உயிரைத் திருடும் அழகியே 22 – 1

அத்தியாயம் 22

 

 

அன்றைய நாளில் அதற்குப்பிறகு அவளிடம் யாருமே அதைப்பற்றிக் கதைக்கவில்லை. ஜேகேயிடம் கூட எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. அவனும் தானாக ஒன்றையும் வாய் விடவில்லை.

 

நீண்ட சிந்தனையின் பின்னர், விக்ரமனைத் தனிமையில் அழைத்துப் பேசினார் சுந்தரேஸ்வர்.

 

“கண்ணை மூடிட்டு கட்டிக்கொடுக்கலாம் சார். அவ்வளவு கெட்டிக்காரப் பையன். நல்ல உழைப்பாளி, மரியாதையான குடும்பப் பின்னணியும் இருக்கு. பரம்பரை பரம்பரையா கட்டுக்கோப்பா வாழுற குடும்பம். அந்த வீட்டுப் பையன் நம்ம அனுக்கு கிடைப்பான்னு நான் கனவுல கூட நினைக்கல சார்!” என்று தன் மனநிலையை அப்படியே சொன்னார் விக்ரமன்.

 

அது எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறார் என்று பார்த்தார் சுந்தரேஸ்வர். அவன்தான் ஒன்றுமே சொல்லவில்லையே!

 

“இல்லாம ஜேகே இங்க வந்திருக்க மாட்டார் சார். இப்படி ஒரு வீட்டுல சும்மா பொழுதைப் போக்கிற அளவுக்கு அவர் சாதாரண ஆளும் இல்ல; அவருக்கு டைமும் இல்ல.” என்று உறுதியாகச் சொன்னார் விக்ரமன்.

 

“சார், இது விளையாட்டு இல்ல. என்ர மகளின்ர வாழ்க்கை. அந்தத் தம்பி உண்மையிலேயே நல்ல பிள்ளையா?” என்று விசாரித்தார் அவளின் தகப்பன்.

 

“அந்தக் கவலையே உங்களுக்கு வேணாம். அந்தக் குடும்பத்துக்குப் பொண்ணு குடுக்க நீங்க குடுத்து வச்சிருக்கணும். அவங்களும் சம்மதிச்சு அவனுக்கும் பிடிச்சு அவ அந்த வீட்டுக்கு மருமகளாப் போவாளா இருந்தா, ராணி மாதிரி வாழுவா! அதுக்கு நான் காரண்டி சுந்தர் சார். ஜானகிராமன் வீட்டு மருமக என்றாலே பெருமைதான். அவன் தாத்தாதான் ஜானகிராமன். மனுசங்களை அவங்க குணத்துக்காக மட்டுமே மதிக்கிற அற்புதமான மனுசன். ரொம்ப நாணயமானவர். நேர்மை தவறினாப் பிடிக்காது. காந்தியவாதி. அரசியல்ல பெரிய ஆள். அவரோட வாரிசு தப்பா இருக்கவே முடியாது சார்.” அடித்துச் சொன்னார் விக்ரமன்.

 

சும்மா பேச்சுக்கு எதையும் சொல்கிற மனிதர் அல்ல விக்ரமன். மிகப்பெரிய இயக்குனர். எத்தனையோ மனிதர்களை, எத்தனையோ அனுபவங்களை தன் வாழ்வில் பார்த்தவர். அவரின் கணிப்புத் தப்பாது என்றே நம்பினார் சுந்தரேஸ்வர்.

 

ஆனாலும், சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பார்கள். மகளின் விருப்பத்துக்காக மட்டுமே எதையும் செய்துவிட முடியாது என்று நினைத்தார். அவனது வீட்டுப் பெரியவர்களோடு கலந்து பேசினால் மட்டுமே அவரால் ஒரு முடிவை எடுக்க முடியும்.

 

அவ்வளவு சொல்லியும் அவர் முகம் தெளியாததைக் கண்டு, “உங்களுக்கு இதுல விருப்பம் இல்லையா சுந்தர் சார்?” என்று விசாரித்தார் விக்ரமன்.

 

“அவ விருப்பம் தான் என்ர விருப்பம் சேர். நல்லவன் ஒருத்தன்ர கைல அவளப் பிடிச்சுக் குடுக்கவேணும். அது இந்தத் தம்பியா இருந்தாலும் சந்தோசம் தான். ஆனா, தகுதிக்கு மீறி ஆசைப்படுறமோ எண்டு பயமா இருக்கு.” என்று அவர் சொன்னபோது,

 

“பணத்தை வச்சுத் தகுதி பாக்கற ஆட்கள் இல்ல அவங்க. அவங்ககிட்ட ஒருமுறை பேசினீங்கன்னா உங்களுக்கும் புரியும்.” என்றார் விக்ரமன் உறுதியான குரலில்.

 

சுந்தரேஸ்வர் முகம் சற்றே தெளிவைக் காட்டியது.

 

“எதுக்கும் யோசிக்காதிங்க சார். எல்லாம் நல்லபடியா நடக்கும்! அவ கல்யாணம் முடியிற வரைக்கும் நான் கூட இருப்பேன். அவளை ஒரு இக்கட்டான நிலையில நிறுத்தி இந்தப் படத்துக்கு சைன் பண்ணினேன். அதுக்குக் காரணமே நான் செய்த தப்புக்குப் பதிலா அவளை உங்ககூட சேர்த்துவச்சு ஒரு கல்யாணத்தையும் கட்டி வைக்கணும் என்கிறதுதான். என்ன, என்னோட தெரிவு ஷியாமா இருந்திச்சு. அவனை விட எத்தனையோ மடங்கு பெஸ்ட் ஜேகே.” என்றவர், “முதல்ல நாம ஜேகே கூட பேசிப்பார்ப்போம். அதுக்கு முதல்ல நீங்க உங்க வைஃப் கூடவும் பேசிட்டுச் சொல்லுங்க சார்.” என்றார்.

 

 

இரவுணவு முடிந்து, வந்திருந்த ஆண்களோடு சுந்தரேஸ்வரருக்கும் சேர்த்துப் படுப்பதற்கு ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது! சின்ன வீடுதான், தங்குவதற்கு ஹோட்டலில் ரூம் போடவா என்று கேட்டதற்கு மூவருமே மறுத்துவிட்டிருந்தனர். மெத்தைகள் நிலத்தில் போட்டு பெட் சீட் விரித்து தலையணை போட்டு காற்றாடியையும் சுழற விட்டிருந்தனர் பெண்கள்.

 

அம்மாவோடு சேர்ந்து அதைச் செய்தாலும், ஜேகே இதில் உறங்குவானா என்கிற யோசனைதான் கவலையோடு அவளுக்குள் ஓடியது. அவனுடைய வாழ்க்கை முறை பற்றிப் பெரிதாகத் தெரியாதபோதும், அவனுக்கான அனைத்துமே தரமாக, அவனின் வசதிக்கேற்ப பிரத்தியேகமாக தருவித்துக் கொடுப்பான் விமல். அதைக் கவனித்து இருக்கிறாள் அனன்யா. அப்படியானவன் இதில் படுத்து எழும்புவானா?

 

படுக்கை விரித்ததும், “இது ஓகேயா உங்களுக்கு? இங்க ஏசி எல்லாம் இல்ல ஜேகே. படுப்பீங்களா? நாளைக்கு உடம்பு நோகுமோ தெரியாது.” அக்கறையோடு அவன் முகம் பார்த்துக் கேட்டவளைப் பார்த்தான் ஜேகே.

 

“கஷ்டமா? அப்பா கேட்டநேரமே ஹோட்டலுக்கு ஓம் எண்டு சொல்லியிருக்கலாம் எல்லோ. இந்த நேரம் ரூம் கிடைக்குமோ என்னவோ?” நிம்மதியான உறக்கத்தை அவனுக்குக் கொடுக்கமுடியாமல் போகிறதே என்கிற கவலை அப்பிக்கொண்டது அவள் முகத்தில்.

 

“பொறுங்கோ, எதுக்கும் அப்பாட்டக் கேக்கிறன்..” என்று, தகப்பனிடம் செல்லப்பார்த்தவளை, “நீ எதுல படுக்கப்போற?” என்று கேட்டான் அவன்.

 

‘இப்ப அதுவா முக்கியம்?’ அவள் விழிகளில் குழப்பம்.

 

“நிலத்திலதான்!” எதற்குக் கேட்கிறான் என்று புரியாதபோதும் சொன்னாள்.

 

அவள் முகத்திலேயே பார்வை இருக்க, “மெத்தை இருக்குத்தானே? வாசல் கதவைத் திறந்து வச்சா இயற்கை ஏசி சில்லுன்னு வரப்போகுது. நீ மொத்தமான எதையாவது விரிச்சிட்டுப் படு!” என்றுவிட்டு அவன் செல்ல, ‘என்ன இவன் நான் அவனைப்பற்றிக் கதைத்தால் அவன் என்னைப்பற்றிச் சொல்லிப்போட்டுப் போறான்’ என்று போகிறவனையே குழப்பத்துடன் பார்த்திருந்தாள் அனன்யா.

 

உறங்கச் செல்லமுதல், மனைவிடம் அனைத்தையும் பகிர்ந்துகொண்ட சுந்தரேஸ்வர், மகளோடும் தெளிவாகப் பேசச் சொல்லிவிட்டுச் சென்றார்.

 

எல்லோரும் சரிந்தபிறகு, வீட்டின் பின்பக்க மூளையில் இருந்த டாய்லெட் பிட்டில் வந்து அமர்ந்துகொண்டாள் அனன்யா. சிறுவயது தொடங்கி அவளுக்கு மிகவுமே பிடித்தமான இடம் அதுதான். பார்ப்பவர்கள் சிரித்தாலும் அவளின் சிம்மாசனம் அதுதான். வட்ட வடிவில் சீமெந்தினால் அமைக்கப்பட்டிருந்த பிட்டிங் மேலேதான் படிப்பாள், படுத்திருந்து கதைப்புத்தகம் கூட வாசிப்பாள். அம்மாவோடு சண்டை வந்தால் கோவித்துக்கொண்டு வரும் தாய்வீடும் அவளுக்கு அதுதான்.

 

பள்ளியில் ‘மரம் நடுவோம்’ என்று ஒரு கன்று வைக்கச் சொன்னபோது, அவளுக்கு மிகவுமே பிடித்த மாதுளைக் கன்றையும் அங்கேதான் கொண்டுவந்து வைத்திருந்தாள்.

 

அவள் எப்படிக் குழந்தையாய் குமரியாய் முழுமையான பெண்ணாய் வடிவங்கள் மாறி நிற்கிறாளோ, அப்படியே அதுவும் கன்றாக வந்து முழுமையான மாதுளை மரமாகச் செழித்து நின்று, கனிகளைக் கொடுத்துக்கொண்டே சிரித்துக்கொண்டிருந்தது.

 

மனதில் சொந்தம் பெருக அதன் கிளையினைத் தடவிக்கொடுத்தாள். முதன் முதலாக பழுத்த மாதுளையை யாருக்கும் கொடுக்காமல் சாப்பிட்ட நினைவுகள் பசுமையாய் வந்து போயின. மாதுளையின் வாசம், வேலியோரமாக அம்மா வைத்திருந்த செம்பரத்தைகளின் மெல்லிய வாசம் என, இயற்கை அன்னையின் சுகந்தம் காற்றோடு கலந்துவந்து நாசியைத் தீண்டிச் சென்றது.

 

இதையெல்லாம் உணர்ந்தபடி தனிமையில் அமர்ந்திருந்தாள் அனன்யா. இதுதான் என்றில்லாமல் தன்னிடம் கெஞ்சிய விக்ரமன், பதில் எதுவும் சொல்லாது புதிர் போடும் ஜேகே, சிந்தனை நிறைந்த விழிகளால் தன்னைத் தொடரும் அப்பா, அம்மா என்று எல்லோரையும் சுற்றிவந்துகொண்டிருந்தது அவளின் சிந்தனைகள்.

 

அப்போது, அருகில் வந்து அமர்ந்தார் சுபாகரி.

 

“படுக்காம என்னம்மா செய்யிற?”

 

“சும்மாதானம்மா. நித்திரை வரேல்ல.”

 

சுபாகரியும் சற்றுநேரம் அமைதியாக இருந்தார்.

 

“அந்தத் தம்பிய கன(நிறைய)காலமாத் தெரியுமே உனக்கு?” மெல்லப் பேச்சுக்கொடுத்தார்.

 

“இப்ப மூண்டு மாதமாத்தான்.” தாய் அடுத்தகட்டமாக என்ன கேட்பார் என்று தெரிந்தவளின் குரல் சற்றே தயங்கிற்று.

 

“ஓ! அதுக்கு இடையில என்னெண்டு இவ்வளவு பெரிய முடிவு எடுத்தனியம்மா?”

 

அவளுக்கும் தானே அந்தப் புதிருக்கான பதில் தெரியாது.

 

“எனக்கும் தெரியாம்மா. ஆனா, அண்டைக்கு அப்பா கேட்டநேரம் ஜேகேதான் கண்ணுக்க வந்தவர். எனக்கும் முதல் அதிர்ச்சியாத்தான் இருந்தது. ஆனா யோசிக்க யோசிக்க… என்னையும் என்ர குடும்பத்தையும் அவர் சந்தோசமா வச்சிருப்பார் எண்டுற நம்பிக்கை கூடிக்கொண்டே போயிட்டுது.” என்ற மகளை விழிகள் கலங்கப் பார்த்தார் அன்னை.

 

அவள் அவளுக்காக மட்டும் யோசிக்கவில்லை. அவர்களையும் சேர்த்து யோசித்திருக்கிறாள். பாசம் நெஞ்சில் சுரக்க, அவளின் தலையை வருடிக்கொடுத்தார். தாயின் அன்பை அந்த வருடலில் உணர்ந்தவளும் மெல்ல அவரின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

 

அவளுக்கும் இன்னதென்று அறியாத கலக்கம் நெஞ்சைக் கவ்வியது.

 

error: Alert: Content selection is disabled!!