ஆழியே மெளனம் ஏனோ 17 – 2

“சரி பாட்டி…” என்று தலையசைத்த ஆழினி, அதற்கு மேல் எதுவும் பேசாமல் சமையலறைக்குள் சென்றாள்.

இது ஆழினிக்குப் புதிதல்ல.

‘பாட்டிக்கு எப்பவும் அவளைப் பிடிக்காது. அவளிடம் கடுகடுவெனே பேசிக் கொண்டே இருப்பார்.

அவருக்கு மட்டும் செழியனும், தனுவும் விரும்புவதை அறிந்தால் முதல் ஆளாக தன்னை வெளியே தள்ளி விட்டு அடுத்த முகூர்த்தத்தில் அவர்களுக்கு திருமணத்தை நடத்தி விட்டுத் தான் மறுவேலைப் பார்ப்பார்கள்.’ என்று எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளுடைய உணர்வுகளை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்றுதான் ஆழினி நினைத்துக் கொண்டிருந்தாள்.

உண்மையில், அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டுதான் பாட்டி அவளிடம் எப்போதும் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஆழினியின் மனதை வேறு விஷயங்களில் திருப்பி, அவள் வேதனையை மறக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் கடுமையான வார்த்தைகள் அவர் பேசுவார்.

ஆனால் அதை ஆழினி ஒருபோதும் உணர்ந்து கொண்டதில்லை.

அவள் சமையலறைக்குள் சென்றதும், பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்த மயூரி, பொறுக்க முடியாமல் கேட்டாள்.

“ஏன் பாட்டி… இப்படி அவகிட்ட பேசுறீங்க? அவளே என் மேல கோவமா இருக்கா… நீ வேற இப்படி பேசுறீங்க?”

“ அவ மூஞ்சை பார்த்தல்ல விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி வச்சுக்கிட்டு கீழே வர்றா. உன் அண்ணனோட சண்டை போட்டுட்டு வந்திருப்பா. அதையே யோசிச்சிட்டு இருந்தா அவங்களுக்குள்ள இன்னும் அவன்மேல கோவமும், வெறுப்பும் அதிகமாகத்தான் செய்யும். அதான் கோவமா நான் பேசினேன். அதுக்கப்புறம் என்ன திட்றதுல உன் அண்ணியோட கவனம் திரும்பிடும். அதான் நக்கலா பேசி அனுப்பி இருக்கேன்.

நீயும் கொஞ்சம் புத்திசாலியா இரு. உன் அண்ணி கோவமா இருந்தா, அதட்டி உருட்டி பேச வைக்காம நீயும் மூஞ்சை தூக்கி வச்சுட்டு ஏன் இருக்க? உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு நான் கேட்க மாட்டேன். முதல்ல நம்ம பிரச்சனையே காலையில தான் தீர்ந்தது!” என்று பாட்டி கூறியதும், மயூரியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

பாட்டி அவளுக்குச் செய்தது எல்லாமே நன்மைக்காகத்தான் என்பதை மயூரி தன் கணவன் மூலமாக அறிந்து கொண்டிருந்தாள்.

அதனால்தான், பாட்டி தன்னிடம் ஏன் உண்மையை மறைத்தார் என்று கோபப்பட்டு, அவரிடம் சண்டை போட்டிருந்தாலும், மறுநாளே காலையில் முதல் வேளையாக பாட்டியிடம் சென்று மன்னிப்பு கேட்டிருந்தாள்.

இப்போது பாட்டியும் பேத்தியும் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் ஆழினி கீழே இறங்கி வந்திருந்தாள்.

அவளைப் பார்த்ததும் மயூரியின் மனம் கஷ்டப்பட்டது.

‘இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பியிருக்காங்க. எவ்வளவு சந்தோஷமாக வாழ வேண்டிய வாழ்க்கை. ஆனால் அக்கா இப்படிப் பண்ணியிருக்கக் கூடாது.’
என்ற எண்ணம் அவளுக்குள் ஓடியது.

சிந்தூராவிடம் நேரடியாகச் சென்று சண்டை போட வேண்டும் என்றுத் தோன்றியது.

ஆனால் செழியன் ஏற்கனவே இதைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறியிருக்க, மயூரி அமைதியாக இருந்தாள்.
********************
செழியனுக்கோ மனதிற்குள் சிந்தூராவைப் பற்றிய சிந்தனை மட்டுமே.

ஆழினியின் கோபத்தைக்கூட இப்போது அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எப்படியும் அவளைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவனுக்குள் இருந்தது.

ஆனால் அவன் மனதில் மட்டும் மீண்டும் மீண்டும் அவனது அக்காவின் சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது.

‘அக்கா ஏன் இப்படி பண்ணணும்?’

அந்தக் கேள்விக்கான பதில் மட்டும் செழியனுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

‘அக்கா கிட்ட பேசணும். ஆனால் அவங்க வீட்டுக்குப் போய் பேசவும் முடியாது. அத்தைக்குத் தெரிஞ்சு ஏதாவது பிரச்சனை ஆயிடுச்சுன்னா என்ன பண்றது? இங்கே எப்படி அவங்ககிட்ட பேசுறது?” என்று செழியன் யோசித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு அந்த வாய்ப்பை அவளே கொடுத்தாள்.

ஆம்… நேற்று இரவு தனுவை ஆறுதலாக அணைத்துக் கொண்டிருந்த செழியனை ஆழினி மட்டும் பார்க்கவில்லை. சிந்தூராவும் பார்த்திருந்தாள்.

‘என்ன நடக்குது? ஒண்ணுமே புரியலையே…’ என்று படபடத்தவள், காலையிலேயே வேலைகளை முடித்துவிட்டு அவசர அவசரமாகத் தயாராகி பெரிய வீட்டிற்கு வந்தாள்.

அங்கே விருந்து அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சுமதியும், கவிதாவும் நித்யமயூரியையும், நவீனையும் கவனிக்க.

“என்ன தங்கச்சிக்கு மட்டும் பலமான கவனிப்பு! எனக்கு இல்லையா?” என்று சிந்தூரா கிண்டலாகக் கேட்க,

“உனக்கில்லாததா?” என்று பாட்டி அவளையும் சாப்பிட அழைத்தார்.

“மய்யூவுக்குப் பிடிக்கும்னு கேசரி பண்ணேன்…” என்று சிந்தூரா பெருமையாகச் சொல்ல,

“எங்களைச் சொல்லிட்டு நீயும் உன் தங்கச்சியைத் தானே கவனிக்குற.” என்று லட்சுமி சிரித்தபடி கேட்டார்.

“நான் என் தங்கச்சியை கவனிப்பேன். ஆனா அதுக்காக மத்தவங்க என்னைக் கவனிக்காம, அவளை மட்டும் கவனிக்கக் கூடாது. நான் சண்டை போடுவேன்!” என்று சிந்தூரா விளையாட்டாக மிரட்ட, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

ஆனால் செழியனும் மய்யூவும் மட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

செழியன் விரைவாக உணவை முடித்துவிட்டு, “நான் கிளம்புறேன்…” என்று பொதுவாகக் கூறிவிட்டு வெளியேறினான்.

அவனுக்குப் பின்னாலேயே சிந்தூராவும் எழுந்தாள்.

“நானும் கிளம்பிறேன் பாட்டி. நாளைக்கு மய்யூவையும், மாப்பிள்ளையும் அங்க சாப்பிட வர சொன்னாங்க அத்தை.” என்றவள், நவீனிடமும் அழைப்பு விடுத்தவள், செழியனிடம் பேசுவதற்காக வேகமாக அவனைப் பின் தொடர்ந்தாள்.

செழியனோ காரில் ஏற முயன்றான்.

“செழியா… உன்னோட நா கொஞ்சம் பேசணும்டா.”
என்று மூச்சு வாங்கக் கூறினாள் சிந்தூரா‌.

“என்னக்கா?”

“ தனுவோட அளவோட பழகு.” என்றாள்.

அவள் சொன்னதும் செழியன் கூர்மையாக அவளைப் பார்த்தான்.

“என்னக்கா சொல்றீங்க?”

“அது இல்லப்பா… அவ உன்னை வேணாம்னு சொல்லிட்டு போயிட்டா.”

“அவதான் இப்ப செஞ்ச தப்பை உணர்ந்துட்டாளே அக்கா. அவ பாவம் இல்லையா?”

“அதுக்காக உனக்கு கல்யாணம் ஆகி, வீட்ல பொண்டாட்டி இருக்கா!”

சிந்தூராவின் வார்த்தைகளில் செழியனின் முகம் இறுகியது.

“பிடிக்காத வாழ்க்கைக்காக எதுக்கு போராடணும்?” என்று அவன் அமைதியாகக் கேட்டான்.

அதிர்ந்து அவனைப் பார்த்தாள் சிந்தூரா.

அந்த வார்த்தைகள் அவளுக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது.

அதே நேரத்தில்…

தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த ஆழினியின் காதுகளிலும் அந்த வார்த்தைகள் விழுந்தன.

“பிடிக்காத வாழ்க்கைக்காக எதுக்கு போராடணும்?”

அவளது கைகள் அப்படியே நின்றுவிட்டன.

கண்களில் கண்ணீர் தேங்கியது.

அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல், கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அங்கிருந்து ஓடினாள் ஆழினி.

error: Alert: Content selection is disabled!!