Skip to content
அதைப்பார்த்த ஏதனுக்குச் சுருக்கென்று இருந்தது. அவனைப் பற்றி என்னதான் நினைத்துவிட்டாள். அவனுக்குக் கோபம். “உண்மையாவே சொறி, இருக்கேக்க தவறுதலாப் பட்டிட்டு. சொறி சொறி!” என்றவன், “டொய்லெட்டுக்கு போயிட்டு வாறன்.” விசுக்கென்று எழுந்து சென்றுவிட, இவள்தான் அந்தரப்பட்டுப் போனாள்.
ஏவா, ஐவனுக்கு வாய் திறக்கவே யோசனையாக இருந்தது.
ஏதன் , துர்காவுக்குள் ஏதோ சரியில்லை என்று தெள்ளத் தெளிவாகவே விளங்கியது. இதற்கு ஐலா கதைத்த விதம்தான் காரணம் என்று நம்பினாள், ஏவா. சகோதரியில் கோபம்தான் வந்திட்டு.
எப்போதுமே, ஒன்றை விரும்பிவிட்டால் அவ்வளவு இலேசில் விட்டுக்கொடான் ஏதன். அது மனிதரோ பொருளோ எதுவோ. அவன் விரும்பிய பெண்கள் இருவரும் தமாகத்தான் அவனை விட்டு விலகி இருந்தார்கள். வெளியில் அவ்வளவாகக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அந்த முறிவு, விலகல் அவனை எந்தளவுக்குப் பாதித்தது என்று ஐவனுக்கு நன்றாகவே தெரியும்.
எதையோ சொல்ல முயன்ற ஏவாவைக் கண்களால் தடுத்துவிட்டான்.
கோப்பிகள் பரிமாறப்பட்டன. ஏதனைக் காணவில்லை. ஐவன் கோல் செய்து சொன்ன பின்னர் வந்தவன் துர்க்காவைப் பார்க்கவே இல்லை.
பயம் என்றால் உன் நேசத்தில் நம்பிக்கையும் இல்லை என்றாள். அதையெல்லாம் நான் ஏன் மறந்திட்டன்? ஏதன் மனம் தன்னைத்தானே சாடிக்கொண்டது. ‘நல்லது, இனிச்சரி நினைவில் வைத்துக்கொள் பார்ப்போம்’ அவனுள்ளமே அவனைச் சீண்டியது. ஒன்று மட்டும் உறுதி, அவன் பலமும் அவள்தான், பலகீனமும் அவள்தான்.
முதல் ஆளாக எழுந்து வெளியில் வந்து நின்றான்.
புலனம் அருட்டியது. ஒலிவியாதான். உள்ளே சென்று கேட் திறக்கக் காத்திருக்கிறார்களாம். துர்கா உன்னோட நிக்கிறாளா, வெளிக்கிட்டிட்டீங்களா என்றும் கேட்டிருந்தாள்.
‘இல்லை, கஃபேல நிக்கிறம்’ என்று சுருக்கமாகத் தட்டி அனுப்பினான்.
அவர்களும் வர, தமையனோடு முன்னே நடந்துவிட்டான்.
“உன்ர அண்ணன் ஒரு முசுடு. சுடுதண்ணி.”மனத்தில் நினைத்ததை வாய் தவறிச் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள், துர்கா. “எனக்குத் தமிழ் தெரியாது. என்ன எண்டு சொல்லு”.”என்று பிடித்துவிட்டாள், ஏவா.
அதையிதைச் சொல்லிச் சமாளிக்கப் பார்த்தாள். “ஏதனைத்தானே என்னவோ சொல்லி ஏசினீங்க?”என்றவள், “உங்களுக்க என்ன பிரச்சினை எண்டு எனக்குத் தெரியத் தேவையில்ல துர்கா. ஆனா, ஐலா உங்களோட அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது. அவள்ட சார்பில் நான் சொறி கேக்கிறன். அதை வச்சு உங்களுக்க பிரச்சின வேணாம்.”அவள் கரத்தைப் பற்றியபடி சொல்ல, “ஐலா என்ன சொன்னவள்?” நெற்றி சுருங்கக் கேட்டாள், இவள்.
“கோல்ட் டிங்கர் எண்டு சொன்னவாவாம்.”
“அதை ஆர் உனக்குச் சொன்னது?”
“எனக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் தெரியும். ஒலிவியாதான் சொன்னவா. எல்லாருக்கும் முன்னால வச்சே ஐலாவுக்கு நல்ல வெருட்டல் போட்டுட்டுத்தான் போறா.” என்று மாலை வீட்டில் நடந்ததைக் கூற, எப்படி உணர்ந்தாள் என்றே தெரியவில்லை. விழிகள் கலங்க கலங்க அடக்க முனைந்ததன் பயன் அவை சிவந்துவிட்டன.
“ஏவா.”என்ற ஐவன் குரலுக்கு, “போயிட்டு வாறன் துர்கா. இந்த வீகென்ட் ஒரு சாட்டும் சொல்லேலாது, எங்களோடதான். கிராணி உங்களக் கேட்டுக்கொண்டு இருக்கிறா. டாட் வேற உங்கட சித்தி வீட்ட வரப்போறன் எண்டு கொண்டு நிக்கிறார்.” என்றபடி, சற்றே தூரத்தில் நிறுத்தியிருந்த ஐவன் கார் நோக்கி ஓடினாள்.
கார் கதவைத் திறந்து பிடித்தபடி நின்ற ஏதன், துர்கா அசையவில்லை என்றதும் “இப்ப வாறியா, இல்லாட்டி…” அலுப்போடுதான் கேட்டிருந்தான்.
“ஆங்! வரேல்ல . எனக்குப் போகத் தெரியும்.” விசுக்கென்று திரும்பி இரண்டு எட்டு எடுத்து வைத்திருப்பாள், அவள் வலக்கரத்தை அழுந்தப் பற்றியிருந்தது, ஏதனின் இடக்கரம்.
error: Alert: Content selection is disabled!!