நிலையைப் பாத்து ஒரு ஆறுதலுக்காச் சொல்லுறியோ தெரியாது மகளே.” என்றவர்,  “நான் இந்தக் கணம் மிகவுமே மகிழ்வாக இருக்கிறன். என்னை மன்னிச்சுக்கொள்! உன்ர அம்மாட்டையும் என்னை மன்னிச்சிரச் சொல்லிவிடு!” என்றவர் வாயைப் பொத்தினாள் ஒலிவியா.

“இந்தக் கதை எல்லாம் வேணாம். ஒபரேசனுக்கு போக ரெடியாக்குங்க, போதும்.” மென்மையாக அதட்டினாள். இதேயே வேர்த்தும் சொன்னான். அப்போதுதான் துர்கா எங்கே என்று திரும்பினான், ஏதன். அவளோ, கதவோடு கதவாக நின்றிருந்தாள். ஏதன் பார்வையைத் தொடர்ந்த ஆரோன் பார்வையும்  துர்காவைக் கண்டுகொண்டது.

 சட்டென்று ஏதனைப் பார்த்தார். அவனோ வா என்று  அழைத்துக்கொண்டிருந்தான். மெல்ல நகர்ந்த ஆரோன் பார்வை, மனைவி, மூத்த மகன், மகள் என்று தொட்டு வந்தது. அவர்கள் முகத்தில் இருந்த அதிருப்தியை உள்வாங்கிக்கொண்டது. தன் தாயைப் பார்த்தார், ஆரோன்.  அம்முதியவர் முறுவலோடு புருவம் உயர்த்தினார்.

“ஹேய்  துர்கா, என்ன அங்கயே நிண்டிட்ட? இங்க வா மகளே!” எப்படி ஒலிவியாவை இருகரம் விரித்து வரவேற்றாரோ அப்படியே அவளையும் அழைத்தார், ஆரோன்.

அப்போதும் துர்காவால் அசைய இயலவில்லை. அந்தளவுக்கு அவளைக் கோபமும் எரிச்சலுமாகப் பார்த்து நின்றார் சோஃபியா. ஏதன் மூத்த சகோதரனும் சகோதரியும்  உன் வரவை நாங்கள் விரும்பவில்லை பெண்ணே என்றார்கள். சற்றே பயத்தோடு தாத்தாவைப் பார்த்தாள், துர்கா. மனிதனோ, வலு கூர்மையான பார்வையால் துளைத்தார். இவள் அசையவில்லை.  

துர்காவின் பார்வை போன இடமெல்லாம் ஏதன் பார்வையும் சேர்ந்தே போனது. அவளுக்கு அசையும் எண்ணம் இல்லை என்று தெரிந்த மறுநொடி, தாமதியாது அவளை நெருங்கியவன் அவள் கரம் பற்றி அழைத்து வந்து தகப்பன் அருகண்மையில் நிறுத்திவிட்டிருந்தான்.

ஆரோன் வலக்கைக்குள் இன்னமும் ஒலிவியா இருக்க, இடக்கைப்பக்கம் துர்காவை அமர்த்திக்கொண்டார். அவளோ அலங்க மலங்க விழித்தாள். 

“இல்ல … பரவாயில்ல செஃப்…நான்… இப்பிடி  நிக்கிறன்.” தடுமாறியபடியே சொன்னவள் எழ முயல ஆரோன் அனுமதிக்கவில்லை. 

அனைவர் பார்வையும் இப்போது துர்க்காவில். அவளுள் இருந்த பதற்றத்தில் என்ன செய்கிறோம் என்றில்லாது ஒன்று செய்து ஏதனை மலர வைத்தாள். வலக்கையால் எட்டி ஏதன் கரம் பற்றி அவனைக் கிட்ட இழுத்திருந்தாள், துர்கா. 

அங்கு நின்றவர்களில் ஒரு பகுதி, எரிச்சல் கோபம் என்று சினந்து நிற்க,  ஆரோனும் ஓலிவியாவும் வேர்த்தும் நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டார்கள். தாத்தா பெருமூச்செறிந்தார். சில விடயங்கள் நடக்க வேண்டும் என்று  இருந்தால் அவர் யார் தடுக்க என்ற மனநிலைக்கு வந்திருந்தார் அவர். பாட்டிக்கோ  அவ்வளவு மகிழ்வு.

அவளை நிறைய யோசித்துக் கலங்க விடாது, “நன்றி சிறு பெண்ணே!” என்று, அவள் தலையைப் பரிவோடு வருடிக்கொடுத்தார், ஆரோன்.

“நன்றியா? எனக்கு ஏன்?” குழப்பத்தோடு கேட்டாள், அவள். 

“என்ர  மகள் இப்ப எனக்குப் பக்கத்தில இருக்கிறாள் எண்டா அதுக்கு முதல் காரணம் நீதான் துர்க்கா. அவள இங்க வரச் சொன்னது நீதான் எண்டு எனக்கு நல்லாவே தெரியும். நீ மட்டும் இல்லையோ என்ர மகளச் சந்திச்சே இருக்க மாட்டன்.” என்று அவர் சொல்ல, இவள் கைப்பற்றி இழுத்த சந்தர்ப்பத்தை வீணாக்க  விரும்பாது அவளை நெருங்கி நின்றிருந்த ஏதன் பார்வையைச் சந்தித்தாள். அவன் நெற்றி ஏற்றி நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தான்.

இவளுக்கு உண்மையில் ஒருசாதியாகிற்று. ஒலிவியா இங்கு வந்துவிடாதே என்று அவளை வரவிடாமல் செய்ய அல்லவா அவள் முயன்றாள்.

“நான் …உண்மையாவே நான்… வரச் சொல்ல எல்லாம் இல்ல செஃப்.” என்று துர்கா சொல்ல இடையிட்டார், ஆரோன். 

“நீ என்ன செய்தாய் எண்டு உனக்கு விளங்கேல்ல பெண்ணே. நீ ஏதனுக்கு மட்டும் இல்ல, எனக்கும் இந்தக் குடும்பத்துக்குமே லக்கி ஷாம்!” என்றுவிட்டு, ஏதனைப் பார்த்துக் கண்சிமிட்டினார். அவன் பார்வை தாத்தா பாட்டியைப் பார்த்து முறைத்தது. பாட்டி கண்ணடித்தார்.

 “என்ர மகன் ஏதன் உன்னை விரும்புகிறானாமே. நீயும்தானே? எங்கள் எல்லோருக்குமே நல்ல விருப்பம்.” அவள் தலை வருடி உச்சியில் கொஞ்சியவர், “எப்போதும் நல்லா, நிறைவா, மகிழ்வா  இரு மகளே! என்ர மகனையும் கவனமாகப் பாத்துக்கொள்! ” என்று வாழ்த்தினார். 

ஆம், சரி  என்று சொல்லி மகிழவும் முடியாது, ‘இல்ல அப்படியெல்லாம் எங்களுள் ஒண்டும் இல்ல. எல்லாம் உங்கள் மகனின் விருப்பம் மட்டும்தான்.’ என்று, நிதானமாக மறுக்கவும் முடியாது திணறிப்போனாள், துர்கா.

error: Alert: Content selection is disabled!!