ஏதனின் இலஞ்சியவள் 29

இதே நாள் மாலைப்பொழுது, ஆரோன் வீடு.

வேர்த்  ஒலிவியாவுக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு விமானம். எட்டு மணி போல்  விமானநிலையத்திற்குப் புறப்படச் சரியாக இருக்கும் என்றிருந்தான், வேர்த்.

இந்நிலையில், ஒலிவியா எவ்வளவோ மறுத்தும் கேட்காது டின்னருக்கு அழைத்திருந்தார், ஆரோன். அப்பார்ட்மெண்டில் இருந்து வெளிக்கிட்ட வேர்த்தும் ஒலிவியாவும்  நான்கு மணிபோல் ஆரோன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.  அவர்களை அழைத்து வந்து வாயிலில் இறக்கிவிட்டுவிட்டு,  முக்கியமான வேலை ஒண்டு இருக்கு, முடிச்சிட்டு அரைமணித்தியாலத்தில வந்திருவன்.” என்று சென்றுவிட்டான், ஏதன். 

ஹோம் குக்கிங் அரையிறுதிச் சுற்றுக்கு இலண்டன் வந்த நேரம் இரவுணவுக்கு என்று இங்கு வந்ததும் கலகலப்பாகக் கழிந்த அந்த மாலைப்பொழுதும் ஆரோன் தந்த ரெசிபி புத்தகப் பரிசும் மாடியேறும் சுவரில் இருந்த பெரிய புகைப்படச் சட்டத்தில் நின்றவர்களுள் ஆரோன் அருகில் உரிமையாக நின்ற தாயைக் கண்டு தான் அதிர்ந்து குழப்பியதும் என்று, ஒன்று ஒன்றாக ஒலிவியா நினைவில் வலம் வர, அன்றைய நாளைத்தான் வேர்த்துமே  நினைத்துக்கொண்டு வந்தான்.

இக்கணம் எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டாலும் அன்றைய நாள் அவளில் ஏற்படுத்திய அதிர்வும் அது படுத்திய பாடும் இப்போதும் அவளைத் தவிக்க வைத்தது. மனைவியையே பார்த்தபடிதான் வேர்த் நடந்துகொண்டிருந்தன. அதுவே அவள் முகம் மாறவும் கையைப் பற்றித் தன்னருகில் இழுத்துக்கொண்டான்.

“கண்டதுகளையும் யோசிக்கிறேல்ல.”என்றவன் குரலில் ஒளிந்து கிடந்த கண்டிப்பில் முறுவலித்தாள், ஒலிவியா. 

அந்நேரம் உள்ளிருந்து வந்த இரட்டைக் குரல்கள் வவ்  வவ் என்றபடி இவர்களை நோக்கி ஓடி வந்தன. அவற்றோடு போட்டி போட்டுகொண்டு ஓடி வந்து ஒலிவியாவைக்  கட்டியணைத்துக்  கொண்டாள் ஏவா.

வேர்த்தையும்  வரவேற்றவள், “டாட்  கிச்சனில சரியான பிசி.”என்றுவிட்டு உள்ளே அழைத்துச் சென்றாள். 

அந்தப் பெரிய வீட்டில் சமையலறைக்குள்ளிருந்து பேச்சொலி கேட்டிட்டு. ஏவாவும் நேரே அங்குதான் அழைத்துச் சென்றாள்.  

ஒலிவியாவோ, ஆரோன் பழைய மாதிரி நிற்பதைக் கண்டு பெரிதும்  ஆசுவாசமானாள். அவளுள் எச்சமாக ஒட்டி நின்ற பதற்றத் துளிகளெல்லாம்  கரைந்தே போயின.  அதுவோ, அன்று வைத்தியசாலையில் சந்தித்த பிறகு இப்போதுதானே காண்கிறாள்  என்றதோ என்னவோ,  இவர்களைக் கண்டுவிட்டு இடுப்பில் தொங்கிய துணியில் கரங்களைத் துடைத்துவிட்டு விரிந்த சிரிப்பும் மலர்வுமாக , “வாங்க வாங்க”என்று அவர்களை நோக்கி வந்தவரை   ஓடிச்சென்று கட்டியணைத்துக்கொண்டிருந்தாள். வேர்த், ஆரோன் உட்பட யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. ஆரோனால் தன்னைக் கட்டுப்படுத்தவே  முடியவில்லை. 

“சேர்ஜரி செய்தது நினைவில் இருக்கட்டும்.”அச்சூழலுக்குப் பொருந்தாது  ஒலித்த சோஃபியாவின்  அதட்டல்   குரலை இவர்கள் பொருட்படுத்தவில்லை. கேட்கவே இல்லை பிறகு எங்கே பொருட்படுத்துவது? 

“My daughter… you are the sweetest treasure of my heart!”ஆரோன் முணுமுணுத்தது, ஒலிவியாவின் விழிகளைக் கசிய விட்டன. அவள் வாய் திறக்கவில்லை. கரங்கள் மென்மையாக, பரிவாக, பாசமாக அவர் முதுகை வருடிக் கொடுத்தன. ஆரோன் பெரிதும் ஏங்கிய கணங்களில் ஒன்றாயிற்றே! விழிகளை மூடி அனுபவித்தார். மூடியிருந்த இமைகள் தடுக்க முயன்றும் முடியாது சோர, கண்ணீர் சரசரவென்று வடிந்தது. 

அதற்குமேல்  இந்த நாடகத்தை நின்று பார்க்க சோஃபியாவோ ஐலாவோ தயாராக இல்லை. முணுமுணுத்தபடி வெளியே வந்துவிட்டார்கள். ஏவா மட்டும் கலங்கிக் கசிந்த தன்  விழிகளைத் துடைத்துக்கொண்டு பார்த்து நின்றாள்.

“ம்ம்ம் போதும் போதும்”. பரிகாசம் செய்து மனைவி முதுகில் தட்டினான் வேர்த். “உனக்குப் பொறுக்குதில்ல என்ன? அவள் எனக்கு மகள், பிறகுதான் உனக்கு.” தன்னையும் மீறியே சொல்லிவிட்டிருந்தார், ஆரோன். அதுபோல் தன்னை மீறியே மகள் என்னவாவது சொல்லிவிடுவாளோ என்று பயந்துவிட்டார்.

ஒலிவியா அதைக் கவனித்தது போலவே  காட்டிக் கொள்ளவில்லை.  

“அதேதான்.” என்றுகொண்டே,  முறுவலோடு அவர் கன்னத்தில் கொஞ்சினாள். “உங்கள இப்படிக் கண்டது எவ்வளவு மகிழ்ச்சியா இருக்குது தெரியுமா?  இனி உடம்பக் கவனமாப் பாத்துக்கொள்ளோணும். சாப்பாடும் கவனம்.” என்று, அன்போடு சொன்னவளை, சினத்தோடு பார்த்தார், சோஃபியா.

 

“இவ்வளவு நாளும் இவள்தான்  அவருக்கு எல்லாம் கவனிச்சவள்   போல, படம் போடுறாள்  பார். இந்த மனிசனும் சொத்தப் பிரிக்கிறன் எண்டு நல்லதுகள, பெறுமதியானதுகள , அவரிட அடையாளங்களை  எல்லாம் அவளுக்கு எல்லா எழுதிவிட்டிருக்கிறார்.  இந்தளவுக்கு கதைக்காட்டி என்ன பயன் சொல்லு பாப்பம்? “ மனம் எரிய  எரிய ஐலாவிடம் பொரிந்து  தள்ளினார். 

ஒலிவியாவோ, “ இதெல்லாம் என்ன வேலை சொல்லுங்க?” அங்கு ஒரு புறமாகத் தொங்கிய வைட் போர்ட்டில் எழுதி இருந்த பதார்த்த வகைகளைச்  சத்தமாக வாசித்தாள்.

Beef Wellington

Pan- Fried chicken breast with Morel sauce 

Tandoori Spiced Halibut with Cucumber Raita

Spinach Ricotta & Pine nut Ravioli with Sage butter sauce

lemon Meringue pie

Millionaire’s cheesecake 

எல்லாமே அவளுக்கும் வேர்த்துக்கும் பிடித்த உணவுகள்,  டெசெர்ட்டுகள். வாயில் கை வைத்துக்கொண்டே அவரைப்  பார்த்தவள், நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. இந்த மனிதர்  இப்படித்தான், அடக்கி வைத்திருந்த விருப்பங்களை நிறைவேற்றச் சிறிதாகச் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் போதும் காட்டிவிடுவார். அவள்தான் இத்தனை நாட்களும் அதைப் பொருட்டாகவே பார்க்காது இருந்துவிட்டாள்.

ஆரோனும் மகளையேதான் பார்த்து நின்றார். வாயை இடக்கை பொத்தியிருக்க,  வலக்கை இடுப்பில் அமர்ந்திருந்தது. அவர் அடிக்கடி இப்படித்தான் நிற்பார்.   சட்டென்று திரும்பித்  தன்னைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டவர், “நாங்க இண்டு  அத்தினை மணித்தியாலங்கள் பயணம் போகோணும் எண்டது உங்களுக்கு நினைவில்ல  போல… இவ்வளவு செய்யோணுமா என்ற ஒலிவியாவுக்குப் பதில் சொன்னார். 

“இதெல்லாம் செய்ய சோஃபியும் ஐலாவும் உதவினவே. மிச்சத்துக்கு என்ர மகளும் மகனும் வந்திட்டினமே. சின்ன சின்ன வேலைகள்தான் கிடக்கு.” என்று, மகள் முதுகைப் பரிவோடு வருடிவிட்டு, வேர்த் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத்  தொடங்கிவிட்டார். இதுவரைத் தந்தையாகக் கனிந்து, கரைந்து நின்ற மனிதர் சடுதியில்  செஃப் ஆரோன் டேல்  ஆகியிருந்தார்.  

ஈவ்லின், டோனி , ஐவன் மற்றும்  ஏதனும்  வர உணவு மேசை கலகலத்தது. 

அடுத்த இரு மணித்தியாலங்கள் அதிகபட்ச சுவை கொண்ட உணவுப் பதார்த்தங்கள், கலகலப்பு என்று அவ்விடம் உயிர்ப்போடு இருந்தது. ஆரோனுக்கு என்று பேக் ஃபிஷ் , குக்ட் வெஜிட்டபிள்ஸ் மற்றும் பிளேண்டட் பீன்ஸ் என்று தனியாக இருந்தது. மனைவி தனக்கென்று தயாரித்ததாகச் சொல்லி இரசித்து உண்டார், ஆரோன். 

பின் எல்லோருமாகச் சேர்ந்து ஒதுக்கி வைத்துவிட்டு நிமிர, இன்னமும் அரைமணிநேரத்தில் வெளிக்கிடச் சரியாக இருக்கும் என்று நினைவுபடுத்தினான், ஏதன்.  

ஆரோனுக்குப் படபடப்பாக இருந்தது. அமைதியாக இருக்க நினைத்தாலும் முடியவில்லை. ‘இன்னும் சில கிழமைகள், இஞ்ச என்னோட தங்கிட்டுப் போவன்.’ நாக்கு நுனியில் துருத்தி நின்ற வார்த்தைகளை வெளியேற விடாது தடுப்பதே அவருக்குப் பெரும் வேலையாக இருந்தது.

அவர் தவிப்பு அங்கிருந்தவர்களுக்கு நன்றாகவே விளங்கியது. 

கதையை மாற்ற எண்ணி, துர்கா பெயரை எடுத்தார் ஈவ்லின். 

“துர்காவும் வந்திருக்கலாம். என்னதான் பிசி எண்டாலும் கூட்டிக்கொண்டு வந்திட்டு நேரத்துக்கே கொண்டுபோய் விட்டிருக்கலாமே ஏதன். நீ சரியில்லாத காதலன். ” என்று, அவன் முறைப்பையும் பொருட்படுத்தாது பகிடி பண்ணினார். 

“காதலிப்பது எப்பிடி எண்டு இவனுக்கு டியூசன் குடுங்க டோனி.” கணவர் முறைப்பையோ, சோஃபியின் சிலுப்பலையோ, ஐலாவின்  எரிச்சல் பார்வையையோ  சிறிதும் பொருட்படுத்தாது  கலகலத்தவர், “உன்ர  நண்பியோட ஃபோனில சரி கதைப்பம் என்ன மகளே!” ஒலிவியாவிடம் சொல்லிக்கொண்டே கைப்பேசியை எடுக்க, வடையைப் பறித்த காகமாக மாறியிருந்தான், ஏதன். 

“சேட்டை கூட்டிட்டு.” என்ற பேரனோடு அவர் மல்லுக்கட்ட, மெல்ல எழுந்த ஒலிவியா, ஆரோனுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்துகொண்டாள்.

“என்ன மகளே?” என்றவர் வலக்கரத்தைப் பற்றிக்கொண்டவள், “நான் ஒண்டு கேப்பன்  செய்வீங்களா?” என்று கேட்டு,  ஆரோனை, கணம் கூட யோசியாது விழிக்கசிவோடு ஓமென்று தலையாட்ட வைத்தாள். அவருக்கு மறுபுறம் அமர்ந்திருந்த  சோஃபியைப் பதற்றம் கொள்ளவும் வைத்திருந்தாள். 

அதுவரை இருந்த கலகலப்புச் சடுதியில் காணாமல் போயிருந்தது. எல்லோர் பார்வையும் ஒலிவியாவில்.

“வேற ஒண்டும் இல்ல, எனக்கு எப்பவும் இப்பிடி இருக்கிற நீங்களும் இவேயும் மட்டும் போதும்.” சுற்றி அமர்ந்திருந்தவர்களைக் காட்டினாள்.

 “உங்களுக்குத்  தெரியாதது இல்ல, காசு, சொத்து,  வசதி வாய்ப்பு எல்லாம் என்னட்டப்  போதும் போதுமென்ற அளவுக்கு இருக்கு. நானும் வேர்த்தும்  வேற உழைக்கிறம். இதே எங்கட சந்ததிக்குத் தாராளம். அதோட, அவே எங்களையும் விடத் திறமையானவர்களாத்தான்  வருவினம். நாங்க சேர்த்து வைக்கோணும் எண்டு எல்லாம் இல்ல. நான் என்ன சொல்ல வாறன்  எண்டு விளங்கி இருக்கும் எண்டு நம்புறன். இப்ப, இந்தக் கணம் போல, உரிமையா உங்களிட்ட வந்து போறதுக்கு அந்தச் சொத்துகள் நிச்சயம் தடையா இருக்கும் எண்டுறத மட்டும் ஆணித்தரமாச் சொல்லுறன்.” என்று  சொன்னபோது அவள் குரலில் அத்தனை உறுதி.

“உங்கள வருத்த எண்டு நான் இதைச் சொல்லேல்ல. பிடிக்கேல்ல, ப்ளீஸ்!” என்றவள், உருண்டு தெறித்த அவர் கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

அவளையே பார்த்திருந்தவர் திரும்பி சோஃபியை, ஐலாவை,  ஐவனை என்று பார்த்த பார்வையில் அவர்கள் தலைகள்  குனிந்துகொண்டன.

“நான் உனக்குச் செய்த அநியாயத்துக்குப் பரிகாரமா அந்தச் சொத்துகள எழுதேல்ல.  இது உன்ர  உரிமை. இவ்வளவுக்கு வேணாம் எண்டு  நினைச்சாய் எண்டா  விடு. என்னை மன்னிச்சிட்டாய் எண்டு நினைக்கிறன். அதும் இல்ல எண்டாலும் விடு.” என்றவர் குரலில் அத்தனை விரக்தி.

மறுநொடி,  “தாங்க் யூ” என்று அவரோடு அணைந்து கட்டிப் பிடித்தவள் தலை அவர் தோளில் சாய்ந்தது.  

 “தாங்க் யூ… டாட்” நிதானமாக உச்சரித்தவள் அவர் தோளில் இருந்துகொண்டே விழிகளை நிமிர்த்தி ஆரோனைப்  பார்த்தாள்.

 ஆரோன் தலையில் மெத்தென்ற ரோசா இதழ்கள் விடாது சொரிந்தபடியிருந்தன.

error: Alert: Content selection is disabled!!