அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்துக்கொள்வான் என்ற குன்றலோடு நின்றவளை ஏவா குரல் இழுத்திட்டு.
ஏவாவும் ஒலிவியாவும் ஆடைத்தெரிவில் மும்முரமாகிவிட்டார்கள். இவளையும் இழுத்துக்கொண்டுதான். இவள் எதையுமே தனக்கென்று எடுக்காது பார்வையாளராக, உனக்கு இது நல்லா இருக்கும் என்று அவர்கள் தெரிவில் உதவிக்கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தாள்.
“துர்கா இது எப்பிடி இருக்கு?” என்று, ஒரு அழகிய சட்டையோடு வந்தாள், ஒலிவியா.
“வாவ்! உனக்கு நல்ல மேட்ச். எடு எடு” என்றவளிடம், “நீயும் வாங்கு. டஸ்ட் பிங்க் ல ஒண்டு இருக்கு, உனக்கு வடிவா இருக்கும். இதேபோல ஓஃப் வைட் ஏவா எடுக்கிறாள். மூண்டு பேரும் ஒண்டாப் போடலாம்.” ஆசையோடு சொன்னாள், ஒலிவியா. இவர்கள் இப்படி எடுப்பவர்கள்தான். இன்ஸ்ட்டா ஸ்டோரிகளுக்கு என்றே இந்த வேலை பார்ப்பவர்கள். இன்றோ, “ப்ச், நான் எடுக்கேல்ல ஒலிவியா” வெகு அசிரத்தையாகச் சொல்லிவிட்டு நகர்ந்தாள் துர்க்கா.
நண்பியை முறைத்த ஒலிவியா, “உன்ர டேஸ்ட் தெரியாதா எனக்கு, இல்ல சைஸ் தெரியாதா?” முணுமுணுத்துவிட்டுத் தானே அவளுக்குப் பொருத்தமாகவும் தெரிவு செய்தாள்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலே சென்றிருக்கும், ஒரு பை நிறைந்த உடுப்புகளைத் துர்க்காவின் கரத்தினுள் திணித்த ஒலிவியா, “இதுகள நீ ஃபிட்டோன் பாக்கிறாய், எடுக்கிறாய். வேற கதை கதைச்சியோ எனக்கும் உனக்கும் இடையில கதை பேச்சே இராது சொல்லிட்டன்.” என்றுவிட்டு, ஃபிட்டோன் அறையொன்றினுள் நுழைந்துவிட்டாள்.
“நீ இதுக்க போ துர்க்கா.” என்றுவிட்டுக் கடைசியாக இருந்த ஃபிட்டோன் அறைக்குள் நுழைந்தாள், ஏவா.
அதில் நின்று நாடகம் போடாது ஏதாவது ஒன்றை எடுத்துவிட்டுப் போவோம் என்ற முடிவில் தானும் உள்ளே நுழைந்தாள், துர்கா. ஒலிவியாவின் தெரிவு கேட்கவே தேவையில்லை, அவள் விருப்புக்கு ஏற்ற மாதிரியே இருந்தது.
எதை எடுப்பது என்று குழம்பி நின்றவள் பார்வை ஒலிவியா சொன்ன அந்த டஸ்ட் பிங்க் சட்டையில். அதை எடுத்துத் தன் முன்னால் பிடித்துப் பார்த்தாள். கொட்டன் துணியில் குட்டியாக வெள்ளைப் புள்ளிகள் அள்ளித் தெளித்திருக்க முழங்கால் வரை வரும் லோ ஹிப் பிளையாட் சட்டை அது . கையில்லை. பின்னுக்கு வட்டக்கழுத்தும் ஓப்பனும் . முன்புறம் V வடிவில் இருக்க, கொலர் வைத்திருந்தார்கள். கீழே வரை அதே துணியில் குட்டியாகப் பொத்தான்கள். மிகவுமே எளிமையாக இருந்தது. ஆனாலும் பார்த்ததும் பிடித்திட்டு.
அணிந்து பார்த்தாள். உண்மையில் அவளுக்கென்றே அளவெடுத்துத் தைத்தது போலவே இருந்தது. அவள் இடையோடு ஒட்டி நின்றது. அவள் 170 சென்றிமீற்றர். சட்டை முழங்காலுக்கு மேலாகவே நின்றது.
அங்கிருந்த கண்ணாடியில் பின்னாலும் முன்னாலும் திரும்பிப் பார்த்துக்கொண்டாள். கழுத்தில் மூன்று சிறு குண்டுகளோடு கூடிய வைட் கோல்டு மெல்லிய சங்கிலி அணிந்திருந்தாள். காதுகளில் அதே மூன்று குண்டுகள் தொங்கும் காதணி. இந்தச் சட்டைக்கு அதே அவ்வளவு பொருத்தமாக இருந்தது.
உச்சியில் ஒரு பெரிய கிளிப்பில் அடக்கிருந்த தலைமயிருக்கு விடுதலை கொடுத்தாள். கரமிரண்டையும் பிடரிக்குள்ளால் விட்டுச் சிகையை அப்படியும் இப்படியும் உதறி வடிவாக்கினாள். ஸ்டெப் கட் முடி தோளால் தவழ்ந்து வழிந்து பம்மென்று நின்றது. அவளுக்கே அவளைப் பிடித்திட்டு. ‘எதற்கும் ஒலிவியாட்டக் காட்டிட்டு…’ என்று கதவைத் திறந்தாள், துர்க்கா.
எதிரே போட்டிருந்த குசனில் அவன் அமர்ந்திருந்தான். கைப்பேசியில் பதித்திருந்த பார்வை கதவு திறக்கவும் தன்னால் நிமிர்ந்தது. உண்மையில் அவன் இவளை எதிர்பார்க்கவில்லை.
கேட்டுக்கேள்வியில்லாது விழிகளில் இரசனையை நிரப்பிக் கொண்டவன் அவ்வளவு துணிவாக அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தபடி எழுந்து அவளை நோக்கி வந்தான். அவன் பார்வை அவளை அசையவிடாது பிடித்து வைத்திருந்தது. அணிந்திருந்த சட்டைக்குப்போட்டியாகக் கன்னங்கள் மட்டுமா அவள் முகமே செம்மையைப் பூசிற்று.
தனக்குக் காட்டவே அவள் இந்த உடையை அணிந்து வெளியில் வந்த கணக்கில் நெருங்கியவன் கைகள் துரு துருத்துத் தொலைத்தன. காதோரமாக மேலதிகமாக வழிந்து நிற்கும் முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டு…
ஏதன் கற்பனை இவள் விடயத்தில் வஞ்சகமே செய்வதில்லை. அன்று காருக்குள் கொடுத்த முத்தம் நினைவில் வந்து அவன் உதடுகளில் இரசனை முறுவலைப் பூச, “ஹனி! யூ லுக் கோஜியஸ்!” அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் சொன்னானா.
கனவிலிருந்து விழித்தமாதிரி திடுக்கிட்ட துர்கா, ஒரே பாய்ச்சலாக உள்ளே நுழைந்து கதவைச் சாத்திவிட்டாள்.
அந்த ட்ரையல் அறைக்குள் இருந்த சிறு இருக்கையில் அமர்த்தவள் முகத்தைக் கைகளுள்ளே புதைத்துக்கொண்டாள். இப்போது நான் என்ன செய்துவிட்டேன். இனி அவனை என்ன சொல்லி விலத்தி நிறுத்துவேன்? உன்னை விரும்பவில்லை, இனியும் அந்தச் சாத்தியம் இல்லை என்பதை அவன் நம்ப வேண்டுமே. நம்பவே மாட்டான். அவன் சிரிப்பே என்னை அவன் கண்டுகொண்டான் என்று சொல்லவில்லையா? எனக்கே தெரியாமல் நான் அவனை விரும்புகிறேனா என்ன? இல்லையென்றால் அவன் பார்வை என்னில் இந்தளவுக்குத் தாக்கம் உண்டு பண்ணுமா என்ன?
மனத்துள் கேள்விகள் சுற்றிச் சுழன்றடிக்க, திடும் திடுமென்று இதயம் துடிக்கும் ஒலி செவிகளில் எதிரொலிக்க, விழிகள் கசிய அமர்ந்திருந்தாள், துர்க்கா.
அப்போது, “ஏதன், என்ன இதில நிக்கிறாய்?” என்று ஒலிவியா கேட்பது கேட்டிட்டு.
அவன் எங்கே பதில் சொன்னான்? முறுவலோடு நின்றான்.
‘ம்ம்ம் வரேக்க இவன் முகம் இருந்த விதம் என்ன, இப்ப என்ன ஈ எண்டுகொண்டு நிக்கிறான்?’ ஒலிவியா மனத்துள் எழுந்த கேள்வியைக் கேட்கவில்லை.
“இதுக்க துர்கா இருக்கிறாள் எண்டு நினைக்கிறன்.” என்றபடி கதவில் தட்டி, “துர்க்கா.” என்று அழைத்தாள் .
பதில் இல்லை. “துர்காவுக்கு அந்த டஸ்ட் பிங்க் ஃப்ரொக் நல்ல வடிவு. எப்பிடியாவது வாங்க வச்சிரு ஒலிவியா.” இவள் காதுகளுள் சொல்லிவிட்டுச் சிரிப்போடு நகர்ந்தான் ஏதன்.
“ஹேய்! அது… உனக்கு எப்பிடித் தெரியும்?” என்ற ஒலிவியாவுக்கு, கண்ணடித்துவிட்டு நகர்ந்தான், ஏதன். வாயைப் பிளந்தபடி போகிறவனையே பார்த்திருந்தாள், ஒலிவியா.
அங்கிருந்து நகர்ந்து செல்பவனை ஒரு சோடி விழிகள் கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தன.