ஏதனின் இலஞ்சியவள் 30 – 2

“பெரிய திறமான நண்பி! அதான் வந்ததும் வராததுமா காதல் எண்டுகொண்டு …” சொல்லி முடிக்கவில்லை, “ஐலா!” என்ற அதட்டலோடு ஏதன் எழவும் சரியாக இருந்தது.

“வந்ததும் வராததுமா  காதலிக்க ஏலாதா  ஐலா? உன்ர காதல் கதையையும்  கேள்விப்பட்டனானே…” என்று இழுத்து நிறுத்தினாள், ஒலிவியா. ஐலா முகம் கறுத்திட்டு.  கண்டதும் காதல்தான்  அவளது .

“அதை விடு, துர்கா பற்றிக் கதைக்கிறத இதோட நிப்பாட்டிரு.  அவள், தாய் தகப்பனிட்ட இருந்தே காசு வாங்கினது இல்ல. நானும் அவளும் பதினாறு வயசில இருந்து உழைக்கிறம் தெரியுமா? நீ எப்பிடி? வடிவா யோசிச்சுப் பார், ஆர் கோல்ட்  டிங்கர்  எண்டு விளங்கும். துர்கா என்ர  குடும்பத்தில ஒருத்தி.  அவள் அமைதியாப்  போனாலும் நான் பாத்துக்கொண்டு இருக்க மாட்டான்.”என்றவள், ஏதனைப்  பார்வையால் வெட்டிவிட்டே அடங்கினாள்.

“அதான் அந்தப் பிள்ள இந்தப் பக்கமே வரேல்லையா?”ஆரோன் கேட்டதையே, ஏவாவும்  ஈவ்லினும் கேட்டார்கள். “பொறுங்க நான்  துர்காவுக்குக் கோல் பண்ணுறன்.” என்று முயன்ற ஏவா, ஏதன் பார்வையில் அமைதியானாள். 

“இனிமேல் துர்கா விசயத்தில நீங்க ஆருமே  தலையிட வேணாம். என்ர  வாழ்க்கை அவள். நானே பாத்துக்கொள்ளுறன்.” என்றுவிட்டு நகர்ந்திருந்தான் ஏதன்.போகிற போக்கில் ஒலிவியாவையுமே முறைத்துவிட்டுச் சென்றிருந்தான்.

“இந்தப் பக்கம் உன்ர சகோதரனுக்கு உதவு எண்டுறது, பிறகு, நானே பாத்துக்கொள்ளுவன் எண்டுறது. எங்களுக்கு  என்ன வேர்த்,  இவேட காதல் விசயத்தில நாங்க இனித் தலையிடுறது  இல்ல.” என்று, ஏதனோடு  வார்த்தையாடிக்கொண்டேதான் விமான நிலையம் வந்து சேர்ந்தார்கள்.

ஐவன் சென்று ட்ரொலி  எடுத்து வந்தான். ஒரு பெரிய பயணப்பையும் இரு சிறு பயணப்பைகளோடும் வந்தவர்கள், ஒரே ஒரு நாளில் செய்த ஷொப்பிங்கின் பயன் இன்னொரு பெரிய பை  சேர்ந்திருந்தது. 

லக்கேஜ் கேட் அப்போதுதான் திறந்திருக்க அதை நோக்கிச் சென்றவர்கள் அங்கு நின்ற துர்காவை எதிர்பார்க்கவே இல்லை. ஏதன் நடை நின்றுவிட்டு மெதுவாக நகர்ந்தது. பார்வை அவளை விட்டு விலகவில்லை. 

ஒலிவியாவே நண்பி வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. திறன்பேசியில் கதைக்கையில், இன்னும் மூண்டு மாதங்கள்தான் இஞ்ச, அவுஸ்திரேலியாவில சந்திப்பம்.” என்றுதான் சொல்லியிருந்தாள்.

“நீ ஒரு கள்ளி! எங்கள வழியனுப்பவா வந்தனீ? நம்பேலாமல்  இருக்கே!””பகிடி பண்ணினாள் ஒலிவியா. அவள் பார்வையில் இருந்த சீண்டலில் முகம் சிவந்தாலும், “நீ நம்பினா என்ன, நம்பாட்டா எனக்கு என்ன வந்தது?” அலட்சியம் போல் சொல்லிச் சமாளித்தாள் துர்கா. 

 “ஓ  துர்க்கா! நானே உங்களிட்ட வர இருந்தனான். அதென்ன எங்கள ஒரேயடியா மறந்தாச்சோ? அப்பிடியெல்லாம் நாங்க இலேசில விட மாட்டமே.” என்றபடி அவளை நெருங்கிய ஏவா, அன்போடு அணைத்துக்கொண்டாள். ஏதன் கரமிரண்டையும் கட்டிக்கொண்டு அவளையே  பார்த்தபடி நின்றான். 

“இல்ல… யுனிக்குப் போனனான். நேரம் கிடைக்கேல்ல.” என்றவள் பார்வை, தவிப்பும் தத்தளிப்புமாக நகர்ந்து ஏதன் பார்வையில் மோதி விலகியது. அவன் நெற்றியை ஏற்றி இறக்கினான். 

அவளையும் அறியாதே உதடுகளையும் மூக்கையும் சேர்த்து அப்படியும் இப்படியுமாகச்  சுளித்துவிட்டாள். பார்வையைக் கூட ஒரு வெட்டலோடு திருப்பியிருந்தாள். அதைக் கண்ட ஏவா, அது தன்  தமையனுக்கு என்று தெரியாது, “என்ன துர்க்கா?” எண்டாளா, தடுமாறிப்போனாள், துர்க்கா.

“இல்ல…அது ஒண்ணும் இல்ல.  ஒலிவியாவுக்கு.” என்று சொல்ல, “நாங்க எல்லாத்தையும் பாத்துக்கொண்டுதான் இருக்கிறம்.”என்றாள்,  ஒலிவியா.

“உனக்கு நேரம் போகேல்லையா? அங்க பார் செக்யூரிட்டி செக் தொடங்கிற்று.” என்று அவள் சொன்னதும் ஐவனுமே முறுவலித்துவிட்டான்.

அதில் நின்றே ஒலிவியா, வேர்த்  விடை பெற்றுக்கொண்டார்கள். 

கையாட்டிக்கொண்டே நகர்ந்த ஒலிவியா, “ஏதன் என்ர  நண்பியக்  கவனமா வீட்டில விடுறது உன்ர பொறுப்பு.” என்றவள், “ஏன் ஏன், இல்ல நானே போவன்.”  என்ற துர்காவைப் பார்த்து ஆட்காட்டி விரல் நீட்டி எச்சரித்தாள். “சரிதானே ஏதன்? உன்ர  சகோதரியா பொறுப்பாஇப்போதைக்கு  என்னால செய்யக்கூடியது இதுதான்.”கண்ணடித்துவிட்டு விறுவிறுவென்று சென்றுவிட்டாள்.

ஏவா, ஒலிவியாவைப் பிடித்த பிடியை விடவே இல்லை . 

“ஃகபே குடுச்சிட்டுப்  போகலாம்.”என்றான், ஐவன்.  

துர்காவுக்கோ, ஐவனை  இயல்பாக ஏறிடவே முடியவில்லை. அவளோடு அன்று வைத்தியசாலையில் வைத்துக் கதைத்தவனா இவன் என்றது போல்தான் பிறகு எல்லாம் நடந்துகொள்கிறான். ஆனாலும் அந்த ஐவனை  மறக்க முடியவில்லையே!   

“இல்ல ஏவா, நான் போயிட்டு வாறன் ப்ளீஸ்!” என்று கரத்தை விடுவித்துக்கொண்டு நகர முயன்றாள். ஏவாவோ, “ நோ …ப்ளீஸ்”  கெஞ்சினாள். 

அவளோடு கதைக்க முயலாது பார்வையால் தொடர்ந்துகொண்டிருந்த ஏதன், “விடு ஏவா, போகட்டும்.” என்றான் கடினமான குரலில். 

சரேலென்று திரும்பி ஒரு முறை முறைத்தாள், துர்க்கா. ‘உன் பயம் காணாமல் போகும் வரை, நமக்கு இடையேயான நேசத்தை நீ முழுமையாக நம்பும் வரை  காத்திருப்பேன்.’ என்று, ‘வசனம் அனுப்பின ஆள் போலவா நிக்கிறான்? ஏதோ  நான் தங்கள அவமரியாதை செய்யிற கணக்கில முறைப்பும் அதட்டல் குரலும். இவன்ட  தமையனைப் பார்த்தா,  ஒலிவியாவக் கொல்லுவன் எண்டு அண்டைக்குச் சொன்னதுதான் நினைவில வருது.’ மனம் முனக, ஐவனோடு  அருகிலிருந்த ரெஸ்டாரண்டினுள்  நுழைந்துகொண்டிருந்த ஏதன் முதுகை முறைத்தபடி நின்றாள், துர்க்கா. 

அப்போதும்  ஏவா  பிடித்த பிடியை விடவில்லை. “ப்ளீஸ் ப்ளீஸ்” என்று சொல்லியே அவளையும்  அழைத்து வந்துவிட்டாள்.

“ஏவா உனக்கு லட்டே (Latte) தானே? துர்கா உனக்கு?” தமக்கிடையே எவ்விதமான முரணும் இருந்ததே இல்லை என்ற கணக்கில் சிறு முறுவலோடு கேட்ட ஐவனைப்  பார்த்தவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. “அவளுக்கும் லட்டே சொல்லு.”என்றிருந்தான் ஏதன்.

அதோடு, அவளுக்கு நேர் முன்னால் வந்தமர்ந்தான். அதேநொடி  அவன் கால்கள் இவள் கால்களை உரசி விலகியது. 

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், உதடு கடித்துக் கோபத்தை அடக்க முயன்றாள். விழிகள் அந்த அடக்குமுறைக்குச் செவிசாய்க்கவில்லை. நேராகப் பார்த்துக் கனலைக் கக்கின. 

அவன்  பார்வையும்  இலேசுப்பட்டதா?  சொற்கேட்கும் பழக்கமே இல்லையே!  என்னதான் கட்டுப்பாடு விதித்தாலும் மதிக்கும் எண்ணமும் இல்லை.  அவள் உதடுகளில் உரசி, நின்று நிதானமாக  இளைப்பாறி ஒரு அடக்கப்பட்ட முறுவலோடு அப்பால் நகர்ந்தது. 

தன்னால் கால்களை வெளிப்புறத்துக்கு நகர்த்தி அமர்ந்தாள், துர்கா. 

 

error: Alert: Content selection is disabled!!